தொடர் கட்டுரை…

நல்லா கவனியுங்க. சோத்துக்கு உழைச்சு, செத்து, சுண்ணாம்பாயி இதோ, என் முன்னால உக்காந்துக்கிட்டு இருக்காங்கள்ல, இவர்களுக்கு இதுவா பிரச்சனை? பிரபஞ்சம் எதிலே இருந்து வந்தது எதுல இருந்து வந்தா எனக்கென்ன? உழைப்புல இருந்துதான் எல்லாம்வர முடியும். மனிதனுடைய உழைப்பு மட்டும் இல்லையென்றால் மலை மலையாக இருக்குமே தவிர, மலையை குடைந்து தள்ளி பாதையை அமைக்க மனிதனின் உழைப்பு சக்தியால் தான் முடியுமே தவிர வேறு எதனாலும் முடியாது. கடல் கடலாகத்தான் இருக்குமே தவிர மனிதனின் உழைப்பு சக்தி சேராதவரை கடலின் சொத்து கரைக்கு வராது. “”மச்சாவதாரம் எடுத்த சிறீமன் மகாவிஷ்ணுவே நாராயண பெருமாளே, வராலு மீனே. நீயே கரைக்கு வா, நீயே கரைக்கு வா, நீயே கரைக்குவா”ன்னு இன்னிக்கெல்லாம் உடுக்கு சிலம்படி மவனெ. ஒரு வரால் குஞ்சு கூட வராது, இல்லியா?

மனித உழைப்பு சேராவிட்டால் ஒன்றுமே மாறாது; நடக்காது; வாழ்க்கைக்கு உதவாது என்று தெரிந்து வைத்திருக்கிற உழைக்கும் வர்க்கத்தினரிடையே ஆரண்யகங்கள் என்ன சொல்கிறது என்றால், இந்தப் பிரபஞ்சம் எதிலேயிருந்து வந்தது? ஒருத்தன் சொன்னான் பிரபஞ்சம் நீரிலே இருந்து வந்தது. நல்லா கவனிச்சீங்கன்னா புரியும். கொஞ்சம் கடினமான செய்திதான் இது. பிரபஞ்சம் நீரிலே இருந்து வந்தது. பக்கத்துல ஒருத்தன் நின்னான். இவன் சொக்காய புடிச்சு, கோமணத்த புடிச்சு இழுத்து, நீரு எதுல இருந்து வந்தது; அப்புறம் பிரபஞ்சம், நீரில இருந்து வந்ததுன்னா, நீரு எதுல இருந்து வந்தது. பக்கத்துல இருந்தவன் ஏதாவது ஒண்ணு சொல்லிட்டு போவனுமில்ல, நீர் நெருப்பிலே இருந்து வந்ததுன்னு அவன் போயிட்டான்.

இவரு ஒரு ஆரண்யக தத்துவ ஞானி. முதல் ஞானி பிரபஞ்சம் நீரிலே இருந்து வந்தது என்றார். பக்கத்துல இருந்தவர் கேட்டார் நீர் எதுல இருந்து வந்ததுன்னு? நீர் நெருப்புல இருந்து வந்ததுன்னார். நெருப்பு எதுல இருந்து வந்ததுன்னு, பக்கத்துல இருந்தவன் சொக்காய புடிச்சு இழுத்தான். அவன் சொன்னான் கருமுட்டையிலேயிருந்து வந்ததுன்னு. இவங்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பறதா, இல்ல பைத்தியக்கார ஆஸ்பத்திரியை இங்கேயே கொண்டு வந்து இவங்களை அமுக்கிறதா? இதெல்லாம் ஒரு தத்துவமாம். இது என்னா மசுருக்கு உதவும்.

உழைக்கும் மக்களுக்கு, கஞ்சிக்கு வழியில்லாம செத்துக்கிட்டிருக்கிறவங்களுக்கு, காவிரியில தண்ணி வராம சம்பா பயிர் கருகிக்கிட்டு இருக்குதேன்னு வயிறெரிஞ்சுகிட்டு இருக்கிற விவசாயிக்கு, ஊராரின் மானத்தை மறைக்க, நெசவாளி, துணியை தயாரித்து கொடுத்துவிட்டு கஞ்சிக்கு செத்துக்கிட்டிருக்கிறவங்களுக்கு ஒரு கட்சிகாரங்க சொன்னாங்க, நாங்க கஞ்சி ஊத்தறம்னாங்க. இன்னொரு கட்சிகாரங்க சொன்னாங்க நாங்க பிரியாணி போடறம், முட்டை பிரியாணின்னாங்க. கஞ்சி ஊத்தனவங்க, 1,000 ரூபாய்க்கு கஞ்சி காய்ச்சி வைத்து, அதை ஊத்தற நிகழ்ச்சிக்கு 50,000 ரூபாய்க்கு போஸ்டர் அடிச்சாங்க. ஆயிரம் ரூபாய்க்கு கஞ்சி காய்ச்சி 50,000 ரூபாய்க்கு போஸ்டர் அடிச்சு 3 லட்ச ரூபாய்க்கு விழா ஏற்பாடு பண்ணி, அதுவும் பொறுக்காத போலீசு உதைச்சு துரத்தினாங்க.

இன்னொரு பக்கம் முட்டை பிரியாணி போடறான். தோழர்களே! தொழிலாளித் தோழர்களே! உழைக்கும் பெருமக்களே! நீங்கள் என்ன வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இங்கு வந்தவர்கள் யாரும் வேறு ஒரு வர்க்கமும் இல்லை உழைக்கும் வர்க்கம் தான் இங்கு வரும். டாட்டா, பிர்லா, டால்மியா, கோயங்கா, சிங்கானியா, ஐ.எஸ்.டி இராம­மூர்த்தி, செட்டியார் எல்லாமா முன்வரிசையில் உட்கார்ந்து இருக்கப் போறாங்க. இதெல்லாம் உழைக்கற கூட்டம். வர்க்கம், நம்முடைய ஒரே வர்க்கம்தான். ஆனால் நீங்கள் எந்தச் சார்புசிந்தனை உடையவர்களானாலும் தயவு செய்து யோசியுங்கள். நெசவாளியை ஒரு தேசம் பட்டினி போட நினைக்கிறதென்றால் அந்த தேசம் நிர்வாணத்தை நேசிக்க ஆரம்பித்து விட்டதாக அர்த்தம்.

இவ்வளவு பிரச்சனையில அழுதுகிட்டிருக்கிறோம். எனக்கு 17 வயசிருக்கும் போது எங்கத் தம்பிக்கு 12 வயசிருக்கும்போது எங்க அம்மா கூப்பிட்டாங்க. “”டேய் வீட்ல பணக்கஷ்டமா இருக்குதுடா கண்ணு”ன்னாங்க. நான் சின்னப்பையன் 17 வயசு. என் தம்பி அதைவிட சின்னப்பையன் 12 வயசு. எங்களுக்கு என்ன தெரியும்? “”என்னம்மா பண்றது”ன்னு கேட்டோம் நாங்க ரெண்டு பேரும். “”என்னடா பண்றது? பணக்கஷ்டமா இருக்குது வேலைக்குப் போங்கடா”ன்னாங்க, எங்கம்மா. படிப்பறிவில்லாத எங்கள்தாய். தறி கணக்குகூட கரிக்கோடு போட்டு எழுதறவங்க. படிக்காதவங்க எங்கம்மா. அவங்க சொன்னாங்க. பணக்கஷ்டமா இருக்குது வேலைக்குப் போங்கடான்னாங்க. அந்தப் பணக்கஷ்டம் என்பதை பொருளாதார நெருக்கடின்னு டிரான்ஸ்லேசன் பண்ணி கூட சொல்லத் தெரியாத படிக்காதவங்க எங்கம்மா, ஆனா இப்ப இருக்கறவங்க என்னங்கறாங்க. பொருளாதார நெருக்கடி வந்து விட்டது. பணக்கஷ்டம். இதுக்கு இப்ப என்ன தீர்வு சொல்றாங்கன்னா வேலையை விட்டுப் போங்கடாங்கறாங்க. எங்கம்மா வேலைக்குப் போங்கடான்னுச்சி. பணக்கஷ்டமா இருக்குது. வேலைக்குப் போங்கடான்னுச்சி எங்கம்மா. இப்ப இருக்கிறவங்க ரொம்ப படிச்சவங்க பிரெசன்டேசன் கான்வென்ட்ல கிராஜிவேட்டு. அதனால வேலையை விட்டுப் போங்கடாங்கறாங்க. பொருளாதார கஷ்டத்தை தீர்க்கறதுக்கு. இப்போ கஷ்டத்திலே அவஸ்த பட்டுட்டிருக்கிற நம்பளுக்கு ஆரண்யகம் என்னா உதவும்னு கேட்கறேன்.

நாலு வேதமும் இன்னான்னு சொல்லிப்புட்டேன். ஆரண்யகம் என்னான்னு சொல்லிப்புட்டேன். அதுக்கப்புறம் உபநிடதம். ஆரண்யகம் என்பது இதான். நெருப்பிலேருந்து வந்ததா, நீரிலே இருந்து வந்ததா? வெங்காயத்திலேயிருந்து வந்ததா? வெள்ளப்பூண்டிலிருந்து வந்ததா? எதுலேயிருந்து வந்தா எங்க மசுருக்கு என்ன? பிறப்புக்கு முன்னால் இருப்பதைப் பற்றிக் கவலைப்படும் உத்தேசம் இங்கு எவருக்கும் இல்லை. உழைக்கும் வர்க்கத்துக்கு. இறப்புக்குப் பின்னால் நாங்கள் என்ன ஆகப் போகிறோம் என்கிற கவலை எங்களுக்கு இல்லை. பிறப்புக்கு முன்னாலோ, இறப்புக்குப் பின்னாலோ நாங்கள் எந்த இழவாய்ப் போனாலும் இருக்கும் காலத்தில் உழைப்பை நம்பி வாழுகிற நாங்கள் உத்திரவாதமான வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும் அல்லவா? அதற்கு உத்திரவாதம் தராமல் டகுள்பாச்சி வேலை பண்றதுக்குப் பேர்தான் ஆரண்யகம். அதுக்கு அப்புறம் உபநிடதங்கள்.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here