தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் இன்று வரை பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வடமாவட்டத்தில் பெரும்பாலான நீர் நிலைகள், அதாவது ஏரிகள், குளங்கள், குட்டைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது.

கனமழை, பெரு வெள்ளத்தால் தமிழகம் தொடர்ந்து பாதிக்கப்படுவதும், அதனால் இலட்சக்கணக்கான மக்கள் வீடு-வாசல் இழப்பதும், வேலை இழப்பதும், கடும் நெருக்கடியிலும் கடன் வாங்கி பயிர் வைத்த நெல், மணிலா, வாழை உள்ளிட்ட பயிர்கள் அழிவதும், விவசாயிகள் பெருமளவில் பொருளாதாரத்தை இழப்பதும், மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் பல நாட்கள் வீட்டிலேயே முடங்குவதும் என்ற தொடர் அவலம் ஒவ்வொரு ஆண்டும் நமது நெஞ்சை பிழிகிறது.. இயற்கை சீற்றங்களுக்கு எதிராக போராடுகின்ற அளவிற்கு இன்னமும் இந்தியா முன்னேறவில்லை. இயற்கை பேரழிவுகளுக்கு கடவுளின் மீது பயங்கொள்ளும் வகையில் பிற்போக்குத்தனம் நிரம்பி வழிகிறது

கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களும், அண்டை மாநிலமான புதுச்சேரி மற்றும் அதன் பகுதிகளான காரைக்கால் ஆகியவற்றிற்கு ’ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 08-11-2021 முதல் 3 நாட்களாக டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் காரைக்காலில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

கனமழையின் காரணமாக நாகை மாவட்டத்தில் மட்டும் 23 ஆயிரம் ஏக்கர்களும், மயிலாடுதுறையில் 25 ஆயிரம் ஏக்கர்களும், தஞ்சையில் 50 ஆயிரம் ஏக்கர்களும், திருவாரூரில் 50 ஆயிரம் ஏக்கர்களும், புதுக்கோட்டையில் 10 ஆயிரம் ஏக்கர்களும், திருச்சியில் 450 ஏக்கர்களும், ஒட்டு மொத்தமாக 1,58,450 ஏக்கர் சம்பா நெல் பயிரிடப்பட்டுள்ள பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இதேபோல திருச்சி மாவட்டத்தில் தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியாபுரம் தொட்டியம் வையம்பட்டி, மணப்பாறை ஆகிய வட்டாரங்களில் மணிலா பயிரிட்ட விவசாயிகள், வயல்களில் நீர் தேங்கி நிற்பதால் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து இந்த நீர் வடியாத பட்சத்தில் நிலக்கடலை அழுகி போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பெரும் வேதனையில் உள்ளனர்..

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் காரணமாக தென் மாவட்ட பகுதிகளான, குமரிக்கடல் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் 11-ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 70 கிலோ மீட்டர் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடலோர மாவட்ட பகுதிகளான தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் 3 வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. இதனால் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னை ஒன்றிரண்டு நாட்களிலேயே பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. பிற மாவட்டங்களை போலவே வடகிழக்கு பருவ மழையின் துவக்கத்திலேயே சென்னை மாநகரத்தில் பாதிப்புகள் அதிகமாகி உள்ளது. வீதிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி, சென்னை நகரமே குளம்போல் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் உழைக்கும் மக்கள் இருப்பிடங்களுக்குள் தண்ணீர் புகுந்து மிகவும் துயரம் படுகிறார்கள்.

கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் போன்ற நீர் வழிகளில் வெள்ள நீர் அதிகமாக பாய்ந்து ஓடி வருவதால் அவற்றின் கரையோரங்களில் வசிக்கக்கூடிய பெரும்பான்மை உழைக்கும் மக்கள் இருப்பிடத்திற்கும் வசதியின்றி, உணவுக்கு வழியின்றி மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை பெய்கின்ற ஒவ்வொரு ஆண்டும் இதுபோல கொடூரங்களை மக்கள் சந்தித்து வருகிறார்கள். விவசாயம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்ற சூழலில் விவசாயத்தில் இருந்து விரட்டப்படும் பெரும்பான்மை உழைக்கும் மக்கள்தான் சென்னை உள்ளிட்ட நகரங்களில் உதிரி தொழிலாளர்களாக, தினக்கூலி தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் நகரத்தின் மையமான, பாதுகாப்பான பகுதிகளில் தங்குவதற்கு வாய்ப்பே கிடையாது. இந்த மக்கள் பெரும்பாலும் புறநகர் பகுதிகளிலும், நீர் தேங்கி நிற்கின்ற தாழ்வான பகுதிகளிலும் தான் வசித்து வருகிறார்கள்.

இவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு ஆண்டும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது. ஓராண்டு உழைத்து சேமித்த பொருள்கள் அனைத்தும் இந்த மழைக் காலத்தில் அடியோடு அழிந்து போகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னை மட்டுமின்றி பிற மாவட்ட பகுதிகளான, விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மாவட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இதனை வெறும் பருவமழை, வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பு என்று மட்டும் சுருக்கி பார்க்க முடியாது.

கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தை ஆட்சி புரிவதாக கூறிக் கொண்டு ஒவ்வொரு அரசு திட்டத்திலும், அதாவது ஏரி, குளங்கள், வாய்க்கால்களை தூர்வாருவது, நீர்நிலைகளை ஆழப்படுத்துவது, வடிகால் வசதிகளை ஏற்படுத்துவது, வெள்ளம், புயல் பாதிப்பு வராமல் தடுப்புகளை உருவாக்குவது, கடற்கரையோரங்களில் தூண்டில் வளைவுகளை உருவாக்கி மீனவர்களை பாதுகாப்பது போன்ற எண்ணற்ற திட்டங்களின் மூலம் பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்த கிரிமினல் கொள்ளைக் கூட்டமான அதிமுக கும்பலின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்காக வீதியில் இறங்கி போராடுவதும், அதைக்கண்டு ஆட்சி புரிகின்ற திமுக போன்ற கட்சிகள் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடாத வண்ணம் தடுப்பதும் நாம் செய்ய வேண்டிய உடனடி பணியாக உள்ளது.

இந்த சமூகத்திற்காக உழைத்த கொடுக்கின்ற பெரும்பான்மை மக்களை பாதுகாப்பதற்கு இந்த அரசு கட்டமைப்பு பொருத்தமானது அல்ல. இந்த கட்டமைப்பை தூக்கி எறிந்துவிட்டு மக்களைப் பாதுகாக்கின்ற ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கும் போது மட்டும்தான் புயல், வெள்ளம், கனமழை போன்ற இயற்கைப் பேரிடரில் இருந்து மக்களை நிரந்தரமாக பாதுகாக்க முடியும்.

ஆனால் அதுவரை நிலவுகின்ற அரசு கட்டமைப்பை மக்களுக்கு சேவை செய்ய கோரி போராடுவதும், நாமே இறங்கி மாற்று கட்டமைப்பை உருவாக்கும் வகையில் செயல்படுவதும் தான் நாம் செய்ய வேண்டிய பணியாகும். அதனை முன் வைத்து போராடுவோம்.

  • 10-11-2021.                                                                         எம்.கயல்விழி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here