சிலிர்க்க வைக்கின்றன
பதுங்கு குழிகளென்றாலும்
பட்டாசுகளின் சத்தங்களை விட
தாழ்ந்து செல்லும்
போர் விமானங்களின்
பேரிரைச்சலையும்
அறியாத எங்களுக்கு
முன்னேற்பாடென
அறிமுகம் செய்த
உங்கள் சாகசங்கள்
சிலிர்க்க வைக்கின்றன
பதட்டத்தோடு.”
கவிஞர் பா.மகாலட்சுமி-
தமிழகத்தில் நிலவுகின்ற அமைதி சூழ்நிலை ஆளும் வர்க்கத்திற்கு உவப்பாக இருந்தாலும் பாசிச பாஜகவிற்கு எரிச்சலாக இருக்கின்றது. இலங்கையில் சிங்கள பேரினவாதம் தமிழ் மக்கள் மீது செல்லடித்த போது அலறி புடைத்துக் கொண்டு பதுங்கு குழிகளுக்குள் சென்று தனது உயிரை பாதுகாத்துக் கொண்ட ஈழத்தமிழர்களின் கொடுமையான வாழ்க்கையை புரிந்துக் கொள்ளமுடியாமல் அமைதி காத்த இந்திய தமிழ் மக்கள் இன்று விமானப்படையின் சாகசத்தைப் பார்க்க லட்சக்கணக்கில் குவிகின்றனர்.
’சாகசத்தை பார்க்க கிளம்பி வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்த இந்திய இராணுவத்தின் விமானப்படை குற்றவாளி அல்ல. இதற்கு சென்றவர்களை பாதுகாக்காத தமிழக அரசு தான் குற்றவாளி என்று எல்.முருகன் வாயாடுகிறார். எதை தின்றால் பித்தம் தெளியும் என அலைந்துக் கொண்டுள்ள ஜென்மமான அதிமுக பழனிச்சாமி வழக்கம்போல தனிழக அரசைக் கண்டித்து அறிக்கைவிடுகிறார்.
”இராணுவம் உள்நாட்டுக்குள் பறந்து வட்டமடித்து குண்டுகளை பொழியாமல் சுற்றி வருவது தான் சாகசம். அதே ராணுவம் சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தினால் அது உள்நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் போர். எல்லைக்கப்பால் நடத்தப்பட்டாலோ அது யுத்தம்” என்கிறது ஆளும் வர்க்க ஓநாய்களின் குரல்கள்.
சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று மட்டும் நான்கு லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று தென்னக ரயில்வே மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றது. மெரினா கடற்கரையில் சுமார் 15 லட்சம் பேர் கூடினார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.
சென்னை விமான சாகசம் நிகழ்வு மக்கள் உயிரின் மேல் நடத்தப்பட்ட சாகசம்
கஞ்சிக்கு வழி இல்லாத குப்பனும், சுப்பனும் இராணுவ விமானங்கள் நடத்துகின்ற போர்சாகசங்களை பார்த்து வெறி கொள்ள வேண்டும். இதற்கு ’அவாள்’ முன் வைக்கும் பெயர் ’தேசபக்தி’. நமது மொழியில் சொன்னால் தேசிய வெறி.
இந்திய இராணுவம் 2023 ஆண்டு மட்டும் 81.4 பில்லியன் அமெரிக்க டாலரை தனது செலவுக்காக விழுங்கி விட்டது. இது 2013 ஐக் காட்டிலும் 47% அதிகம் என்பது வேடிக்கைப் பார்க்கப் போன அப்பாவி இந்தியனுக்கு தெரியுமா? இராணுவ சாகசத்தை பார்த்து மதிமயங்கி இராணுவம் யாருக்கு சேவை செய்கிறது என்ற கேள்வியை எழுப்புவதில்லை.
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையை தன்னிடத்தில் கொண்ட இந்தியாவை அமெரிக்க எஜமானர்களின் நிதி மூலதன ஆதிக்கத்திற்கு தேவைப்படுகின்ற பாதுகாப்பான சந்தையாக மாற்றத் துடிக்கும் பாசிச மோடி, இராணுவத்தைக் கொண்டு பாதுகாக்கிறார். ஐந்தாவது பொருளாதாரமாக வளர்க்கவும் துடிக்கின்றார்.
மக்களின் வரிப்பணத்தை அதிகார வர்க்கம் கொள்ளையடித்தது; ராணுவம் தின்று செரித்தது; அரசியல்வாதிகள் உல்லாச ஊதாரி தனத்தில் மூழ்கித் திளைத்தனர்; இவை அனைத்திற்கும் ஒதுக்கப்பட்ட நேரம் போக ஓய்வு நேரத்தில் மக்களை சந்தித்து அரசியல் பேசுகிறார்கள். இது போதாது என மக்கள் வரிப்பணத்தை விரயமாக்க இராணுவத்தை அழைத்து சாகசம் நடத்துகிறார்கள்.
கார்ப்பரேட் மூலதனத்தை வரவழைக்க உலகம் முழுவதும் சுற்றித்திரிந்த தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு தென்கொரிய முதலாளியுடன் இணைந்து இரும்புக்கரத்தை நீட்டுகிறார்.
சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் கைது! போராட்டத்தை சிதைக்கும் திமுகவின் துரோக செயல்!
இணையதளங்களில் ’திராவிட மாடல்’ கொள்கை பரப்புகின்ற உடன்பிறப்புகளோ தொழிற்சங்கத்தை நடத்த வெளியில் இருந்து ஆட்கள் எதற்கு என அறிவு விடலைத்தனமாக பேசுகின்றனர். தொழிற்சங்க பேச்சுவார்த்தைக்கு அந்தந்த தொழிற்சாலைகள் பணிபுரிகின்ற தொழிலாளர்களை தவிர வெளியில் இருந்து ஏன் வர வேண்டும் என்று சாமியாடுகின்றனர்.
’நாய் விற்ற காசு குரைக்காது; பீயில் விழுந்த காசு நாறாது’ என்று கலைஞர் பாணியில் புதிய திரைக்கதை ஒன்றை எழுத வேண்டிய சூழ்நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. கார்ப்பரேட் மூலதனத்தில் முன்விட்டை என்ன, பின் விட்டை என்ன? அனைத்தும் தொழிலாளர்கள் ரத்தத்தை உறிஞ்சுகின்ற கொடூரமான ஆக்டோபஸ் தன்மை கொண்டது தான்.
இன்று வேடிக்கை காட்டும் இராணுவம் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக போராடினால் காஷ்மீரைப் போல, வடகிழக்கு மாநிலங்களைப் போல சுற்றிவளைத்து நிற்கும். அப்போது சாகசங்கள் அனைத்தும் உயிர் பறிக்கும் எமனாகும்.
கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு பலியாகி நிற்கின்ற தமிழகம், இராணுவத்தின் விமான சாகசங்களைக் கண்டு பெருமை கொள்ள எதுவும் இல்லை என்றாலும், இழப்பதற்கு ஐந்து உயிர்கள் உள்ளது.. அது மட்டுமல்ல! சாவுகளின் கணக்கை பற்றி பேசுவதற்கும், எப்படி செத்துப் போனார்கள் என்பதை பற்றி விவாதிப்பதற்கும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கு டிபேட் நடத்துவதற்கான பொருள் கிடைத்து விட்டது.
காரி துப்புவோம்!
- கணேசன்.