சென்ற ஆண்டு ஃபிப்ரவரியில் 4.83 விழுக்காடாக இருந்த மொத்த விலை பணவீக்கம் இந்த ஆண்டு ஃபிப்ரவரியில் 13.11 விழுக்காடாக உயர்ந்துள்ளது, 2022 ஜனவரியில் பணவீக்கம் 12.96 விழுக்காடாக இருந்தது. இந்தியாவின் மொத்தவிலைப் பணவீக்கம் தொடர்ந்து 11-வது மாதமாக 10 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துள்ளது. தாதுப் பொருள், எண்ணெய், அடிப்படை உலோகங்கள், ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்கள் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக 2022, பிப்ரவரியில் பணவீக்க விகிதம் அதிகரித்தது.

எரிபொருள், ஆற்றலின் விலைவாசி 31.50 விழுக்காடு உயர்ந்துள்ளது. உற்பத்திப் பொருட்களின் விலைவாசி 9.84 விழுக்காடு உயர்ந்துள்ளது. கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம், ஆகியவற்றின் விலை உயர்வினால் பணவீக்கம் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது.

பணவீக்கத்தைக் கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு தற்போது 2011-12ஆக உள்ளது. பொருளாதாரத்தில் நிகழும் கட்டமைப்பு மாற்றங்களின் அடிப்படையில் புதிய மொத்த விலைக் குறியீட்டு (WPI) தொடர் இறுதி செய்யப்படவுள்ளது. பணவீக்கத்தைக் கணக்கிடுவதற்கான புதிய அடிப்படை ஆண்டு 2017-18 ஆக மாற்றப்படவுள்ளது.

நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் அளவு ஃபிப்ரவரி மாதத்தில் 6.07 விழுக்காடு அதிகரித்துள்ளது, சென்ற மாதத்துடன் ஒப்பிடும் போது 0.24 விழுக்காடு உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசி 5.85 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற மாதத்துடன் ஒப்பிடும் போது 0.18 விழுக்காடு குறைந்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 6.13 விழுக்காடு உயர்ந்துள்ளது. பழங்களின் விலைவாசி 2.26 விழுக்காடு உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 3.02 விழுக்காடு அதிகரித்துள்ளது. முட்டையின் விலை 4.15 விழுக்காடு உயர்ந்துள்ளது. எண்ணெய், கொழுப்பு ஆகியவற்றின் விலைவாசி 16.44 விழுக்காடு அதிகரித்துள்ளது. மீன், இறைச்சியின் விலைவாசி 7.45 விழுக்காடு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம் 4.24 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்திய மாநிலங்களில் மேற்கு வங்கத்தில் பணவீக்கம் மிக அதிகமாக 7.91 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சமீபத்தில் குறைந்த விலையில் ரஷ்யாவிடமிருந்து 13 மில்லியன் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளன. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கும் போது, அதற்கு மாறாக இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள் 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை 6.40 ரூபாய் உயர்த்தியுள்ளன.

மொத்தமாக கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் விலை ‘எல்பிஜி’ விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. ஏழைகளின் எரிபொருளான மண்ணெண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. விமானக் கட்டணங்களும் உயர்ந்துள்ளன.
இந்தியாவில் தனிநபர் வருமானம், நுகர்வு அளவுகள் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே உள்ளன. உயரும் பணவீக்கம் மக்களின் வாங்கும் சக்தியையும், நுகர்வையும் மேலும் குறைக்கிறது. கோதுமை, பாமாயில், பேக்கேஜிங் பொருட்கள் போன்ற சரக்குகளின் விலைவாசி உயர்ந்துள்ளதால் பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுகட்ட விரைவாக விற்பனையாகும் நுகர்வுப்பொருட்கள் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றொரு சுற்று விலை உயர்வு செய்ய உள்ளன. இதனால் நுகர்வோர் தங்கள் அன்றாட அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் ஏப்ரல் முதல் 10 சதவீதத்திற்கு மேல் உயர்த்த மத்திய அரசு அனுமதித்துள்ளது.
பால், நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் விலையையும் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. ரஷ்யா-உக்ரைன் போர் நெருக்கடியால் சூரியகாந்தி எண்ணெயின் மொத்த விலை 7 முதல் 28 விழுக்காடு வரை தென்னிந்தியாவில் உயர்ந்துள்ளது. இந்தியாவின் வருடாந்திர சூரியகாந்தி எண்ணெய் தேவையில் 90 விழுக்காடு உக்ரைன், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 60-65 சதவீதம் தென்னிந்தியாவில் நுகரப்படுகிறது.

உலக சந்தையில் யூரியா உற்பத்திக்கான முக்கிய மூலப்பொருளான இயற்கை எரிவாயுவின் விலை உயர்ந்துள்ளது. இது யூரியா உற்பத்திக்கான மொத்த செலவில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தை வகிக்கிறது.இயற்கை எரிவாயு மின்சாரம் தயாரிப்பு, உரங்கள் தயாரிப்பு, சமையல் எரிவாயு தயாரிப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கை எரிவாயுவின் விலை தற்போது இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கான இடுபொருட்களான அம்மோனியா, சல்ஃபர் , பொட்டாஷ் ஆகியவற்றின் விலை 100%க்கு மேல் உயர்ந்துள்ளதால் உரம், பூச்சிக் கொல்லிகளின் விலை 2022 ஆம் ஆண்டில் 10 முதல் 15 விழுக்காடு உயரவுள்ளது.

உயரும் உர மானிய செலவுகளைக் கட்டுப்படுத்த நேரடி பலன் பரிமாற்ற (DBT) முறையை உருவாக்குவதை மத்திய அரசு பரிசீலித்துவருகிறது.
இந்தியாவின் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (எஃப்எம்சிஜி) தொழில்துறை அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் கடந்த ஆண்டை விட 9.6 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆனால் இது விலைஉயர்வால் வந்த வளர்ச்சியே தவிர சரக்குகளின் மொத்த விற்பனை அளவில் உண்டான வளர்ச்சி அல்ல. உண்மையில் மொத்தப் பொருட்களின் விற்பனை அளவு 2.6 சதவிகிதம் அளவு சரிவைக் கண்டுள்ளது என்று நீல்சன் ஐக்யூ அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் கிராமப்புற சந்தைகளில் நுகர்வு 4.8 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. நகர்ப்புற சந்தைகளில் நுகர்வு 0.8 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. விலை உயர்வு சிறு உற்பத்தியாளர்களை தொடர்ந்து பாதிக்கிறது, 100 கோடி ரூபாய்க்கு கீழ் புரள்வு மதிப்பு கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 13 சதவீதம் குறைந்துள்ளது என்றும் இவ்வமைப்பு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தோராயமாக 6.3 கோடி சிறுகுறுநடுத்தர நிறுவனங்கள் உள்ளன. கோவிட் பொதுமுடக்கத்தின் போது 54 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவற்றை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவர மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கவேண்டும் என தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) கோரிக்கை விடுத்துள்ளது.

நடப்பாண்டில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறுந்தொழில்களுக்கு உற்பத்திக்கு தேவைப்படும் உருக்கு, அலுமினியம், காப்பர், இரும்பு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பிளாஸ்டிக் ஆகிய மூலப் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும். மூலப் பொருட்களின் விலையை அடுத்த ஆறு மாதங்கள் வரை அரசு உயர்த்தக் கூடாது. மேலும், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தப்படும் ஸ்டீல் மூலப் பொருளுக்கு இறக்குமதி வரியில் முழு தீர்வை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதில் எதையுமே செவிமடுக்காத பாஜக அரசின் தரவுகளின் படி வெறும் 5907 சிறு குறு நிறுவனங்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாம்!

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்

சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனின் அளவு சென்ற ஆண்டில் 6.8 விழுக்காடாக இருந்தது 2022 ஜனவரியில் 4.8 விழுக்காடாக குறைந்துள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் போட்டித்திறன், உற்பத்தித்திறனை மேம்படுத்த ‘RAMP’ திட்டம் வரும் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இத்திட்டத்திற்கான உலக வங்கியின் பங்களிப்பு ரூ. 3,750 கோடி ஆகும். இத்திட்டத்திற்கு ரூ.6,062.45 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மருந்துத்துறையில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.500 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர், ரகுராம் ராஜன் உற்பத்தித்திறன் சார்ந்த ஊக்கத்தொகைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கூறியுள்ளார். சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் இந்தத் திட்டம் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ஆதாயம் பெறும் விதத்தில் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடிந்தபின் விலைவாசியை அரசு உயர்த்தியுள்ளது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை முன்வைத்துள்ளன. அதற்கு நிதியமைச்சர் பொருளாதாரம் கொள்ளைநோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் வரி எதுவும் விதிக்க வேண்டாம், மக்களின் மீதான வரிச்சுமையை உயர்த்தவேண்டாம் என்பதில் அரசு விழிப்புடன் செயல்பட்டதாக பதிலளித்துள்ளார். ஆனால் எதார்த்த நிலை அதற்கு மாறாக உள்ளது. மத்திய அரசு நேரடி வரி, பெருநிறுவன வரியை உயர்த்துவதன் மூலமும், சொத்துவரியை மீண்டும் செயல்படுத்துவதன் மூலமும் வரிவருவாயை அதிகரித்து எளிய மக்களின் சுமையைக் குறைத்திருக்கலாம். ஆனால் பாஜக அரசு மறைமுக வரியை உயர்த்தியதன் மூலம் எளிய மக்களின் மீதான சுமையையே அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வைக் குறைப்பதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. பாஜக அரசு பெரும்பணக்காரர்களின் செல்வ செழிப்பு உயருவதற்கே துணை புரிகிறது என்பதைப் பின்வரும் தரவுகள் மெய்ப்பிக்கின்றன.

2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் டாலர் மில்லியனர்கள் ($75,000 விட அதிக வருமானம் உடையவர்கள்) 764,000 பேர். ஆனால் இதில் வெறும் 316,000 பேர் மட்டுமே வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என டி.என்.நினன் குறிப்பிட்டுள்ளார். பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடைபெறுவதையே அவரது கூற்று சுட்டிக்காட்டுகிறது.

தொடரும்…

SAMANTHA K.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here