கர்நாடகாவில் பல்வேறு சர்வதேச ப்ராண்டுகளுக்காக உற்பத்தி செய்யும் 1000க்கும் மேற்பட்ட ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை தராததால், கோவிட் காலத்தில் தொழிலாளர்களிடம் இருந்து முதலாளிகள் 450 கோடி ரூபாய்(60 மில்லியன் டாலர்கள்) திருடியுள்ளதாக சர்வதேச அமைப்பான வொர்க்கர் ரைட்ஸ் கன்சார்ஷியம்(Worker Rights Consortium) குற்றம் சாட்டியுள்ளது. இதனால் பல குடும்பங்களால் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

கார்மென்ட்ஸ் தொழிலாளர்களுக்கு மாநில அரசு குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்தி ஆணை வெளியிட்டது. இந்த ஆணை ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஊதிய அடிப்படையில் மாதம் ஆலை முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களுக்கு சுமார் 417 ரூபாய் ஊதிய உயர்வு தர வேண்டும்.

இந்த ஊதிய உயர்வு சுமார் 4 லட்சம் தொழிலாளர்களுக்கு கோவிட் காலத்தில் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், கோவிட் தாக்கத்தால் ஏற்பட்ட செலவுகளுக்கு ஈடுகட்டவும் உதவியாக இருந்திருக்கும். ஆனால் ஒரு சில ஆலைகளை தவிர பல ஆலைகளில் இந்த ஊதிய உயர்வு கொடுக்கப்படவில்லை.

பல்வேறு ஆலைகள் கோவிட் தாக்கம் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தங்களுக்கும் தான் என்று காரணம் காட்டி இந்த ஊதிய உயர்வை கொடுக்க மறுத்துள்ளனர். மேலும் இது குறித்து அவர்கள் வழக்கு ஒன்றும் தொடுத்தனர், இது குறித்து விசாரித்த உயர்நீதி மன்றம் 2020 ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஊதிய உயர்வை உறுதி செய்து ஆணையிட்டது.

இது இந்திய ஆலைகளின் பிரச்சனை மட்டுமல்ல, சர்வதேச ப்ராண்டுகளின் சப்ளை செயின் கொள்கைகளினாலும் வருகிறது என்று இந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது. ஆலைகள் தொழிலாளர்களின் உரிமைகளை மீறும் போது இந்த ப்ராண்டுகள் அவற்றை கண்டும் காணாமல் சென்றுவிடுகின்றனர் என்றும் இந்த அமைப்பு கூறுகிறது.

கோவிட் காலத்தில் பல்வேறு ப்ராண்டுகள் தங்கள் ஆர்டர்களை ரத்து செய்தனர், அல்லது தள்ளி வைத்தனர், இதனால் பல்வேறு ஆலைகள் தங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தும், ஆலையை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதையடுத்து தங்களுக்காக உற்பத்தி செய்யும் ஆலைகளில் குறைந்த பட்ச ஊதியத்தை உறுதி செய்ய பிசின்ஸ் மற்றும் மனித உரிமை வள மய்யம்(Business and Human Rights Resource Centre) என்ற அமைப்பு கர்நாடகவில் 22 சர்வதேச நிறுவனங்கள் மேல் அழுத்தம் கொடுத்து வருகிறது.

News Source : Vice

https://tnlabour.in/factory-workers/14137

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here