”எந்த ஒரு சேவையும் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்றால் அங்கே நீங்கள் தான் ப்ராடக்ட் என்பதை மனதில் கொள்ள வேண்டும்“ என்கிறார் உச்ச நீதிமன்றத்தின்  பிரபல வழக்கறிஞர் பவன் துகல்.

உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கே தெரியாமல் உங்கள் தரவுகள் அனைத்தும் திருடப்படுகிறது. திருடப்படுகிறது என்று கேவலமாகவும், கொச்சையாகவும் சொல்வதைவிட நாகரீகமாக சேகரிக்கப்படுகிறது என்று சொல்லலாம். இது பெகாசஸ் உளவு கருவியைக் கொண்டு கண்காணிக்கப் படுவதை விட மோசமானது. ஏன் இந்த தரவுகளை திரட்டுகிறார்கள் என்றால் உங்களுடைய விருப்பங்கள், ஆசைகள், கனவுகள், மெய் உலகில் நீங்கள் கையாளும் அனைத்து அம்சங்களையும் கொண்டு உங்களை ஒரு தரவுகளின் அடிப்படையில் கையாளும் டேட்டா எக்கானமி அதாவது தரவுகளை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் ஒன்றை இயங்குவதற்குதான்…

இன்னமும் ஒருபடி மேலே சென்று “உங்களை இயக்குவது தரவுகள் தான் தெரியுமா” ஏகாதிபத்திய முதலாளித்துவம் ஒவ்வொருவரையும் பற்றிய தரவுகளை சேகரித்து வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் தான் கையாள்கிறது. திமுகவுக்கு வேலை பார்த்த குஜராத் பார்ப்பனர் பிரஷாந்த் கிஷோரிடம் தமிழகத்தை பற்றி இருக்கும் தரவுகள் கூட நமக்கு கிடையாது என்று தரவுகளை பற்றி மிகவும் வியந்தும், மிகவும் பதட்டத்துடனும் பேசிக்கொண்டிருந்தார்” நண்பர் ஒருவர்.

“இந்தியாவைப் பொருத்தவரை தனிநபர்களின் தரவுகள் பாதுகாப்பிற்காக குறிப்பான எந்த ஒரு சட்டமும் இல்லை. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 என்று ஒன்று இருந்தாலும் அது தரவுகள் பாதுகாப்பிற்காக பிரத்தியோகமான சட்டம் கிடையாது“ என்கிறார் வழக்கறிஞர் பவன் துகல். எந்த ஒரு நிறுவனமும் தங்கள் சேவையை பயனர்களுக்கு ஏற்றாற் போல் வழங்க தனிப்பட்ட நபர்களின் தரவுகளை சேகரிக்க பயன்படும் தொழில் நுட்பத்தை டேட்டா அனலிடிக்ஸ் என்கிறார்கள்.  அப்படி என்ன பயனர்களின் மீது அந்த நிறுவனங்களுக்கு கரிசனம். வேறு ஒன்றுமில்லை லாபநோக்கம் தான்.

“அதாவது தாங்கள் பெறும் தரவுகளை வைத்துக்கொண்டு ஒரு பயனருக்கு  ஏற்ற மாதிரியை (Model) அவர்கள் போதிக்கிறார்கள். எனவே எந்த மாதிரியான சேவை தளத்தை பயன்படுத்துகிறோம். எந்த மாதிரியான தகவல்களை நம்மிடம் இருந்து பெறப்படுகிறது. என்பதில் நாம் தான் கவனம் கொள்ள வேண்டும்” என்கிறார் சென்னையை சேர்ந்த சைபர் பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியாளர் ஸ்ரீராம். நல்ல வேடிக்கை! சாராய ஆலைகளை திறந்து கல்லா கட்டும் கம்பெனிகளை இழுத்து மூடாமல் அவன் விற்பதற்கு அனுமதி வழங்கி விட்டு, குடிப்பவர்களிடம் சட்டம் பேசும் அரசின் யோக்கியதை போல இருக்கிறது இந்த வாதம்.

அது போலவே சமீப காலமாக ’டேட்டா மைனிங்’ அதாவது தரவுகள் சுரங்கம் என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. டேட்டா மைனிங் மூலமாக தரவுகளை அர்த்தமுள்ள தகவல்களாக மாற்றுவதற்கு நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் ஒரு வழிமுறையாக இது பயன்படுத்தப்படுகிறது என்று பயனாளர்களுக்கு குறிப்பிடப்படுகிறது. அதாவது விற்பனையாளருக்கு ஒட்டுமொத்த செலவினங்களை குறைத்து விற்பனையை அதிகரிக்கும் அதே வேளையில் வணிக நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ள சந்தைப்படுத்துதல் உத்திகளை உருவாக்கி தர இது உதவுகிறது என்கிறார்கள். வெளிப்படையாகவே உங்களின் தரவு எங்களுக்கு வணிகம் செய்ய உதவுகிறது என்கிறார்கள்.

எந்த வேலையையும் காசாக்கும் தனியார் கல்விக் கொள்ளையர்கள் மூலம் கல்வித்துறையில் ’டேட்டா அனாலிசிஸ் கோர்ஸ்’ என்று புதிய வகையிலான தரவுகளை சேகரிக்கும் படிப்பு தற்போது பிரபலமாகி வருகிறது. இதன் மூலம் நிறுவனங்களின் மூலம் தரவுகளை சேகரித்தல் மற்றும் அந்தந்த தரவு கிடங்குகளில் ஏற்றுதல், தரவுகளை சேமித்தல் மற்றும் நிர்வகித்தல், மேகக் கணினி(cloud computer) அல்லது உள் சேவையகங்களில் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆய்வாளர்கள் மற்றும் நிர்வாகக் குழுக்களில் தரவை அணுகுதல், தரவு எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானித்தல், இப்பணிக்கு பயன்பாட்டு மென்பொருள் தீர்வுகள் பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இருக்கும் தரவரிசைப் படுத்துதல், அட்டவணை அல்லது வரைபடம் போன்ற இறுதி பயனர்களால் பயன்படுத்த எளிதான மற்றும் பகிர்வு வடிவத்தில் தரவை வழங்குதல் இவை அனைத்தையும் கொண்டதுதான் டேட்டா அனாலசிஸ் கோர்ஸ் ஆகும்.

கவனியுங்கள்! இங்குதான் ஏகாதிபத்தியத்தின் சிலந்தி வலை பின்னப்படுகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், கூகுள் போன்ற ஆப்களையும், தேடுபொறிகளையும் நீங்கள் பயன்படுத்தினாலும் சரி! ஒரே ஒரு முறை சொடுக்கினாலும் சரி! உங்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுவிடும். அது உங்களுக்கே தெரியாது. இதைதான் திருட்டு என்கிறோம். பிறகு அதனை வைத்துக் கொண்டு அவர்களின் விருப்பத்திற்கு மனிதர்களை டிசைன் செய்ய விரும்புகிறார்கள்.

ஏனென்றால் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் டிஜிட்டல் உலகம் தான். “இங்கு அனைத்துமே தரவுகளாக தான் இயங்கும். நீங்கள் அள்ளிக்கொடுக்கும் தனிநபர் பற்றிய தரவுகளைக் கொண்டு இங்கு ஒரு பெரும் சந்தை இயங்கிக் கொண்டிருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ யாரோ ஒருவர் உங்களை இயக்குவதற்கு நீங்களே அடித்தளம் அமைத்து தருகிறீர்கள் தற்போது டிஜிட்டல் பொருளாதாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இதில் உங்களின் தரவுகள் ஒவ்வொன்றும் பணமாக்கப்படுகிறது“ என்கிறார் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பவன் .

இது பற்றி நாம் ஓரளவு புரிந்து கொள்ள வேண்டுமென்றால், தரவு பொருளாதாரம் என்று அழைக்கப்படுகின்ற டேட்டா எகானமி பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. தரவு பொருளாதாரத்தில் சேகரிக்கப்பட்ட மற்றும் நிர்வகிக்கப்படும் தரவுகளை பிரத்தியேகமான சேவையகங்களில் தான் சேமிக்க வேண்டும். இந்த சேவையகங்கள் ஒரு இயற்பியல் இடத்திலிருந்து அல்லது வளாகத்திலிருந்து எளியமையாக அணுகுவதற்கு வசதியாக வளாகத்தில் அமைந்திருக்கும் தரவு மையங்களில் தங்கி இருக்கும். இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மூலம் அணுகல் மற்றும் பரிமாற்றத்திற்கு கிடைக்கும் இவற்றை தொகுப்பாக கிளவுட் (Cloud) என்று குறிப்பிடப்படுகிறது. சேகரிக்கப்பட்ட தரவை சேமித்து பாதுகாப்பதும் கூட தரவு பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை பிரதிபலிக்கிறது.

இதில் நிம்மதி அளிக்கும் ஒரே விஷயம் என்னவென்றால் இந்த தரவு சேகரிப்பு அல்லது தரவு பொருளாதாரம் அனைத்தும் மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதுதான் ஒருவேளை இது எந்திரங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றால் அந்த இயந்திரங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் மனித மூளைக்கு மட்டும் தான் உள்ளது. இங்கு மூளையின் செயல்பாட்டை பற்றியும் நாம் சேர்த்து புரிந்து கொள்வதன் மூலம் தரவுகள் பற்றிய அளவுக்கதிகமான அச்சத்தில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.

மனிதனை உயிருள்ள பண்டமாக மாற்றியது தான் முதலாளித்துவத்தின் மிகப் பெரிய சாதனை என்று இடித்துரைத்தார் காரல்மார்க்ஸ். மனிதனே ஒரு பண்டமாக மாற்றப்பட்டு விட்ட பிறகு, அவனைப் பற்றி புதிதாக தரவுகளைத் திரட்டி வைத்துக்கொண்டு அவர்களை கட்டுப்படுத்துவதற்கும் அல்லது அவர்களின் விருப்பங்களை தீர்மானிப்பதற்கும் அதன் மூலம் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யவும், லாப வெறியுடன் ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டு இறங்கியிருக்கின்றன.

எடுத்துக்காட்டாக ஒருவர் எந்த மாதிரியான இசையை ரசிக்க வேண்டும், எந்த மாதிரியாக பொழுதுபோக்குகளை தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் ஏகாதிபத்தியங்கள் என்று தீர்மானிப்பதைப் போல தரவுகளைத் திரட்டி வைத்துக்கொண்டு அனைத்தையும் அவர்கள் கட்டுப்படுத்த துடிக்கிறார்கள். அதனை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டுமே அன்றி. அச்சமடைவதோ, வேதனை கொள்வதோ பிரச்சினையைத் தீர்க்காது.

அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்ற அறிவியல் அறிவை மாற்றி அணுவை பிளக்க முடியும் என்று ரூதர்போர்டு, நீல்ஸ்போர் போன்ற விஞ்ஞானிகள் அணு பற்றிய இயற்பியல் விஞ்ஞானத்தை விரித்து கொண்டு சென்றவுடன் ஐயையோ ஏற்கனவே சொன்னது தவறாகிவிட்டது என்று தோழர் லெனின் பதறவில்லை. பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது என்ற அறிவியலை இந்த புதிய கண்டுபிடிப்பு நிராகரிக்கவில்லை. மாறாக அந்த அணுக்களை பிளக்க முடியும் என்பதைத்தான் கண்டுபிடித்திருக்கின்றனர். இது தெரியாத ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொள்வதற்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று விளக்கம் கொடுத்தார்.

அதேபோலத்தான் டேட்டா சயின்ஸ், டிஜிட்டல் எகானமி. கிளவுட் மௌண்ட். குவாண்டம் கம்ப்யூட்டிங், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்ற மிரட்டலுடன் களத்தில் இறங்கியிருக்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கான வெல்லற்கரிய ஆயுதம் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையும் அந்த ஒற்றுமையை சாதிக்கின்ற மார்க்சிய-லெனினிய சித்தாந்தமும் தான். ஏனென்றால் அது மட்டும் தான் நவீன அறிவியலை மனித குலத்திற்கு பயன்படுத்தும் ஆற்றல் கொண்டது.

தரவுகள் திரட்டுவதை ஸ்னோடன், ஜுலியன் அசாஞ்சே, புதிதாக வளர்ந்துவரும் ஹேக்கர் குழுக்கள் அனைத்தும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பயன்படுத்தினர். அது போல ஒரு பொருளில் உள்ள எதிர்மறை அம்சத்தை பாட்டாளி வர்க்கத்திற்கு சாதகமாக பயன்படுத்தும் திறனை கற்போம். அறவியல் கோட்பாடுகளை நிராகரித்து, அறிவியல் நம்பிக்கையுடன் போராடுவோம்.!

  • இரா.கபிலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here