கார்ப்பரேட்-காவிப் பாசிசத்தை வீழ்த்த ஐக்கிய முன்னணி மற்றும் மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்
சுவரொட்டி

1917 ஆம் ஆண்டு, நவம்பர் 7 உலகின் முதல் சோசலிச அரசு அமைந்த நாள்.அதுவரை ரஷ்யாவை ஆண்டு வந்த  ஜார் மன்னன் தலைமையிலான சுரண்டும் வர்க்கங்களை தூக்கி எறிந்து தோழர் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நாள். இந்த உலகமே முதலாளிகளால் தான் இயங்குகிறது; முதலாளிகளுக்குத்தான் ஆட்சி செய்யும் அறிவும், திறனும் உள்ளது; அவர்களால்தான் இந்த உலகை வழி நடத்த முடியும் என்று முதலாளித்துவ அறிஞர்கள் பிதற்றி வந்ததை தகர்த்தெறிந்த நாள்.  ஆளும் வர்க்கத்தால்  ஒடுக்கப்படும், சுரண்டப்படும் உலகின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கலங்கரை விளக்காக அமைந்த நாள்.  உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு, தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் வந்த நாள். உலகத் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் கொண்டாடிட வேண்டிய நாள்.

அன்று ஐரோப்பாவின் முதலாளித்துவ சுரண்டலுக்கு முக்கிய பகுதியாக இருந்தது ரஷ்யா. மகத்தான சோசலிசப் புரட்சியின் மூலம் ஜார் மன்னனை தூக்கி எறிந்ததோடு  சேர்த்து போலி வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றிய முதலாளித்துவ ஆட்சியையும் தூக்கி எறிந்தது லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி.

ரஷ்யாவில் நடந்த சோசலிசப் புரட்சி ஐரோப்பா எங்கும் எதிரொலித்தது. பல்வேறு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி நிறுவப்பட்டது.  பல நாடுகளில் காலனியாதிக்க ஆட்சி தூக்கி எறியப்பட்டது.

உலகை சூறையாடிய முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு எதிராக உருவான  சோசலிச ரஷ்யாவில் மக்கள் அனைவருக்கும் கல்வி,  இலவச மருத்துவம் வழங்குவதும், அனைவருக்கும் வேலையளிப்பதும் அரசின் கடமையாகவும் பொறுப்பாகவும் இருந்தது; உண்மையான மக்கள் நல அரசு சோவியத்தில் உருவானது.

அங்கு உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் பெரும் முதலாளிகள் இல்லை; ஆலைகள், சுரங்கங்கள், கனிம வளங்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டு இருந்தன; தேசிய இனங்கள் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை பெற்றிருந்தன; அதுவரை பின்தங்கிய, ஏழை நாடாக இருந்து வந்த ரஷ்யா சோசலிச புரட்சி நடந்த சில பத்தாண்டுகளிலேயே பொருள் உற்பத்தி, அறிவியல்-தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் மின்னல் வேகத்தில் முன்னேறியது. ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் 300 ஆண்டுகள் சாதித்த சாதனையை சோசலிச ரஷ்யா வெறும் 30 ஆண்டுகளில் சாதித்தது.

ஏகாதிபத்திய வல்லூறுகளின் அச்சுறுத்தலையும், உள்நாட்டில் அதிகாரத்தை இழந்த முதலாளித்துவ வர்க்க ஓநாய்களின் சதித்தனங்களையும்  முறியடித்து சோசலிச அரசை கட்டிக்காத்தார் தோழர் ஸ்டாலின். இதனாலேயே அவரை சர்வாதிகாரி என்றும், அவரது ஆட்சியில்  கோடிக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் என்றும், கருத்துரிமை நசுக்கப்பட்டது என்றும் அவதூறுகளை பரப்பி வந்தது முதலாளித்தவ வர்க்கம்.

யாரை சர்வாதிகாரி என்று தூற்றியதோ அவரின்  தலைமையில்தான் உலகை அச்சுறுத்தி வந்து முதலாளித்துவ பயங்கரவாதியான பாசிச ஹிட்லர் வீழ்த்தப்பட்டான். அது மட்டுமல்ல கம்யூனிசத்தின் பெயரால் திருத்தல்வாதத்தை முன்வைத்த பல்வேறு போலி கம்யூனிஸ்டுகளுக்கும், கம்யூனிஸ்ட் கட்சியை தொளதொளப்பாக மாற்ற முயற்சிக்கின்ற முதலாளித்துவ எடுபிடிகளுக்கும் உரிய பாடத்தை புகட்டியது.

இன்றோ காசாவில் உலகின் மிக மோசமான ஒரு இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடியாளான பாசிச இஸ்ரேல் அரசு. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 20,000 குழந்தைகள் உட்பட 67 ஆயிரம் பேரை கொன்று குவித்துள்ளது பாசிச இஸ்ரேல் அரசு. அமெரிக்க மேல்நிலை வல்லரசின் துணையுடன் இஸ்ரேலின் இனவெறி பிடித்த யூத ஜியோனிச. ஆதிக்க வெறி காரணமாகவே இந்த படுகொலைகள் நடந்தேறி வந்துள்ளது. உலகம் முழுவதும் மக்களிடம் அம்பலப்பட்டு போய் உள்ளதால் தற்காலிகமாக இந்த போர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் போர்கள், இனவெறி, தேசியவெறி மோதல்கள், மறுபுறம் வேலையின்மை, வறுமை, ஏற்றத்தாழ்வு, உரிமைகள் பறிப்பு என ஏகாதிபத்திய முதலாளித்துவம் உலக மக்களின் வாழ்வை சிதைத்து வருகிறது

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நமது நாட்டை கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதம் ஆட்டி படைத்து வருகிறது. ‘சுதந்திரம்’ அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், இந்த நாடு பின் தங்கிய, வளர்ச்சியற்ற நாடாகவே உள்ளது. காங்கிரசு ஆட்சியில் நாடு பொருளாதார ரீதியாக பின்னடைந்து விட்டது. அதை மாற்றி நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம் என்று முன்வைத்து ஆட்சிக்கு வந்த மோடி கும்பல் கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் நிலைமையை மேலும் மோசமாகியுள்ளது.

இந்த நாட்டை மேலும் மேலும் கார்ப்பரேட் கும்பல் சுரண்டுவதற்கு திறந்து விட்டுள்ளது. நாட்டின் கனிம வளங்கள், இயற்கை வளம் பொதுத்துறை என அனைத்தையும் உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையல் வைத்துள்ளது. வரி மேல் வரி விதித்து இந்திய பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்க டிரம்ப் அரசிடம் வாலைச்சுருட்டிக் கொண்டுள்ளது.

80 கோடி ஏழை மக்கள் ரேஷன் அரிசியை நம்பி வாழும் நிலையும், அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்கள் லட்சக்கணக்கான கோடிகளில் புரளும் நிலையும் இங்கு உள்ளது.

இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களான விவசாயிகள் கடன் பட்டு போண்டியாகி தற்கொலையை நோக்கி தள்ளப்பட்டு வருகின்றனர். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாயிகள் விளைவிக்கின்ற பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை இல்லை விலை நிர்ணயிக்கும் உரிமையும் விவசாயிகளிடம் இல்லை.

நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இன்னமும் பெரும் பண்ணைகளிடமும், ஆதீனங்கள், மடங்கள், கோவில்கள், டிரஸ்டுகளிடம் குவிந்து கிடக்கிறது. நிலமற்ற கூலி விவசாயிகள் கொடூரமாக சுரண்டப்படுகின்றனர்.. நிலத்தின் மீது அவர்களின் அதிகாரத்தை,, அவர்களின் உரிமையை பெற முடியாமல் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.

கடந்த 75 ஆண்டுகளில் இந்திய உழைக்கும் மக்கள் போராடி பெற்ற பல்வேறு உரிமைகளை பறித்து வருகிறது தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் விதமாக 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து அதனிடத்தில் கார்ப்பரேட் சேவைக்கு தகுந்த மாதிரியான நான்கு சட்ட தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளது.  வேலைகள் அனைத்தும் நிரந்தரமற்ற ஒப்பந்த பணிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

கல்வியை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்க. தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து அமல்படுத்தி வருகிறது.  பல்வேறு மாநிலங்களும் இந்த மக்கள் விரோத கொள்கையை எதிர்த்தாலும் அதனை வலுக்கட்டாயமாக திணித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும்  தமிழகத்துக்கு கல்வி நிதியை தர மறுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வது மட்டுமின்றி ஆர்எஸ்எஸ் பாஜகவின் காவிப் பாசிசக் கொள்கைகளையும் புராண புரட்டுகளையும் மாணவர்கள் மண்டையில் ஏற்றி மாணவர்களை பார்ப்பனிய அடிமைகளாக மாற்றத் துடிக்கிறது.

இதோடு மட்டுமல்லாமல் பல்கலைக்கழக மாநில குழுவின் மூலம் மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கான நிதிகளை வெட்டுவது, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை, பட்டியலின மாணவர்கள் பெற்று வந்த உதவித்தொகைகளை ரத்து செய்வது அல்லது வெட்டி குறைப்பது என்ற வேலையிலும் ஈடுபட்டு வருகிறது.

EWS என்ற பெயரில் பார்ப்பன உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்கி இட ஒதுக்கீட்டு கொள்கையையே நீர்த்துப் போக செய்துள்ளது. மும்மொழிக் கொள்கையை திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிடில் மாநிலங்களுக்குரிய கல்வி நிதியை தர முடியாது என திமிர்த்தனம் காட்டுகிறது. நீட் தேர்வை கொண்டு வந்து மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த மருத்துவ படிப்பை கைப்பற்றியது போலவே கலை, அறிவியல், சட்டம், வேளாண் படிப்பு உள்ளிட்ட பிற படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வர திட்டமிட்டு வருகிறது.

இத்தனை தடைகளையும் தாண்டி கல்வி பயின்று வேலை தேடும் இளைஞர்களுக்கோ வேலைவாய்ப்புகள் இன்மை பெரும் இடியாய் இறங்கி உள்ளது. படித்த இளைஞர்களிடம் வேலையின்மை அதிகரித்து வருகிறது என்பதை புள்ளி விவரங்கள் தொடர்ந்து உணர்த்தி வருகிறது.

இன்னொரு புறம், குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு வாரிய திருத்தச் சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம் என காவிச் சட்டங்கள் மூலமாகவும், புல்டோசர் நீதி என்ற பெயரில் உரிமைக்காக போராடும் இஸ்லாமியர்களின் வீடுகளை தகர்ப்பதன் மூலமாகவும் இந்துராஷ்டிர திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.. இவற்றை எதிர்த்துப் போராடிய ஜனநாயக சக்திகளை, மாணவர்களை தேசவிரோதிகள் என முத்திரை குத்தி பல ஆண்டுகளாக ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் வைத்து சித்தரவதை செய்து வருகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றை தனது அடியாட்களாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளையும் நசுக்கி வருகிறது.

நமது நாட்டிலும் இன்றைய உலகிலும் பல்வேறு நாடுகளில் பாசிஸ்டுகள் செய்யும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் படுகொலைகளுக்கும் அடிப்படைக் காரணம் இன்றைய உலகின் ஏகாதிபத்திய முதலாளித்துவ கட்டமைப்பே. அதனை தகர்த்தெறிவதற்கான சோசலிச பாதையிலான போராட்டம் ஒன்றே உலக மக்களின் வாழ்க்கைக்கு விடிவைத் தரும்.

அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, நமது நாட்டில் கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்த குறைந்தபட்ச செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியையும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியையும் கட்டியமைப்போம். பாசிச மோடி கும்பலை ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவோம். ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்.

இந்தியாவில் சோசலிசத்தை படைப்பதற்கு முன் தேவையான புதிய ஜனநாயகப் புரட்சியை சாதிப்போம். சோசலிச பாதையில் முன்னேறுவோம். அமெரிக்க மேல்நிலை வல்லரசையும் புதிதாக உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் சீன ரஷ்ய பல் துருவ ஒருங்கிணைப்பையும் முறியடித்து உலகில் ஏற்றத்தாழ்வுகளையும் சுரண்டலையும் ஒழித்துக் கட்டி நிரந்தர சமாதானத்தை அனைவருக்கும் சமத்துவமான வாழ்க்கை முறையை உருவாக்குகின்ற வகையில் உலக உழைக்கும் மக்களின் விடுதலைக்கு முன்னணி பங்காற்றுவோம்.

கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த கீழிருந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியை உருவாக்குகின்ற மகத்தான கடமையை இந்த நவம்பர் புரட்சி தினத்தில் முன்னெடுத்துச் செல்வோம்.

உலக மக்களின் வாழ்வை அழித்து வரும் ஏகாதிபத்திய முதலாளித்துவ பாசிச கும்பலை வீழ்த்த கம்யூனிசம் ஒன்றே தீர்வு!

தோழமையுடன்,

விவசாயிகள் விடுதலை முன்னணி.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
மக்கள் கலை இலக்கியக் கழகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here