கடந்த பத்தாண்டுகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதை அரசின் புள்ளி விவரங்களே அம்பலப்படுத்துகின்றன. 2008-2009 ல் எஸ்.சி மக்கள் மீதான வன்முறை வெறியாட்டங்கள் தாக்குதல் எண்ணிக்கை 33,615 அதுவே 2016 -2017 ல் 40,801 ஆக உயர்ந்துள்ளது.. எஸ்.டி மக்கள் மீதான வன்முறை வெறியாட்டங்கள், தாக்குதல் எண்ணிக்கை 2008-2009 – ல் 5582 – ல் இருந்து 2016-2017 – ல் 6568 ஆக உயர்ந்துள்ளது. உச்ச கட்டமாக 2018 ஜனவரியில் பா.ஜ.க, சிவசேனா, பிரதமர் மோடி உள்ளிட்டு குருஜி என்று மரியாதையுடன் அழைக்கும் சிவ் பிரஸ்தான் இந்துஸ்த்தான் என்ற அமைப்பின் தலைவனும், கொலைகாரனுமான சாம்பாஜி பிடே தலைமையில் பீமா கொராகானில் நடந்த வன்முறை வெறியாட்டம் துலக்கமான சான்றாகும்.

மேற்கண்ட அனைத்தும் அரசியல் சட்டம் தலித் மக்களுக்கு வழங்கிய உரிமைகள், உயிர் வாழும் பாதுகாப்பு அனைத்தையும் காலில் போட்டு மிதித்து நடத்தப்பட்டவைதான். IAS, IPS, முதல் ஜனாதிபதி வரை தலித் மக்கள் அதிகாரத்தில் இருந்த போதிலும் எதுவும் மக்களை காப்பாற்றும் வகையில் நடக்கவில்லை. அரசியல் சட்டம் தலித் மக்களுக்கு அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ள உரிமைகள், கண்ணியமாக வாழ பாதுகாப்பு அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளதை நீருபிக்கிறது.

அரசியல் சட்டம் கொண்டு வரப்பட்டு 39 ஆண்டுகளுக்குப் பிறகு தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இவையெல்லாம் நடைமுறையில் இருக்கும் போதே வெண்மணி, மேலவளவு, வாச்சாத்தி, சின்னாம்பதி, காரம்சேடு (ஆந்திரா), சுண்டூர் (ஆந்திரா) படுகொலைகள் கொடூரமான முறையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடந்தது. இவை எவற்றையும் அரசியல் சட்டம் தடுத்திடவில்லை. மாறாக, ஆதிக்க சாதி வெறியர்களைப் பாதுகாக்கவே செய்தது. ஆனாலும் அரசியல் சட்டம் தலித்துகளின் பிரச்சனைகளை தீர்க்கும் என நம்பச் சொல்கிறார்கள்.

இதே போல, இசுலாமியர்களுக்கு எதிராக பகல்பூர், அயோத்தி, மீரட், முசாபர்பூர் வன்முறைகளை அரசியல் அமைப்புச் சட்டம் தடுக்கவில்லை. இசுலாமியர்களுக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலமான பாபர் மசூதி இடிப்பு, குஜராத்தில் 3,000 பேர் இனப்படுகொலை, இராமன் பெயரில் நடத்தப்பட்ட இரதயாத்திரைப் படுகொலைகள் போன்றவை நேரடி சான்றுகளாகும். குஜராத் இனப்படுகொலைகளின் போது பிறப்பால் இசுலாமியரான அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தார். இசுலாமியர் ஒருவர் அரசியல் அமைப்பின் உயர் பதவியில் இருந்த போதே இசுலாமியரை பாதுகாக்க முடியாமல் வேடிக்கை பார்த்தது இந்த பதவிகளால் எந்த பலனும் இல்லை என்பதை நிரூபித்து விட்டது. இசுலாமியர்களின் வழிபட்டு தலமான மசூதிகளில் அதுவும் வெள்ளிக் கிழமை தொழுகையின் போது கொல்வது என்ற அடிப்படையில் நடந்த 2004 ஜல்னா, 2006, 2008 மாலோகான், 2007 சம்ஜீதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா, மெக்கா மஸ்ஜித் மற்றும் 2008 மொடாசாவில் நடந்த படுகொலைகள் ஆகியவை அரசியல் சட்டத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு என்பதை ஒழித்துக் கட்டியுள்ளது. உத்திர பிரதேசத்தின் முதல்வர் பாசிச யோகி 2017 ல் பதவியேற்ற பின்னர் ஒர் ஆண்டில் மட்டும் 1240 இசுலாமியர்கள் என்கவுண்ட்டர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். பார்ப்பன இந்து ராமராஜ்ஜியத்தில் உயிர் வாழும் உரிமையும் இல்லை.

அதே போல கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஒரிசாவில் நடந்த ஸ்டேன்ஸ் பாதிரியார் படுகொலை, நாடு முழுதும் சர்ச்சுகள் மீதான தாக்குதல்கள் என எதையும் தடுக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல, இத்தகைய கொடிய செயல்களில் ஈடுபட்ட கிரிமினல் குற்றவாளிகள் எந்த தண்டனையுமின்றி தப்பிக்கவும் வழி வகுத்துள்ளது. அதுமட்டுமல்ல இன்று பிரதமர் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வரை அரசாங்க உறுப்பினர்களாக உல்லாச உலா வந்து கொண்டே தமது கிரிமினல் நடவடிக்கைகளை தொடர்கின்றனர்.

உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான வடிவங்களையும் செயல்களையும் இந்திய அரசியல் சாசனம் குற்றங்களாகவே அறிவிக்கிறது. மனிதர்களைக் கடத்துவதும், விற்பதும், வாங்குவதும் தடை செய்யப்படுகின்றன. இவை தொடர்பான எந்தச் செயலும் தண்டனை பெறக்கூடிய குற்றமே என்று அரசியல் சாசனத்தின் 3-வது பிரிவும், 14 வயதுகுட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகளிலோ அல்லது சுரங்கங்களிலோ அல்லது உயிருக்குத் தீங்கு நேரும் எந்தத் தொழிலிலுமோ ஈடுபடுத்தக் கூடாது என்று 24-வது பிரிவும் கூறுகின்றன. கொத்தடிமைகளாகவும், குழந்தைத் தொழிலாளர்களாகவும் அதிகமாக தலித்துகளும், தலித் குழந்தைகளுமே ஈடுபடுத்தப்படுகின்றனர். சுரங்கத் தொழிலில் நடக்கும் கொத்தடிமைத்தனம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

ஜனநாயகத்தின் தூண்கள் எனப்படும் பத்திரிக்கை, ஊடகம் மொத்தமாக பாசிச பாஜக கும்பலால் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் முன்வைக்கும் எந்த உரிமையும் செல்லுபடியாகவில்லை. மற்றொரு உறுப்பான நீதித்துறை மிரட்டப்படுவதாகவும் ஜனநாயகத்திற்கு ஆபத்து எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே அவலக் குரல் எழுப்பியுள்ளனர். முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பாராளுமன்றத்திலேயே கொண்டுவரப்பட்ட இம்பீச்மென்ட் மோஷன் எனப்படும் பதவி நீக்க தீர்மானம் அரசியல் சட்டத்தின் நம்பகத்தன்மையை கேலிக்கூத்தாக்கியது. அரசியல் கட்சிகள், போலீசு, அதிகாரவர்க்கம் அனைத்தின் மீதும் நம்பிக்கையிழந்த மக்களின் கடைசி புகலிடம் நீதிமன்றம் என்ற நம்பிக்கையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கையாளப்பட்ட வாரிசுரிமை, சாதி, அரசு ஆதரவு, ஊழல் போன்ற முறைகேடுகள் காரணமாக மொத்தமாக முடிவுக்கு வந்து விட்டது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அரசியல் அமைப்புச் சட்டத்தின் நம்பிக்கைக்கு உரியவர் என்ற அரசியல் சட்ட உரிமை நடைமுறையில் அம்பலமாகி நாறியுள்ளது.

1950-ல் அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது ஆர்.எஸ்.எஸ். முன்னோடிகளான சியாமா பிரசாத் முகர்ஜி, சர்தார் படேல் போன்றோர் அதனை எதிர்த்தனர். ஏனெனில், இந்த அரசியல் அமைப்புச் சட்டம் அந்நியர்களிடமிருந்து கடன் வாங்கியது, எனவே நிராகரிக்க வேண்டும், இதற்கு மாறாக இந்திய பாரம்பரியத்தையும், மரபுகளையும் அடிப்படையாகக் கொண்டும், மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டும் அரசியல் சாசனத்தை எழுத வேண்டும் என வாதாடினர். ஏறக்குறைய 70 ஆண்டுகள் கழித்து தற்போது அதிகாரத்தை RSS தலைமையிலான சங் பரிவார கும்பல் முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர். இந்த பாசிச சதிகார கூட்டத்தை சட்டப்படியே பாதுகாக்கும் அரசியல் சட்டம், இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களை பாதுகாக்கும் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் கையாலகாத்தனமாகும்.

எனவே அரசியல் சட்டம் மீதான அனைத்து மாயைகளையும் தகர்ப்போம்! நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களை பாதுகாக்கும் புதிய அரசியல் சட்டத்தை வரைய அரசியல் அதிகாரத்தை கீழிருந்து கைப்பற்றும் புதிய ஜனநாயகப் புரட்சி எனும் வர்க்க போரில் இறங்குவோம்! அதற்கான முதற்படியாக கார்ப்பரேட்-காவி, நவீன பாசிசத்தை வீழ்த்த போரிடுவோம்.

முற்றும்.

இளஞ்செழியன்.

ஆதார நூல்கள்;

  • புதிய ஜனநாயகம்,
  • வினவு, கீற்று கட்டுரைகள்.
  • நக்சல்பரி முன்பும் பின்பும், தோழர் சுனிதிகுமார் கோஷ்.
  • சாதியம் பிரச்சனைக்கு தீர்வு புத்தர் போதாது,
    அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசிய தேவை -ரங்கநாயக்கம்மா.
  • அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம்.
  • காந்தியும் காங்கிரசும் துரோக வரலாறு. பு.மா.இ.மு வெளியீடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here