ந்தியாவின் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏழு கட்ட தேர்தல்களாக நடந்து வருகிறது என்பதை அறிவோம். இதற்கு இணையாக மார்ச் 22 முதல் மே 26 வரை ஐபிஎல் என்று அழைக்கப்படுகின்ற இந்தியன் பிரீமியம் லீக் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.

நாட்டில் நடக்கின்ற அரசியல், பொருளாதார நிகழ்வுகளின் மீது பெரும்பான்மை மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கவனத்தை செலுத்தி விடக்கூடாது என்பதற்காக சமகாலத்தில் நடத்தப்படும் தாக்குதலாகவே ஐபிஎல் தொடரை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

ஏனென்றால் முதல் ஆட்டம் துவங்கியது முதல் இறுதி ஆட்டம் வரை சுமார் 74 போட்டிகள் அன்றாடம் தொலைக்காட்சிகளையும், டிஜிட்டல் மீடியாவையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

இந்த தொடரை மட்டும் இதுவரை சுமார் 510 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர் பார்வையாளர்களின் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும் தொலைக்காட்சி மட்டும் சுமார் 2000 கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளது. இது சென்ற ஆண்டை விட 5.7% அதிகமாகும் கடந்த ஆண்டில் 1875 கோடி தான் தொலைக்காட்சி மூலமாக கொள்ளையிடப்பட்டது. அதேபோல டிஜிட்டல் மூலமாக 1800 கோடியாக இருந்த சென்ற ஆண்டு வருமானம் இந்த ஆண்டு 2000 கோடியை தொட்டுள்ளது. இதுவும் சென்ற ஆண்டை விட 10 முதல் 12 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலன்ஞ்சர்ஸ் பெங்களுரு, சண் ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் இறுதிப் போட்டியில் மோதப் போகின்ற நான்கு அணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அன்றாடம் தொலைக்காட்சிகளில் முன்னால் அமர்ந்து அல்லது கைபேசிகளின் மூலமாக இந்த ஐபிஎல் தொடரை பார்க்கின்ற இளைஞர்களின் வாழ்க்கை எந்தவித பற்றும் இல்லாமல் கேளிக்கைக்காக தனது நேரத்தை விரயம் அளிக்கின்ற பெரும் கூட்டத்தை உருவாக்கியுள்ளது.

இந்த ஐபிஎல் தொடர்களை ஒளிபரப்புவதற்கு 2023 முதல் 2027 வரை உரிமம் பெற்றுள்ள டிஸ்னி ஸ்டார் 23 ஆயிரத்து 525 கோடி ரூபாயையும், ஜியோ 23 ஆயிரத்து 758 கோடி ரூபாயையும் கட்டி ஒளிபரப்பு உரிமையை எடுத்துள்ளது.

இந்தத் தொகையைப் போல பல மடங்கு ரூபாயை வருவாயாக பெறுவதற்கு இந்த நிறுவனங்கள் வெறித்தனமான விளம்பரங்கள், பிரச்சாரங்கள், ஆபாச நடனங்கள், சூதாட்டங்கள் ஆகியவற்றில் இறங்கி வருகிறது என்பது சந்தி சிரித்து வருகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாஜகவை வீழ்த்துவதற்கு நாட்டின் பெரும்பான்மையான எதிர்க்கட்சிகளும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் போராடிக் கொண்டிருக்கும் போது அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஐபிஎல் இல் மூழ்கி டோனி, கோலி, பாண்டியா என்று விளையாட்டு வீரர்களின் பெயரையும், புதிதாக இந்த சூதாட்டத்தில் குதித்துள்ள சில வீரர்களின் பெயரையும் தான் சந்திக்கும் இடங்களில் எல்லாம் பேசி உற்சாகமடைந்து வருகிறது இளைய தலைமுறை.

உலக அளவில் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது நடத்துகின்ற கொலை வெறி தாக்குதல் இன அழிப்பு உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மனித குலத்திற்கு விரோதமான, எந்த விதமான விழுமியங்களையும் கடைப்பிடிக்காத, கொடூரமான தாக்குதல்களின் மூலம் பல்லாயிரம் பல பாலஸ்தீனியர்களை கொன்று குவித்து வருகிறது. இதை பற்றி எல்லாம் கவலைப்படாத அளவிற்கு இந்திய மாணவர்கள், இளைஞர்கள் காயடிக்கப் படுகிறார்கள்.

உலக அரசியலைப் பற்றியோ, உள்நாட்டு அரசியலைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாத தற்குறி கூட்டத்தை உருவாக்குவது தான் ஐபிஎல் போன்ற சோம்பேறி விளையாட்டுகள் நோக்கமாகும்.

படிக்க:

♦ சீரழிக்கப்படும் இளைய தலைமுறை? (சமூகத்தைப் பற்றி சிந்திக்காத பெரும்பான்மையினருக்கு)

கிரிக்கெட் என்றாலே “பதினொரு முட்டாள்கள் விளையாடுவதை பதினோராயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்ப்பது” என்று பெர்னாட்ஷா அதனை நக்கல் அடித்தார் இன்றோ பத்தாயிரம் இல்லை பல லட்சக்கணக்கான முட்டாள்கள் வேடிக்கை பார்க்கின்ற அளவிற்கு போதையாக மாறி உள்ளது.

நாட்டின் பெரும்பான்மை மக்களான மாணவர்கள், இளைஞர்கள் சுமார் 40 முதல் 45 கோடி பேர் கொண்ட மிகப்பெரும் வேலையற்ற ரிசர்வ் பட்டாளம் வேலை செய்வதற்காக காத்துக் கிடக்கின்றது. இவர்களின் சிந்தனையில் நாம் வேலையற்றவர்கள். ஆனால் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் என்ற எண்ணம் தோன்றி விடக் கூடாது என்பதற்காகவே கிரிக்கெட் போன்ற போதையூட்டும் விளையாட்டுகளின் மூலம் அவர்களின் மூளையை நிரப்பி வருகின்றனர் ஆளும் வர்க்க கழிசடைகளான சதிகாரர்கள்.

குறிப்பாக பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்திலும் எந்த விதமான விழுமியங்களும் இல்லாமல், கேடுகெட்ட முறையில் மோசடிகள் தலைவிரித்தாடுகின்ற சூழலில் ஐபிஎல் போட்டிகளிலும் பெட்டிங் தலை விரித்து ஆடுகிறது.

நாட்டிலுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் உலகம் முழுதும் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து பல கோடி ரூபாய்களை கொட்டி அவர்களை தனது அணியில் சேர்த்துக் கொள்கின்றனர். இதன் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்ற அணி என்ற பெயரை பெறுகின்றனர். பிறகு இவர்களை கிரிக்கெட் சூதாட்டத்தில் இறங்கி பல்லாயிரம் கோடிகளை கல்லா கட்டுகின்றனர். இது அவர்களுக்கு லாபம். ஆனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் சொந்த சிந்தனை இல்லாமல் காயடிக்கப்பட்டு மீண்டும், மீண்டும் ஐபிஎல் தொடர்களால் கவரப்படுகிறார்கள். இது நாட்டின் இளைய தலைமுறைகளுக்கு மிகப்பெரிய நட்டம்.

சென்ற ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் சுமார் 60 ஆயிரம் கோடி சூதாட்டத்தின் மூலமாக கொள்ளை அடித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு எத்தனை ஆயிரம் கோடிகள் கொள்ளை அடிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனால் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்ற அரசியல், பொருளாதார கொள்கைகளை திசை திருப்புவதற்கு இது போன்ற கிரிக்கெட் சூதாட்டங்களை நடத்துவதை தடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டியுள்ள காலகட்டம் இது.

மருதுபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here