டெல்லியில் 5% தொழிலாளர்கள் மட்டுமே குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுகிறார்கள், 46% பேர் அதைவிட பாதி அல்லது குறைவாகப் பெறுகிறார்கள்: WPC கணக்கெடுப்பு!

சமீபத்திய ஆண்டுகளில் இயற்றப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்கள், ஆய்வு விதிமுறைகளை தளர்த்திய பிறகு, தொழிலாளர்கள் சுரண்டப்படுவது அதிகரிக்கும் என்று சுந்தர் கவலை தெரிவித்தார்.

0

டெல்லியில் 5% தொழிலாளர்கள் மட்டுமே குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுகிறார்கள், 46% பேர் அதைவிட பாதி அல்லது குறைவாகப் பெறுகிறார்கள்: WPC கணக்கெடுப்பு!

ந்த கணக்கெடுப்பு டெல்லியில் எடுக்கப்பட்டிருந்தாலும் இதேநிலை இந்தியா முழுவதும் நிலவுகிறது என்பதை இதை படிக்கும் தொழிலாளர்கள் உணர்ந்துக் கொள்வார்கள். கணக்கெடுப்பில் கலந்துக் கொண்டவர்கள் பெரும்பாலும் பட்டபடிப்பு படிக்காதவர்களே. பட்டப்படிப்பு படித்த தமிழக இளைஞர்களுக்கு அற்ப சம்பளத்தை தான் இங்குள்ள தொழிற்சாலைகள் வழங்குகின்றன. வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் தமிழக தொழிலாளர்களுக்கும் பெரிய அளவில சம்பள வித்தியாசம் கிடையாது.

ஆளும் பாசிச பாஜக அரசு கார்ப்பரேட் நலனை கருத்தில் கொண்டு நீம்(NEEM) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதிலிருந்து நிரந்தர தொழிலாளர்களை ஒழித்துக் கட்டும் வேலையை  முதலாளிகள் செய்து வருகிறார்கள். இந்திய தொழிலாளி வர்க்கம் வேலையின்மையின் காரணமாக கிடைக்கும் வேலையை வேறு வழியின்றி செய்து வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மூலதனத்தை பெருக்குகிறது முதலாளித்துவம்.

000

கட்டுரையாளர்: Prateek Talukdar

தில்லியில் உள்ள Unskilled தொழிலாளர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறவில்லை என  திங்களன்று வெளியிடப்பட்ட உழைக்கும் மக்கள் கூட்டணி (WPC) நடத்திய “Accessing minimum wages: Evidence from Delhi” என்ற கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

பங்கெடுத்தவர்களில்  சுமார் 46 சதவீதம் பேர் ரூ.5000 முதல் ரூ.9000 வரை மாதச் சம்பளம் பெற்றுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, ​​டெல்லியில் நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம் ரூ.16,064 (ஒரு மாதத்தில் 26 நாட்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.618). அதன்பிறகு ரூ.16,506 ஆக (ஒரு நாளைக்கு தோராயமாக ரூ.635) உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு வேலை, கட்டுமான மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள்(security) உட்பட பதிலளித்த 1076 நபர்களின் ஊதியம், பணி நிலைமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. கணக்கெடுக்கப்பட்டவர்களில் 43 சதவீதம் பேர் பெண்கள்.

98 சதவீத பெண் தொழிலாளர்களும், 95 சதவீத ஆண் தொழிலாளர்களும் குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர் என்றும், சுமார் 74 சதவீதம் பேர் மாதம் ரூ. 500 கூட சேமிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அல்லது ஓய்வூதியம் போன்ற எந்த வசதியும் இல்லை.

மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள் பற்றித் தெரியாது என்று கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

துவாரகாவில் உள்ள ராதிகா அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரியும் பீகாரைச் சேர்ந்த லால் மோகன், தி டெலிகிராப்பிடம் தனது முதலாளியான ஒப்பந்ததாரரிடம் இருந்து மாதம் ரூ.9,000 பெறுவதாக தெரிவித்தார். அவர்கள் வாரத்தில் ஏழு நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை செய்ய வேண்டும், இருப்பினும் தொழிலாளர் சட்டங்கள் எட்டு மணி நேர வேலை நாள், கூடுதல் நேரம் வேலை செய்வதற்கு கூடுதல் ஊதியம் என்று விதித்துள்ளது.

“நோய் காரணமாக ஒரு நாள் வரவில்லை என்றால், ஒப்பந்ததாரர் ரூ.300 கழிக்கிறார்” என்றார் லால் மோகன்.

அடுக்குமாடி குடியிருப்பில் கழிப்பறை இல்லாததால், 100 மீட்டர் தூரம் கழிவறைக்கு – திறந்தவெளியில் – நடந்து செல்ல வேண்டியுள்ளது, என்றார்.

“டெல்லியில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்யும் காவலாளியின் சம்பளம் மாதம் ரூ.9000. வருங்கால வைப்பு நிதி அல்லது காப்பீடு எதுவும் இல்லை. எனது கிராமத்தில் எனக்கு வேலை கிடைத்திருந்தால், நான் டெல்லிக்கு வந்திருக்க மாட்டேன் என்கிறார்.

கணக்கெடுப்புக்கு வழிகாட்டுதல் வழங்கிய டெல்லி ஷ்ராமிக் சங்கதன் ராமேந்திர குமார் கூறுகையில், “தொழிலாளர்களின் விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. ஓவர் டைம் டூட்டி கொடுப்பது என்றால் இரண்டு சமோசா மற்றும் ஒரு கப் டீ என்று அவர்கள் நினைக்கிறார்கள். கூடுதல் வேலை செய்யும்படி கேட்டாலும், குறைந்த சம்பளம் கொடுத்தாலும் அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. அதாவது OT பார்ப்பதற்க்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை.

ஜாம்ஷெட்பூரில் உள்ள XLRI சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் தொழிலாளர் பொருளாதார வல்லுநரும் மனிதவள மேலாண்மைப் பேராசிரியருமான ஷியாம் சுந்தர், தொழிலாளர் செலவுகளைக் குறைப்பதன் மூலம் லாபத்தை அதிகரிக்க முயலும் “நவ தாராளமயப் பொருளாதாரக் கட்டமைப்பே” நிலைமைக்குக் காரணம் என்று கூறினார்.

“நவதாராளவாத பொருளாதார கட்டமைப்பில், மலிவான உழைப்பு மூலம் போட்டி நடைபெறுகிறது.  தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யாமல் குறைந்த (குறைந்த பட்சம்) கூலியிலும், அதிக நேரம் வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்றார்.

தொழிலாளர் சட்டங்களின்படி தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களை ஆய்வு செய்வது அரிதாகவே செய்யப்படுகிறது என்று சுந்தர் கூறினார். மேலும் பல நிறுவனங்கள் பதிவு இல்லாமல் செயல்படுவதாகவும் அவர் கூறினார். சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் தொழிற்சங்கமே இல்லை.

சமீபத்திய ஆண்டுகளில் இயற்றப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்கள், ஆய்வு விதிமுறைகளை தளர்த்திய பிறகு, தொழிலாளர்கள் சுரண்டப்படுவது அதிகரிக்கும் என்று சுந்தர் கவலை தெரிவித்தார்.

“ஆய்வு பலப்படுத்தப்படாவிட்டால் மற்றும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகள் பிரச்சினையை எழுப்புவதற்கு ஏற்பாடு செய்யாவிட்டால், இந்த சுரண்டல் தொடரும்” என்று சுந்தர் கூறினார்.

கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 50 சதவீதம் பேர் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், 20 சதவீதம் பேர் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானோர் 26 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை.

000

இது வடமாநிலங்களின் நிலைமை. இந்தியாவில் முதலாளிகள் அதிகப்படியான சுரண்டலுக்கு வடமாநிலத் தொழிலாளார்களையே பயன் படுத்துகிறார்கள். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு கல்வியறிவு அவசியமில்லை என்பதால் படிப்பறிவு இல்லாத தொழிலாளார்கள் கேள்வி கேட்கமாட்டார்கள், போராட மாட்டார்கள் என்பதாலும் திட்டமிட்டே வேலையில் அமர்த்தப்படுகிறார்கள்.

இதே நிலை தொடர இந்திய தொழிலாளி வர்க்கம் அனுமதித்தால் நாளைய தலைமுறை பிச்சை எடுப்பதை தவிர வேறு வழியில்லை. முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிராக மொழிக் கடந்து ஒரே வர்க்கமாக ஒன்றிணைந்து போராடினால் தான் இந்த கேடுகட்ட முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்ட முடியும்.

மொழியாக்கம் மற்றும் இணைப்பு: தாமரைசெல்வன்

https://www.workersunity.com/news/wpc-survey-only-5pc-labourers-get-minimum-wage-in-delhi/?fbclid=IwAR2NrwdnpK3GevGSTPult5VVcY73Eie5BhW6sUbXzhogAHBriMWJAoIaWc4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here