இந்திய வெளியுறவு அமைச்சகம் சென்ற வாரம் ஜூன் 24 அன்று இந்திய குடிமக்கள் வைத்திருக்கும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) என்பது சர்வதேச பயணங்களுக்கான ஆவணமாகத்தான் கருத முடியுமே தவிர, அது குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்று அறிவித்துள்ளது. இந்திய ஒன்றிய அரசானது, வேறு சில ஆவணங்களை சரி பார்த்து குடிமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்குகிறது. இதை மற்ற நாடுகள் குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளும்படி கோரப்பட்டு அது அமலில் உள்ள நிலையில், திடீரென இப்படியான அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை சரிபார்த்து காவல்துறையின் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு, ஒன்றிய அரசானது தேசியச் சின்னம் பதித்த கடவுச்சீட்டை வழங்குகிறது. இந்தியக் குடிமகன்/மகள் என்பதை அடையாளப்படுத்தும் ஆவணமாக இத்தகைய கடவுச்சீட்டுகள் இருந்து வந்தன. இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையில் நீக்கப்பட்ட ஒருவர் தனது குடியுரிமையை நிலைநாட்ட இந்தியக் கடவுச்சீட்டை காட்ட முடியுமா என்ற கேள்வியைத் தொடர்ந்து, இப்போது வெளியுறவு அமைச்சகம் அது குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்று கூறுகிறது.
ஏற்கனவே பீகாரின் SIR நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஆதார் அட்டை இந்திய குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் வழங்கப்படுவதால் அது அடையாளத்தை நிறுவுகிறதேத் தவிர குழியுரிமையை நிறுவவில்லை என்று தேர்தல் ஆணையம் வாதிட்டது. இதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. எனில் குடியுரிமையை நிறுவக்கூடிய ஆவணம் எது என்ற கேள்விக்கான விடை தீர்க்கப்படாமலேயே உள்ளது.
சட்டம் சொல்வது என்ன?
1967 கடவுச்சீட்டு சட்டத்தின் முன்னுரையில் கடவுச் சீட்டுகள் மற்றும் பயண ஆவணங்களை வழங்குவதற்கும், இந்தியக் குடிமக்கள் மற்றும் பிற நபர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறுவதை ஒழுங்குபடுத்துவதற்கும் மற்றும் அது தொடர்பான பிற விஷயங்களுக்கும் வழிவகை செய்யும் சட்டம் என குறிப்பிட்டுள்ளது. மேலும் கடவுச்சீட்டு சட்டத்தின் பிரிவு 6(2)(a), விண்ணப்பிப்பவர் இந்தியக் குடிமகனாக இல்லாவிட்டால் அவருக்கு கடவுச்சீட்டு வழங்கக் கூடாது என்று குறிப்பிடுகிறது.
மேலும் கடவுச்சீட்டு என்பது குடியுரிமைக்கான ஆதாரத்தை வழங்கும் அடையாள மற்றும் பயண ஆவணமாகவும் குறிப்பிடுகிறது. 2018 ஆம் ஆண்டு கடவுச்சீட்டு தொடர்பான வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் கடவுச்சீட்டை ஒரு தேசிய இனத்தை நிரூபிக்கும் ஆவணம் என்று தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் சமீபத்தில் பம்பாய் உயர் நீதிமன்றம் குடியுரிமை தொடர்பான கேள்விகள் 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் கீழ் ஆராயப்பட வேண்டும் என்றும் ஆதார், பான்(PAN) அல்லது வாக்காளர் அடையாள அட்டைகள் போன்ற ஆவணங்களை மட்டும் கொண்டு தீர்க்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.
படிக்க: குற்றவியல் நடைமுறை (அடையாள சேகரிப்பு) சட்டம்!
1955 இந்திய குடியுரிமைச் சட்டத்தின் படி, இந்தியாவில் பிறந்ததன் அடிப்படையிலும், இந்தியக் குடிமகனை திருமணம் செய்து கொண்டவர்கள் அல்லது இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பதன் மூலமும், இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பதன் மூலமும் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் ஆகின்றனர்.
பாசிச மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம்!
மேற்கண்ட 1955-சட்டத்தின் அடிப்படையில் குடியுரிமை பெறுவதற்கு மாற்றாகத்தான் பாசிச மோடியின் ஒன்றிய அரசு 2019 – ல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) அறிமுகப்படுத்தியது. அதை எதிர்த்து நாடு முழுவதும் பெருமளவில் போராட்டங்கள் வெடித்ததால், அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆனாலும் இதை நாடு முழுவதும் அமல்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத்தான் இப்போது வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை சட்டத்திற்கு முரணாக வெளியிடப்பட்டுள்ளது. நமது வெளியுறவு அமைச்சகத்தின் முடிவின்படி கடவுச்சீட்டு வழங்கப்படும் போது அது குடியுரிமைக்கான சான்றாக கருதப்படலாம். ஆனால் வழங்கப்பட்ட பிறகு அப்படி கருதப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று ஆகிறது. எப்படியெல்லாம் கேலிக் கூத்துகள் அரங்கேறுகின்றன என்பதை பாருங்கள்.
படிக்க: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு ஆபத்து என்ன?
அனைத்து இறையாண்மை கொண்ட நாடுகளும் ஒரு தனிநபரின் அடையாளத்தையும், குடியுரிமையையும் கடவுச்சீட்டுகளின் அடிப்படையில்தான் சரி பார்க்கின்றன. குடியுரிமையை இதிலிருந்து நீக்கி விட்டால் அதுவும் வெறும் அடையாள அட்டையாகத்தான் மாறும். ஒரு இந்தியக் குடிமகன்/ மகள் கண்டங்களைத் தாண்டி எல்லா நாடுகளிலும் ஒரு இந்தியராக அங்கீகரிக்கப்பட்டாலும், அவரது குடியுரிமை குறித்து சந்தேகங்களை எழுப்பும் அதிசய சாதனையை அதை வழங்கிய அரசாங்கமே செய்கிறது என்பதுதான் வினோத வேடிக்கையாக உள்ளது.
இனி ஆர்எஸ்எஸ், பிஜேபி தீர்மானிப்பவர்களுக்கே குடியுரிமை!
கடந்த ஜூன் 24 அன்று நடந்த 14 வது கடவுச்சீட்டு சேவை தினத்தில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “சிப் வசதியுள்ள மின்னணு கடவுச்சீட்டுகள் மற்றும் புதிதாக திறக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு சேவை மையங்கள் போன்றவை பயணத்தை எளிதாக்கி, இந்தியர்கள் உலகளாவிய வேலை வாய்ப்புகளை பெற உதவுகின்றன” என்று குறிப்பிட்டார்.
புதிய சிப் பொருத்தப்பட்ட இ- பாஸ்போர்ட்டுகள் மோசடி அபாயத்தை குறைக்கவும், பயோமெட்ரிக் தரவு போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்ற ஆண்டிலிருந்து புதிதாக சிப் பொருத்தப்பட்ட கடவுச்சீட்டுகளை வழங்கி வரும் நிலையில், காவல்துறை சரிபார்ப்பை தவிர்த்து சராசரியாக 5 முதல் 6 வேலை நாட்களில் கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாகவும், இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 1.5 கோடி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தம்பட்டம் அடிக்கின்றனர்.
படிக்க: சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியா? குடியுரிமை திருத்தப்பணியா?
ஆனால் இதைக் குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று முரணாகவும் அறிவிக்கின்றனர். வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு தங்கள் குடியுரிமைக்கான சான்றாக கடவுச்சீட்டுகள் பயன்படும் போது, அதை வழங்கிய சொந்த நாட்டிலேயே செல்லுபடி ஆகாத நிலை ஏற்பட்டுள்ளதை கேலிக் கூத்தானதாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபில், பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆவணம் இல்லை என்றால், வேறு எதுதான் குடியுரிமைக்கான ஆதாரம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் “ஒரு வாக்குச் சாவடி நிலை அலுவலர் (BLO) எனது குடியுரிமையைக் கேள்வி கேட்கலாம், எனது வாக்குரிமையை மறுக்கலாம் என்றால், இதன் முடிவு பாஜக தேர்தலில் வெற்றி பெறும் என்பதுதானே? இப்போது அனைவரின் பார்வையும் உச்சநீதிமன்றத்தின் மீது உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே நீதிமன்றங்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, சொத்துரிமை போன்றவை குடியுரிமைக்கான சான்றுகள் அல்ல என்று தீர்ப்பளித்துள்ள நிலையில், கடவுச்சீட்டும் இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என்றாகி விட்டதால், இந்தியக் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் என்று எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் கடவுச்சீட்டுகளே இப்போது குடியுரிமைக்கான ஆதாரம் என்ற அந்தஸ்தை இழக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.
இனி ஆர்எஸ்எஸ், பாஜக வினர் தீர்மானிப்பவர்கள் மட்டுமே இந்தியக் குடியுரிமைப் பெற்றவர்களாகவும், மற்றவர்கள் இரண்டாம் தர, மூன்றாம் தர குடி மக்களாகவும் ஆக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. இத்தகையச் சூழலில் இந்தப் பாசிஸ்டுகளை ஆட்சி அதிகாரத்திலிருந்து வீழ்த்தாமல் நமக்கு விடிவில்லை.
- குரு






