கார்ப்பரேட் -காவி பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக எழுந்துள்ள போர்க்குரல்!

இந்தியாவின் 73-வது குடியரசு தின கொண்டாட்டங்களுக்காக புது தில்லி அழகுபடுத்தப்பபட்டது. ஆயுதம் ஏந்திய துருப்புக்கள் புதிதாகக் கட்டப்பட்பட்டுவரும் சென்ட்ரல் விஸ்டாவை (Central Vista) அணிவகுத்து தங்கள் மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் இராணுவ திறன்களைக் காட்டின. நூற்றுக்கணக்கான மக்கள் அவர்களை உற்சாகப்படுத்தினர். குடியரசுதின உரையின் ஒரு பகுதியாக, இந்த நாட்டு மக்களை தங்கள் கடமைகளைச் செய்யத் தூண்டுவது என்ற பெயரில் ஜனநாயக உரிமைகளைக் குறைக்கும் கேடுகெட்ட முயற்சியை பிரதமர் முன்னெடுத்திருக்கிறார். அதே சமயம், பார்ப்பனிய இந்துத்துவா பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளில் தங்கள் உரிமைகளை உறுதியுடன் நிலைநிறுத்தப் போராடும் மக்களால் நாட்டின் போலி ஜனநாயகம் ஒவ்வொரு நாளும் அம்பலப்படுத்தப்படுகிறது.

குடியரசு தின அணிவகுப்பு: உ.பி.-யின் ராமர் கோயில் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு! | UP Ramar temple tableau got first prize in Republic day parade | Puthiyathalaimurai - Tamil News | Latest ...

கடுமையான அரசு அடக்குமுறைக்கு மத்தியிலும் இந்த ஜனநாயக உணர்வு இந்திய துணைக்கண்டம் முழுவதும் வெகுஜனப் போராட்டங்களை தூண்டிக்கொண்டே இருக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக செங்கோட்டையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான கொடூர அடக்குமுறை மற்றும் டெல்லி எல்லையில் நூற்றுக்கணக்கான உயிர் தியாகங்களைச் செய்து ஒரு வருடமாக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை நெஞ்சில் நிறுத்துவோம்.  அப்போராட்டங்கள் அரசு மற்றும் போலீசின் அடக்குமுறைகளை உலகத்திற்கே அம்பலப்படுத்தியது. ஒன்றிய மாநில அரசுகள் இன்றுவரையிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மறுத்து, பொய் வழக்குகளை திரும்பப் பெறுவோம் என்ற வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடும் வேளையில், லக்கிம்பூர் கெரியில் நடந்ததைப் போலவே ஆளும் வர்க்கம் மற்றும் போலீசின் கொலைவெறியைத் துணிச்சலுடன் முறியடித்து கூட்டுப் போராட்டத்தின் மூலம் வெற்றியை மக்களுக்கு உணர்த்திய நம் நாட்டு விவசாயிகளை நினைவுகூர்வோம்.

அதே வழியில், மத அடிப்படையிலான குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றுக்கு எதிராக நாடு தழுவிய நடந்த போராட்டங்கள் நாட்டு மக்களின் வாழ்வதற்கான உரிமைகளை வலியுறுத்தின. டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு பலரைக் கொன்று பலரது வாழ்வாதாரம் அழிக்கப்பட்டன.  இச்சட்டங்களுக்கு எதிராகப் போராடிய நூற்றுக்கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் மற்றும் ஆர்வலர்களை கொடூரமான UAPA சட்டத்தின்  கீழ் கைது செய்து விசாரணையே இல்லாமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைத்தல் போன்ற வடிவங்களிலும் இந்தப் போராட்டங்கள் கொடூரமான அடக்குமுறையை எதிர்கொண்டன. இவற்றுக்கு பா.ஜ.க. தலைவர்களும் அமைச்சர்களும் உடந்தையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இந்த தாக்குதல்களுக்கு முன்னதாக இனப்படுகொலைக்கான அழைப்புகளை விடுத்தார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் கூட, ஹரித்வாரில் 2021 டிசம்பரில் யதி நரசிங்கானந்த் ஏற்பாடு செய்திருந்த தர்ம சன்சத் முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலை அழைப்புகளை விடுத்து மசூதிகள் மற்றும் பிற மத இடங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அச்சுறுத்தியது. முஸ்லீம் வியாபாரிகளின் மீதான பொருளாதாரப் புறக்கணிப்பையும் அறிவித்தது. சமீபத்தில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தால்  நிறுவப்பட்ட “இந்து யுவவாஹினி” என்ற தீவிரவாத இந்துத்துவ அமைப்பானது இந்தியாவை ‘இந்து ராஷ்டிரா’ ஆக்க வேண்டும் என்று தலைநகரில் வெளிப்படையாக உறுதிமொழி எடுத்தது. இந்த இனப்படுகொலை அழைப்பு மற்றும் வெறுப்புப் பேச்சுகளுக்குப் பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் இளைஞர்கள் இந்துத்துவா குண்டர்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். மதம் மாறிய தம்பதிகள் ‘லவ் ஜிஹாத்’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் தாக்கப்பட்டனர். இத்தகைய சமீபகால போக்குகள் அனைத்தும் மத சிறுபான்மையினர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட இந்துத்துவா குண்டர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக்குகிறது.

சென்ற டிசம்பரில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இந்துத்துவா குண்டர்களால் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டன. “மதமாற்றம் செய்கிறார்கள்” என்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டனர். ஹரியானாவில் உள்ள அம்பாலாவில் இயேசு கிறிஸ்துவின் சிலை சேதப்படுத்தப்பட்டது. பா.ஜ.க. தலைமையிலான கர்நாடகா மாநில அரசு, கிறிஸ்தவ சிறுபான்மையினர் மற்றும் மிஷனரிகளை குறிவைத்து, அரசியலமைப்பிற்கு எதிரான “கர்நாடகா மத சுதந்திரத்திற்கான பாதுகாப்பு சட்டம் 2021” இயற்றியது. தீவிரவாத இந்துத்துவா குண்டர்களால் கிறிஸ்தவ கன்னியாஸ்திரீகளால் நடத்தப்படும்  கான்வென்ட்கள் கூட குறிவைக்கப்பட்டன.

ஒவ்வொரு நாளும் தலித்துகள் சாதி இந்துக்களால் குறிவைக்கப்படுகிறார்கள். தினமும் பல கொலைகள் நடக்கின்றன. சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் தலித் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்தில் குதிரை சவாரி செய்ததற்காக சாதி இந்துக்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர். தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். பார்ப்பனிய சாதிய அமைப்பும் அதன் பல்வேறு உறுப்புகளும் சாதி இந்துக்களுக்கு ஆதரவாக நின்று கூட்டாக தாக்குதல்களில் பங்கு கொள்கின்றன.

நாடும் எல்லைப் பகுதிகளும் “பாதுகாப்பு” என்ற பெயரில் ராணுவ ரீதியாக பலப்படுத்தப்படும் அதேநேரத்தில் இந்திய அரசால் ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் சிறுபான்மையினர் மீதான இந்தக் கொலைவெறி மற்றும் தாக்குதல்களுக்கு நாம் அனைவருமே சாட்சியாக இருக்கிறோம். காஷ்மீரில், இந்திய அரசியலமைப்பின் 370 மற்றும் 35A பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு அம்மக்களின் வாழ்க்கை மோசமடைந்துள்ளது. காஷ்மீரிகளின் ஜனநாயக எதிர்ப்புகளை அடக்குவதற்காக, 2019 ஆகஸ்ட் முதல் பிப்ரவரி 2021 வரை கடுமையான ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் காஷ்மீர் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து இந்திய அரசுப் படைகள் பாதுகாக்கப்பட்டது. காஷ்மீரில் ஒவ்வொரு வாரமும் பல்லாயிரக்கணக்கானோர் போலி என்கவுண்டர்களால் கொல்லப்படுகிறார்கள், அதே நேரத்தில் சட்டவிரோத தடுப்புக்காவல்கள், காவலில் வைக்கப்பட்ட மரணங்கள், காணாமல் போன வழக்குகள், சித்திரவதை மற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காஷ்மீர் மாணவர்கள் தொடர்ச்சியாக குறிவைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்படுகிறார்கள். இன்றும் காஷ்மீரில் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. காஷ்மீர் மக்கள் மீது இழைக்கப்படும் குற்றங்களைப் பற்றி அறிக்கையிடும் எந்தவொரு காஷ்மீரி பத்திரிக்கையாளரும் உடனடியாக இலக்கு வைக்கப்பட்டு கடுமையான UAPA மற்றும் PSA ஆகியவற்றால் குற்றம் சாட்டப்படுவார்கள். சமீபத்தில், பத்திரிக்கையாளர் சஜாத் குல் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு மற்றொரு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். அதோடு, காஷ்மீர் பிரஸ் கிளப் சில இந்திய-ஆதரவு பத்திரிகையாளர்களால்  பதவி கவிழ்ப்பு முறையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் வன்முறையால் தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு (AFSPA) எதிராக மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அஸ்ஸாமின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நாகாலாந்தில் நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து திரும்பும் தொழிலாளர்களை ஈவு இரக்கமின்றிக் கொன்றதில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தின் சிறப்புப் படைகளுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுதல், சித்திரவதைகள் மற்றும் போலி என்கவுண்டர்கள் ஆகியவை இந்தப் பகுதிகளில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இந்த இராணுவமயமாக்கலை எதிர்கொண்டு, மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கப் பயன்படுத்தப்படும் AFSPA மற்றும் UAPA போன்ற பிற கொடூரமான சட்டங்களை ரத்து செய்யக் கோரி மக்கள் ஒன்றிணைந்து அணிவகுத்து வருகின்றனர்.

பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 84 சதவீத குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளது, அதேசமயம் ஆயிரம் கோடிகளுக்கு மேல் சொத்து வைத்திருக்கும் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102-ல் இருந்து 142 ஆக அதிகரித்துள்ளது. கோவிட்-19 இன் பரவலும் அதைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கும் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கையை நாசமாக்கியது. . நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குற்றவாளிகள் அரசாங்கத்தால் வெட்கமின்றி பாதுகாக்கப்படுகிறார்கள். கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. நகர்ப்புறங்களில், ஜனநாயக ஆர்வலர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைத்து எதிர்ப்புக் குரல்களும் மக்கள் விரோதச் சட்டங்கள், கைதுகள் மற்றும் போலி என்கவுண்டர்கள் மூலம் குறிவைக்கப்படுகின்றன அல்லது சர்வதேச உளவுச் செயலி மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

“ஆத்ம நிர்பார் பாரத்” (சுயசார்பு இந்தியா) என்ற மோடி அரசின் கொள்கைக்கு மாறாக, கோல் இந்தியா மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கங்களைத் தனியார்மயமாக்க அதே மோடி தலைமையிலான ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அரசாங்கம் 55 புதிய நிலக்கரிச் சுரங்கங்களுக்கும், தற்போதுள்ள 193 சுரங்கங்களை விரிவாக்கவும் அனுமதித்துள்ளது.  இவற்றிலிருந்து நிலக்கரி, இரும்பு மற்றும் பாக்சைட் ஆகியவற்றை தோண்டி எடுக்க Llyod மற்றும் Hindalco போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலான குத்தகைக்கு வழங்கியுள்ளது. இதன்மூலம் ஒருபுறம் புதுப்பிக்க முடியாத வளங்கள் விரைவான அளவில் கொள்ளையடிக்கப்படுகின்றன, மறுபுறம் திருத்தப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் நில அபகரிப்பு அதன் முழு வேகத்தை எட்டியுள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் கொள்ளையடிப்பதற்கும், நாசம் செய்வதற்கும் இந்த அரசு உதவுவதால், ஒடிசா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கணக்கான பழங்குடி மக்களின் கிராமங்கள், குக்கிராமங்கள் நீரில் மூழ்கப் போகின்றன.

பா.ஜ.க. அரசாங்கத்தின் தலைமையிலான இந்திய அரசு தனது ‘கடமை’யை மக்களுக்குச் செய்வதற்குப் பதிலாக, கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை மிருகத்தனமாக அடக்குவதில் எந்த எல்லைக்கும் சென்றுள்ளது. சமீபத்தில், ஒடிசாவின் ஜகத்சிங்பூரில் உள்ள திங்கியாவில், ஜிண்டால் ஸ்டீல் ஒர்க்ஸ் (ஜேஎஸ்டபிள்யூ) லிமிடெட் மூலம் இரும்பு ஆலை அமைப்பதற்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் கொடூரமாக ஒடுக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது மாநில போலீஸ் படைகளும், ஜிண்டால் குண்டர்களும் சேர்ந்து தடியடி நடத்தினர். மகாராஷ்டிராவின் சுர்ஜாகரில் லியோட் மற்றும் வடக்கு சத்தீஸ்கரின் ஹஸ்தியோவில் அதானிக்கு எதிராக இதேபோன்ற போராட்டங்ககளும் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. இயற்கை வளங்களை பெரும் நிறுவனங்களுக்கு விற்பதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டுகின்றன. மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் ஊடக கவனத்தைப் பெறாத இடங்களில், கிராமசபை மற்றும் பஞ்சாயத்து (திட்டமிடப்பட்ட பகுதிகளின் விரிவாக்கம்) சட்டம், 1996 அல்லது PESA ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்ட அடிப்படை அரசியலமைப்பு விதிகளை அரசாங்கம் தொடர்ந்து அப்பட்டமாக மறுத்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டியில், சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சிவாலிக் பகுதியில் விமான நிலையத்துக்காக நிலஅபகரிப்புக்கு எதிராக அப்பகுதி மக்களால் நடத்தப்பட்ட, அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட போராட்டம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

நிலம், நீர் மற்றும் வளங்கள் மீதான தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் எங்கெங்கெல்லாம் எழுந்தார்களோ, அங்கெல்லாம் அவர்கள் அதிகரிக்கப்பட்ட இராணுவமயமாக்கல் மூலம் அரசின் அடக்குமுறையை எதிர்கொண்டனர். அரசாங்கத்தின் பொய்கள் மற்றும் கொள்ளைக்கு எதிரான மக்களின் ஜனநாயக எதிர்ப்பை ஒடுக்கவும், இயற்கை வளங்களை ஏற்றுமதி செய்வதை எளிதாக்கவும், மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் துணை ராணுவத்தின் இருப்பை தீவிரப்படுத்த, ஆபரேஷன் சமாதான் – பிரஹார் என்ற தனது சமீபத்திய செயல்திட்டத்தை இந்திய அரசு வெளியிட்டது. ஆபரேஷன் கிரீன் ஹன்ட்டின் இந்த சமகால அவதாரத்தில், நூற்றுக்கணக்கான புதிய துணை ராணுவ முகாம்கள் வளங்கள் நிறைந்த இந்தப் பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. அதேவேளையில் போலி என்கவுன்டர்களில் பழங்குடி இளைஞர்கள் கொல்லப்படுவது அதிகரித்தும் வருகிறது. ஒவ்வொரு நாளும் அவர்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு கடுமையான சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

இந்த தொடர்ச்சியான அடக்குமுறையானது மக்களின் இடிமுழக்க எதிரொலியுடன் எதிர்க்கப்படுகிறது. காவல்துறை முகாம்கள் அமைப்பதற்கும், சுரங்க நிறுவனங்களுக்கு எதிராகவும் பழங்குடி மக்கள் ஊர்வலம் நடத்தி வருகின்றனர். நான்கு பழங்குடி இன போராட்டக்காரர்கள் கொல்லப்பட்ட தெற்கு பஸ்தாரில் சில்கரில் CRPF முகாம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் ஒன்பதாவது மாதத்தை எட்டியுள்ளது. இதேபோன்ற போராட்டங்கள் பஸ்தாரின் பல்வேறு பகுதிகளான எட்ஸ்மெட்டா, மாட்டின் மெட்டனார், மற்றும் நாராயண்பூரில் வெடித்துள்ளன. ஜார்கண்டின் மோகன்பூரில், கிரிதி மாவட்டத்தின் பரஸ்நாத் மலைகளின் அடிவாரத்தில், 45 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடிகள் சாலைகளை மறித்து, துணை ராணுவ முகாம்கள் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் அறிவித்தனர். மாறாக பள்ளி, மின்சாரம், பாதுகாப்பான குடிநீர் வசதி போன்றவற்றைக் கோரினர். உண்மையில், ஜனநாயகம் என்பது இராணுவ வலிமை என்ற வெற்று துர்நாற்றத்தில் இல்லை, ஆனால் மக்கள் இயக்கங்களின் தணியாத உணர்வில்தான் உள்ளது.

இந்த நாளில், விவசாயிகள் போராட்டம், CAA-NRC எதிர்ப்பு இயக்கம், ஜனநாயக அமைப்புகள் மற்றும் மக்களின் போராட்டங்களின் உணர்வை முன்னெடுத்துச் செல்வதற்கும், இந்த அடக்குமுறைக் குடியரசை அச்சமின்றி எதிர்ப்போம் என்று உறுதி ஏற்போம். அரச அடக்குமுறைக்கு எதிரான பிரச்சாரம் (CASR) நமது நாட்டின் அனைத்து மக்கள் சார்பு, முற்போக்கு மற்றும் ஜனநாயகப் பிரிவினரை பார்ப்பனிய இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபடுமாறு கேட்டுக்கொள்கிறது. எமது சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்படும் பிரிவினருடன் போராடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்குமாறு நாங்கள் கோருகிறோம். அனைத்து மக்களின் குரல்களுக்கும் ஜனநாயகத்துக்காகவும் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்!

அரசின் அடக்குமுறைக்கு எதிரான பிரச்சாரம் (Campaign Against State Repression)

(Organising Team: AISA, AISF, APCR, BCM, Bhim Army, Bigul Mazdoor Dasta, BSCEM, CEM, CRPP, CTF, Disha, DISSC, DSU, DTF, IAPL, IMK, Karnataka Janashakti, KYS, Lokpaksh, LSI, Mazdoor Adhikar Sangathan, Mazdoor Patrika, Mehnatkash Mahila Sangathan, Morcha Patrika, NAPM, NBS, NCHRO, Nowruz, NTUI, People’s Watch, Rihai Manch, Samajwadi Janparishad, Satyashodak Sangh, SFI, United Against Hate, WSS)

நன்றி:
Countercurrents.

தமிழில்: செந்தழல்

ஆங்கில பதிவு

https://countercurrents.org/2022/01/stay-united-against-state-repression/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here