இரண்டு நாடுகள் கோட்பாடு: ஈயத்தைப் பார்த்து பல் இளித்ததாம் பித்தளை!!
1971 இந்திய-பாகிஸ்தான் போரின் நினைவு சதுக்கத்தைத் திறந்துவைத்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “மதத்தின் அடிப்படையில் நடந்த பிரிவினை ஒரு மிகப்பெரிய வரலாற்று தவறு என்பதை 1971-ம் ஆண்டின் போர் நமக்கு உணர்த்துவதாகக் குறிப்பிட்டார். பாகிஸ்தான் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே அடிப்படையாக்கொண்டு பிறந்தது, ஆனால் அது அப்படியே இனிமேலும் நீடித்திருக்க முடியாது” என்று கூறினார்.
ஆனால் உண்மை என்னவென்றால், முஸ்லீம் லீக் மட்டுமே முஸ்லிம்களுக்கு தனி நாடு கோரவில்லை, மாறாக இரண்டு நாடுகள் கோட்பாடு என்பது இந்து மகாசபை மற்றும் RSS-ன் அடிப்படை நோக்கமாகவே இருந்துள்ளது. அவர்களின் பிதாமகர்களின் வார்த்தைகள்தான் அதற்குச் சான்று:
முஹம்மது அலி ஜின்னாவின் தலைமையில் முஸ்லீம் லீக் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை 1940களில் முன்வைப்பதற்கு முன்பாகவே 1937-ல் சாவர்க்கரும், RSS-ம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடுகள் வேண்டும் என்று பிரச்சாரம் செய்துவந்தனர்.
அகமதாபாத்தில் 1937-ல் நடைபெற்ற 19-வது இந்து மகாசபை கூட்டத்தின் தலைமை உரையில் சாவர்க்கர், “இந்தியாவில் தற்போது எதிர் எதிர் தன்மைகொண்ட இரண்டு தேசங்கள் உள்ளன. ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தாலும், இந்த உண்மையை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். இந்தியா ஒரு ஒற்றுமையான ஒற்றைத்தன்மை கொண்ட நாடு என்று இனியும் நாம் கூறிக்கொண்டிருக்கமுடியாது. மாறாக இரண்டு விதமான தேசங்கள் இங்கு உள்ளன, ஒன்று இந்துக்களுக்கானது மற்றொன்று முஸ்லிம்களுக்கானது [V. D. Savarkar, Samagra Savarkar Wangmaya: Hindu Rashtra Darshan, vol. 6, Maharashtra Prantik Hindusabha, Poona, 1963, p. 296]
சாவர்க்கரின் வழிவந்த RSS-ம் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் ஒன்றிணைந்து இந்திய நாட்டை கட்டியமைக்க முடியும் என்ற கருத்தை நிராகரித்தே வந்துள்ளது. RSS-சின் ஆங்கில பத்திரிக்கையான ஆர்கனைஸர் ஆகஸ்ட் 14, 1947அன்று வெளிவந்த இதழின் தலையங்கத்தில் இரண்டு தேசங்கள் என்ற கருத்தின் மீதான தனது நம்பிக்கையை வலியுறுத்தியது. ஹிந்துஸ்தான் என்பது முழுக்க முழுக்க இந்துக்களுக்காவே அமையவேண்டும். இந்து மத, கலாச்சார, பண்பாடு, மற்றும் தத்துவங்களின் அடிப்படையிலேயே இந்த நாடு கட்டியமைக்கப்படவேண்டும் என்று கூறியது [Organizer, August 14, 1947].
RSS-சின் உறுப்பினர்கள் அனைவரும் 1930-40 களில் ஹிட்லரை போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களை பொறுத்தவரையில் ஜெர்மனியில் யூதர்கள் எப்படி நடத்தப்பட்டார்களோ அப்படிதான் இந்தியாவில் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் நடத்தப்படவேண்டும் என்று கருதினார்கள். கோல்வால்கர் தனது “We or Our Nationhood Defined” என்ற புத்தகத்தில் “ஜெர்மனி தனது இனத்தூய்மை மற்றும் கலாச்சாரத்தைக் காக்க உலகுக்கே அதிர்ச்சிகரமான வழிமுறைகளை காட்டியுள்ளது. இனப்பெருமை இங்குதான் முற்றிலுமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. எப்படி இருவேறு இனங்களும், இருவேறு கலாச்சாரங்களும் ஒன்றாக ஒத்துப்போகமுடியாது என்பதை ஜெர்மனி காட்டியுள்ளது. அமையவிருக்கும் ஹிந்துஸ்தானத்துக்கும் அதுவே வழிகாட்டி” என்று எழுதியுள்ளார்.
இந்து அல்லாதவர்கள் இந்துக்களின் கலாச்சாரத்தையும், மொழியையும் கற்றுக்கொள்ளவேண்டும். இந்து மதத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும். இந்து மதத்தையும் அதன் கலாச்சாரத்தையும் நேசிக்கவும், போற்றவும் வேண்டும். – கோல்வாக்கர்.
அதே புத்தகத்தின் வேறொரு பகுதியில், “இந்து அல்லாதவர்கள் இந்துக்களின் கலாச்சாரத்தையும், மொழியையும் கற்றுக்கொள்ளவேண்டும். இந்து மதத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும். இந்து மதத்தையும் அதன் கலாச்சாரத்தையும் நேசிக்கவும், போற்றவும் வேண்டும். இந்த நாட்டைக்குறித்து ஒவ்வாமையும், தங்களின் துரோகத்தையும் கைவிட்டு இந்துராஜ்ஜியத்தில் தங்களை ஒப்புவித்துக்கொள்ளவேண்டும். எந்தவொரு உரிமையும், சலுகையும், எந்த முன்னுரிமையும் கோராக்கூடாது. சுருக்கமாக, அவர்களுக்கு நாட்டின் குடியுரிமையே கொடுக்கப்படக்கூடாது” என்று எழுதியுள்ளார்.
அதாவது கோல்வால்கர் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு குடியுரிமை இருக்கக்கூடாது அவர்களின் குடியுரிமையை பறிக்கவேண்டும் என்கிறார். 1966-ல் வெளிவந்த “Bunch of Thoughts”என்ற தனது இரண்டாவது புத்தகத்தில் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பைப் பற்றி பேசும்போது, மூன்று அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறுகிறார். அவை, முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், மற்றும் கம்யூனிஸ்டுகள்.
“வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தின்போது கோல்வால்கர் RSS-இன் உறுப்பினர்களுக்கு ஆங்கிலேயரை எதிர்த்து நேரத்தையும் சக்தியையும் வீணாக்காமல் உள்நாட்டு எதிரிகளான முஸ்லிம்களையும் கிறிஸ்துவர்களையும் அழித்தொழிக்க சேமித்துவைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
முன்பொருமுறை “காந்திதான் “வீர” சாவர்க்கரை மன்னிப்பு கடிதம் எழுத சொன்னார்” என்று ராஜ்நாத் சிங் உளறினார். இப்போது “பிரிவினை வரலாற்றுத் தவறு” என்கிறார். ஒருவேளை இப்படி உளறுவதன்மூலம் நாக்பூரை சமாதானப்படுத்தி தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார் போல தெரிகிறது.
ஆங்கிலத்தில்:
Sankara Narayanan.
தமிழில்: செந்தழல்
https://countercurrents.org/2021/12/two-nation-theory-pot-calling-the-kettle-black/