அமைப்புசாரா அறிஞர்களின் கவனத்திற்கு!

ஒரு நாள் என் நாட்டின்
அரசியல் சாரா அறிவுஜீவிகள்
எளிய எம் மக்களால்
விசாரணை செய்யப்படுவார்கள்.

அவர்கள் தங்கள் தேசம் மெல்ல மெல்ல
இறந்து கொண்டிருந்தபொழுது
என்ன செய்து கொண்டிருந்தார்கள் என
கேள்வி கேட்கப்படுவார்கள்.

யாரும் அவர்களுடைய உடைகளைப் பற்றியோ
கனமான மதிய உணவிற்குப் பிறகான
நீண்ட தூக்கத்தைப் பற்றியோ
கேட்கப் போவதில்லை,

யாரும் அவர்களுடைய
“சூன்யத்தைப் பற்றிய கருத்துக்கள்”
குறித்த மலட்டு விவாதங்கள் பற்றி
தெரிந்து கொள்ள விரும்பப் போவதில்லை,

யாரும் அவர்களுடைய உயர் பொருளாதார
வாசிப்பு குறித்து கவலைப்படப் போவதில்லை.

அவர்கள் இவர்களிடம்
கிரேக்கப் புராணங்கள் குறித்தோ அல்லது
அவர்களிடையே இறந்துபோன
கோழைகளின் மரணம் குறித்த
சுய பச்சாதாபங்களை குறித்தோ
கேள்வி கேட்கப் போவதில்லை.

அவர்கள் இவர்களின்
மொத்த பொய்யின் நிழலில் பிறந்த
வறட்டு நியாயங்கள் எதைப்பற்றியும் கேட்கப் போவதில்லை.

அந்த நாள் எளிய மனிதர்கள் வருவார்கள்.

அவர்கள் இந்த அரசியல்சாரா அறிவுஜீவிகளின்
புத்தகங்களிலோ கவிதைகளிலோ
எந்த இடமும் இல்லாதவர்கள்,

ஆனால் தினம்தோறும் இவர்களுடைய
ரொட்டியையும் பாலையும்,
சப்பாத்தியையும் முட்டையையும்
விநியோகிப்பவர்கள்.

அவர்களின் வாகனங்களை ஓட்டுபவர்கள்,
இவர்களுடைய நாய்களையும் தோட்டங்களையும்
பராமரிப்பவர்கள், இவர்களுக்காக
வேலை செய்பவர்கள். அவர்கள் கேட்பார்கள்:

“உங்களுடைய கனிவும், பண்பும், இரக்கமும்
எங்கே எரிந்து போயின?
ஏழைகள் துன்புற்றுக் கொண்டிருந்த பொழுது
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?”

என் இனிய நாட்டின் அரசியல்சாரா அறிவுஜீவிகளே
உங்களால் பதில் கூற முடியாது.
உங்கள் தைரியத்தை
பிணம் திண்ணி கழுகைப் போன்ற
உங்கள் மௌனம் தின்று தீர்க்கும்.

உங்களின் சொந்த விரக்தி
உங்கள் ஆத்மாவை ஆக்கிரமிக்கும்.

நீங்கள் அவமானத்தால் விக்கித்து நிற்பீர்கள்.

Apolitical Intellectuals: A poem by Otto Rene Castillo.
தமிழில்: பாவெல் சக்தி.
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here