
இந்தியாவின் முதல் இரயில்வே இருப்பு பாதை 1853 ஆம் ஆண்டு மும்பை முதல் தானா வரை அமைக்கப்பட்டது. பிரிட்டன் காலனியாதிக்கத்தின்போது இந்தியாவில் கொள்ளையடித்த கனிம வளங்களையும், தனது நாட்டுக்கு தேவையான கச்சாப் பொருட்களையும் கொண்டு செல்வதற்கு போக்குவரத்து ஒரு முக்கிய தேவையாக இருந்தது என்ற அடிப்படையில் இரயில்வே போக்குவரத்து துறை அமைக்கப்பட்டது.
இந்தத் துறையில் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்ற வகையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகவும் விளங்குகிறது. 67,956 கி.மீ கொண்ட உலகிலேயே நீளமான இருப்புப் பாதையும், அதில் தினமும் 14,444 தொடர் வண்டிகளும் பயணிக்கிறது. ஆண்டுக்கு 500 கோடி பேர் பயணிகள் பயணிக்கிறார்கள். சுமார் 30 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து வாகனமாகவும் பயன் தருகிறது. 2022-23 நிதியாண்டில் 8 முதல் 10 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இரயில்வே துறைக்கு என்று 92 ஆண்டுகள் தனியாக போடப்பட்டு வந்த பட்ஜெட்டை ஒழித்துவிட்டு மத்திய பட்ஜெட்டுடன் ஒன்றிணைத்து ஒரே பட்ஜெட்டாக மாற்றியது என்பதுதான் இரயில்வே துறையின் மீது பாஜக வைத்துள்ள அக்கறை.
இதைத் தவிர இரயில்வே துறையில் உள்ள கேண்டின்கள், கழிப்பறைகள், பயணிகள் தங்குமிடங்கள் முதற்கொண்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் தனியார் துறையின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது.
இரயில்வேயில் பயணம் செய்வதற்கு தேவையான டிக்கெட்டுகளை புக் செய்வது முதல் இரயில்வே துறை தொடர்பான அனைத்து அம்சங்களையும் தனியார் நிறுவனங்களின் மூலமாகவே நீங்கள் செய்து கொள்ள முடியும்.
அதேபோல குறிப்பிட்ட வழித்தடங்களில் அதானி நிறுவனத்தின் இரயில் உள்ளிட்ட 151 ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும் வேறு பலரும் இதற்கு போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதும் முக்கியமான செய்திகளாகும்.
படிக்க: மோடி அரசின் அலட்சியத்தால் அவல நிலையில் இந்திய ரயில்வேத் துறை!
இந்த இரயில்வே துறையில் செயல்படுகின்ற தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் தருகின்ற வகையிலான தேர்தல் கடைசியாக 2007 ஆம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டது. அதன் பிறகு ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்த பின்னரும் தேர்தல் நடத்தப்படவில்லை. அப்போதுதான் பாசிச பாஜக ஆட்சிக்கு வந்தது.
இரயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கு பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வருகின்ற பாசிச பாஜகவை கண்டித்து போராடுவதற்கு நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கூட பாஜக அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இதனை எதிர்த்து சிஐடியு தொழிற்சங்கம் சட்டரீதியாக நீதிமன்றத்தில் அணுகி தொழிற்சங்க அங்கீகார தேர்தலை நடத்துமாறு போராடியது. அதன் அடிப்படையிலேயே சமீபத்தில் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.
இரயில்வே தொழிங்சங்க அங்கீகார தேர்தல், கடந்த டிச 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தென்னக இரயில்வே மண்டலத்தில் தட்ஷிண இரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டிஆர்இயு), தட்ஷிண இரயில்வே கார்மிக் சங்கம், ரயில் மஸ்தூர் யூனியன், தெற்கு இரயில்வே ஊழியர்கள் சங்க், தெற்கு இரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) ஆகிய தொழிங்சங்கங்கள் தேர்தலில் போட்டியிட்டன. இத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதுவரை, தொழிற்சங்க அங்கீகார தேர்தலில், தட்ஷிண இரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டிஆர்இயு – சிஐடியு) 33.67% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், சதர்ன் இரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) 34% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இந்திய ஒன்றிய அரசை பாசிச பாஜக கைப்பற்றியிருக்கும் சூழலில் முக்கியமான பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் சிஐடியு மற்றும் அது சார்ந்த டிஆர்இயு வெற்றி பெற்றிருப்பது முக்கியமான அம்சமாகும்.
படிக்க: தேசத்தின் சொத்துகள் விற்பனை- தேசத்துரோகிகள் அட்டகாசம்! அனுமதிக்காதே! போராடு!!
ஆனால் இந்த வெற்றியுடன் ஓய்ந்து விடக்கூடாது. மாறாக இந்தியாவின் மிகப்பெரும் மக்கள் சொத்தான இரயில்வேயை தனியாருக்கு படிப்படியாக தாரை வார்க்கின்ற முயற்சிகள் அனைத்தையும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை திரட்டி போராடி தடுத்து நிறுத்த வேண்டும்.
அதற்கு பதிலாக நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நம்பி ஏமாறக்கூடாது. அதுமட்டுமின்றி மிக நீண்ட பாரம்பரியமிக்க இரயில்வே தொழிலாளர்களை வெறும் தொழிற்சங்கவாத, சட்டவாத வரம்புகளில் இருந்து விடுவித்து பாசிசத்திற்கு எதிராக போராடுகின்ற அரசியலை கற்றுக் கொடுப்பதும், தொழிற்சங்க சுல்தான்களின் பிடியிலிருந்து தொழிலாளர்களை பாதுகாப்பதும் அவசியம்.
- முகம்மது அலி.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி