இன்குலாப் ஜிந்தாபாத்!


இந்த நாட்டின் கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்படும் மதச் சிறுபான்மையினர், ஒடுக்கப்படும் மக்கள் ஆகியவர்களுடன் ஒன்று கலந்து எழுந்து நிற்கும்போது இயல்பாகவே “இன்குலாப் ஜிந்தாபாத்” ஒலித்துவிடும்.

கொலைக் கரங்கள் துரத்தும்போது சண்டையில் சிங்காரத்தை தேடும் கையாலாகாத பேர்வழிகளின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது! பாசிசத்தை வீழ்த்த உயிர் துணிச்சலுடன் வீதியில் இறங்கி போராடுவது ஒன்றே தீர்வு!

♦♦♦

“அல்லாஹு அக்பர்!” எனும் பூரண விடுதலை முழக்கம்

எவ்வவகைப் போராட்டங்கள் என்றாலும் அவற்றில் எழுப்பப்படும் முழக்கங்களுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. குறியீட்டுரீதியில் மட்டும் இல்லை; மிகவும் பொருண்மையான, பருண்மையான பொருளிலேயே முழக்கங்கள் முக்கியமானவை. போராடுபவர்களின் மன உறுதியை, உலகக் கண்ணோட்டத்தை, போராட்டத்தின் திசைநெறியைச் சுட்டுபவை அவை.

இன்குலாப் ஜிந்தாபாத், ஆஸாதி, புரட்சி ஓங்குக, ஜெய் பீம், கம்யூனிசமே வெல்லும், தமிழ் வாழ்க எனப் பலவகைக் கோஷங்கள் முன்பும் இப்போதும் எழுப்பப்படுகின்றன. எதிர்மறையில் ஃபாசிசம் ஒழிக, பார்ப்பனியப் பயங்கரவாதம் ஒழிக, இந்துத்துவம் ஒழிக என்றும் முழக்கங்கள் எழுப்பப்படுவதுண்டு. இவை ஒரு வகை.

பிறரை இழிவுசெய்யும், ஆதிக்கம் செய்யும் நோக்கில் எழுப்பப்படும் இரண்டாம் வகைக் கோஷங்களும் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணிக் கும்பல்களின் (சொல்ல நாகூசும்) கோஷங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

இதில் ‘அல்லாஹு அக்பர்!’ என்ற முழக்கம் எவ்வகையில் சேரும்? இதை முழங்கும் முஸ்லிம்கள் பொருள்கொள்வது என்ன? முஸ்லிம் அல்லாதோர் பலருக்கு இதுபற்றி பெரும் மயக்கம் நிலவுகிறது. குறைந்தபட்சமாக, ‘இது ஒரு மதவாதக் கோஷம்; எனவே, தவிர்க்கப்பட வேண்டும்’ என்பதே பெரும்பான்மை அபிப்பிராயமாக நிலவுகிறது.

இன்று நேற்றல்ல, வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களின் போராட்ட முழக்கமாக இதுவே இருந்து வந்துள்ளது, இனியும் அப்படியே நீடிக்கும்.

வலுவான நிலையில் இருந்தாலும் வலுக்குன்றிய நிலையில் இருந்தாலும் இம்முழக்கம் மட்டும் மாறுவதில்லை.

“அல்லாஹு அக்பர்!” எனும் சொற்கள் வழி முஸ்லிம்கள் மனம்கொள்வது என்ன என்று விளங்கிக் கொண்டால் குழப்பம் தீரும். இதுவொரு மதவாதக் கோஷமோ, பிரிவினைக் கோஷமோ அல்ல; உண்மையில் அனைவருக்குமான பரிபூரண விடுதலைக் கோஷம் என்பது தெள்ளென விளங்கும்.

“அல்லாஹு அக்பர். இறைவனே மிகவும் பெரியவன். நாங்கள் அஞ்சுவதற்கும் அடிபணிவதற்கும் உரியவன் அவன் ஒருவனே. உலகின் வேறெல்லாச் சக்திகளும் அற்பமானவையே. அவனன்றி எச்சக்தியின் முன்பும் நாங்கள் மண்டியிட மாட்டோம். எதுவரினும் எவர் முன்னும் எங்கள் சிரம் தாழாது. அடக்கியாள, ஆதிக்கம் செலுத்த எண்ணும் எவரையும் நாங்கள் துச்சமாகவே மதிப்போம். எம்மை இழிவுசெய்திடவோ, அடிமைப்படுத்திடவோ எவரையும் அனுமதியோம். இம்மண்ணில் நாங்கள் சுதந்திரமாகவே பிறந்தோம். சுதந்திரவான்களாகவே சாவைத் தழுவுவோம்.”

இதுதான் அம்முழக்கத்தின் சாரம்.

இதில் ஆதிக்க மனப்பான்மையோ, பிறர் குறித்த இழிதொனியோ, பிரிவினைப் பாங்கோ, மதவெறியோ இருக்கிறது எனப் புத்தி சுவாதீனமுள்ள எவரும் சொல்ல முடியுமா?

இறைவனின் இருப்பை மறுக்கும் நாத்திகர் சிலருக்கு மேற்சொன்னதன் முதற்பகுதி உவப்பாய் இல்லாமலிருக்கலாம். பூரண விடுதலையைப் பிரகடனம் செய்யும் பிற்பகுதி பற்றி அவர்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இருக்க முடியாது. ஒட்டுமொத்த முழக்கத்தையும் மதவாத, மதவெறிக் கோஷம் என்று ஒதுக்கிவிட முடியாது.

உதாரணத்திற்கு, மார்க்சியர்கள் பலருக்கு அம்பேத்கரின் கருத்துகள் பலவற்றுடனும் உடன்பாடு இருப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் அதிமுக்கியமான பல்வேறு விஷயங்களில் அடிப்படை நோக்கிலேயே அவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் உண்டு. எனினும், ஒருமித்த குரலில் “ஜெய் பீம்” என்று முழங்குவதில் அவை தடையாக வந்து நிற்பதில்லை. அதையே “அல்லாஹு அக்பர்!” என்ற கோஷத்திற்குப் பொருத்திப் பாருங்கள். “உலகின் எந்தச் சக்திக்கும் அடிபணிய மாட்டோம்!” என்ற அந்த முழக்கத்தை ஏற்பதில் உள்ள மனத்தடை அகலலாம். அகலவில்லை என்றாலும் பரவாயில்லை. கொச்சைப் படுத்துவதையாவது நிறுத்துங்கள்.

எது எப்படியாயினும், இந்த உலகம் உள்ளளவும் முஸ்லிம்கள் தங்களுடைய எல்லாப் போராட்டக் களங்களிலும் இந்த most perfect, most revolutionary, most liberating, most poetic முழக்கத்தை எதிரொலிக்கச் செய்துகொண்டுதான் இருப்பார்கள்.

உவைஸ் அஹமத்

(சிஏஏ போராட்ட சமயத்தில் எழுதப்பட்ட பதிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here