கருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கும்
ஒன்றிய பாசிச பாஜக அரசாங்கம்!
2014-ல் மோடி தலைமையிலான ஆர் எஸ் எஸ் இந்துத்துவ கும்பலின் பின்னணியில் பாசிச பாஜக ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் வரை அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது, சாதி – மத வெறி – சனாதன பார்ப்பனியப் பண்பாட்டுப் போதைகளை மக்களிடத்தே பரப்புவதற்காகப் பொய் பித்தலாட்டங்கள் அனைத்தையும் திட்டமிட்டே எண்ணற்ற ஊடகங்களில் மட்டுமல்ல; எண்ணற்ற பிரச்சாரக் கூட்டங்களிலும் கூட பரப்பினார்கள். அதற்கு அன்னா ஹசாரேயின் ‘பேருதவி’யையும் பெற்றுக் கொண்டார்கள். பொய்களையே மூலத்தனமாகக் கொண்டு ஆட்சி அதிகாரத்தையும் 2014-ல் கைப்பற்றிக் கொண்டார்கள்.
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின் தமது பிதாமகர் ஆர்எஸ்எஸ் இந்துத்துவக் கும்பல் காட்டும் வழிமுறைகளுக்கு ஏற்ப செயல்படத் துவங்கினர். மக்களின் வாழ்வாதார பிரதான பிரச்சனைகளை எல்லாம் ஒட்டடைகளைப் போல் ஓரங்கட்டி விட்டு கார்ப்பரேட் முதலாளி களுக்கு பட்டுக்கம்பளம் விரித்தனர். உழைக்கும் மக்களை திண்டாட்டத்திற்குள் தள்ளிவிட்டு, அவர்களுக்கு மதவெறி – சாதிவெறி போதையூட்டி பிரித்தாளும் சூழ்ச்சிகளைக் கையாண்டு நாட்டை கலவரப் பூமியாக்கினர். இந்திய நாடு கொலைக் களப்பூமியாகப் ‘பரிணமித்தது’.
பாசிச பாஜகவின் தகிடுதத்தங்களை தோலுரித்து அம்பலப்படுத்திய – எதிர்த்துப் போராடிய புரட்சியாளர்கள் மட்டுமல்ல; எண்ணற்ற முற்போக்கு ஜனநாயக சக்திகளும் கூட காவி(லி)க் கும்பலால் கொன்றொழிக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் கூட தப்புவிக்கப்படவில்லை. குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிகளும் கூட கொன்றொழிக்கப்பட்டனர்.
அந்த அளவிற்கு பாசிச பாஜக காவி கும்பல் இன்று வரை நரவேட்டையாடிக் கொண்டு இருக்கிறது. மக்கள் விரோதிகளாய் இருந்து கொண்டு ஜனநாயக வேடம் பூண்டு நடித்த வண்ணம் உள்ளனர்.
பறிபோகிறது கருத்துரிமை! நெறிக்கப்படுகிறது அறிஞர்கள் – அரசு ஊழியர்கள் – மற்றும் மக்கள் குரல்வளைகள்!
அண்மையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக தஞ்சையில் தமிழ் மக்கள் இசை விழா கீழடி நாகரிகத்தை உயர்த்திப்பிடித்து போர்ப்பரணி பாடி முழு நாள் நிகழ்வாக எழுச்சியுடன் நடத்தி முடித்தது.
கீழடியின் உண்மைத் தரவுகளை வெளிக் கொணர்ந்து 982 பக்கங்கள் கொண்ட அகழாய்வு அறிக்கையை ஒன்றிய தொல்லியல் துறைக்கு ஒப்படைத்தார் அகழாய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா. ஒன்றிய தொல்லியல் துறையும், பாஜக அரசும் அமர்நாத் அறிக்கையை திருத்தி எழுதிக் தரக் கோரியதும், அதற்கு அவர் மறுத்து உண்மைக்கு விசுவாசமாக நடந்து கொண்டதும் நாடெங்கும் அறியப்பட்டதே.
ம.க.இ.க.-வின் தமிழ் மக்கள் இசை விழா பிரச்சாரங்கள் தமிழ்நாடெங்கும் சுவர் எழுத்துக்கள் மூலமாக மட்டுமல்ல; எண்ணற்ற ஊடகங்கள் மூலமாக; சுவரொட்டிகள் மூலமாக; துண்டு பிரசுரங்கள், பேருந்துப் பிரச்சாரங்கள், தொடர்வண்டிப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள், எண்ணற்ற விளக்கக் கூட்டங்கள், இ-போஸ்டர்கள் மூலமாக; முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம். யூடியூப் என எண்ணற்ற வடிவங்களில் பிரச்சாரங்கள் உலகெங்கும் பரவும்படியாயின. இதில் முக்கியமாக கீழடி அகழாய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆகஸ்ட் 22 தஞ்சை தமிழ் மக்கள் இசை விழாவில் பங்கேற்கிறார் என்பது மிக முக்கிய பேசு பொருளாக மாறிற்று!
பொறுக்குமா பார்ப்பன சங்கிக் கூட்டம்? ஒன்றிய தொல்லியல் துறை மற்றும் பாஜக காவிக் கும்பலுக்கு தமிழ் மக்கள் இசை விழா குறித்தான அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டு டெல்லிக்குச் சேர்க்கப்பட்டன.
அதன் விளைவு ஒன்றிய தொல்லியல் துறை பொத்தாம் பொதுவாக, ‘அகழாய்வுப் பணிகளில் ஈடுபடும் கீழ்மட்ட அலுவலர் முதல் மேல்மட்ட அலுவலர் வரை எவராகிலும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட எந்த ஒரு தரவுகளையும் நேர்காணல்கள் மூலமாகவோ, ஆய்வரங்குகளில் – கருத்தரங்குகளில் பங்கேற்பதன் வாயிலாகவோ வெளிப்படுத்தக் கூடாது; அவ்வாறு மீறினால் இது CCS Rues முதலானவற்றுக்கு எதிரானது என்ற அடிப்படையில் கடும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்…’ என்று எச்சரித்து மிரட்டல் விடுத்து சுற்றறிக்கை ஒன்றை ஜூலை இறுதி வாரத்தில் வெளியிட்டது. ஜூலை 28 THE PRINT ஆங்கில இதழ் இச்செய்தியை விரிவாக வெளியிட்டிருந்தது. தொல்லியல் துறையின் 150 ஆண்டு கால வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு சுற்றறிக்கை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத் தகுந்தது.
அமர்நாத் ஆய்வினை முடிக்கும் தருவாயிலேயே திருப்தி கொள்ளாத மதவாத தொல்லியல் துறையும் ஒன்றிய பாஜக அரசும் 2016 ல் பாலக்காட்டு பார்ப்பனத் தொல்லியலாளரும் பக்கா சங்கியுமான ஸ்ரீராம் என்பவரை கீழடிக்கு இறக்குமதி செய்து, ‘கீழடியில் தோண்டிப் பார்த்து விரிவாக எடுத்துச் சொல்ல எதுவுமே தென்படவில்லை’ – என்ற 4 வரிகளில் முற்றிலும் பொய்யான அறிக்கையை ஒன்றிய பாஜக அரசின் மனம் குளிரும்படி – அவர்கள் விரும்பியபடி எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றார். அத்துடன் நிற்கவில்லை இந்த பாசிஸ்டுகள்.
அமர்நாத் ராமகிருஷ்ணா- மீது இடைவிடாது ஏவப்படும் காவிக் கும்பலின் அம்புகள்!
ம.க.இ.க.-வின் தமிழ் மக்கள் இசை விழா கீழடியை முதன்மைப் படுத்துவதால் மேலாய்வு என்ற பேரில், டெல்லியைச் சேர்ந்த பிரியங் குப்தா, கரிமா காசிக், அறவாழி, ஹேம்சாகர் ஏ நாய்க், நந்தினி பட்டாச்சாரியார் சாகு என 5 பார்ப்பன சங்கி கூட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் துறையினரையும் அவர்களுடன் சென்னையைச் சேர்ந்த தொல்லியலாளர் ரமேஷ் என்ற பார்ப்பன சங்கியையும் இணைத்து ஆக மொத்தம் அறுவர் குழு ஒன்று ஆகஸ்ட் 17 அன்று கீழடியை மேலாய்வு செய்ய அனுப்ப திட்டமிட்டு இருந்தார்கள்.
இதற்கிடையில் ம.க.இ.க.வின் தமிழ் மக்கள் இசை விழா பரப்புரைகள் தமிழ்நாட்டை குலுங்கச் செய்து கொண்டு இருந்தமையாலும், மகஇக நிர்வாகிகளின் தொடர் பத்திரிக்கையாளர் சந்திப்புகள் வாயிலாக இவற்றை அம்பலப்படுத்தி நாறடித்ததன் காரணமாகவும், தற்காலிகமாக அந்த அறுவர் குழு தமது பயணத்தை நிறுத்தி வைத்துக் கொண்டுள்ளது.
படிக்க:
♦ கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல்
♦ கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல் | பகுதி 2
மேலும் அமர்நாத் மகஇக இசை விழா நிகழ்வில் பங்கேற்பது உறுதி என்றானதும் அவருக்கு ஒன்றிய தொல்லியல் துறை இவ்வாறாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பியதாக அறியப்படுகிறது: ‘தஞ்சை நிகழ்வில் பங்கேற்கும் முழு விவரங்கள் அடங்கிய வீடியோ உரை மற்றும் பங்கேற்பு சம்பந்தப்பட்ட அனைத்து தொகுப்பையும் அமர்நாத் ஒன்றிய தொல்லியல் துறைக்கு அறிக்கையாகத் தொகுத்து ஒப்படைக்க வேண்டும்…’ என்பதுவே அது. UPSC மூலம் தேர்வு பெற்ற ஒரு உயர் அதிகாரிக்கு சங்கிகள் அளிக்கும் கெடுபிடிகள் எவ்வளவு இழிவானது என்பதனை இதன் மூலம் நாம் அறியலாம்.
அகழாய்வு உண்மைகள் என்பது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு நிகரானது என்பதை காவிக் கும்பல் உணரவில்லை. ஒருவேளை உணர்ந்தாலும் இந்துத்துவ நம்பிக்கை களுக்கு உடன்படாத எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதே எதார்த்தம். அது மட்டுமல்ல; மத வெறியர்கள் என்றுமே விஞ்ஞானத்திற்கு – வரலாற்று உண்மைக்கு அனுசரணையாக இருந்ததே இல்லை என்பதை உலகு தழுவிய அளவில் காலம் காலமாகக் கண்டு தான் வருகிறோம்.
அதிலும் சனாதனப் பார்ப்பன ஆர் எஸ் எஸ் பாசிச பாஜக காவிக் கும்பலோ மற்ற எல்லா நாடுகளை விடவும் – மதங்களை விடவும் மிகவும் கீழ்த்தரமான இந்து மத வெறி பிடித்து விஞ்ஞானத்தையும் – வரலாற்றையும் குழி தோண்டிப் புதைக்கத் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். அகழாய்வை பொருத்தமட்டில் ஏற்கனவே அவர்கள் உருவாக்கி வைத்துக் கொண்டுள்ள வட நாட்டின் இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட வேத நாகரிகமாம் ‘சரஸ்வதி நாகரிகத்திற்கு’ மாற்றாக – இந்துத்துவ அடையாளம் இல்லாத எந்த ஒரு உண்மை விவரங்களைக் கொண்ட கீழடி போன்ற நாகரிகத்தை ஏற்கத் தயாராக இல்லாமல் அடம் பிடிக்கிறார்கள்.
அமர்நாத் ராமகிருஷ்ணாவை பொருத்த மட்டில் அவர் இன்று உத்திரப்பிரதேச மாநிலம் கீரேட்டர் நொய்டாவில் தொல்லியல் துறை இயக்குனராக பணி புரிகிறார். அவர் UPSC தேர்வெழுதி தொல்லியல் துறைக்கு தேர்வு பெற்றவர். இன்றைய அவரது பதவி என்பது DGP பதவிக்கு இணையான அகில இந்திய பொறுப்பாகும். அவருக்கு வாய்ப் பூட்டுச் சட்டம் போடுவது என்பது UPSC விதி 472-க்குப் புறம்பானதாகும். அப்படி தகுதி பெற்ற ஒருவரை காவிக் கும்பலின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்பட மறுக்கிறார் என்கின்ற ஒரே காரணத்திற்காக அவரது உண்மையான அலுவலகம் அமையப்பெற்றுள்ள டெல்லி உச்ச நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள கட்டடத்திலிருந்து பணிபுரிய அனுமதிக்காமல் இவரை வேண்டுமென்றே மாறுதல் செய்து உ.பி. நொய்டாவில் உள்ள கட்டிடத்தில் பணிபுரியச் செய்துள்ளனர் பாசிசக் காவிக் கூட்டத்தினர். இதிலிருந்து இவர்களது பழிவாங்கும் இழி செயல்களைக் காண முடிகிறது அல்லவா?
தொல்லியல் துறையில் 16 பிரிவுகள் உள்ளன. அதில் ஒன்றின் அகில இந்திய இயக்குனர் தான் அமர்நாத். அனைத்திற்கும் பொதுவான அகில இந்திய ரீதியான தொல்லியல் அகழாய்வு இயக்குனராக பணி நியமிக்கப்பட வேண்டிய இவரை – அவ்வாறு நியமனம் செய்தால் கீழடி அகழாய்வை வெளியிடும் பொறுப்பு இவருக்கு வாய்க்கப்பட்டு விடும் என அஞ்சியே அப்பதவியை அவருக்கு வழங்காமல் இப்படி ஒன்றிய பாசிச காவி அரசு அவரைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.
படிக்க:
♦ கீழடி நாகரிக உண்மையும் மார்க்சிய வரலாற்று வழிகாட்டலும்
♦ கீழடி ஆய்வு முடிவுகளை குழி தோண்டிப் புதைக்கப் பார்க்கும் தொல்லியல் துறையின் உள்ளடிகள்!
அனைத்து அடக்குமுறைகளுக்கும் அஞ்சாமல், தான் கீழடியில் – அகழாய்வின் மூலம் கண்டறிந்த அளப்பரிய ஆதாரங்களின் உண்மைக்கு விசுவாசமாக இருந்தே தீருவது – மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் தாம் மக்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்வது என்ற அவரது நேர்மையான – நாணயமான துணிச்சல் மிக்க நடவடிக்கைகளை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ம.க.இ.க. -வின் தமிழ் மக்கள் இசை விழாவில் பங்கேற்று சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் மகத்தான அவரது இவ்வித விரிவான எழுச்சி மிகுந்த உரை என்பது அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டது என்றால் அது மிகையானதல்ல. அதுதான் சங்கிகளை மட்டுமல்ல; சில முற்போக்கு வேடம் போடுபவர்களையும் கதிகலங்கச் செய்துள்ளன. உளறி கொட்டச் செய்துள்ளன.
ஆட்டைக் கடித்து-மாட்டைக் கடித்து-இறுதியில் மனிதனைக் கடித்த கதையாக சாதாரண எளிய சிப்பந்திகளின் குரல்வளையையும் குதறுகிறது பாஜக அரசு!
2026 செப்டம்பர் 4, பத்திரிக்கைச் செய்திகளின்படி ஒன்றிய பாஜக அரசு கருத்து சுதந்திரத்தின் மீது கொடும் தாக்குதல் தொடுக்கும் வகையில் ‘சமூக ஊடக நடத்தை விதி’களை அரசு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை ஏவி விட முனைந்துள்ளது. அதாவது முகநூல், எக்ஸ் தளம், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ரீல்ஸ், வீடியோக்கள், யூடியூப்கள் இன்ன பிறவற்றின் மூலம் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் நேரடியாக பங்கேற்பதை தடுக்கும் விதத்தில் ‘ஊடக நடத்தை விதிகளை’ நிர்மானித்து அவற்றை ஆணையாக வெளியிடத் தீர்மானித்துள்ளது ஒன்றிய பாசிச பாஜக அரசு. பாஜக-வோ, தவெக-வோ இப்படிப்பட்ட ஊடகங்களை பயன்படுத்தியே – முழு பொய்களை பரப்பியே ஆட்சி அதிகாரத்தை அபகரித்தனர்.
ஆனால் அவை அவர்களுக்கு எதிராகத் திரும்புகின்ற பொழுது அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். கைது செய்கிறார்கள்; சிறையில் அடைக்கிறார்கள் ‘அவர்களுக்கு வந்தால் ரத்தம்; மற்றவர் களுக்கு வந்தால் தக்காளிச் சட்டினி’ என்ற திரைப்பட நகைச்சுவை போல் இந்த பாசிச காவிக் கூட்டத்தின் – தற்குறிகளின் அட்டகாசம் அனைத்து தரப்பினரையும் நிம்மதியைக் குலைக்கச் செய்கிறது.
எனவே, கருத்துரிமை இருந்தால் மட்டுமே நாட்டில் நடக்கும் பல்வேறு விதமான மக்கள் நலன் சார்ந்த உண்மைமைகளை எடுத்து இயம்பவும், அரசுகளின் தில்லுமுல்லுகளை – மோசடித்தனங்களை – மக்கள் விரோதச் செயல்களை அம்பலப்படுத்தவும் இயலும்.
ஆனால் அதற்கே வாய்ப் பூட்டுச் சட்டம் பல்வேறு கோணங்களில் போடுகிறார்கள் இந்த சர்வாதிகாரிகள். இதனை முறியடித்து உரிமைகளை நிலைநாட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள், மாணவர்கள் என கருத்தாலும் கரத்தாலும் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு எதிரிகளை வீழ்த்த வேண்டும்! கருத்து உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்! அணி திரள்வோம்! வெற்றிகளை ஈட்டுவோம்!
- எழில்மாறன்







