இந்துத்துவ வன்முறைகளால் இருண்ட காலத்தை எதிர்நோக்கியுள்ள இந்தியா!

ந்திய மக்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அச்சமூட்டும் செய்தியை கேட்டவாறுதான் கண் விழிக்கின்றனர். அப்படித்தான் கடந்த 16.04.2022 சனிக்கிழமை  அன்று டெல்லி உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் வகுப்புவாத கலவரங்கள் வெடித்தன. இத்தகைய வன்முறை வெறியாட்டங்கள் கடந்த இரண்டு வாரமாக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சங்கிகளால் அரங்கேற்றப் பட்டுள்ளன. இவை அனைத்தும் அவர்களுக்கே உரிய தனித்துவமான வடிவத்தைப் பெற்றுள்ளன.

இந்துத்துவ பாசிச கும்பல்கள், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் கைகளில் ஆயுதங்களை ஏந்தியபடி நுழைந்து, மசூதியின் முன்பாக ஆர்ப்பாட்டம் எனும் பெயரில் அராஜகத்தில் ஈடுபடுகின்றன. அவை எழுப்பும் கோஷமானது முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவர்களை அவமானப்படுத்தும் வகையிலும் உள்ளன.  இப்படியான வன்முறையை திட்டமிட்டே உருவாக்கும் இந்து மதவெறிக் கும்பலை கட்டுப்படுத்த மறுக்கும் காவல்துறை, பாதிப்புக்கு ஆளாகும் முஸ்லிம்களையே கைது செய்கிறது. மேலும் இத்தகைய வன்முறைகளால் அவர்களது சொத்துக்களும் திட்டமிட்டே அழிக்கப்படுகின்றன.

குஜராத்தில் நடந்த ராம நவமி கலவரம்

இதுபோன்ற வன்முறை வெறியாட்டத்தை இந்துத்துவ கும்பல் சனிக்கிழமையன்று வடக்கு டெல்லியில் அரங்கேற்றியது. அனுமன் ஜெயந்தியை கொண்டாடும் சாக்கில் கைகளில் துப்பாக்கி மற்றும் வாள்களோடு ஊர்வலமாக சென்று, ஜஹாங்கிர்புரியில் ஒரு மசூதிக்கு எதிரே கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டது. இந்திய அரசு இதுபோன்ற இந்துத்துவ சக்திகள் உருவாக்கும் கலவரங்களை தடையின்றி அனுமதிக்கிறது. கலவரக்காரர்களை கைது செய்வதில்லை. அப்படியே கைது செய்தாலும் உடனே விடுவிக்கப் படுகின்றனர்.

மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 ல் அரசுக் கட்டிலில் அமர்ந்ததிலிருந்து, இந்துத்துவா கொள்கைகளை பரப்பும் வகையில் காளான்கள் போல முளைத்து வரும் புதுப்புது சங்கிகளுக்கு முக்கிய பொறுப்புகளை கட்சியில் வழங்குகிறது. இவர்கள்  உருவாக்கும் வன்முறைகளுக்கு காவல்துறை மற்றும் நீதித்துறை மூலம் உரிய அங்கீகாரமும் கிடைக்கிறது. இப்படியாக, அனைத்துத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ்- ன் கருத்தியலை ஏற்ற நபர்கள் திட்டமிட்டு புகுத்தப்படுகிறார்கள்.

இப்படியான சதி வேலைகளால் இன்றைய சூழலானது பிஜேபி-ன் திட்டங்களுக்கு வெற்றியை பெற்றுத் தருகிறது. இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சி, அதிகரிக்கும் வறுமை மற்றும் வேலையின்மை போன்றவற்றால் வளர்ந்து வரும் இந்துத்துவ சித்தாந்தமானது முஸ்லீம்கள் மீது தாக்குதல்களை தொடுக்கிறது.  ஏற்கனவே ஏழைகளாகவும் ஓரம் கட்டப்பட்டவர்களாகவும் உள்ள அவர்கள், தொடர்ச்சியான வகுப்புவாத வன்முறைகளால் உடல்ரீதியான அச்சுறுத்தல்களை ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கின்றனர். இந்த ஆபத்து மிக்க ஆயுத அரசியலால் மிகப்பெரிய இழப்பை சந்திப்பவர்களும் அவர்களே. இதையெல்லாம் இந்திய அரசு மௌனமாக வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

உடல் மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்த பீதியினால் முன்னெப்போதும் இல்லாத வகையில் முஸ்லிம்கள் இப்போது ஒன்று திரள்கின்றனர். 2020 இல் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ( CAA) எதிராக அவர்கள் நடத்திய மாபெரும் போராட்டங்கள் இதன் விளைவுதான். சுதந்திர இந்தியாவில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் முஸ்லிம்கள் திரண்டதும் இதுவே முதல் முறையாகும்.

ஜாமியா பல்கலைகழகத்தில் நடைபெற்ற CAA எதிர்ப்பு போராட்டம்

வேகமாக அதிகரித்து வரும் இந்துத்துவ வன்முறையானது முஸ்லிமல்லாத இதர மக்களையும் தான் பாதிக்கிறது. சில அரசியல் விமர்சகர்கள், நமது நாடு அதன் உன்னதமான மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை போன்றவற்றை இழந்து வன்முறை முகமாக மாறுகிறது என எச்சரிக்கின்றனர். ஏற்கனவே இங்கு சாதிய அமைப்புகள், சமூகத்தில் வன்முறையை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றுகின்றன. இப்போது புதிதாக வகுப்புவாத வன்முறைகளும் பெருமளவில் பரவுகின்றன.

சாதிய வன்முறையானது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நிகழ்வதால் அது பெருமளவில் கலவரத் தன்மையை கொண்டிருப்பதில்லை. ஆனால் தற்போதைய இந்து வகுப்புவாத வன்முறை என்பது தேசிய வாதத்துடன் இணைந்து, ஆளும்கட்சியின் நோக்கமான இந்துராஷ்டிரத்தை, அதாவது பெரும்பான்மை இந்துக்களின் தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் செயல்படுகிறது.

இந்திய ஒன்றிய அரசு, இத்தகைய இந்துத்துவ கும்பல்களுக்கு முழு சுதந்திரம் வழங்கி, ஆபத்தான ஆட்டத்தை துவக்கியுள்ளது. இத்தகைய குழுக்களை வைத்து குறுகிய காலத்தில் இந்துத்துவ கருத்தியலை பரப்ப முயல்கிறது. ஆனால் இந்த குழுக்கள் அரசுக்கே சவால் விடும் வகையில் வலிமையாக மாறி வருகின்றன. உ.பியில் பசுப் பாதுகாப்பு கும்பல் ஒன்று 2018 ல் ஒரு காவல்துறை அதிகாரியை சுட்டுக் கொன்றது. அந்த கொலையாளியை மாபெரும் தியாகி போல பகிரங்கமாக கொண்டாடவும் செய்தது. அவர்களை போலீசோ, நீதிமன்றமோ கூட கட்டுப்படுத்த முடியாத அபாய நிலை உருவாகியுள்ளது.

இதுபோன்ற வன்முறை கும்பல்களின் விளைநிலமாக இருப்பது வேலையில்லா திண்டாட்டம்தான். உலக வங்கியின் சமீபத்திய தரவுகளின் படி இந்தியாவில் உழைக்கும் வயதில் இருப்பவர்களில் 43 % பேருக்கு மட்டுமே வேலை உள்ளது. இந்த சதவீதம் பங்களாதேஷில் 53% பாகிஸ்தானில்  48% என இந்தியாவை விட அதிகமாகவே உள்ளது. இதுதான் இவர்கள் பீற்றிக்கொள்ளும் ‘வல்லரசு’ ஆகப் போகும் நாட்டின் லட்சணம்!

மோடி கும்பலின் கோரமுகம்!

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் ( Center for monitoring Indian Economy) அறிக்கைப்படி கடந்த மார்ச்சில் 14 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.  சீனா, வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகள் விவசாயிகளை தொழில் துறைக்கு மாற்றி வருகின்றன. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லாமல் தலைகீழாக தொழில் துறையில் இருந்து தொழிலாளர்கள் இப்பொழுது குறைந்த ஊதியத்தை ஈட்டும் முழுநேர விவசாயிகளாக மாறிக் கொண்டுள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர் பட்டாளம் அதிகரிப்பதால்,  அவர்கள் இந்துத்துவ மதவெறி சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு வகுப்புவாத கும்பல்களுடன் இணைகின்றனர். வரலாற்று ரீதியாக பார்க்கையில் பொருளாதார நெருக்கடியானது தீவிரவாத சித்தாந்தத்துக்குள் எளிதில் தள்ளிவிடும் என்பது நிரூபணமாகிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா வல்லரசாகும் என்ற கணிப்பு இருந்தது. இது சற்று மிகை மதிப்பீடு என்றாலும் ஒரு பிரகாசமான பொருளாதார எதிர்காலத்தை நோக்கியதாகவே இருந்தது. ஆனால் அப்போது இந்து மத தீவிரவாதம் வளரும் என்ற அரசியல் அபாயத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே இப்போது பரவி வரும் இந்துத்துவ வன்முறைகளால் இந்தியாவின் எதிர்காலம் இருண்டதாகவே தெரிகிறது.

Shoaib Daniyal

https://scroll.in/article/1022035/the-india-fix-communal-anarchy-sweeping-the-country-paints-a-dark-future-for-india

தமிழில் ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here