ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி
பகத்சிங் நினைவு நாளில்…

BBC ஆவணப்படம், ஹிண்டன்பர்க் அறிக்கை!
அம்பலமாகி நாறும் பாசிச மோடி அரசு!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய போராளிகளை சிறையிட்டபோதும் பிரிட்டிஷாருக்கு பயம் இருந்து கொண்டே இருந்தது. அதேபோல கார்ப்பரேட் சேவகன் மோடியின் ஆட்சியை விமர்சிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் இன்றும் சிறையிடப்படுகின்றனர். போராளிகளின் சிறைவாசம் பாசிச மோடியை அச்சுறுத்துகிறது. எப்போதும் போராளிகள் சிறை கண்டு அஞ்சுவதில்லை. அன்று முதல் இன்றுவரை சிறை வைத்தவர்கள் தான் அஞ்சுகின்றனர்.

அமெரிக்காவின் ஏதோ ஒரு மூளையில் இருக்கும் பத்திரிகைகள் மோடியை அசகாய சூரர் என புகழும் போதெல்லாம் ஏற்றுக்கொண்ட சங்கி கூட்டம், தற்போது அமெரிக்காவின் ஹிண்டன் பர்க் அறிக்கையையும், BBC ஆவணப்படத்தையும் கண்டு கொதிப்படைகின்றனர். சர்வதேச அளவில் மோடியின் செல்வாக்கு சரிந்ததைக் கண்டு தேசத்திற்கு பாதிப்பு, அந்நிய நாட்டு சதி என அலறுகிறார்கள். திசைதிருப்புகிறார்கள்.

 

ரஷ்யா – உக்ரைன் போரையே முடிவுக்கு கொண்டு வந்தவர், சீனாவின் ஆப்-களை தடை செய்து பொருளாதார ரீதியில் திக்குமுக்காட வைத்தவர், இந்திய வம்சாவழியைச் சார்ந்த ரிஷி சுனக்-ஐ இங்கிலாந்து பிரதமர் ஆக்கியவர். G-20 நாடுகளின் கூட்டமைப்புக்கு தலைவர் போன்ற பில்டப்புடன் சுற்றித்திரிந்த ‘ஜி’-ஐ BBC ஆவணப்படமும், ஹிண்டன்பர்க் அறிக்கையும் “பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்” என ஆக்கிவிட்டது.

ஹிண்டன்பர்க் அறிக்கையில், அதானி தனது சொத்துக்களை விட கூடுதலாக கடன் பெற்றிருக்கிறார். தனது குடும்பத்தை சார்ந்தவர்களிடமே பங்குகளை அதிக ஏலத்திற்கு விடுவதாக பங்கு சந்தையில் உயர்த்திக்காட்டி சர்வதேச அளவில் ஏமாற்றியுள்ளார். வரியில்லா சொர்க்கமான மொரிஷியஸ் தீவில் பெயர்ப்பலகை நிறுவனங்களை திறந்து வர்த்தகம் நடப்பதாக காட்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஆய்வறிக்கை விவரிக்கிறது. அதானியின் திருட்டுத்தனத்தை இந்தியாவில் யாரும் அம்பலப்படுத்தவில்லையா? திருட்டுத்தனத்திற்கு உதவிய மோடியை கேள்வியெழுப்பியவர்கள் அம்பலப்படுத்தியவர்கள் தான் தேசவிரோதிகளாக ஆக்கப்பட்டனர். சிறையும் வைக்கப்பட்டனர்

பாசிச மோடியின் அமைச்சரவை அதானிக்காக சுற்றுச்சூழல் சட்டம் தொடங்கி, விமானம், ரயில்வே, துறைமுகம், வங்கி, இன்சூரன்ஸ் ஆகிய பொதுத்துறைகளை கொள்ளையிட வசதியாக தொழிற்துறை சட்டங்கள் மற்றும் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தியது. பொதுத்துறைகளை சூறையாட வசதியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, வங்கியில் இருக்கும் மக்களின் சேமிப்பு 10 லட்சம் கோடியை கடன்களாக அள்ளிவிட்டு, 64 எளிய மக்கள் செலுத்திய GST வரிகள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு திருப்பிவிட்டு அதானியின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என பெருமிதம் கொண்டிருந்த நேரத்தில், அதானி 1-ம் நெம்பர் பிராடு. கிரிமினல் என ‘கரடி’ யே காறித்துப்பிவிட்டது. அதானி பிராடு என்றால் அத்தனைக்கும் உதவிய ஜி?

ஊழலை ஒழிப்பதாக முன்வைத்து ஆட்சிக்கு வந்த பாஜக கும்பல், உழைக்கும் மக்களை ஓட்டச்சுரண்டும் கார்ப்பரேட்டுகளுக்காக வரிச்சலுகை, கடன் சலுகையை வாரிவாரி வழங்கி மக்களுக்கு எதிராக செயல்பட்டு கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைத்துள்ளது. முதலாளித்துவத்தில் ஊழலும், உழைப்புச் சுரண்டலும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை. எனவே மோடியின் வாய்ச்சவடால் குறிப்பிட்ட கார்ப்பரேட்டுக்காக தான் என்பதை உலகறியச் செய்திருக்கிறது ஹிண்டன்பர்க் அறிக்கை.

நாட்டில் அனைத்திலும் ஊழல் பெருகி உலகளவில் நாறிய பின்னரும், ” ‘ஊழலை ஒழிக்கும்” ஜி, வேலைவாய்ப்பின்றி வடமாநிலத் தொழிலாளர்கள் கொத்து கொத்தாக தென்னிந்தியாவை நோக்கி புலம்பெயர்ந்தாலும், ”வேலைவாய்ப்பினை பெருக்கும் ஜி. கேஸ் விலை மும்மடங்கு உயர்த்தியபோதும், 512 கிலோ வெங்காயம் ரூ.2-க்கு விற்றபோதும், விவசாயிகளின் ‘வருவாயை இரட்டிப்பாக்கும்’ மோடிஜி தான் பிரதமராக வேண்டும் என பேசிய சங்கிகள் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நம்பிய அப்பாவி மக்கள் யாரிடம் கேட்பது என செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

இந்தியாவில் ஒருவேளை உணவின்றி பட்டினியுடன் வாழும் ஏழைகளின் எண்ணிக்கை 2018-ல் 19 கோடியாக இருந்து, 2022-ல் 35 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதிலும் 2020 ஆம் ஆண்டில் மட்டும் 4.6 கோடி மக்கள் தீவிர வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். கடினமான உடல் உழைப்பில் ஈடுபடும் எளியவர் ஒரு ரூபாய் சம்பாதிக்கும் நேரத்தில், பெரும் பணக்காரர் ஒருவரால் 17 லட்ச ரூபாய் சம்பாதித்துவிட முடிகிறது. 2021-ம் ஆண்டில் அதானி நிறுவனம் ஒரு நாளைக்கு ரூ.1,002 கோடி வருமானம் ஈட்டியது. 2020 ஆம் ஆண்டில் ரூ.3.13 இலட்சம் கோடியாக இருந்த அதானியின் சொத்துமதிப்பு தற்போது ரூ.6.72 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 10% பணக்காரர்களிடம், நாட்டின் 60% சொத்து குவிந்திருக்கிறது. தங்களிடமுள்ள பணத்தில் நாள்தோறும் ரூ.7.41 கோடி ரூபாய் செலவு செய்தாலும் கூட முழுச் சொத்துக்களும் கரைந்து முடிய 84 ஆண்டுகள் ஆகும் என ஆக்ஸ்ஃபாம் அறிக்கை தெரிவிக்கிறது.

இவ்வாறு வெகு சிலராக இருக்கும் கார்ப்பரேட்டுகள் கொழுப்பதற்கு தேவை பாசிச அரசு. இன அழிப்பு வேலையை அரசின் அத்தனை அதிகாரத்தையும் பயன்படுத்தி முதல்வராக முன்னின்று செய்தவர் பாசிஸ்ட் மோடி. என அறிந்துதான் கார்ப்பரேட் ஊடகங்களால் பிரதமராக முன் நிறுத்தப்பட்டார். இதனை BBC ஆவணப்படத்திற்கு முன்பே கம்யூனிஸ்டுகள், முற்போக்காளர்கள் பிரச்சாரம் செய்ததை இருட்டடிப்பு செய்து, மக்களை சென்றடையாமல் கார்ப்பரேட் ஊடகங்கள் பார்த்துக்கொண்டன. இது போதாதென இந்து மதவெறியூட்டிடும் வேலையை சங் பரிவார கும்பல் நாடெங்கும் கட்டவிழ்த்துவிட்டது. தொடர்ந்தும் செய்து வருகிறது. மக்களிடையே நிலவும் பக்தியை மூடநம்பிக்கையாக வளர்த்தெடுத்து, முட்டாள்தனத்திலேயே இருக்கவைத்து சமூக ஏற்றத்தாழ்வுகள் கடவுள் செயலாக சித்தரிக்கப்படுகிறது. விளைவு பாசிச நடவடிக்கைகள் இயல்பானதாக மாற்றப்பட்டு மக்கள் பழக்கப்படுத்தப்படுகின்றனர்.

தேசத்தின் பொதுச்சொத்துக்களை விற்றுக் கூறுபோடுவதையும், உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலைத் தடுக்கத்தவறிடும் எந்த செயலையும் அதாவது இல்லாதவர்களிடம் பிடுங்கி இருப்பவர்களிடம் தருவதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது.

இது போன்றதொரு அநீதிக்கு எதிராக மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் சுரண்டலற்ற, சமத்துவ சுதந்திர இந்தியா என்ற லட்சியத்திற்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தனர். அதற்காக மார்ச்-23-1931 அன்று தூக்கிலிடப்பட்டனர். தூக்குமேடை ஏறும் தருணம்வரை மக்களைத் திரட்டும் அவர்களின் பிரச்சாரம் நிறுத்தப்படவில்லை. “தூக்கிலிடு! கண் போர்த்தாதே! மண் பார்த்தே மரணம் நிகழட்டும்!” என கொண்ட லட்சியத்திற்காக மரணத்தை எதிர்கொள்ளத் துணிந்தவர்கள். R.N.ரவியின் வார்த்தைகளில் சொல்வதானால் இவர்கள் இந்தியாவைக் “கெடுத்த மார்க்சின் வாரிசுகள். சிறையிலிருந்து விடுவிக்க கோரி மன்னிப்பு கடிதம் எழுதவோ அல்லது ‘புல்புல்’ பறவை மூலமோ விடுவித்துக்கொள்ளும் ரவியின் குருவாகிய வீர சாவர்க்கரின் போராட்ட மரபினை அறிந்திருக்கவில்லை. மரணத்தின் இறுதி மூச்சுவரை பிரச்சாரத்தை நிறுத்தாத இளைஞர்களின் எழுச்சியே பாசிசத்தை வீழ்த்த தேவையானது. அதற்கான நாளாக மார்ச்-23 ஐ மாற்றுவோம்!

  • மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவை நெஞ்சிலேந்துவோம்!
  • அதானியின் கார்ப்பரேட் கொள்ளையை அம்பலப்படுத்தும் ஹிண்டன்பர்க் அறிக்கை!
  • காவி குண்டர்களின் கொடூரங்களை தோலுரிக்கும் பிபிசி ஆவணப்படம்!
  • அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கொள்ளையர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வோம்!
  • பயங்கரவாத காவி கும்பலை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிவோம்!

கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்!!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here