“புற்றீசல்கள் போல பல்கிப் பெருகிவிட்ட ‘கல்வி வள்ளல்’-களின் தனியார்மய –  ஆங்கில வழி கல்வி நிலையங்களின் யோக்கியதாம்சங்கள் சந்தி சிரிக்கின்றன!”

முற்காலத்தில் தமிழ்நாட்டில் கல்வி நிலையங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில், தமிழ் வழி கல்வியாகத் தான் இருந்தன. அதன் மூலம் எண்ணிலடங்கா தமிழ் பண்டிதர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் எனப் பலரும் உருவாகிக் கொண்டே தான் இருந்தார்கள். அதற்கு எண்ணற்ற உதாரணங்களைக் கூற முடியும். மறைமலை அடிகள், திரு விக, நெ.து.சுந்தரவடிவேல் உட்பட எண்ணற்ற பல தமிழ் அறிஞர்களை கூறலாம். மருத்துவத் துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாகவும், சமூக சிந்தனையாளராகவும், பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக போராடியவராகவும் விளங்கிய முதல் பெண் மருத்துவர் புதுக்கோட்டை முத்துலட்சுமி (ரெட்டி) தமிழ் வழியில் கல்வி கற்றவரே. இன்னும் மிகச்சிறந்த பொறியியல் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் எனப் பலரையும் பட்டியலிட முடியும்.

பார்ப்பனச்  சூழ்ச்சியால் குலக்கல்வி முறை ராஜாஜி காலம் வரை நீடித்திருந்த போது, அதற்கு எதிராக பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம், நீதிக்கட்சி, தொடர்ந்து தந்தை பெரியார் இயக்கம் – இவற்றால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின ஏழை- எளிய மக்கள், கல்விச் சாலைகளில் தடம் பதிக்க ஆரம்பித்தார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவ இட ஒதுக்கீடுகளும் பல்வேறு போராட்டங்களின் மூலம் இம்மக்களுக்கு கை கொடுத்தன. அப்பொழுதெல்லாம் கூட அரசு கல்வி நிலையங்கள் தான்! தமிழ் வழி கல்வி தான்! கல்லூரிகளில் நுழைகின்ற பொழுதுதான் ஆங்கில வழியும் இணையப் பெற்றது.

இக்காலச் சூழலில், 1970-களின் மத்தியில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்த பொழுது, பணம் படைத்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் ‘வட மாநிலங்களில் ஆங்கில வழி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் திறக்கப்பட்டு அம்மாநில மாணவ மாணவியர் சிறந்த கல்வி பயில்கிறார்கள்’ என்றும், ‘அவர்கள் தமிழ்நாட்டு மாணவ- மாணவிகளை விட உயர்ந்த நிலையை எட்டி விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது’ என்றும், ‘எனவே தமிழ்நாட்டிலும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும், அதற்கானத் தீர்மானத்தை இச்சட்ட சபையில் நிறைவேற்ற வேண்டும்’ என முன்மொழிந்தார்கள். அப்போது தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த மறைந்த தமிழ் குடிமகன் கடுமையான ஆட்சேபனையை சட்டமன்றத்தில் பதிவு செய்தார். தமிழ் பற்று மிகுதியாகக் கொண்டவராய் இருந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியும் அதனை ஆமோதித்து முன்மொழியப் பட்ட தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற விடாமல் செய்தார்.

இருப்பினும் காலப்போக்கில் திமுகவில் பொருளாதார ரீதியில் தன்னை வளமாக உயர்த்திக்கொண்ட சிலரும் கூட அந்தக் கோரிக்கைக்காக தொடர்ந்து குரல் எழுப்பத் துவங்கினர். நாளடைவில் கட்சி பேதமின்றி அதற்கு ஆதரவு பெருகியது. எந்த வகையிலோ திமுக ஆட்சிக் காலத்திலேயே இக்கொடும்பாதகச் செயலுக்கு ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்டது.

ஆனால் அப்போது மெட்ரிகுலேஷன் கல்வி நிறுவனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்டதே யொழிய ஓங்கி வளரவில்லை.

இந்நிலையில் 1977-ம் ஆண்டு நடிகர் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். குறிப்பிட்ட காலகட்டத்தில் அவரது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக மறைந்த அரங்கநாயகம் நியமிக்கப்பட்டார். இக்காலக் கட்டத்தில் தான் அரசியலில் ஈடுபட்டு பெரும் பணம் கொள்ளையடித்த கூட்டமும், பெரும் பணக்காரக் கூட்டமும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், விவசாயக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பட்டயப் படிப்புக் கல்லூரிகள்,  செவிலியர் கல்லூரிகள்… என எந்த பாடத்திட்டமும்- துறையும் விடுபடாத அளவில் ‘புற்றீசல்கள்’ போல ஆங்கில வழி கல்வி நிறுவனங்கள் பல்கிப் பெருகின! இந்தப் பெருமைகள் யாவும் அஇஅதிமுக- வின் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அன்றைய கல்வித்துறை அமைச்சர் அரங்கநாயகத்தையே சாரும்!

இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களுக்குப் பிதாமகர்கள் – ‘கல்வி வள்ளல்கள்’ 90 சதவீதம் அஇஅதிமுக-வைச் சார்ந்தவர்களாகவே அமைந்தனர்.


படிக்க: கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள்  தீர்வுகள்


இவர்களுக்கும், கல்விக்கும் வெகுகாத தூரம்! என்பது பேருண்மை! உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், சென்னை போரூரில் அமையப்பெற்றுள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சாராய உடையார் ராமசாமிக்குச் சொந்தமானது.

சாராய சாம்ராஜ்யவாதியான இவருக்கும் கல்விக்கும் ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா? அக்கல்லூரி அமைய,  அந்த சாராய வியாபாரிக்கு போரூர் ஏரியின் பெரும் பகுதியை தாரை வார்த்துக் கொடுத்தவர் சாத்…சாத்… ‘நம்ம’ புர்ர்…ரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான்!

நீர்நிலைகள் எவையும் ஆக்கிரமிக்கப்படக்கூடாது என்பது வருவாய்த் துறையின் –  நீதித்துறையின் அடிப்படை சட்ட விதி. அதனால் தான் பல ஏழை எளிய மக்கள் அப்படிப்பட்ட நீர் நிலைகளில் வேறு வழியின்றி சிறு குடிசைகளை அல்லது வீடுகளை கட்டிக் கொண்டு வாழ்கின்ற பொழுது அனுபோக உரிமையை மட்டுமே பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பட்டா வழங்கப்படுவதே இல்லை. ஆனால் சாராய உடையாருக்கு ஒரு ஏரியின் பாதியையே ராமச்சந்திரா மருத்துவ கல்லூரிக்கு தாரை வார்த்தார் எம்ஜிஆர்! அந்த சாராய வியாபாரி முழு இடத்திற்கும் பட்டாக்களை பெற்றுக் கொண்டார். பணம் பாதாளம் வரை பாயும் என்பதற்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணம்!

இவர் மட்டுமா?

ஏ.சி.சண்முகம் அமைத்துள்ள MGR யுனிவர்சிட்டி அமைந்துள்ள இடமும், பச்சைமுத்து என்ற பாரிவேந்தரின் SRM யுனிவர்சிட்டி அமைந்துள்ள இடமும், விருதுநகரை சொந்த மாவட்டமாக கொண்டவரும் சென்னைக்கு பிழைப்புக்காக வந்து திருநின்றவூரில் செட்டில் ஆனவருமான கனகராஜ் என்பவரும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, இந்து சிறுபான்மையினர் என்ற செல்வாக்கை பயன்படுத்தி ஜெயா குழும கல்வி நிலையங்கள் என்ற பெயரில் அனைத்துத் துறை கல்வி நிலையங்களும், ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களிலும் இவர் தமது கல்வி நிலையங்களை விரிவுபடுத்திக் கொண்டுள்ளார்.  கள்ளக்குறிச்சியில் ஸ்ரீமதி என்ற இளம் மாணவி கொலையுண்டு போனதற்குக்  காரணமான இன்டர்நேஷனல் ஆங்கில வழி கல்விக்கூடமும்,  இன்னும் ஜே.பி.ஆர், ஜெகத்ரட்சகன், தம்பிதுரை(இவருக்கு தர்மபுரி உள்ளிட்ட பல இடங்களிலுள்ள கல்வி நிலையங்கள் தவிர்த்து,  அரியானாவில் மாபெரும் சட்டக் கல்லூரியும் உண்டு) பொன்முடி, துரைமுருகன் இவ்விதமாக அடுக்கிக் கொண்டே போகலாம்! இதுபோல் தமிழ்நாடு எங்கும் இத்தகைய ’கல்வி வள்ளல்’கள் உருவாக்கியுள்ள கல்வி நிலையங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது! சென்னை முதல் கன்னியாகுமரி வரை; தஞ்சை முதல் கோவை வரை; கிழக்கும் மேற்குமாக தெற்கும் வடக்குமாக நெடுஞ்சாலைகளில் ரயில் பாதைகளில் பயணிப்போர் இவர்களின் வானளாவிய கல்விக் கட்டிடங்களை வாய் பிளந்து பார்த்தவாரே பயணிக்க முடியும்! இவர்கள் அனைவருமே அரசியல் பின்புலத்தில் நீர் நிலைகளை – அரசு புறம்போக்கு நிலங்களை பெரும்பகுதி ஆக்கிரமித்துக் கொண்டவர்களே!


படிக்க: தமிழக கல்வித்துறையை மேம்படுத்த ஆசிரியர் நியமனம் உடனடித் தேவை


இப்படிப்பட்ட கல்வி நிலையங்களில் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் எட்டிக் கூடப் பார்க்க முடியாது. கல்வி நிலையங்கள் அனைத்தும் கார்ப்பரேட் மயமாகிவிட்டது!

பெரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் தான் இங்கே படிக்க இயலும். நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை, பேராசையின் காரணமாக பல பெற்றோர் கடனை உடனை வாங்கி பகற் கனவுகளோடு இவ்விதக் கொள்ளைக்காரக் கல்வி நிறுவனங்களில் ஆயிரமாயிரமாய்; லட்ச லட்சமாய்க் கொட்டி அழுது தமது பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்கின்றனர்.

பல கல்வி நிலையங்களில் மாணவ மாணவியர்கள் கொலை செய்யப்படுதல், தற்கொலை செய்யப்படுதல் என எண்ணற்ற கோரச் சம்பவங்களும் நடந்தேறி உள்ளன. அவை யாவற்றையும் இந்த ‘கல்வி வள்ளல்’கள்‌ தமது பணச் செருக்கால் வழக்குகளை ஒன்றும் இல்லாமல் ஆக்கி மூடி மறைத்து விடுகின்றனர்! கையறு நிலையில் உள்ள மக்கள், நிர்வாகம் கொடுக்கக்கூடிய சிறு சிறு சன்மானத்தைப் பெற்றுக் கொண்டு அமைதியாகி விடுகின்றனர்! வெகு மக்களின் எதிர்ப்புணர்ச்சியும் இல்லாமல் இருக்கிறது.

அண்மையில் 29-10-2024 -ல் திருநின்றவூர் ஜெயா மெட்ரிகுலேஷன் கல்வி நிலையத்தின் தாளாளர் கனகராஜின் நேர்முக உதவியாளர் மோகன் (65)-(ஓய்வு பெற்ற அரசு அலுவலர்) என்பவர் பள்ளி வளாகத்தில் இருந்த 35 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட கொடூரச்  சம்பவமும் மற்றும் ஒரு உதாரணமாகும். இதுவும் வழக்கம் போல ஒன்றுமில்லாதது ஆகிவிடும்!

ஏற்கனவே இருக்கின்ற வர்க்க வேறுபாடுகள் போதாது என்று இவ்வித கல்விக்கூடங்கள் மூலமாகவும் வர்க்க ஏற்றத்தாழ்வை கூர்மைப்படுத்துகின்றனர் இந்த பொறுக்கித்தனமான ‘கல்வி வள்ளல்’கள்!

எனவே, இது பெரியார் மண், அண்ணா மண், கலைஞர் மண், இது ‘திராவிட மாடல்’ மண் என வெற்றுக் கூச்சலிடுவதால் மட்டும் – வாய்ச்சவடால்கள் அடிப்பதால் மட்டும்… தமிழ் வளராது! அருதிப் பெரும்பான்மையான மக்கள் வளர்ச்சியை நோக்கி முன்னேற மாட்டார்கள்! அதனால் தமிழும் முன்னேற்றம் அடையாது! தமிழ் மறைந்து ஆங்கிலம் கோலோச்சும்! பற்றாக்குறைக்கு ஒன்றிய அரசின் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பும் வலுப்பெறும்!

எனவே, தமிழ்நாடு அரசே,

  • தனியார் ஆங்கில வழி கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் நட்ட ஈடின்றி அரசுடைமையாக்கு! தமிழ் வழியில் கல்வி கற்றுக் கொடு! ஆங்கிலத்தை இரண்டாம் பட்ச மொழியாக்கு!
  • அனைத்து தனியார் மெட்ரிக்குலேசன் & கல்லூரிகளில் நிகழ்வுற்ற கொலைகள் மற்றும் தற்கொலைகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கு! பாதிக்கப்பட்டோருக்கு கல்விக் கொள்ளையர்களின் உடமைகளிலிருந்து பறிமுதல் செய்து தகுந்த நிவாரணம் வழங்கிடுக!
  • அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்பு செய்து பல்லாயிரக் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி, மாடி மாடியாய் நீர் நிலைகளில் எழுப்பப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் கட்டி அமைக்கப்பட்டுள்ள கல்வி நிலைய கட்டிடங்கள் அனைத்தையும் இடித்து தரைமட்டமாக்கு! நீர் நிலைகளையும் புறம்போக்கு நிலங்களையும் அரசுடமையாக்கு!
  • நீர்நிலைகளை நீர்நிலைகளாக மட்டும் போற்றி பாதுகாத்திடு!
  • இந்தி சமஸ்கிருத மொழி திணிப்புகளுக்கு எதிராக சமரசம் இன்றி போராடு!

அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களே, மேற்கண்ட கோரிக்கைகளுக்காக களம் இறங்கி போராட தயாராவோம்!!

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here