குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டு பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக சூரத் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான டாக்டர் சவுரப் பார்தி அறிவித்து அவருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

பாசிசம் பழி – பாவத்திற்கு அஞ்சாது!

காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில், அவரை முன்மொழிந்திருந்த 5 பேரில், மூன்று பேர் அது தங்களது கையெழுத்து இல்லை என்று கூறியதால், நிலேஷின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்பாராத வகையில் முன்னணி வேட்பாளரின் வேட்பு மனு ரத்து செய்யப்பட்டால், தமது கட்சி சார்பாக போட்டியிடும் வாய்ப்பையே இழந்து விடக்கூடாது என்பதற்காக மாற்று வேட்பாளர்களையும் எச்சரிக்கையாக நிறுத்துவது வழக்கம். அந்த வகையில் போட்டியிட  களமிறங்கப்பட்ட காங்கிரசின் டம்மி வேட்பாளர் சுரேஷ் பத்சலாவின் மனுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதில்தான் பாஜகவின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் வெளிப்பட்டுள்ளது.

தம்மை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு விலை நிர்ணயம் செய்து பேசி முடித்து தமது கட்சிக்கு இழுத்துக் கொள்வதன் மூலம் ஆட்சியை பிடிப்பதையோ, ஆட்சியை தக்க வைப்பதையோ வழக்கமாக பாசிச பாஜக அரங்கேற்றி வருகிறது.

இம்முறையோ அதிலிருந்து ஒரு படி முன்னேறிச் சென்று, தம்மை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரையே தகுதி நீக்கம் செய்து, பிற போட்டியாளர்களை வாபஸ் வாங்க செய்து, போட்டியே இல்லாமல் வெற்றி பெற்றும் காட்டியுள்ளது.

எப்படி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது?

பாஜக வேட்பாளர் முகேஷ் தலாலின் தேர்தல் முகவர் தினேஷ் ஜோதானி மூலம், கும்பானியை முன்மொழிந்தவர்கள் தகுதியவற்றவர்கள் என்ற புகார் கிளப்பி விடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பு வாதங்களையும் கேட்டு முடிவை அறிவித்தார் தேர்தல் அதிகாரி.

நிலேஷ் கும்பானியை முன்மொழிந்த ஐவரில் மூவர் தாங்கள் கையெழுத்திடவில்லை என்று கூறிய நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்க நிலேஷ் கும்பானிக்கு ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வரை அவகாசம் அளித்தார் மாவட்ட ஆட்சியர்.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் நிலேஷ் சார்பில் கையெழுத்திட்டவர்களை நேரில் வர வைத்து நிரூபிக்க முடியாமல் போய் உள்ளது. அவர்கள் “தொடர்பு எல்லைக்கு அப்பால்“ இருக்கின்றனர்.

ஆதரித்தவர்களே காலை வாரியது எப்படி?

ரமேஷ் பல்வந்த்பாய் போலரா, ஜகதீஷ் நாக்ஜிபாய் சவாலியா மற்றும் துர்வின் திருபாய் தமேலியா ஆகியோர் நிலேஷ் கும்பானியின் ஆதரவாளர்களாக கையெழுத்திட்டவர்கள். இதில் ஜகதீஷ் சவாலியா நிலேஷ் கும்பானியின் மருமகன், துர்வின் தமேலியா அவரது சகோதரர் மகன், ரமேஷ் போலாரா அவரது தொழில் கூட்டாளி ஆவார்.

நிலேசுக்கு இவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்த போதும் ஏன் அவர்கள் இப்படி நம்ப வைத்து கழுத்தை அறுத்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரம் வெளியே வந்ததில் இருந்து அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

எனவே, தங்களது வேட்பாளரின் ஆதரவாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பாசிசம் எதையும் செய்யும்!

இதுகுறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இத்தாலியா, நிலேஷ்பாயின் ஆதரவாளர்கள் கடத்தப்பட்டு ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் தொலைபேசிகள் வேலை செய்யவில்லை. யாரோ ஒருவர் அவர்களுக்கு மிரட்டல் மற்றும் அழுத்தம் கொடுத்து வாக்குமூலம் வாங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமனை அச்சுறுத்தும் பாஜக!

இதற்கிடையில் தனது ஆதரவாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாக கும்பானி உம்ரா காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

பார்வையாளராக்கப்படும் வாக்காளர்கள்!

அதாவது, இனிமேல் தமது தொகுதியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்வது யார் என்பதை அந்த தொகுதி மக்கள் தீர்மானிக்க முடியாது. வாக்காளர்கள் ஓட்டு போட வேண்டும் என்றாலும் கூட, அதை பாஜக பெரிய மனதுடன் அனுமதித்தால் தான் ஓட்டுப்பதிவே நடக்கும்.

பாஜகவின்  கடைகோடித்தனமான சதிகளின் மூலம் போட்டியின்றி அவர்களே வெற்றி பெற்றதாக சான்றிதழ் வாங்கி ஆட்சியில் அமரப் பார்க்கிறார்கள். அதற்கு சூரத்தின் வெற்றி ஒரு வகை மாதிரி.

தேர்தல் ஜனநாயகத்தை இதை விட கேவலமாக யாரும் காலில் மிதித்து அவமதிக்க முடியாது. இதில் சூரத் தொகுதி மக்களால் குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்ற துணிந்து உள்ள பாஜகவின் வெற்றி அறிவிப்பை சட்டப்படி எதுவும் செய்ய முடியாது. எனவே, பிற தொகுதியில் உள்ள வாக்காளர்கள்தான் இதை கணக்கில் எடுத்துக் கொண்டு பாஜகவுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here