ஆகம விதிகளின் படி செயல்படும் அனைத்து கோவில்களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்!

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக வேண்டும் என்ற நீண்ட நெடிய போராட்டம் ஒரு நூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

கோவில் என்றால் கருவறை என்பதே முக்கியமான வழிபாட்டு இடமாகும். அந்தக் கருவறையில் எப்போதும் சமஸ்கிருத மந்திரங்கள் மட்டுமே ஓதப்படுகிறது

அதுமட்டுமன்றி பிறப்பால் பார்ப்பனர்கள் மட்டுமே பூஜை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
நாம் அனைவரும் இந்துக்கள் என்று அறைகூவல் விடுக்கும் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க விரும்புவதில்லை.

தந்தை பெரியார் காலத்தில் “நெஞ்சில் தைத்த முள்ளாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியவில்லை என்ற நிலைமையே உள்ளது” என்று மனம் வருந்தினார்.
அதை கணக்கில் கொண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் துவங்கப்பட்டது.
அந்தப் பள்ளிகளில் முறைப்படி ஆகமங்களையும், பூசைக் குரிய மந்திரங்களையும் கற்றுத் தேறிய மாணவர்களை அர்ச்சகர் ஆக்குவதற்கு அதிமுக அரசு முன்வரவில்லை.

அதிமுக முன்வரவில்லை என்பதை விட பார்ப்பன கும்பலின் எதிர்ப்புக்கு பணிந்து இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக முயற்சி மேற்கொண்டு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கோவில்களில் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்தது.

அவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்ட பிற சாதியிலிருந்து அர்ச்சகராக தேர்வு செய்யப்பட்டவர்கள் பார்ப்பனர்களுக்கு எடுபிடி வேலை செய்வது, கோவில் வேறு ஏதாவது ஒரு வேலை செய்வது என்றே பணிக்கப்பட்டனர்.

இது தீண்டாமையின் நவீன வடிவமாக அனைத்து கோவில்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் நடைமுறையில் உள்ளதை போல தோற்றமளித்தாலும் உண்மையில் கருவறைக்குள் தமிழ் மந்திரங்களை ஓதுவதற்கு கூட பார்ப்பனர்களைத் தவிர பிறரை அனுமதிப்பதில்லை.

இந்த சூழலில் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்ட தற்கும், அனைத்து சாதி அர்ச்சகர் உரிமையை தடுப்பதற்கும் சுப்பிரமணியசாமி தலைமையில் பார்ப்பன கும்பல் வழக்கு போட்டுள்ளது.

அர்ச்சகர் பணி நியமனத்தை உண்மையிலேயே அதன் தன்மையுடன் அமுல்படுத்துவதற்கு வயலூர் முருகன் கோவிலில் சுயமரியாதையுள்ள பக்தர்களுடன், மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் மக்கள் அதிகாரமும் இணைந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக இன்று புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர் தனது பணியை செவ்வனே செய்து முடித்தார்.

இந்த தீ பரவட்டும்! தமிழகம் முழுவதும் உள்ள ஆகம விதிகளின்படி செயல்படும் கோவில்கள் அனைத்திலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் வரை போராட்டம் தொடரும்.

செல்வம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here