நான்கைந்து மாத இடைவெளிக்குப் பிறகு 1990-இல் ஸ்ரீநகருக்குத் திரும்பியது அப்போதைய காஷ்மீர் கவர்னர் ஜக்மோகனுக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்தது என்று முன்னாள் R&AW தலைவர் ஏ.எஸ். துலாத். ஜக்மோகன் ஆகஸ்ட் 1989 வரை ஜம்மு & காஷ்மீரின் ஆளுநராக இருந்தார், ஆனால் அடுத்த ஜனவரியில் அவர் காஷ்மீர் திரும்பியபோது சூழ்நிலை முற்றிலும் மாறுபட்டிருந்தது.
“நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு அவர் திரும்பவந்தபோது இருந்த காஷ்மீர் அவர் விட்டுச் சென்ற காஷ்மீரிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அது அவருக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.” என்று காஷ்மீர் மற்றும் கிளர்ச்சி பற்றிய நாட்டின் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவராக கருதப்படும் துலாத் கூறுகிறார்.
விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய “காஷ்மீர் ஃபைல்ஸ்” என்ற திரைப்படம் அந்தக் காலத்தின் நினைவுகளைக் கிளறிவிட்டுள்ளது. துலாத் அப்படத்தைப் பார்க்கவில்லை, பார்க்கவும் விரும்பவில்லை. “இது ஒரு பிரச்சாரப் படம், நான் பொதுவாக பிரச்சார படங்களைப் பார்ப்பதில்லை”என்று கூறுகிறார்.
வி.பி.சிங் அரசு பதவிக்கு வந்ததும் ஜக்மோகன் மீண்டும் காஷ்மீரின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். டிசம்பர் 1989-இல், உள்துறை அமைச்சர் முஃப்தி முகமது சயீதின் மகள் ரூபய்யா சயீத் கடத்தப்பட்டு அவரது விடுதலைக்கு ஈடாக ஐந்து JKLF போராளிகள் விடுவிக்கப்பட்டனர்.
அந்நிகழ்வு ஒரே இரவில் காஷ்மீரின் நிலைமைகளை முற்றிலும் மாற்றிவிட்டது என்கிறார் அப்போது காஷ்மீரில் புலனாய்வுப் பணியகத்தின் தலைவராக இருந்த துலாத். காஷ்மீருக்கான சுதந்திரம் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது என்று பல இளைஞர்கள் நம்ப தொடங்கினர். “ஸ்ரீநகரில் தீபாவளியைப் போலவே கொண்டாட்டங்கள் இருந்தன” என்று அவர் கூறுகிறார்.
தற்போது ஆச்சரியமாகத் தோன்றினாலும், காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் வெளியேறும் போது கவர்னர் ஜக்மோகன் உண்மையில் மிகவும் நிம்மதியாக இருந்ததாக துலாத் கூறுகிறார். “பண்டிட்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கியபோது, அவர்களின் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பதை அவர் விரும்பவில்லை. எனவே அவர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறத் தொடங்கியவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.”
“இது ஒரு இயற்கையான எதிர்வினை. அவர்கள் வெளியேறியது நல்லது. நிலைமைகள் மிகவும் மோசமாக இருந்ததால் அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் நம்மால் வழங்கியிருக்க முடியாது.” என்று துலாத் கூறுகிறார்.
அந்தக் கடத்தல் சம்பவம் நடக்கும்வரை காஷ்மீர் ஒரு அமைதியான இடமாகத்தான் இருந்தது. “ஒரே இரவில் எல்லாம் மாறிவிட்டது. அதுவரை ஊருக்குள் சுதந்திரமாக நடமாடினோம். நானும் மாநிலம் முழுவதும் பயணம் செய்தேன். ஆனால் ஐந்து JKLF போராளிகள் விடுவிக்கப்பட்ட பிறகு எல்லாம் கைமீறிப் போய்விட்டது. காஷ்மீர் இரத்தக்களரி ஆனது.” என்று அவர் கூறுகிறார்.
“இவையெல்லாம் தொடங்கியபோது தான் காஷ்மீரில் இருந்ததாகவும். 1989-90 குளிர்காலம் மிகவும் மோசமான காலமாக இருந்தது” என்றும் துலாத் நினைவு கூர்கிறார்.
தொடர்ந்து வந்த மாதங்களில் காஷ்மீரில் படுகொலையானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தது. மே 1990-இல், ஆயுதம் தாங்கிய கொலையாளிகள் மிர்வைஸ் மௌலவி முகமது ஃபாரூக்கின் வீட்டிற்குள் நுழைந்து அவரை சுட்டுக்கொன்றனர். துலாத்தின் உளவுத்துறை குழுவைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட பலரும் இலக்கு வைத்து மூன்று வார இடைவெளியில் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் சிறப்புப் பிரிவு போலீசாரையும் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். “இது மோசத்திலிருந்து படுமோசமான நிலைமைகளுக்கு இட்டுச்சென்றது ” என்று அவர் கூறுகிறார்.
ரூபய்யா கடத்தப்படுவதற்கு முன்பு இருந்த சூழ்நிலையிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது. கடத்தலுக்குமுன் கொல்லப்பட்ட காஷ்மீரி பண்டிட்களில் ஒருவர் மக்பூல் பட் விசாரணைக்கு தலைமை வகித்த நீதிபதி நீலகண்ட கஞ்சூ ஆவார். பாஜக வழக்கறிஞர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
“பண்டிட்கள் குறிவைக்கப்பட்டனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதைப்போலவே பல முஸ்லிம்களும், வேறு பலரும் குறிவைக்கப்பட்டனர்.”
1990-ஆம் ஆண்டு கொலைகள் நடந்த உடனேயே பண்டிட்களின் வெளியேற்றம் தொடங்கியது என்று துலாத் கூறுகிறார். சமூகத்தில் அதிக வசதி படைத்தவர்கள் டெல்லிக்கு சென்றனர், வேறு எங்கும் செல்ல முடியாதவர்கள் ஜம்முவில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களுக்குச் சென்றனர். “ரூபய்யாவின் கடத்தல், JKLF போராளிகளின் விடுதலை, மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட புதிய மனநிலைக்குப் பிறகு, பண்டிதர்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்தனர், அவர்களில் பலர் வெளியேறினர்.
காஷ்மீரின் வசதி படைத்த முஸ்லீம்களும் டெல்லி போன்ற இடங்களுக்குப் புறப்பட்டனர் என்று துலாத் கூறுகிறார். நிலைமை சீரானது எனத் தோன்றியபோது அவர்கள் திரும்பிவிட்டனர். “சொல்லப்போனால் பண்டிட்களை விட முஸ்லிம்கள்தான் அதிகமான எண்ணிக்கையில் வெளியேறினர் – பலர் கொல்லப்பட்டனர்”என்று அவர் கூறுகிறார்.
“காஷ்மீரிலேயே தங்கிவிட்ட பண்டிட்கள் முஸ்லிம்களால் பாதுகாக்கப்பட்டனர்” என்று துலாத் கூறுகிறார். “காஷ்மீரைவிட்டு பண்டிட்கள் முற்றிலுமாக வெளியேறிவிடவில்லை, பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகும் கூட பண்டிட்கள் குறிவைக்கப்படவில்லை” என்கிறார்.
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் கொல்லப்பட்டதாகவும், தப்பி ஓடியதாகவும் சொல்லப்பட்டுள்ள எண்ணிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. கடந்த டிசம்பரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஸ்ரீநகர் டிஎஸ்பி அளித்த பதிலில், காஷ்மீரில் 1990-ல் தீவிரவாதம் வளரத்தொடங்கியதிலிருந்து 1,724 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 89 பேர் காஷ்மீர் பண்டிட்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 1990 கொலைகளுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான பண்டிட்டுகள் வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்றனர் என்று துலாத் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். “1989 செப்டம்பரில்தான் முதன் முதலாக ஒரு பண்டிட் குறிவைக்கப்பட்டார் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.
அதற்குப்பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பண்டிட்களுக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று கடிந்துகொள்ளும் துலாத், “காஷ்மீருக்குத் திரும்பும் அளவுக்கு பாதுகாப்பானதாக உணர்ந்தவர்கள் மிகச் சிலரே. பண்டிட்களை மீள்குடியேற்றம் செய்வது குறித்து ஒவ்வொரு அரசாங்கமும் வெறும் உதட்டளவிலேயே சொல்லிக்கொண்டிருந்தன. ஆனால் அது இன்றுவரை நடக்கவில்லை” என்கிறார். பதிவு செய்து கொண்ட பண்டிட்களுக்கு மாதந்தோறும் பணமும் இலவச ரேஷன்களும் வழங்கப்பட்டதாக RTI பதில் சுட்டிக்காட்டியது.
பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீருக்குத் திரும்புவது உண்மையில் சாத்தியமா? என்ற கேள்விக்கு “அவர்கள் திரும்பிச் சென்றால் அவர்களது அண்டை வீட்டாரும் நண்பர்களும் அவர்களை பாதுகாப்பார்கள்” என்று தாம் கருதுவதாகவும், ஆனால் அவர்களுக்கென தனி காலனிகளை கட்டுவது முற்றிலும் தவறான வழி என்றும் கூறுகிறார். “நீங்கள் அவர்களுக்காக ஒரு தனி காலனியைக் கட்டினால் கண்டிப்பாக அவர்கள் குறிவைக்கப்படுவார்கள்” என்று துலாத் உறுதிப்படக்கூறுகிறார்.
தமிழில்: செந்தழல்