அன்று குஜராத், 
நாளை உத்தர பிரதேசம்


பி முடிவுகள் என்ன, எந்த கட்சிகள் காரணம், இனி என்ன செய்ய வேண்டும் … இதெல்லாம் ஒருபக்கம்.

இன்று the hinduவில் Asim Ali என்பவர் எழுதியுள்ள A demonstration of a durable political phenomenon என்ற கட்டுரை முக்கியமானது.

அவர் சொல்வது:

குஜராத்தை போல் இப்போது உ பி மக்களின் சிந்தனையிலும் இந்து பெரும்பான்மைவாதம் என்ற அரசியல் பொதுப்புத்தி வேரூன்றி விட்டது. இப்போது பிஜேபிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அல்லது வெற்றியை நோக்கி செலுத்திய காரணி என்பது இந்து பெரும்பான்மைவாத கோட்பாடுதான்.

கடந்த பத்து வருடங்களாக பிஜேபி அங்கே கட்டி வைத்துள்ள சமூக கூட்டணி இது: மேல் சாதி, யாதவர் அல்லாத பிற்பட்ட வகுப்பு சாதி, ஜாதவ் அல்லாத தலித் சமூகம். இந்த கட்டமைப்பு குலையாதவண்ணம் பாதுகாப்பது பிஜேபிக்கு பெரும் சவாலாக இருந்தது.

அரசின் நல உதவி திட்டங்கள், கழிப்பறை, குடிநீர் வசதி, ரேஷன் முறை, பள்ளி மாணவர்களுக்கு பை வழங்கியது, விவசாயிகள் வருவாய் உதவி போன்ற திட்டங்கள்தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தியது என்பதெல்லாம் பின்னால் உள்ளது. வெற்றியை உறுதி செய்த காரணி இந்து பெரும்பான்மைவாதம் மட்டுமே. யாதவர், ஜாதவ் அல்லாத இந்துமத மக்களை பிஜேபியுடன் நெருங்கி வர செய்தது இதுதான். அரசியல் கள செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ் உபியில் நேரடியாக கண்டது இதுதான்: அங்குள்ள இந்துமத வாக்காளர்களின் மனதில் உறைந்து இருக்கும் அரசியல்-தார்மீக ‘பொதுப்புத்தி’ என்பது ‘இந்து முஸ்லிம் பிரிவினை’ என்னும் நிலைப்பாட்டில் இருந்து தோன்றியது. இந்த பொதுப்புத்திதான் பிஜேபி அரசின் குறைகள், மோசமான நிர்வாகம் ஆகியவற்றை புறந்தள்ளி ‘நாம்’ இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என்ற நிலை எடுக்க வைத்தது.

பிற்படுத்தப்பட்ட சாதிமக்களின் இந்து அரசியல் அடையாளத்தை ஒருமுகப்படுத்துவதில் இந்து பெரும்பான்மைவாதம் ஆற்றிய பங்கு என்ன? அகிலேஷ் யாதவ் தன் பிரச்சாரத்தின் மையமாக வைத்த மண்டல் அரசியலை இந்த மக்கள் புறந்தள்ளினார்களே, ஏன்?

ஒன்று: தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிற பதட்ட உணர்வை யோகி அரசின் ‘சட்ட ஒழுங்கு’ கூச்சல் இந்த மக்கள் மனதில் விதைத்தது. புல்டோசர்களை வீதிகளில் நிறுத்தியது, போலீஸ் என்கவுண்டர்களை நடத்தியதன் மூலம் இந்த உணர்வை மேலும் அதிகரித்தது யோகி அரசு. இந்து என்ற குடையின் கீழ் திரண்டால் மட்டுமே யாதவ், இசுலாமிய கிரிமினல்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முடியும். முஸ்லிம் குண்டாகளுக்கும் மாஃபியாக்களுக்கும்உள்ள உறவு , முஸ்லிம் மக்களுக்கும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடியவர்களுக்கும் கலககாரர்களுக்கும் உள்ள உறவு, இஸ்லாமிய மாடுகடத்தல்காரர்களுக்கும் லவ் ஜிஹாத் சதிகாரர்களுக்கும் சமூக விரோதிகளுக்கும் உள்ள உறவு. திட்டமிட்டு இந்த பிரச்சாரத்தை அரசு செய்தது. அதாவது மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கு,  முக்கிய காரணம் இசுலாமியர்களே என்று அடையாளப்படுத்துவதன் மூலம் அவர்கள்தான் சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சக்திகள் என்று உச்சபட்ச குரலில் அரசு பிரச்சாரம் செய்தது.

இரண்டு: சாதி அடையாளத்துக்கு அப்பாற்பட்ட பொருளாதார நலன்களை பிற்படுத்தப்பட்ட சாதி மக்களுக்கு உறுதி செய்தது. அதாவது உ பியின் மக்கள் நல அரசியல் என்பது (அகிலேஷ் யாதவ் முன் வைக்கும்) மண்டல் அரசியல், தலித் அரசியல் ஆகியவற்றை மையமாக கொண்டது. இந்த அரசியலில் இருந்து பிற்படுத்தப்பட்ட மக்களை திருப்பி தன் பக்கம் கொண்டு வந்தது பிஜேபி.

வெளிப்படையாகவே இந்த தேர்தலில் 80க்கும் 20கும் ஆன போர் என்று பிஜேபி பிரச்சாரம் செய்தது. அதாவது பெரும்பான்மை இந்து மக்களுக்கும் சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கும் இடையே ஆன போராம். விளைவு இஸ்லாமிய மக்கள் சமாஜ்வாடியின் பின்னால் அணி திரள, பெரும்பான்மை இந்துக்களை பிஜேபி தன் பின்னால் அணிவகுக்க செய்தது.

கடந்த மூன்று தேர்தல்களில் பிஜேபி தொடர்ந்து கட்டமைத்த இந்து அரசியல் பெரும்பான்மை என்பது இப்போது எதிர்காலத்திலும் வலிமையாக நீடித்து நிற்கும் என்பது தெளிவாக தெரிகின்றது.

குஜராத்தை போலவே இப்போது உபியும் பிஜேபியின் பிடிக்குள் உள்ள மாநிலமாகி விட்டது. குஜராத்தை போல் இப்போது உ பி மக்களின் சிந்தனையிலும் இந்து பெரும்பான்மைவாதம் என்ற அரசியல் பொதுப்புத்தி வேரூன்றி விட்டது.

  •  மு இக்பால் அகமது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here