கல்வி உரிமை மறுக்கப்பட்ட நாட்டில்
நீட் எதற்கு? அடியோடு தூக்கி எறி!

நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகள் அரசு பள்ளிகளில் படிக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின், அதாவது விவசாயிகள், அடித்தட்டு தொழிலாளர்கள் வீட்டு பிள்ளைகள் மருத்துவ படிப்பு படிப்பதை தடுக்கிறது என்பதை நீதிபதி ஏ.கே.ராசன் குழுவின் அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது ’காசில்லாதவனுக்கு கல்வி, அதிலும் மருத்துவக் கல்வி அறவே கிடையாது’ என்ற புதிய மனு நீதியை நீட் தொடர்பான அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. வெளியான அறிக்கையையும், உண்மையையும் வைத்துப் பார்த்தால் நீட் தேர்வை ஏன் நிராகரிக்க வேண்டும் என புரிந்துக் கொள்ள முடியும்.

நன்றி: சன் நியூஸ்

முதலாவதாக நீட் தேர்வானது தாய்மொழியில் பயிலும் மாணவர்களின் கல்வி திறமைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று விமர்சனமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னமும் கிராமப்புற மக்களில் பெரும்பான்மையானவர்கள் தாய்மொழியிலேயே கல்வி பெற்று வருவது தான் நிலைமையாக உள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளியில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள் எனவே இவர்களிடம் திறமை இருப்பதையே நீட் தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நீட் அறிமுகமாவதற்கு முன்னர் தாய் மொழியான தமிழில் படித்த மாணவர்களில் இருந்து 19.79% மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சென்றனர். ஆனால் நீட்டுக்கு பிறகு வெறும் 1.99% மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புக்கு சென்றுள்ளனர்.

இரண்டாவதாக நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. ஸ்கில் என்ற முகாந்திரத்தின் கீழ் தேர்ச்சி விகிதம் நியாயப் படுத்தப்படுகிறது. தகுதி – திறமை என்ற பார்ப்பனக் கும்பலின் தாரக மந்திரம் புதிய மனு நீதியின் முழக்கமாக மாறியுள்ளது. ஆனால் இந்த வாதமும் மோசடிதான் என்பதை 2019 ஆம் ஆண்டு 20 லட்ச ரூபாய்க்கு ஆள்மாறாட்ட தேர்வு எழுதிய தமிழக மாணவர் யோக்கியதையும், 2021 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் 20 லட்ச ரூபாய்க்கு தேர்வுத்தாள் வெளியானதும் மேட்டுக்குடிகள் பல்வேறு தகிடுதத்தங்களை செய்து நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள் என்பதை நிரூபிக்கின்ற வகையில் உள்ளது.

மூன்றாவதாக நீட் தேர்வு என்பது கற்றல் முறைக்கு பதிலாக மதிப்பெண் தேர்ச்சி என்ற முறையை கொண்டிருக்கிறது என்ற விமர்சனத்தை முன் வைத்துள்ளது. இதை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்கள் இயக்குகின்ற பயிற்சிக் கூடங்களில் மதிப்பெண்களை பெறுவதற்காக சில லட்சங்களை செலவிட்டு நீட் தேர்வில் மதிப்பெண் பெறுவதை நோக்கமாகக் கொண்டு பலரும் தேர்வு எழுதுகிறார்கள் என்பதால் மதிப்பெண் மூலமாக தேர்வு செய்வது தவறானது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

நான்காவதாக கற்றல் முறையிலும் கூட குறிப்பிட்ட தேர்வு முறையையே முன் வைப்பதால் இயல்பாக கற்றுக் கொள்ளும் முறையும் ஒழிக்கப்படுகிறது. ஆம் உண்மைதான்! இதன் மூலம் மதிப்பெண் நோக்கிய படிப்பு அறிவு வளர்வதற்கு தடையாகி பிராய்லர் கோழிகளை உருவாக்குகிறது.

ஐந்தாவதாக  நீட் தேர்வானது கலாச்சார ரீதியாக, பிராந்திய ரீதியாக மொழி ரீதியாக, சமூக பொருளாதார ரீதியாக பாரபட்சமாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது என்பது மிகச் சரியானது தான். பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், பண்பாடு கொண்ட நாட்டில் ஒரே மாதியான கல்விமுறை மற்றும் தேர்வு முறை நாட்டில் உள்ள ஏற்ற தாழ்வுகளை நிராகரித்து அனைத்து வசதிகளையும் கொண்ட மேட்டுக் குடிகள் மட்டுமே தேர்வாகும் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

ஆறாவதாக நீட் தேர்வு அமுல்படுத்த பெறுவதற்கு முன்பு தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்விக்கான சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த நீட் அமுலான பிறகு குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்வதற்கு வசதி வாய்ப்புள்ள குடும்பத்தினரை சார்ந்தவர்களே மருத்துவ படிப்பிற்கு படிக்க முடியும் என்பது நிபந்தனை ஆகிவிட்டது. எனவே மருத்துவம் என்பது சேவை என்ற நிலையைத் தாண்டி பணம் சம்பாதிக்கும் ஒரு வியாபாரமாக மாறிவிட்டது என்பதை இது நிரூபிக்கிறது. நீட் வருவதற்கு முன்னர் 2016-17 ஆம் ஆண்டு மருத்துவ கல்வியில் சேர்ந்தவர்கள் 24.94% முதல் தலைமுறை மாணவர்கள். ஆனால் 2020-21-ல் இந்த வீதம் 14.46% ஆக குறைந்துள்ளது. நீட் தேர்வு மூலம் பணக்காரன் வீட்டு பிள்ளைகள் தான் மீண்டும் மருத்துவராக முடியும் என்பது தவிர வேறில்லை.

ஏழாவதாக அரசு பள்ளிகளில் பயின்று கிராமப் புறங்களில் இருந்து மருத்துவ படிப்பிற்கு வருகின்றவர்கள் மீண்டும் கிராமங்களில் சென்று வேலை செய்வதற்கு தயக்கம் காட்டுவதில்லை ஆனால் நகர்புறத்தில் இருந்து வரக்கூடிய மாணவர்கள் நீட் மூலம் படித்து பிறகு கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணியாற்றுவதையே தேர்வு செய்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இது மட்டுமல்ல நீட்டுக்கு முன்னர் 2016-17-ல் அரசு கல்லூரிகளில் 65.17% கிராமப் பகுதி மாணவர்கள் மருத்துவ மாணவர்களானார்கள் ஆனால் 2020-21-ல் 49.91% ஆக இந்த வீதம் குறைந்துள்ளது.

எட்டாவதாக நீட் தேர்வானது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களின் கல்வி உரிமையை மறுக்கிறது. கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் உரிமை மறுக்கப்பட்ட கிராமப்புறத்தைச் சார்ந்த கோடிக்கணக்கான இந்த உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரி படிக்கும் வாய்ப்பை நீட் அடிப்படையிலேயே மறுக்கிறது என்பதை விமர்சனமாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்கள், கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள், 2.5 லட்சம் வருவாய்க்கு கீழே உள்ளவர்கள் ஆகியவர்கள் வர்க்க ரீதியாகவும் மருத்துவக் கல்வியில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.

ஒன்பதாவதாக பல்வேறு தேர்வுமுறை கொண்ட தமிழகத்தில் நீட் சிபிஎஸ்சி முறையில் படிப்பு படித்தவர்களுக்கே வாய்புகளை வாரி வழங்குகிறது. 2010-11 ஆம் ஆண்டு மாநில கல்வி வாரியத்தின் அதாவது தமிழ்நாடு அரசின் பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 2332 பேருக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. சிபிஎஸ்சிக்கு வெறும் 14 இடங்கள் தான் கிடைத்தது. ஆனால் நீட் அறிமுகமானவுடன் 2020-21 ஆம் ஆண்டு சிபிஎஸ்சி மூலம் படித்தவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைத்த எண்ணிக்கை 1604 பேர் ஆனது. எனவே மாணவர்கள் மாநில அரசின் பாடத் திட்டத்தை படிப்பதில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பதும் இதன் மூலம் நிருபணமாகிறது.

நீட் உள்ளிட்ட தகுதி மற்றும் போட்டி தேர்வுகள் அடிப்படை உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதை நீதிபதி ஏ.கே.ராசன் தலைமையில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர். ரவீந்திர நாத், முன்னாள் துணை வேந்தர் ஜவகர் நேசன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவின் ஆய்வறிக்கை மீண்டும் நிரூபித்துள்ளது. சமூக ஏற்றத் தாழ்வுகளை நிரந்தரமாக நீடிக்க வைக்கும் வெறி கொண்ட பார்ப்பனக் கும்பல் மற்றும் அதன் சூத்திர அடிமைகள் நீட், சேட், காட் போன்ற போட்டி தேர்வுகளை ஆதரிக்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கல்வி நிறுவனங்களின் மூலம் கல்லா கட்ட துடிக்கலாம், ஆனல் நாம் இதனை அறவே ஒழிக்கும் வரையில் போராடுவோம்.

  • பா.மதிவதனி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here