பாசிச மோடியின் விசிலடிச்சாங் குஞ்சுகளாக உள்ள கோடி மீடியாக்கள் மோடி எதை செய்தாலும் அதை புகழ்ந்து எழுதுவது என்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

அதில் ஒன்றுதான் கடந்த ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின உரை என்ற பெயரில் இந்தியாவின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு விவகாரங்களை தீர்மானிக்கின்ற சிந்தனை குழாம்கள் (think tanks) எழுதிக் கொடுத்த உரையை மோடியின் சொந்த சரக்கு போல ஊதிப் பெருக்குவது.

சுதந்திர தின உரையில் அதிக நிமிடங்கள் பேசிய பிரதமர் என்று மோடி சாதனை படைத்துள்ளார் என்று சாமியாடுகின்றன கோடி மீடியாக்கள். அதிகாரம் கையிலிருப்பதால் ’நரியை பரியாக்கும் கதையாக’ சரடு திரிக்கின்றார் மோடி.

வழக்கமாக பார்ப்பன இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிக்கின்ற வகையிலும், தேசிய வெறியூட்டும் வகையிலும் பல்வேறு சவாடால்களையும், சாத்தியமற்ற பல்வேறு அறிவிப்புகளையும் முன்வைத்து உரை நிகழ்த்தினார் திருவாளர் மோடி.

அதில் முக்கியமானது அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவ படிப்பு படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கையை 75 ஆயிரம் எண்ணிக்கையில் அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

அதேபோல ஸ்வஸ்த் பாரத் மிஷன் என்ற கண்ணோட்டத்தில், விக்சித் பாரத் 2047 இன் இலக்கை அடைய, ’ராஷ்ட்ரிய போஷன் அபியான்’ திட்டத்தை தொடங்கப்பட்டதன் மூலம் ‘ஸ்வஸ்த் பாரத்’ பாதையில் இந்தியா 2047 ஆண்டு இலக்கை நோக்கி செல்வதற்கு 24×7 என்ற வகையில் உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.

இந்தியாவின் பொருளாதாரம் ஐந்தாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேற போகிறது என்பதையும் 40 கோடி பேர் சேர்ந்து சுதந்திரம் வாங்கியது போல, 140 கோடி பேர் இணைந்து இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார்.

இந்தியாவில் உள்ள இளைஞர்களின் உழைப்பு சக்தியை கொள்ளையடிக்க தொழில் உற்பத்தி மையம் (Manufacturing hub) அமைப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

இவையெல்லாம் என்ன? ’முழுப் பொய்யைக் காட்டிலும் ஆபத்தானது, கால் உண்மை’ என்பதைதான் இவை நமக்கு உணர்த்துகின்றன.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 143 கோடி பேருக்கு உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்று கணக்கு வைத்துக் கொண்டாலும், 1,43,00,000 மருத்துவர்கள் தேவை. ஆனால் இந்தியாவில் தற்போது இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) கீழ் பதிவு பெற்ற மருத்துவர்கள் எண்ணிக்கை 13 லட்சம் பேர். இந்த லட்சணத்தில் மோடியின் வாய்ச்சவடால் எந்த அளவிற்கு உண்மை என்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மோடியின் சுகாதார அமைச்சரான மான்டவியா 834 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளதாக சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ, பாட்டி வைத்தியம் போன்ற மாற்று மருத்துவ முறைகளையும் உள்ளடக்கி நாடாளுமன்றத்திலேயே புளுகுகிறார்.

படிக்க: 

 ஆகஸ்ட் 15: போலி சுதந்திரத்தை புறக்கணி! விடுதலைக்கான சரியான பாதையைத் தேர்ந்தெடு!
♦ ஆகஸ்ட் 15: போலி சுதந்திரத்தை புறக்கணி! விடுதலைக்கான சரியான பாதையைத் தேர்ந்தெடு! பகுதி 2

அதேபோல இந்தியா பொருளாதார ரீதியாக வல்லரசாக முதல் இடத்திற்கே சென்றாலும் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு அதனால் என்ன பயன்.

இதனால் பயனடையப் போவது கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுகின்ற CEO-க்களும் முதன்மை அதிகாரிகளும் (MD) தான், இவர்கள் தான் இப்போதைய நிலைமையில் மாதம் 50 கோடி ஊதியமாக பெறுகின்றனர் என்று மார்தட்டிக் கொள்கிறது நிஃப்டி. ஆனால் நாட்டில் உள்ள 60 கோடி தொழிலாளி வர்க்கத்தில் நிரந்தர வேலை இன்றி அன்றாடம் காய்ச்சிகளாக, தினக் கூலிகளாக வேலை செய்கின்ற தொழிலாளிகள் தான் 93 சதவீதம் உள்ளனர். இவர்களின் வேலை உத்தரவாதமின்றி சராசரியாக மாதம் 8,000 சம்பளத்தில் அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கே படாத பாடுபடுகின்றனர்.

வீட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள், குழந்தைகளின் கல்வி, குடும்பத்தின் மருத்துவம், காற்றோட்ட வசதியுடன் கூடிய வீடு, நல்ல குடிதண்ணீர் இவற்றை பெறுவதற்கு பல ஆயிரம் ரூபாய்களை செலவழிக்க வேண்டிய கேடான நிலையில் தான் பெரும்பான்மை இந்திய தொழிலாளி வர்க்கம் இருத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த லட்சணத்தில் பொருளாதாரத்தில் முதலிடத்தை பிடித்தாலும் அதன் பயன் யாருக்கு சென்றடையும் என்றால் அது இந்தியாவில் உள்ள சொத்துக்களை சூறையாடுகின்ற, தேசங் கடந்த தரகு முதலாளிகள், மேட்டுக்குடிகளுக்கு தான் சென்றடையும்.

மேலும் அவரது உரையில் இராணுவ தளவாடங்களை வாங்கி வந்த இந்தியா தற்போது அவரது ஆட்சியில் இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்கின்ற நாடாக மாறியுள்ளது என்று பீற்றிக்கொண்டார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரில் களப்பலியாகின்ற வீரர்களை ஏற்றுமதி செய்வதும், பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதற்கு நவீன ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வாரி வழங்குவதும் தான் இந்தியாவின் ஏற்றுமதி சாதனை.

கேரளாவில் கொச்சியில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இந்தியாவின் இராணுவ தளவாட ஏற்றுமதி, இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உதவி செய்கிறது என்று அம்பலப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு அறிவுறுத்துகின்றார். ஆனால் இதன் மூலம் பலனடையப் போவது உழைப்பாளி மக்கள் அல்ல; அவர்களின் உழைப்பை சக்கையாக பிழிந்து குறைந்த கூலிக்கு கொள்ளையடிக்கும் தேசங்கடந்த தரகு முதலாளிகள்தான் என்பதும், நாட்டில் நடக்கும் கார்ப்பரேட் நலனுக்கான ஆட்சிதான் என்பதும் பல்வேறு தரவுகளின் கீழ் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அவரது உரையின் சாரமாக அவர் பேசிய, ”ஸ்கில் இந்தியா, டிசைன் இன் இந்தியா டிசைன் ஃபார் வேர்ல்ட், கிரீன் ஹைட்ரஜன் விஷன் போன்றவையும், இந்தியா தொழில்துறை உற்பத்தி மையமாக மாறப்போகிறது என்பதற்கான கட்டியமும், குளோபல் கேமிங் என்ற பெயரில் உள்நாட்டு வீடியோ கேளிக்கை விளையாட்டை உருவாக்கி இளைஞர்களின் சிந்தனையை சீரழிக்க திட்டமிடுவதும், மாநிலங்கள் தனியே முதலீடுகளை ஈர்த்துக் கொள்வதற்கு முயற்சிக்கலாம் என்று அவிழ்த்து விடுவதன் மூலம் தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதும், கால நிலை மாற்றத்திற்கு பொருத்தமாக திட்டங்களை திட்ட வேண்டும்” என்று பேசியது என்று ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு அவரது 98 நிமிட உரையையும் பற்றி விரிவாக எழுதினால் 98 தினங்களுக்கு தொலைக்காட்சி நெடுந்தொடர்களை போல எழுதிக் கொண்டே போக முடியும். அது புராணத்தில் வருகின்ற அனுமார் வாலை போல நீண்டுக் கொண்டே செல்லும் என்பதால் வகைக்கு சில எடுத்துக்காட்டுகளின் மூலம் மோடியின் சுதந்திர தின உரை என்பது அப்பட்டமான பித்தலாட்டம் என்பதையும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள சில உண்மைகள் பெரும்பான்மை மக்களின் நலனுக்கு எதிரானது என்பதையும் உரக்கச் சொல்வோம்.

மோடியின் சுதந்திர தின உரை என்பது இத்தகைய வாய்ச்சவடால்களை உள்ளடக்கியது தான் என்பதால் நாட்டின் பிரதமரின் உரை என்று பெருமைப்பட்டுக் கொள்வதற்கு நமக்கு ஒன்றுமில்லை.

  • மாசாணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here