ஸ்டெர்லைட் எக்காரணம் கொண்டும் ஜூலை 31-க்கு பிறகு இயங்க அனுமதிக்க கூடாது என்றும், ஏற்கனவே வாக்குறுதி அளித்த படி தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி, ஸ்டெர்லைட்டை அகற்ற வேண்டும். என மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பானது, தனித்தனியாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்புகளை, இயக்கங்களை இணைத்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களில் மக்களுடன் இணைந்து போராடிய பல்வேறு கட்சிகளுக்கும் முற்போக்கு இயக்கங்களுக்கும், சமூக நல அமைப்புகளுக்கும், வணிகர், மீனவர் சங்கங்களுக்கும் அழைப்புக் கொடுத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பை தூத்துக்குடி மக்களின் ஒட்டு மொத்த குரலாக நேற்று 19-07-2021 இல் பதிவு செய்தது.

கலெக்டர் அலுவலகத்தை நோக்கி முழக்கமிட்டு செல்லும் மக்கள் கூட்டம்.

நேற்று (19-07-21) காலை 9.30 மணியிலிருந்து ஸ்டெர்லைட் சுற்று வட்டார கிராமங்களிலிருந்தும், மாநகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், கட்சிகளின் தலைவர்கள், இயக்கங்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் பிரதிநிதிகள் வந்த வண்ணம் இருந்தனர். ஒருங்கிணைப்புக்குழுவானது வந்திருந்த அனைத்து கட்சிகள் இயக்கங்கள், சங்கங்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்கள் – கூட்டமைப்புகள், ஊர்-கிராம மற்றும் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளின் சார்பாக வந்திருந்த பிரதிநிதிகளிடமும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மனுவில் வரிசையாக கையெழுத்து வாங்கினார்கள்.

ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாட்டின்படி ஸ்டெர்லைட் எதிர்ப்பு முழக்கங்கள் அடங்கிய ஒளிநகல்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. ஸ்டெர்லைட் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தி காண்பித்து எதிர்ப்பை பதிவு செய்ய கொடுக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் முன்பு தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டின் வடக்கில் ஒன்றாய் கூடியிருந்த மக்களைப் பார்த்து பஸ்களிலும், இதர வாகனங்களிலும் சென்ற பொதுமக்கள் கையை உயர்த்தி காட்டி மகிழ்ச்சியுடன் ஆதரவு தெரிவித்தனர். மனு அளிக்க கலந்துகொண்ட பொது மக்களும் பதாகைகளை பிரதான சாலையில் செல்வோருக்கு தெரியும் படியாக உயர்த்தி காண்பித்த வண்ணம் இருந்தனர். காலை சுமார் 11.00 மணி அளவில் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு வரை சென்றார்கள். மக்கள் வரிசையாக அணிவகுத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு வாசகங்களை கையில் ஏந்தியபடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு முழக்கங்களை இடியாக முழங்கிய வண்ணம் சென்றனர்.

மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்புகள், இயக்கங்களின் நிர்வாகிகள், கட்சிகள், சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், ஸ்டெர்லைட் எக்காரணம் கொண்டும் ஜூலை 31 பிறகு இயங்க கூடாது என்றும், தமிழக அரசு ஏற்கனவே வாக்குறுதி கொடுத்தபடி சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை தூத்துக்குடி மண்ணை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்றும், ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கு தவிர வேற எந்த அனுமதியும் வழங்கப்படாமல் இருக்கும் பொழுது, நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கு & பொது அமைதியை கெடுப்பது என ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்,1,32,00000 (ஒரு கோடியே முப்பத்து இரண்டு லட்சம்) யூனிட் மின்சாரம் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனுக்கு தேவையானதை விட அதிகப்படியானது என்றும், இதனால் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்களுக்கு மின்தடை ஏற்படுகிறது என்றும், உச்ச நீதிமன்றத்தில் 22-ஆம் தேதி நடைபெற இருக்கின்ற விசாரணையில் ஸ்டெர்லைட்டின் காலநீட்டிப்பு கோரிக்கைக்கு எதிராக மாநில அரசு வலுவாக வாதிட வேண்டும் என்றும், முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேச அனுமதி வாங்கித் தர வேண்டும், தமிழக முதலமைச்சர் தூத்துக்குடி மக்களை கலந்துதான் முடிவு செய்ய வேண்டும் என்பது உட்பட்ட கோரிக்கைகள் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.

மாவட்ட ஆட்சியர் அனைத்தையும் கவனமாகவும், பொறுமையாகவும் கேட்டு குறித்து வைத்துக் கொண்டார். “கண்டிப்பாக தமிழக அரசுக்கு உடனடியாக இந்த கோரிக்கைகளை கொண்டு செல்லப்படும், நல்லதே நடக்கும்” என்றார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அதுவரை கூடியிருந்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியரிடம் பேசிய விவரங்களை ஒருங்கிணைப்பாளர்கள் விளக்கினார்கள். அதன் பின்பு மக்கள் ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு பகுதியாக கலைந்து சென்றனர்.

“தமிழ்நாட்டின் அவமானச் சின்னமான ஸ்டெர்லைட் அகற்றப்படாமல் ஓயமாட்டோம்”


துப்பாக்கிச்சூடு நடந்து 3 ஆண்டுகளுக்கு பின்னரும் மக்களின் போராட்ட குணம் அணுவளவும் குறையவில்லை. கலந்து கொண்ட தலைவர்கள், நிர்வாகிகள், பொருப்பாளர்கள் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தனர். “ஜூலை 31-க்கு பிறகு ஸ்டெர்லைட் இயங்குவது நீட்டிக்கப்பட்டால் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு ஸ்டெர்லைட்டை விரட்டுவோம்” என உறுதியளித்தனர்.

அனைத்து கட்சிகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்புகள் – இயக்கங்கள் ஒன்றிணைந்து மனு கொடுத்த நிகழ்வு என்பது கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் நெகிழச் செய்தது. இந்நிகழ்வு “தமிழ்நாட்டின் அவமானச் சின்னமான ஸ்டெர்லைட் அகற்றப்படாமல் ஓயமாட்டோம்” என்ற தூத்துக்குடியின் குரலுக்கு வலு சேர்ந்தது. அனைவரையும் ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பு குழுவிற்கும், பொதுமக்களுக்கும், கலந்து கொண்ட கட்சிகள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்கள் – கூட்டமைப்புகள், சமூக நல அமைப்புகள், மீனவர், வியாபாரிகள் சங்கங்கள் தலைவர்கள் – நிர்வாகிகள் பொருப்பாளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மூன்று வருடங்களுக்கு முன்பாக 2018 மே 22 ல் போராட்டத்திற்கு சென்ற நமது உறவுகள் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிர் விடும் போது, “ஸ்டெர்லைட் மூடப்படுமா? மூடவில்லை என்றால் நமக்கு பின்னர் மக்கள் போராடுவார்களா? இந்த இடத்தில் ஒன்றுபட்டு கூடுவார்களா? என்று நினைத்திருந்திருப்பார்கள்.

தூத்துக்குடியின் உப்புக்காற்று லட்சியத்தை அடையாமல், ஸ்டெர்லைட்டை மூடாமல் வான்வெளியில் கரைந்துவிடுமா என்ன?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here