ஆர்எஸ்எஸ் பிஜேபி போன்ற பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் மனசாட்சி என்று ஒன்றில்லாத அயோக்கியர்களின் கூடாரம்!

அந்த அயோக்கியர்களின் கூடாரத்தில் இதுபோன்ற உண்மை அறியும் குழு என்பதை அமைப்பது என்பது பெரிய விடயமாக உள்ளது. பொதுவாகவே ஒரு பிரச்சினையை கண்டறிவதற்கு பல கோணங்களிலிருந்து ஆராய்ச்சி செய்வதன் மூலமே உண்மைக்கு நெருக்கமாக செல்ல முடியும் என்கிறார் ஆசான் லெனின். ஆனால் விசாரணை கமிட்டிகள், உண்மை அறியும் குழுக்கள், ஆலோசனைக் குழுக்கள் போன்ற எதுவும் தனது அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி விடும் என்ற அதிகார வெறி பிடித்த பாசிஸ்டுகளுக்கு தான் முன்வைப்பது ஒன்றே உண்மை, அதை ஏற்பவர்கள் மட்டுமே தேச பக்தர்கள் என்று புளுகித் திரிகிறார்கள்.

இத்தகைய யோக்கிய சிகாமணிகள் நம் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்ற இடத்தில் இருக்கிறார்கள் என்பதால் எதிர்மறையில் இதுபோன்ற கோரிக்கை கடிதங்களை எழுப்புவதன் மூலம் அவர்களின் அடிவருடிகளுக்கு உண்மையை புரியவைக்க முடியும் என்று நம்புகிறோம்.

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

♦♦♦

நீங்களாவது மனசாட்சியுடன் நடந்து கொள்வீர்களா
திரு. ஜெ.பி.நட்டா அவர்களே ?

உலகின் மாபெரும் அரசியல் இயக்கம் என மார்தட்டிக்கொள்ளும்
பாரதீய ஜனதா கட்சியின் தேசியத்தலைவர் மரியாதைக்குரிய திரு.ஜெகத் பிரகாஷ் நட்டா அவர்களுக்கு வணக்கம்..

தமிழகத்தில்,தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகில்,,மைக்கேல்பட்டி தூய இருதய
மேல் நிலைப்பள்ளியில் பயின்று வந்த மாணவி லாவண்யாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக
மத்திய பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் சந்தியாரே தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளீர்கள்.

1980-ல் உருவெடுத்த பாரதீய ஜனதா கட்சியின் 40 ஆண்டு கால வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு சாதனையை நீங்கள் செய்துள்ளீர்கள்..

ஆம்.. இதற்கு முன்பு தேசியத்தலைவர் பதவி வகித்த எவரும் எந்த ஒரு பிரச்சனைக்கும் இப்படியெல்லாம் “உண்மைக்கண்டறியும் குழு” ஒன்றை இதுவரை அமைத்தது இல்லை.

அதற்காக உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய பேரணியின் போது உங்கள் கட்சியின் ஆட்சி நடக்கும் திரிபுரா மாநிலத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

யார் அந்த கலவரத்தில் ஈடுபட்டது என்ற விபரங்கள் இப்போதுவரை தெரியவில்லை.

உச்சநீதிமன்றத்தில் ஹாஸ்மி என்பவர் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து திரிபுரா கலவரம் குறித்து விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்.

3 மாதங்களாக பதில் மனுவே தாக்கல் செய்யாமல் இழுத்தடித்து வந்த திரிபுரா அரசாங்கம் கடந்த 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் தெரியுமா ?
சமூக ஆர்வலர்கள் என தங்களை தாங்களே அழைத்துக்கொள்ளும் நபர்கள் 2021 ஆண்டு மே மாதம் மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் போது ஏற்பட்ட கலவரம் குறித்து ஏன் எந்த வழக்கும் பதிவு செய்ய செய்யவில்லை என்ற கேள்வியை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் எழுப்பியிருக்கிறது.

இப்படி எல்லாம் ஒரு வினோதம்..
இந்திய வரலாற்றில் இதுவரை நடந்தது இல்லை. மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பின் நடந்த கலவரம் குறித்து இதுவரை 35 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேரடியாக உள்துறை அமைச்சகமும்,பிரதமர் அலுவலகமும் அந்த விவகாரத்தில் தலையிட்டது. உங்களுடைய வாகனம் கூட தாக்கப்பட்டது. உங்களுக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன்.

ஆனால்,, திரிபுரா கலவரம் குறித்து உள்துறை அமைச்சகம் விசாரிக்கவில்லை.பிரதமர் தலையிடவில்லை.அவ்வளவு ஏன்..
குறைந்த பட்சம் யார் கலவரம் செய்தார்கள் என்று விசாரிக்க குழு அமைக்கக்கூட அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது ..

யாரைக் காப்பாற்ற திரிபுரா இவ்வளவு அரசாங்கம் அப்பட்டமாக முயற்சி செய்கிறது ? என ஆச்சர்யமாக இருக்கிறது.

சரி விஷயத்திற்கு வருகிறேன்..
திரிபுர மாநிலத்தில் கலவரம் நடந்த தினத்தன்று ஊர்வலம் நடத்திய அதே விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தான் தமிழகத்தின் தஞ்சை சிறுமி லாவண்யாவின் மரணம் பெரும் விவகாரமாக மாறுவதற்கும் காரணம்.

பிஜேபி நிர்வாகிகள் பலர் உயிரிழந்த மேற்கு வங்க விவகாரம் குறித்து விசாரிக்க நீங்கள் உண்மை கண்டறியும் குழுவை அமைக்கவில்லை. ஆனால் தஞ்சை சிறுமியின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க நீங்கள் குழுவை அமைத்துள்ளீர்கள்.

ஒரு மருத்துவருடைய மகனாக ஹிமாச்சல் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த உங்களுக்கு வறுமையின் வலியோ.. ஏழ்மையின் துயரமோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்னுடைய குழந்தை பருவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு துன்பம் நிறைந்தது திரு.நட்டா அவர்களே..

ஒரு நோட்டு புத்தகமோ,,ஒரு பேனாவோ அல்லது பென்சிலோ யாரேனும் கொடுத்தால் அவ்வளவு மகிழ்ச்சியடைவேன்.

என்னுடைய அம்மா நாங்கள் வாழ்ந்துவந்த தெருவில் இருந்த விநாயகர் கோவிலை தினந்தோறும் கூட்டி சுத்தம் செய்யும் பணியை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் செய்துவந்தார்.

அந்த கோவில் திருவிழாவின் போது,,குழந்தைகளுக்கிடையே சில போட்டிகளை வைத்து பரிசுகளை வழங்குவார்கள்.

அந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ்,திமுக,அதிமுக நிர்வாகிகள் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு ஜாமின்ட்ரி பாக்ஸ்,புத்தகப்பை போன்றவற்றை பரிசாக வழங்குவர்.
போட்டியில் பங்கெடுத்த குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பேனாவோ அல்லது பென்சிலோ கொடுப்பர்.

என்னுடைய அம்மா கோவிலில் பணியாற்றி வந்ததால் எனக்கும்,என் தங்கைக்கும் ஒன்றிரண்டு பென்சில்கள் கூடுதலாக கிடைக்கும்.எங்கள் தெருவில் எங்களை விட தரித்திரம் பிடித்த நபர்கள் யாரும் இல்லாததும் கூடுதலாக பென்சில்கள் கிடைக்க ஒரு காரணம். அந்த ஆண்டு முழுமைக்கும் அதை தான் பயன் படுத்துவோம்.

இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால்…
உங்கள் கட்சி நிர்வாகிகள் இப்படி எல்லாம் குழந்தைகளின் படிப்புக்கு தேவையான எந்த உதவிகளையும்,தமிழகத்தில் எந்த இடத்திலும் ஒரு நாளும் செய்தது கிடையாது.

அரியலூர் போன்ற பின்தங்கிய மாவட்டத்தில் பிறந்து தாயை இழந்து விடுதியில் தங்கி பயின்று வந்த குழந்தை இறந்திருக்கிறாள் மிகவும் வருத்தத்திற்குரியது.

163 ஆண்டுகள் சேவை செய்து வரும் பள்ளியாக இருந்தாலும்,தவறு செய்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால்,, விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகியால் ஜனவரி மாதம் 17-ம் தேதி செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை அந்த குழந்தை இறந்த பிறகு உங்கள் கட்சியின் நிர்வாகிகள் 19-ம் தேதி வெளியிடுகிறார்கள். அதாவது குழந்தையின் மரணத்திற்காக கழுகைப் போல காத்திருந்தனர்..

அதன் பின்னர் மத மாற்றமே மரணத்திற்கு காரணமென தமிழக பிஜேபி விவகாரத்தை பூதாகாரமாக்குகிறது.

அந்த குழந்தையின் பெற்றோரை கட்டுப்பாட்டில் எடுத்த நபர்கள் தமிழக ஊடகங்களிடம் சில நிமிடங்கள் மட்டுமே பேச அவர்களை அனுமதித்தனர்.
ஆனால் தேசிய ஊடகங்களில் தாராளமாக பேச விட்டனர்.

அவர்கள் யாரென்று நான் சொல்லப்போவதில்லை. நீங்கள் தான் உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளீர்களே அவர்கள் தங்களது அறிக்கையில் அதை சொல்லட்டும்.

ஜெய் ஸ்ரீராம் கூறச்சொல்லி முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்பது உங்களுக்கே தெரியும். திரிபுரா மாநிலத்தில் நடந்துள்ள சமீபத்திய உதாரணம் போதுமென நினைக்கிறேன்.

இந்தியாவில் 2014-ம் ஆண்டில் கிறிஸ்துவ ஆலயங்களுக்கும்,கிறிஸ்துவர்களுக்கும் எதிராக 127 தாக்குதல்கள் நடந்துள்ளன. உங்கள் கட்சியின் ஆட்சி அமைந்த பிறகு ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வந்து 2021 ஆம் ஆண்டு மட்டும், 486 வன்முறை சம்பவங்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்தேறியுள்ளது.

RSS இயக்கத்தின் கீழ் வித் பரிவார் அமைப்புக்களாக இயங்கி வரும் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் கும்பலே தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் இருக்கும் முக்கியமான கிருஸ்துவ தலைவர்கள் குடியரசு தலைவருக்கும்,உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் சிறுபான்மை மக்களை பகிரங்கமாக மிரட்டும் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அனுப்பியுள்ளனர்.

2022 -ம் ஆண்டு ஜனவரி 7 ம் தேதி The Sarva Isai Mahasabha சார்பில் குடியரசு தலைவருக்கு 50 ஆயிரம் தபால்கள் அனுப்பப்பட்டிருக்கிறது.

2022 -ம் ஆண்டு ஜனவரி 10 ம் தேதி Catholic Bishops’ Conference of India அமைப்பினர் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துங்கள் என வலியுறுத்தி பிரதமருக்கும்,உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மனு அனுப்பியுள்ளனர்.

United Christian Front என்ற அமைப்பு தாக்குதல் தாக்குதல் சம்பவங்களை பட்டியலிட்டு பிரதமருக்கு நடவடிக்கை எடுக்க கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

இதெல்லாம் எத்தனை பேருக்கு தெரியும் ?

இந்தியாவில் இருக்கும் முக்கிய ஊடகங்கள்,பத்திரிகைகள் எழுதியதா யோசித்து பாருங்கள்…

ஆனால் பாருங்கள்…
கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாஅத் அமைப்பினரே காரணமென இந்தியா முழுமைக்கும் உங்கள் கட்சி நிர்வாகிகள் முன்னெடுத்த வெறுப்பு பிரச்சாரத்திற்கு கைகொடுத்த இந்திய ஊடகங்கள் ஒரு வார்த்தை கூட கிறிஸ்தவ சமூகம் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து பேசியது கிடையாது.

மிகப்பெரிய கட்சியின் தேசியத்தலைவரான உங்களுக்கு தெரியாததல்ல.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 79.8% ஹிந்துக்களும் 14.2% முஸ்லிம்களும் , 2.3% கிறிஸ்தவர்களும் மட்டுமே உள்ளனர்.

வெறும் 2.3% மட்டுமே இருக்கும் மக்கள் தான் மதமாற்றம் செய்கிறார்கள்.இதுவொரு தேசிய அபாயம் என்று தமிழக பிஜேபியினர் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்.

உண்மையிலேயே மிக ஆச்சர்யமாக இருக்கிறது திரு.நட்டா அவர்களே..

இந்தியாவில் இருக்கும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களின் பல ஊழியர்கள் உங்கள் கட்சி முன்வைத்த மதமாற்றம் தான் லாவண்யாவின் மரணத்திற்கு காரணமென்ற பிரச்சாரத்தை அவர்களும் அடி பிறழாமல் வழி மொழிந்தனர்..

தமிழகத்தில் இருக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு ஏற்கனவே முன் அனுபவம் இருந்ததால் கொஞ்சம் அமைதி காத்தனர்.

அது என்ன முன் அனுபவம் என்று நீங்களும் தெரிந்து கொள்கிறீர்களா ?

தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலேஸ்வரம் என்ற பகுதியில், ‘செயின்ட் ஜோசப் ஹாஸ்பிஸ்’ என்ற பெயரில், கருணை இல்லம் இருக்கிறது. சாலை ஓரங்களில், ஆதரவின்றி தவிப்போர் மற்றும் நோய் வாய்ப்பட்டு, சிகிச்சை பெற முடியாமல் இருப்போரை,அழைத்து வந்து பராமரிக்கும் மையமது.

Fr.தாமஸ் என்பவர் 2011 -ம் ஆண்டில் இருந்து அந்த மையத்தை நடத்தி வருகிறார். இறந்து போகும் முதியவர்களை அங்கேயே அடக்கமும் செய்துவிடுவார்கள்.

2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இறந்து போன உடலுடன், காய்கறி மற்றும் உயிருடன் இருந்த முதியவர்களை ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றில் அந்த மையத்தினர் ஏற்றிவந்துவிட்டனர். உண்மையிலேயே மிகப்பெரும் தவறு தான் அது.

அந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தது தமிழக பிஜேபி.
ஆனால் அவர்கள் முன்வைத்த குற்றசாட்டு என்ன தெரியுமா ?
மனித எலும்புகளுக்காக முதியவர்களை கொலை செய்கிறார்கள் என
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் அவதூறு பிரச்சாரத்தை கிளப்பினார்.
தமிழகத்தையே அல்லோகல் படுத்திவிட்டனர்.

அடுத்த 10 தினங்களுக்கு அதைத்தவிர வேறு எதையுமே யாரையும் பேசவிடவில்லை.
தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சித்தலைவருக்கும் தொலைபேசியில் அழைத்துப்பேசி அறிக்கை விடச்சொல்லி எக்கச்சக்க தொந்தரவு வேறு செய்தனர்.
தமிழகத்தில் இருக்கும் எல்லா அரசியல் கட்சித்தலைவர்களும்
மனித எலும்புகளை அந்த மையம் விற்பனை செய்கிறதா என விசாரிக்க வேண்டுமென அறிக்கையும் விட்டனர்.

தீவிரமான விசாரணையை மாவட்ட ஆட்சியரும்,காவல் கண்காணிப்பாளரும் மேற்கொண்டனர். மற்றொரு பக்கம் மத்திய உளவுத்துறையும் விசாரணை நடத்தியது.

15 தினங்களுக்கு பிறகு அப்படி எல்லாம் யாரும் மனித எலும்புகளை விற்பனை செய்யவில்லை.அப்படி விற்பனை செய்யவும் முடியாதென தெரிந்து அந்த கருணை இல்லம் தொடர்ந்து நடக்க அரசு அனுமதி கொடுத்துவிட்டது.
அப்போது நீங்கள் தான் இந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர்.

ஒரு அரசியல் கட்சி கையில் கிடைக்கும் பிரச்சனைகளை வைத்து அரசியல் செய்வது என்பது நியாயம் தான்.

ஆனால், அதில் கொஞ்சமாவது பொது நலனும்-மனித நேயமும் இருக்கவேண்டும்.

அப்படி எதுவுமே உங்கள் கட்சி முன்னெடுக்கும் பிரச்சனைகளில் ஒருநாளும் இருந்தது இல்லை.
அதனால் தான் தமிழகத்தில் இருக்கும் எந்தவொரு அரசியல் கட்சியுமே மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்றமே காரணம் என்ற உங்களுடைய கட்சியினரின் குற்றசாட்டை நம்பவும் இல்லை.ஆதரிக்கவும் இல்லை.

அதற்கு மாறாக
தமிழகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்த பிஜேபி முயற்சி என கண்டன அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால்,அப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டையெல்லாம் உங்கள் கட்சி மீது ஒரு போதும் நான் வைக்க மாட்டேன்.

ஏனென்றால்…
உங்கள் கட்சி இதுவரை இந்துக்களுக்காகவோ, இந்து குழந்தைகளின் கல்விக்காகவோ 5 பைசா கூட செலவு செய்தது இல்லை.

அவ்வளவு ஏன் நலிவடைந்திருக்கும் உங்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு/தொண்டர்களுக்கு கூட சல்லிக்காசு கொடுத்தது இல்லை.

ஆனாலும்,, சாகும் தருவாயில் இருக்கும் ஒரு மாணவியிடம் வீடியோ எடுத்து,,அந்த மாணவி சாகும் வரை காத்திருந்து,செத்த பிறகு உங்கள் கட்சியினர் செய்த அரசியலை தமிழக மக்கள் கண்குளிர பார்த்துள்ளனர்.

இந்தியாவில் மத நல்லிணக்கத்திற்கோ,, அமைதிக்கோ பாதிப்பில்லாமல்,சாதிய பாகுபாடில்லாமல் குழந்தைகள் வாழ/ வளர வேண்டும் என்பதற்காக அதை உறுதிப்படுத்த “National Foundation for Communal Harmony” 1992-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் தனி அமைப்பாக இயங்கும் NFCH மதக்கலவரத்தால்/தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பலவகையில் நிதி உதவிகளை செய்துவருகிறது.

National Foundation for Communal Harmony இந்தியாவில் 3337 குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறது.
அஸ்ஸாம்,பீகார்,மணிப்பூர்,ஜார்கண்ட்,மத்திய பிரதேசம்,மஹாராஷ்டிரா, சட்டீஸ்கர்,குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீர் என 9 மாநில குழந்தைகள் நிதி உதவியை பெற்று வருகின்றனர்.

அதாவது மதக்கலவரத்தாலும்,தீவிரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் உள்ள 9 மாநிலங்களில் 6 மாநிலங்கள் உங்கள் கட்சியின் ஆட்சி நடக்கக்கூடிய மாநிலங்கள் தான்..

இதுவரை தமிழகத்தில் மதக்கலவரத்தால் ஒரே ஒரு குழந்தை கூட பாதிக்கப்படவில்லை.

National Foundation for Communal Harmony அமைப்புக்கு அதிகம் நிதி உதவி செய்த மாநிலங்களில் தான் தமிழகம் இருக்கிறது..

மரியாதைக்குரிய திரு.நட்டா அவர்களே! கிட்டத்தட்ட 140 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டின் தெற்கு பகுதியில் ஒரு ஓரமாக இருக்கும் தமிழகம் என்ற மாநிலத்தில் மதக்கலவரம் எதுவுமின்றி 8 கோடி மக்கள் மிக அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள்.

விட்டு விடுங்களேன்.ஏதோ அவர்கள் வாழ்ந்துவிட்டு போகட்டும்.

தமிழகத்தில் வாழும் 8 கோடி மக்களுக்கு அமைதியாக வாழ்வதற்கு கூட உரிமையில்லையா இந்த நாட்டில் ?
யோசித்துப்பாருங்கள்…

அதே நேரம் உங்கள் கட்சியினர் மதரீதியாக கிளப்பியுள்ள பிரச்சனைக்கு இந்த நாட்டையே ஆளும் கட்சியின் தேசியத்தலைவரான நீங்கள் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஆம்…
நீங்கள் அமைத்துள்ள உண்மைக்கண்டறியும் குழு தமிழகத்தில் தன்னுடைய ஆய்வை முடித்த பிறகு அந்த அறிக்கையை கண்டிப்பாக வெளியிட வேண்டும்… அதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

கொஞ்சமும் நீதியோ நேர்மையோ இல்லாத தமிழக பிஜேபியினரிடம் நியாயத்தை எல்லாம் சிறிதும் எதிர்பார்க்க முடியாது.

கடந்த டிசம்பர் மாதத்தில் ராமநாதபுரத்தில் மணிகண்டன் என்ற மாணவன் காவல்துறை விசாரணைக்கு சென்று வந்த பின் மர்மமான முறையில் மரணம் அடைந்து விட்டார்.

தமிழக பிஜேபினர் அந்த மரணம் குறித்து விசாரிக்க உண்மைக்கண்டறியும் குழுவை அமைத்தார்கள்.
பின்னர் அதை அப்படியே ஊத்தி மூடிவிட்டார்கள். அதனால் திரும்பவும் சொல்கிறேன்.தமிழக பிஜேபினர் கொஞ்சம் கூட நேர்மையற்றவர்கள்

ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளின் மீது அரசியல் செய்கிறார்களே தவிர. உண்மைகளின் மீது அல்ல..

மாணவி லாவண்யாவின் மரண விவகாரத்தில் பயிற்றுவிக்கப்பட்ட மிருகங்களைப்போல தான் அவர்கள் நடந்து கொண்டார்கள்.

அதனால் தயவு செய்து,, உண்மை கண்டறியும் குழு கண்டு பிடிக்கும் உண்மையை அந்த அறிக்கையை நீங்களாவது மனசாட்சியுடன் வெளிப்படுத்துங்கள்..

உலகின் மிகப்பெரிய கட்சியின் தேசியத்தலைவர் என்ற பெருமைக்குரிய நீங்கள்…
உண்மையான மனிதராகவும் இருக்க வேண்டியது அவசியமில்லையா !?
B.R. அரவிந்தாக்ஷன்
ஊடகவியலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here