செப்டம்பர் 30,
தோழர் பி.சீனிவாசராவ் நினைவுநாள்:
கர்நாடக மாநில பார்ப்பனச்சேரியில் பிறந்து,
கீழத்தஞ்சை பள்ளு, பறைச் சேரிகளில் வாழ்ந்து மறைந்த “காம்ரேட் பி.எஸ்.ஆர்”


எனக்கு விபரம் தெரியத்தொடங்கிய நாட்களில் சீனிவாசராவ் இறந்திருந்தார். ஆண்களும் பெண்களும் சாரைசாரையாக நடந்தும் கட்டைவண்டியிலும் சீனிவாசராவ் நினைவுநாளில் கல்லறைக்கு சென்றதை நான் பார்த்திருக்கிறேன்.
எனது பாட்டனார் சுப்பிரமணியன், ஆசிரியர் குப்புசாமி, எம் எல் அமைப்பில் இறுதிநாட்களில் இணைந்திருந்த தொழர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் மூலம் விபரம்புரியும் வயதில் அவரைபற்றி அறிந்திருந்தேன். இவர்கள் சீனிவாசராவோடு நெருங்கி பழகியவர்கள். அடக்குமுறை காலத்தில் சீனிவாசராவ், மணலி கந்தசாமி உள்ளிட்ட பல தோழர்களின் தலைமறைவு பணிகளுக்கு உதவியவர்கள்.

அறுபது ஆண்டுகளுக்குமுன்பு 30-09-1961ல் சீனிவாசராவின் பூதஉடல் திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றங்கரையில் புதைக்கப்பட்டது. ஐம்பத்து நான்கு வயதில் மரணித்த சீனிவாசராவின் சாதனையை வேறு யாருடைய சாதனையோடும் நாம் ஒப்பிட முடியாது.

கர்நாடக மாநிலத்தில் 10-04-1907 ல் தென்கன்னடபகுதி படகரா என்ற ஊரில் பிறந்த சீனிவாசராவ்,
1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி தொடங்கிய உப்புச்சத்தியாகிரகப் போராட்டத்தில் போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். சிறையில் தோழர். அமீர் ஹைதர் கானை சந்திதத்தபின் புதிய அத்தியாயம் சீனிவாசராவின் வாழ்க்கையில் தொடங்குகிறது. .
சுதந்திரப்போராட்ட வீரர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டை கம்யூனிஸ்ட் ஆக்கியதில் சீனிவாசராவின் பங்கு முக்கியமானது.

ஜீவாவுடன் “ஜனசக்தி” பத்திரிக்கையில் இணைந்து அரசியல் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றார். அதன் மூலம் இடதுசாரி அரசியலின்பால் ஈடுபாடு கொண்ட முன்னணி சக்திகள் பலரை உருவாக்கியதில் பெறும்பங்களிப்பை செலுத்தியிருக்கிறார்.

1936ல் உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கிளையில் சீனிவாசராவ் உட்பட ஒன்பது பேர் உறுப்பினர்கள். அதில் சீனிவாசராவ் விவசாயிகள் சங்கம் அமைக்கும் பொறுப்பை ஏற்று பணியாற்றினார். 14.06.1943-ல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க அமைப்பு கமிட்டி அமைக்கப்பட்டு அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

முதன் முதலில் மன்னார்குடி தாலுகா தென்பரையில் விவசாயிகள் சங்கக் கிளை தொடங்கப்பட்டது. குத்தகை விவசாயிகளுக்கு 18 வாரமாக இருந்த கூலியை 33 வாரம் அல்லது மூன்றில் ஒரு பங்கு வாரம் என முதன் முதலில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1944-ல் விவசாய சங்கத்திற்கும், மிராசுதாரர்களுக்கும் இடையே மன்னார்குடியில் உடன்படிக்கை ஏற்பட்டது. இது ஒடுக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை விதைத்து.

1952 ஆகஸ்ட் 20-ல் ராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தபோது பண்ணையால் சாகுபடிதாரர் பாதுகாப்புச்சட்டம் கொண்டு வந்தார். இது கூலிஏழை, குத்தகை விவசாயிகளை பெரிதும் பாதித்தது. 1952 ஆகஸ்ட்டில் நிலவெளியேற்ற எதிர்ப்பு மாநாடு திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் குத்தகைதார்களுக்கு மட்டுமல்லாமல் கூலி ஏழை விவசாயிகளுக்காக நான்கு சின்னப்படி கூலிநெல் கேட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் வெற்றி ஈட்டப்பட்டது. இதன் முலம் தஞ்சை மாவட்டத்தில் கூலி விவசாயிகள், குத்தகைதாரர்கள் ஒருங்கிணைப்பில் தனிப்பெரும் சக்தியாக கம்யூனிஸ்ட் கட்சி உருவானது.

இதன் தொடர்ச்சியாக விவசாய சங்கம் சார்பில் இரண்டு குழுவாக சுமார் 600 மைல் நடைபயணம் 1960 ஆகஸ்ட்15ல் மேற்கொள்ளப்பட்டது. இதில்ஒரு குழுவிற்கு சீனிவாசராவ் தலைமை வகித்தார். 14-09-1961ல் நில உச்சவரம்பு மசோதாவைத் திருத்த வேண்டும் எனற கோரிக்கையை முன்வைத்து மறியல் கிளர்ச்சி தொடங்கி 16,000 (பதினாறு ஆயிரம்) தோழர்கள் சிறைச் சென்றார்கள்.

சாதி தலைவர்கள் படங்களை மாட்டி வரும் இக்காலக்கட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் சாதி, மத பேதம் கடந்து பலவீடுகளில் சீனிவாசராவ் படம் மாட்டப்பட்டிருப்பதை இன்றும் நாம் காணலாம். மக்கள் சக்தியை நம்பி பயணித்த தலைவன் மக்கள் மனதில் வாழ்கிறான் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் சீனிவாசராவ்.
சீனிவாசன் என்ற பெயர் தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு வழக்கமில்லாத ஒரு பெயராக இருந்தாலும் இப்பெயரை தாழ்த்தப்பட்ட மக்கள் தம்குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர்.

தமிழ்நாட்டில் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டிய பற்பல இயக்கங்களில் செங்கொடி இயக்கம் வகித்தபங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

அன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சவுக்கடி சானிப்பால் தண்டனை வழங்கப்பட்டது. பண்ணை அடியாட்கள், கார்வாரி, மணியம் தவிர மற்ற கூலி ஏழை விவசாயிகள் அனைவருக்கும் இத்தண்டனை பொதுவானது. சவுக்கடி சானிப்பால் தண்டனை நிறுத்தப்படுவதற்கு விவசாயிகளுக்கு உணர்வூட்டி போராடி வெற்றிபெற்றதன் மூலம் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டது.

பி.எஸ்.ஆர் விவசாயப் பிரச்சனைகளில் மட்டுமல்ல, சாதிய,சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடினார். கீழத்தஞ்சை பகுதிகளில் நிலவிய இரட்டை குவளை முறையைமுற்றாக ஒழிக்கப்பட்டதில் பி. எஸ். ஆர் மற்றும் தொழர்களின் பங்கு மகத்தானது. சாதி தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களில் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் பெருமளவு பங்கேற்றனர் என்பது முக்கியமாக ஒன்று.

பகலில் கூடினால் நிலபண்ணைகளுக்கு தெரிந்துவிடும் என்று இரவில் கூடவேண்டிய நிலையே நீண்டகாலம் கீழத்தஞ்சையில் நீடித்தது. இதனாலேயே விவசாய சங்கத்தின் கூட்டம் “அமாவாசை கூட்டம்” என்ற பெயரைப்பெற்றது. அப்படி கூடிய கூட்டங்களிலும் குண்டர்கள் தாக்குதலுக்கு இலக்கானது. .
சீனிவாசராவ் எந்த சூழ்நிலையிலும் தனிநபர் சாகசமாக எதையும் செய்யவில்லை, செய்ய அனுமதிக்கவும் இல்லை என்பதை நாம் இங்கே தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை மருந்தீஸ்வரர் கோயிலில் திருவிழா கொடி ஏற்றிவிட்டால் தாழ்த்தப்பட்ட மக்கள் 15 நாட்களுக்கு திருத்துறைப்பூண்டிகுள் நுழையக்கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு. தற்செயலாக நுழைந்ததுவிட்ட சீரங்கன் மற்றும் அவர் மனைவியும் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த அநீதியைக் கண்டு பொங்கியெழுந்த பி.எஸ்.ஆர் நூற்றுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை திரட்டிக்கொண்டுவந்து தேர் வரும்போது நடுரோட்டில் தடுத்து நிறுத்தினார். பின்பு ஆட்சியர், கண்காணிப்பாளர், வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையின் இறுதியில் தடை நீங்கி உரிமைப் போராட்டம் வென்றது. அதன்பிறகு சாதி இந்துக்கள் தேரோட்டத்தை நிறுத்திவிட்டு சப்பரம் கட்டி இழுத்து சென்றனர் என்பது அடுத்த தனிக்கதை.

பிறப்பால் பார்ப்பனராகவும்,
கன்னடத்தை தாய்மொழியாகவும் கொண்ட சீனிவாசராவிடம் இருந்த பொதுஉடமை சிந்தனையும், சந்தேகத்திற்கு இடமற்ற உழைக்கும் மக்கள் விடுதலை நோக்கமும், ஏழை, எளிய மக்கள் மீதான அளவில்லாத நேசமும் அவருக்கு வெற்றியை ஈட்டித்தந்தது.

உழவர்களோடு உழவராக கடுமையாக உழைத்தார். பல நாட்கள் பட்டினியோடு இருந்து விவசாய மக்களை திரட்டினார்.
உழைக்கும் மக்களின் குடிசைகளிலும், ஏதோ ஒரு சிறு விவசாயி வீட்டு திண்ணையிலும் படுத்துறங்கி அரசியல் பணியாற்றியதுதான் பி. எஸ் ஆரின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டதற்கு அடிப்படை. .

வர்க்க எதிரிகளைத் வென்ற காம்ரெட் பி.எஸ்.ஆரால் ஆஸ்துமா நோயை வெல்ல முடியவில்லை. திருத்துறைப்பூண்டி சந்தைப் பேட்டை அருகே முள்ளியாற்றங்கரையில் பி.எஸ்.ஆரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பராமரித்து வருகிறது.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. நினைவு மண்டபத்தை யார் பராமரிக்கிறார்கள் என்று தெரியாவில்லை. கவனிப்பாரற்று கிடக்கிறது. பி.எஸ்.ஆர். நினைவு மண்டபம் பள்ளமான இடத்தில் கட்டப்பட்டிருப்பது மட்டுமல்லாது சுற்றிலும் புற்கள் மண்டியபடியே எப்போதும் காட்சியளிக்கும். வாசலில் தொங்கும் பூட்டுதான் நம்மை எப்போதும் வரவேற்கும். பார்வையாளர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்கிற விவரமும் கிடையாது. இந்த அவல நிலைக்கு கம்யூனிஸ்ட்கட்சியினர் பொருப்பேற்று முறைப்படுத்தவேண்டும்.

கர்நாடக மாநில பார்ப்பனச்சேரியில் பிறந்து கீழத்தஞ்சை பள்ளு, பறைச் சேரிகளில் வாழ்ந்து மறைந்த பி.எஸ்.ஆர். உழைக்கும் மக்களால் “காம்ரேட் பி.எஸ்.ஆர்” என்று அன்போடு அழைக்கப்பட்டார். அவரது அறுபதாம் ஆண்டு நினைவுநாளில் டில்லியில் போராடும் விவசாயிகளுடன் இணைந்து போராடி இழந்த உரிமைகளை மீட்க உறுதியேற்ப்போம். .

தஞ்சை இராவணன்
29-09-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here