சங்கர் குஹா நியோகி: 30 ஆம் ஆண்டு நினைவு!

                                             (செப்: 28, 1991 -2021)

 

முன்னுதாரணமிக்க தொழிற்சங்க 
போராளியிடமிருந்து பாடம் கற்போம்!

சங்கர் குஹா நியோகி இறந்து 30 ஆண்டுகள் ஆகிறது. 1943 ஆம் ஆண்டு பிறந்த அவர் 1991 செப்டம்பர் 28 ஆம் திகதி ஆளும்வர்க்கத்தின் குண்டர் படையால் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 48 தான். சத்திஸ்கர் மாநிலத்தின் ஜல்பைகுரி என்ற கிராமத்தில் பிறந்த நியோகி அருகிலுள்ள பிலாய் நகருக்கு வந்தவுடன் அங்கு இருக்கக்கூடிய இரும்பு உருக்காலையில் பணியாற்றுகின்ற நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினையை உணர்வு பூர்வமாக உணர்ந்து கொண்டார்.

சங்கர்  குஹா நியோகி இறுதி நிகழ்வு!

இந்தியாவில் தொழிற்சங்க இயக்கத்தில் தலைவர்களாக வலம் வரும் பலர் ஆரம்பத்தில் தொழிலாளி வர்க்க பின்னணியிலிருந்து புறப்பட்டாலும், ஒரு கட்டத்திற்கு மேல் தொழிற்சங்க நடவடிக்கைகளின் மூலம் கிடைக்கின்ற ஆதாயங்களை பயன்படுத்திக்கொண்டு, நடுத்தர வர்க்க குட்டி முதலாளித்துவ வாழ்க்கை முறைக்கு பலியாகினர்.

இதனால் அவர்களால் அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்களை கட்டியமைப்பதற்கும், தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளுக்கும் எதிராக போர்க்குணத்துடன் போராடுவதற்கும் இயலவில்லை. கார்ப்பரேட்- காவி பாசிசம் தாக்குதல் நிலையில் உள்ள இன்றைய சூழலில் சங்கர் குஹா நியோகி போன்ற தொழிற்சங்கத் தலைவர்கள் நமக்குத் தேவைப்படுகின்றனர்.

000

நாடு தழுவிய அளவில் பல்வேறு தொழிற்சங்க தலைவர்களை போல் அல்லாமல் சங்கர் குஹா நியோகி தொழிலாளி வர்க்கத்தில் இருந்து வந்து தொழிற்சங்க செயல்பாடுகளில் முன்னணியில் இருந்தார். தனது தொழிற்சங்க பணியை துவங்கியது முதல் சத்திஸ்கர் மாநில சுரங்கங்களில் இருந்த தினக்கூலி தொழிலாளர்கள் முதல் செயில் நிறுவனத்தின் பிலாய் உருக்கு ஆலையில் பணிபுரிந்த ஊழியர்கள் வரை அவர்கள் மத்தியில் பணியாற்றினார்.  ஆஷா என்ற தனது துணையை சாதாரண சுரங்க தொழிலாளிகள் மத்தியில் தேடி மணம் புரிந்தார். 1975 ஆம் ஆண்டு பாசிச இந்திரா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சி சங்கர் குஹா நியோகியை சிறையில் அடைத்தது. 13 மாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளிவந்த போது தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அவர்களை வரவேற்றனர்.

அதன் பிறகு அவர் நிறுவிய தொழிற் சங்கமான சத்திஸ்கர் சுரங்க தொழிலாளர் சங்கம் (CMSS) நிரந்தரத் தொழிலாளர்களை மட்டுமின்றி இப்பகுதியிலுள்ள ஒப்பந்த தொழிலாளர்களையும், பல்வேறு பிரிவு தொழிலாளர்களையும் உள்ளடக்கி செயல்பட்டது.

சுரங்கத் தொழிலாளர்கள்

தொழிற்சங்கம் மட்டுமின்றி அரசியல் அமைப்பான சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா (SMM) என்ற அமைப்பையும் வழி நடத்தி வந்தார். இந்த சத்தீஸ்கர் விடுதலை முன்னணி அந்த பகுதியில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும், விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் ஆகிய அனைவரையும் உள்ளடக்கியதாக இருந்தது,. அன்றாட நிகழ்வுகளை பாட்டாளி வர்க்க அரசியல் கண்ணோட்டத்தில் புரிந்துகொண்டு தொழிலாளிகளுக்கு வழி நடத்திக் செல்வதற்கு பொருத்தமான அவரது ‘சங்கர்ஸ் நிர்மான்’ அதாவது ’போராடு மற்றும் அமைப்பாக்கு’ என்ற முழக்கம் இருந்தது.. இந்த முழக்கம் அப்பகுதியில் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள், புரட்சிகர ஜனநாயக சக்திகளின் பார்வையை ஈர்க்கும் வகையில் இருந்தது.

அவரது செயல்பாடுகளின் காரணமாக சத்தீஸ்கர் இந்தியாவின் ஒரு புரட்சிகர பாசறையாக உயர்ந்து நின்றது. தொழிலாளிகளின் மருத்துவமனையான ஷஹீத் மருத்துவமனைக்கு நாடு முழுவதும் இருந்து இளம் மருத்துவர்கள் பணியாற்ற வந்தனர். குறிப்பாக வேலூர் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் பினாயக் சென் கல்கத்தாவிலிருந்து டாக்டர் ஆசிஷ் குண்டு, டாக்டர் புனயப்ரத கன், மற்றும் டாக்டர் சைபால் ஜன போன்ற பலரையும் அங்கு  கொண்டு வந்தது. டாக்டர் பினாயக் சென்னின் மனைவி இலினா சென் மற்றும் தற்போது பீமா கோரேகான் வழக்கில் சிறையில் உள்ள சுதா பரத்வாஜ் கல்வியாளர். அனில் சட் கோபால் உள்ளிட்ட அனைவரையும் செயற்பாட்டுத் தளத்தில் ஈர்க்கும் குவிமையமாக சத்தீஸ்கர் மாறியது. தன்பாத் சுரங்கத்தை சார்ந்த ஏ.கே.ராய் உள்ளிட்டவர்களுடன் சங்கர் குஹா நியோகி நெருக்கமான தொடர்புகளை பேணியதால் ஆளும் வர்க்கத்திற்கு மிகப் பெரும் தலைவலியாக மாறியது..

ஷஹீத் மருத்துவமனை

தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்யும்போது வெறும் தொழிற்சங்க வாதத்தை மட்டும் முன்வைக்காமல் விவசாயிகளுடன் அவர்களை ஒன்றிணைப்பது, தொழிலாளர்களுக்கு பள்ளிகள், மருத்துவமனைகள், வனக்காடுகளில் உள்ள மரங்களின் தாவரப் பெயர் உள்ளிட்டு இளந்தலைமுறைக்கு கற்றுக் கொடுப்பது, வனக் காடுகளை அழிவில் இருந்து பாதுகாப்பது போன்ற சில சீர்திருத்தங்களை முன்வைப்பது, ராஜ் நந்தகாவில் உள்ள மோங்ரா அணைக்கட்டுக்கு எதிரான போராட்டம், தாய்ஹந்த் மக்களின் குடிநீருக்கான போராட்டம் போன்ற சூழலியல் பிரச்சினைகளை பற்றி பேசுவது, ஜனநாயக ரீதியிலான மாற்றத்திற்கான அனைத்து சக்திகளுடன் உறவு வைத்துக் கொள்வது, என்ற அளவில் அவரது நடைமுறை ஒரு முன்னுதாரணமிக்கதாக இருந்தது.

இங்கு பஸ்தார் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்திய அரசின் ஜியாலஜிகல் சார்வே அதிகாரிகள் இங்கு இரும்பு தாது செறிவு அதிகம் என்று கண்டுபிடித்தனர். இதனை மையமாக கொண்டு ராஜ்ஹராவில் இரும்பு சுத்திகரிப்பு செய்யப்பட்டு பிலாய் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அடர்ந்த வனக் காடுகளில் இருந்து மர அறுவை ஆலைகளின் மூலம் லட்சக்கணக்கான டன்கள் மரங்கள் வெட்டப்பட்டன. இந்த வளங்களை பயன்படுத்தி சிமெண்ட் ஆலைகள் உருவானது, ஆனால் தனது காலுக்கடியில் இருக்கும் அரிய கனிம வளங்களைப் பற்றி பழங்குடி மக்களுக்கு தெரியாது. இந்த பஸ்தார் இன்றளவும் கனிம வேட்டைப் பகுதியாக உள்ளது.

குறிப்பாக பஸ்தார் பழங்குடி மக்கள் மத்தியில் இருந்து கொண்டு வரப்பட்டு பதனி தோலாவில் உள்ள குவார்ட்சைட் சுரங்கங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஆக்கப்பட்ட தொழிலாளர்களின் வாழ்நிலை மிகவும் கொடூரமான சுரண்டலுக்கு ஆளானது. சுரங்க ஒப்பந்ததாரர்களால் மிக குறைந்த அளவிற்கு கூலி கொடுத்து சுரண்டப்பட்டு வந்தது. இந்த நிலையை மாற்றவும், கொத்தடிமையாய் கிடந்த மக்களை விடுவிக்கவும் சத்திஸ்கார் கிராம தொழிலாளர் சங்கம் (CGMS) என்ற அமைப்பை நிறுவினார்.

அவரால் கட்டப்பட்ட CMM,SMSS,CGMS ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து  தொழிலாளிகளுக்கு பல்வேறு உரிமைகளை போராடி பெற்றுத் தந்தது. இதனால் கொதிப்படைந்த துர்க் மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவங்களை நடத்தி வந்த, சுரங்க கொள்ளையர்களான ஆஸ்வால் நிறுவன அதிபர் சந்திரகாந்த் ஷா, அபய்சிங், சிம்ப்ளக்ஸ் நிறுவன அதிபர் மூல்சந்த் ஷா ஆகியோரும்,  ஆளும் வர்க்கமும் இவரை தீர்த்துக்கட்ட தருணம் பார்த்து காத்து இருந்தது.

ஒரு போராட்டக் களத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி 11 தொழிலாளர்களை கொன்றது. அதேநேரத்தில் போராட்டத்தில் உறுதியாக நின்ற நியோகி கைது செய்யப்பட்டார். எமர்ஜென்சிக்கு பிறகு இருந்த கொடூரமான நிலைமையை அவரது கைது நாட்டுக்கே உணர்த்தியது. பல்வேறு மிரட்டல்கள், பலமுறை கைது, உடனிருந்தவர்கள் படுகொலை செய்யப்படுவது போன்ற எந்த நடவடிக்கையும் அவரை அச்சுறுத்தவில்லை. மாறாக அவரது போர்க்குணத்தை அதிகரித்துக் கொண்டே சென்றது

தொழிலாளர்கள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும், பொதுவான சமூக அடித்தட்டு மக்கள் மத்தியிலும் ஆரோக்கியமாக இருந்த சமூக அறிவியல் வளர்ச்சி ஆளும் வர்க்கத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தது என்பதால் 1991ஆம் ஆண்டு செப்டம்பர் 28 குண்டர் படையை கொண்டு அவரை படுகொலை செய்தது. இந்த படுகொலையை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவின் பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், உச்ச நீதிமன்றத்தின் தலைமை ந்நிதிபதி டி.எஸ்.தெவதியா, வழக்கறிஞர் ராகேஷ், மனித உரிமை ஆர்வலர்கள் அனில் சட் கோபால், டாக்டர் கண்ணபிரான் ஆகியோர் தொடர்ந்து முயற்சித்த போதிலும், சிபிஐ குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வாதாடிய போதும் அதற்கான தீர்வை பெற முடியவில்லை. கூலிப்படை தலைவன் பல்தான் மல்லா தவிர பிற தொழிலதிபர்கள் அனைவரும் சிறு அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டனர்.

தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களின் பயிற்சிப்பட்டறை என்று தோழர் லெனின்  வலியுறுத்தியதை நிரூபிக்க வேண்டும் என்றால், சொந்த வாழ்க்கையில் ஏற்படும் இன்ப நாட்ட எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, எந்த பிரதிபலனும் பார்க்காமல் தொழிலாளி வர்க்கத்திற்கு நேர்மையாகவும் இருப்பது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமாக உள்ளது.

தொழிற்சங்க தலைவனாகவும், தொழிலாளிகளின் தோழனாகவும் விளங்கிய சங்கர் குஹா நியோகியின் முப்பதாம் ஆண்டு நினைவு தினத்தில் போர்க்குணமிக்க புரட்சிகர தொழிற்சங்கத்தை கட்டியமைப்பதற்கு உறுதியேற்போம். புதிய ஜனநாயகப் புரட்சி போரில் பல்வேறு இடர்களை எதிர்கொண்டு முன்னேறிச் செல்வோம்! ஊசலாட்டங்கள், சமரசங்கள், பிழைப்புவாத நாட்டமின்றி நேர்மையுடன் தொழிலாளி வர்க்கத்துடன் ஒன்றுபட்டு நிற்போம்.

  • இளஞ்செழியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here