ம்பானி, அதானி, டாடா, பிர்லா போன்ற தரகு முதலாளிகளின் தயவில் பதவியைப் பிடித்திருக்கும் மோடி அரசு, கொலைக்கு முன்பணம் வாங்கிய கூலிப்படைக்கே உரிய மூர்க்கத்தனத்துடன் செயலில் இறங்கியிருக்கிறது. மக்கள் போராட்டங்களின் காரணமாக மன்மோகன் சிங் அரசால் அமல்படுத்தவியலாத தனியார்மய- தாராளமய பகற்கொள்ளை நடவடிக்கைகளை நாற்காலியில் அமர்ந்த மறுகணமே துவக்கி விட்டார் மோடி.

உளவுத்துறையிடமிருந்து (Intelligence Bureau) பிரதமருக்கு மிகவும் இரகசியமாக அனுப்பப்பட்டதாக கூறப்படும் 21 பக்க அறிக்கையொன்று ஜூன் 12-ம் தேதியன்று திட்டமிட்டே ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டிருக்கிறது. அணு மின்நிலையத் திட்டங்கள், யுரேனியம் சுரங்கங்கள், அனல் மின்நிலையத் திட்டங்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள், போஸ்கோ, வேதாந்தா முதலிய நிறுவனங்களின் சுரங்கத் திட்டங்கள் போன்ற பல வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராகத் திட்டமிட்டே தூண்டி விடப்படும் போராட்டங்களினால், 2011-13-க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 முதல் 3 சதவீதம் (அதாவது சுமார் 3 இலட்சம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்பட்டிருப்பதாக உளவுத்துறையின் அந்த அறிக்கை கூறுகிறது.

இத்தகைய நடவடிக்கையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, சுவீடன் போன்ற நாடுகளிலிருந்து நிதி பெறும் என்.ஜி.ஓ.க்கள் முக்கியப் பாத்திரம் வகிப்பதாகக் கூறும் அந்த அறிக்கை, கிரீன் பீஸ், ஆக்சன் எய்டு, அம்னஸ்டி இன்டர்நேசனல், என்.ஏ.பி.எம்., நவதான்யா, பி.யூ.சி.எல். போன்ற அமைப்புகளையும் பிரபுல் பித்வாய், அசின் வினைக், வந்தனா சிவா, மேதா பட்கர் போன்ற நபர்களையும் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது.

“இரகசியம்” என்று கூறத்தக்க எதுவும் இந்த அறிக்கையில் இல்லை. மேற்கூறிய அனைவரும் அணுசக்தி எதிர்ப்பு, மரபணு மாற்றுப் பயிர் எதிர்ப்பு, நர்மதா அணைக்கட்டு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் ஏற்கெனவே பிரபலமானவர்கள். 23-ம் புலிகேசியின் உளவுத்துறையைப் போல மோடியின் உளவுத்துறை இவர்களைத் திடீரென்று “கண்டுபிடிப்பதற்கான” பின்னணி என்ன என்பதைத்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

உளவுத்துறையின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதற்கு அடுத்த நாளே, சர்தார் சரோவர் அணைக்கட்டின் உயரத்தை 122 மீட்டரிலிருந்து 138 மீட்டராக உயர்த்தும் முடிவை அறிவித்தது மோடி அரசு. ஏற்கெனவே அணையில் மூழ்கிப்போன கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இதுவரை மறுவாழ்வு அளிக்கப்படவில்லை. குஜராத் விவசாயிகளின் பெயரால் நியாயப்படுத்தப்பட்ட இந்த அணைக்கட்டின் நீரை, அவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான கால்வாகளில் கால் பகுதியைக் கூட மோடி அரசு அங்கே வெட்டவில்லை. இந்நிலையில் குஜராத் தரகு முதலாளிகளின் தொழிற்சாலைத் தேவைகளுக்காக அணையின் உயரத்தை மேலும் கூட்டுகிறார் மோடி. இதனால் அகதிகளாக்கப்பட இருப்பவர்கள் மத்தியப் பிரதேசத்தின் நூற்றுக் கணக்கான கிராமங்களைச் சேர்ந்த இரண்டரை இலட்சம் பழங்குடி மக்கள்.

மத்தியபிரதேச மக்களின் போராட்டம்

இந்த முடிவு உடனே எதிர்ப்பை தோற்றுவிக்கும் என்பதால், அத்தகைய போராட்டங்களைத் தலையெடுக்கவிடாமல் தடுப்பதற்காகவும், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் என்.ஜி.ஓ.க்களை முன்கூட்டியே அச்சுறுத்திப் பணிய வைப்பதற்காகவும்தான் இந்த உளவுத்துறையின் “ரகசியம்” திட்டமிட்டே முந்தைய நாளில் வெளியிடப்பட்டிருக்கிறது.

உளவுத்துறை அறிக்கையின் இரண்டாவது முக்கிய இலக்கு சுற்றுச் சூழல் சார்ந்த என்.ஜி.ஓ.க்கள். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகமான முந்த்ரா துறைமுகம் அதானிக்குச் சோந்தமானது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியென அறிவிக்கப்பட்ட அலையாற்றிக் காடுகளை அழித்து அமைக்கப்பட்டிருக்கிறது இந்த துறைமுகம். அதானி கட்டவிழ்த்து விட்டிருக்கும் சுற்றுச்சூழல் பேரழிவு மற்றும் மீனவர்களின் வாழ்வாதார அழிப்பு ஆகியவை குறித்து சி.எஸ்.இ.என்ற என்.ஜி.ஓ.வின் (கோகோ கோலாவில் பூச்சி மருந்து இருப்பதை அம்பலப்படுத்திய அமைப்பு) நிறுவனரான சுனிதா நாராயண் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அதானி நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதித்தது காங்கிரசு அரசு. (ஜெயந்தி நடராசனுக்கு எதிரான மோடியின் கோபத்துக்கு இது முக்கியமான காரணம்).

அடுத்து கிரீன் பீஸ் என்ற சர்வதேச சுற்றுச்சூழல் என்.ஜி.ஓ., மார்ச் 2014 -ல் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதானி நிறுவனம் முந்த்ரா துறைமுகக் கட்டுமானத்தில் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து சாதித்துக் கொண்ட முறைகேடுகள், சட்டவிரோதக் கட்டுமானங்கள், அரசு நில ஆக்கிரமிப்பு, வரி ஏய்ப்பு, இந்நிறுவனத்துக்கு எதிரான வழக்குகள், நீதிமன்றத்தின் கண்டனங்கள் ஆகியவற்றை அம்பலப்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் லோகராவில் அதானிக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி வயல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பதையும், ம.பி.யில் சிந்த்வாரா என்ற இடத்தில் அதானி அமைக்கும் அனல் மின் நிலையத்திற்குப் பாசன நீரைத் திருப்பி விடுவதற்கு எதிராக விவசாயிகளும் பழங்குடி மக்களும் போராடிக் கொண்டிருக்கும்போதே, அதானி நிறுவனம் சட்டவிரோதமாகக் கால்வாய் வெட்டியிருப்பதையும் கிரீன்பீஸ் அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.

இதையும் படியுங்கள்: அதானிக்கு காவு கொடுக்கப்பட்ட காட்டுப்பள்ளியின் கதை !

ஒரிசாவில் அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் செய்த இறக்குமதி வரி ஏய்ப்புக்காக உச்ச நீதிமன்றம் 175 கோடி டாலரை அரசுக்குக் கட்டச் சொல்லியிருப்பதையும், பெல்லாரி இரும்பு வயல்களிலிருந்து திருட்டுத்தனமாக கனிமத்தை அதானி நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளதையும், 2500 கோடி டாலர் நிலக்கரி இறக்குமதி செய்ததில், வரி ஏய்ப்பு செய்திருப்பதையும், கருப்பை வெள்ளையாக்கும் மோசடி பரிவர்த்தனையில் அதானி ஈடுபட்டதால், சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் துறைமுகம் அமைக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதையும் கிரீன்பீஸ் தனது அறிக்கையில் அம்பலப்படுத்தியிருக்கிறது.

மோடி, மிகவும் அவசரமாகவும் ஆத்திரமாகவும் இந்த என்.ஜி.ஓ.க்களுக்கு எதிராக உளவுத்துறையை ஏவியிருப்பதன் பின்புலம் இதுதான்.

அடுத்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை எதிர்க்கின்ற வந்தனா சிவா உள்ளிட்ட என்.ஜி.ஓ.க்களுக்கு எதிராக உளவுத்துறை அறிக்கை கூறும் கருத்துக்கள், மோடியின் அரசு ஒரு அமெரிக்க கைக்கூலி அரசே என்பதை அப்பட்டமாக நிரூபிக்கின்றன.

மன்மோகன் ஆட்சியின்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.கத்தரிக்கு மக்கள் மத்தியில் எழுந்த பரவலான எதிர்ப்பின் காரணமாக, அது தொடர்பாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு, அதன் வணிக ரீதியான விற்பனையை நிறுத்தி வைத்ததுடன், அது தொடர்பாக ஒரு விசாரணைக்கும் உத்தரவிட்டது. ஆனால், தற்போதைய உளவுத்துறை அறிக்கையோ மான்சான்டோ மற்றும் யு.எஸ். எடு நிறுவனங்களின் ஆஸ்தான ஆவாளரான டாக்டர் ரொனால்டு ஹெர்ரிங்கின் கூற்றை மேற்கோள் காட்டி, “பி.டி. கத்தரி பாதுகாப்பானது” என்று வாதிடுவதுடன், என்.ஜி.ஓ.க்கள் எம்.பி.க்களை தவறாக வழிநடத்தி விட்டதாகக் குற்றம் சாட்டுகிறது. பி.டி.கத்தரியைத் தடை செய்த மேற்படி நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர்களில் 12 பேர் தேசிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இதில் மிகப்பெரிய நகைச்சுவை.

இதையும் படியுங்கள்: விவசாயிகள் விடுதலை முன்னணி  பத்திரிக்கை செய்தி!

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக,”பி.யு.சி.எல்., குஜராத் சர்வோதய மண்டல், மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கான இயக்கம் போன்ற அமைப்புகள் குஜராத் மாடல் வளர்ச்சியை கேள்விக்குள்ளாக்குகின்றன” என்று குற்றம் சாட்டுவதன் மூலம் இந்த அறிக்கையே மோடியின் அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கான ஏற்பாடுதான் என்பதை அம்பலப்படுத்திக் கொள்கிறது உளவுத்துறை.

ஒருபுறம் ஏகாதிபத்திய எடுபிடியாக இருந்து கொண்டே, இன்னொரு புறம் வெளிநாட்டு நிதி பெறும் தன்னார்வக் குழுக்கள் பற்றிக் கூச்சல் எழுப்பும் இந்த நாடகம் நமக்குப் புதிதல்ல.

இந்தியாவில் உள்ள அந்நிய நிதி பெறும் அமைப்புகளிலேயே மிகவும் பெரியது ஆர்.எஸ்.எஸ்.தான். 1988-ல் வேத பிரகாஷ் என்ற உலக வங்கி அதிகாரியால் அமெரிக்காவில் துவக்கப்பட்ட இந்தியா டெவலப்மென்ட் ரிலீஃப் ஃபண்டு என்ற பினாமி அமைப்பு, கோடிக்கணக்கான டாலர்களைத் திரட்டி ஆர்.எஸ்.எஸ்-ன் மதவெறி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியிருப்பது 2002-லேயே அம்பலமானது.

காங்கிரசும் பாரதிய ஜனதாவும் சட்டவிரோதமாக அந்நிய நிதியைப் பெற்றிருக்கின்றன என்று குற்றம் சாட்டி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனமான ஸ்டெர்லைட்டிமிருந்து இரு கட்சிகளும் சட்டவிரோதமான முறையில் பணம் பெற்றிருப்பதை நீதிமன்றத் தீர்ப்பு சென்ற மார்ச் மாதம் உறுதி செய்திருக்கிறது.

மறுகாலனியாக்கத்தின் கீழ் இக்கட்சிகள் மட்டுமின்றி, மத்திய-மாநில அரசுகளும், உள்ளூராட்சிகளும் கூட அந்நிய நிதி நிறுவனங்களால்தான் கட்டுப்படுத்தி இயக்கப்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். இதனை எல்லா ஓட்டுக் கட்சித்தலைவர்களும் வெட்கமின்றி ஒப்புக்கொண்டுமிருக்கின்றனர். இருந்தபோதிலும், மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கு சில என்.ஜி.ஓ.க்களின் செயல்பாடுகள் வரம்பு மீறி இடையூறு ஏற்படுத்தும்போது, அந்நிய நிதி என்ற இந்தக் கூச்சல் எழுப்பப் படுகிறது.

கூடங்குளம் அணு உலை மற்றும் பி.டி.கத்தரிக்கு எதிர்ப்பு ஆகிய பிரச்சினைகளில் ஏற்கெனவே மன்மோகன்சிங் இதைத்தான் செய்தார். பொதுநலனுக்கு குந்தகம் விளைவிப்பவை என்று கூறி 4000 என்.ஜி.ஓ.க்கள் வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான அனுமதியை 2013-ல் ரத்து செய்தார். மறுகாலனியாக்க நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் என்.ஜி.ஓ.க்கள் மீது மன்மோகன் சிங் ஆத்திரம் கொண்டிருந்த போதிலும், மனித முகம் கொண்ட மறுகாலனியாக்கத்தை” அமல்படுத்த உதவும் பொருட்டு, சோனியாவின் தேசிய ஆலோசனைக் கவுன்சிலில் என்.ஜி.ஓ.க்கள் அங்கம் வகிக்கவே செய்தனர்.

ஆனால், மோடியின் என்.ஜி.ஓ. எதிர்ப்பு வேறு வகையைச் சேர்ந்தது. என்.ஜி.ஓ.க்களில் பலர் இந்து மதவெறியை எதிர்ப்பதுடன், குஜராத் இனப்படுகொலையைத் தொடர்ச்சியாக அம்பலப்படுத்துபவர்களாகவும் இருப்பதால், “இந்து எதிரிகள்” என்ற கோணத்திலும் மோடி அவர்கள் மீது ஆத்திரம் கொண்டிருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த விஜில் என்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட “என்.ஜி.ஓக்கள் – களப்பணியாளர்கள் மற்றும் அந்நிய நிதி: ஒரு தேசவிரோதத் தொழில்” என்ற நூலிலிருந்து “அந்நிய” என்ற சொல்லுக்கான விளக்கத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். “கிறித்தவர்கள், முஸ்லீம்கள், காஷ்மீர், வடகிழக்கிந்திய தேசிய இன போராட்டங்கள், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள், என்.ஜி.ஓ.க்கள், காங்கிரசு” ஆகிய அனைவரையுமே இந்து விரோதிகளாகவும், அந்நியக் கைக்கூலி’’களாகவும் சித்தரிக்கிறது அந்நூல். 2006-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இந்நூலின் வெளியீட்டு விழாவில் என்.ஜி.ஓ.க்களைப் பற்றி மோடி பேசிய வரிகள், அச்சு பிசகாமல் அப்படியே தற்போதைய உளவுத்துறை அறிக்கையில் இடம் பெற்றிருக்கின்றன.

மோடி முன்வைக்கும் வளர்ச்சிப் பாதை, சீனாவைப் போல இந்தியாவையும் ஒரு வல்லரசாக்கி விடும் என்று மேற்குலகம் அஞ்சுவதாகவும், அதனால்தான் சுரங்கங்கள், அணைக்கட்டுகள், அணு மின் நிலையங்கள் போன்ற வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பதற்கு என்.ஜி.ஓ.க்கள் மூலம் முட்டுக்கட்டை போடுவதாகவும் ஆர்.எஸ்.எஸ் சார்பு அறிவுத்துறையினர் பிரச்சாரம் செகின்றனர். தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தமது கொள்ளைக்கான திட்டங்களாக முன்வைத்தவற்றைத்தான் மன்மோகன் சிங்கும் மோடியும் தமது சோந்த திட்டம் போல முன்வைக்கின்றனர்.

மத்திய இந்தியாவில் தொடங்கி நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பின் காரணமாக இவற்றை அமல்படுத்த முடியாததால், இந்த எதிர்ப்பை நசுக்குவதற்கும், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் என்.ஜி.ஓ.க்களை மிரட்டுவதற்கும்தான் இந்த இரகசிய அறிக்கைகள்.

அந்நிய நிதி பெறும் என்.ஜி.ஓ.க்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். கும்பலும் மோடி அரசும் என்னதான் சவடால் அடித்தாலும் அவர்களைத் தடை செய்யவோ முற்றிலுமாக அகற்றவோ முடியாது. ஏனென்றால், அவர்கள் மோடியின் எசமானர்களான ஏகாதிபத்தியங்களின் வளர்ப்புப் பிள்ளைகள்.

வெவ்வேறு நோக்கங்களுக்காக வேறுபட்ட கோணங்களில் என்.ஜி.ஓ.க்களை ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்துகின்றன.

மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஏகாதிபத்திய எதிர்ப்பு-கம்யூனிச அரசியல் இல்லாத சுற்றுச்சூழல் பிரச்சினையாகவோ, பழங்குடி மக்கள் பிரச்சினையாகவோ அல்லது மனித உரிமைப் பிரச்சினையாகவோ மாற்றுவது, அடையாள அரசியலின் வரம்புக்குள் நிறுத்துவது என்பது “போராளி” என்.ஜி.ஓ.க்களின் வேலைத்திட்டம். இவர்கள் மீதுதான் இப்போது மோடி அரசு பாய்கிறது.

இவர்களன்றி, நேரடியாக அரசு அதிகாரத்தில் பங்கேற்கும் என்.ஜி.ஓ.க்கள் உள்ளனர். மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட அதிகார வர்க்க அமைப்பின் மூலம் மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்த முடியாது என்பதால், அதிகாரப் பரவலாக்கல், வேர்மட்ட ஜனநாயகம், பயனீட்டாளர் பங்கு பெறுதல் என்ற பெயர்களில் தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்தும் முகவர்களாகவும், நலத்திட்டங்களை செயல்படுத்தும் அரசின் பங்குதாரர்களாகவும் அரசு அதிகாரத்தின் அங்கமாகவே என்.ஜி.ஓ.க்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இது உலக வங்கி உள்ளிட்ட ஏகாதிபத்திய நிறுவனங்களின் உத்தரவு. என்.ஜி.ஓ.க்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேலாக இந்திய அரசே நிதி உதவி செகிறது.

சில நேரங்களில் அதிகார உறுப்புகளாகவும், சில நேரங்களில் போராட்ட அமைப்புகளாகவும் செய்யல்படும் என்.ஜி.ஓக்கள் மீது மோடி அரசு தற்போது காட்டும் ஆத்திரத்தின் உண்மையான இலக்கு போராடுகின்ற மக்களாவர்.

நிலக்கரி, இரும்பு, பாக்சைட் சுரங்கங்களையும், காடுகளையும், கடற்கரையையும் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உடைமையாக்கித் தருகின்ற கூலிப்படையான மோடியின் அரசு, மன்மோகன் சிங் கடந்த 5 ஆண்டுகளில் திணிக்க முடியாத தனியார்மயக் கொள்கைகளை நூறே நாட்களில் திணிக்க முயற்சிக்கிறது.

இம்முயற்சிக்கு எதிராக எழும் மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்குப் படைகளை ஏவுவதற்கு முன்னர், இப்போராட்டங்களை அனைத்தையும் அந்நிய சதி என்று முத்திரை குத்திக் கொச்சைப்படுத்தும் முயற்சியே தற்போதைய உளவுத்துறை அறிக்கை. அந்த வகையில் புறத்தோற்றத்தில் இது என்.ஜி.ஓ.க்களுக்கு எதிரான நடவடிக்கை போலச் சித்தரிக்கப்பட்டாலும், மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதே இதன் உண்மையான குறியிலக்கு என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

அஜித்.
______________________________
புதிய  ஜனநாயகம் – ஜூலை 2014

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here