அமெரிக்காவின் “இராஜதந்திர தகவல்தொடர்புகளும், உக்ரைன் பிரச்சினையும்!
இராஜதந்திர ரீதியில் நாடுகளைக் கட்டுப்படுத்துவதில் நிபுணத்துவம் கொண்டதாகச் சொல்லப்படும் அமெரிக்கா உக்ரைன் பிரச்சினையில் ரசியாவின் ராணுவ வலிமையின் முன்பு சிறுமைப்பட்டுப்போனதாக சொல்லலாம். இன்றும் உலகின் பெரும்பகுதி வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க ஊடகங்கள் கூறுவதையே கணிசமான அளவிற்குச் சார்ந்துள்ளது.
ஆயினும்கூட, சமீபத்திய வரலாறு சான்றுகள் அமெரிக்காவின் “இராஜதந்திர தகவல்தொடர்பை” எந்த அளவிற்கு நம்பியிருக்க முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க பல பிரிவுகளுக்கு அழைப்புவிடுத்துள்ளது.
சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கனிலிருந்து அமெரிக்காவின் திடீர் விலகல், ஒரு நாடு எந்த அளவுக்கு ஒரு வல்லரசை நம்பலாம் என்பதைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தைக் கொடுத்தது.
அமெரிக்காவும் முன்னாள் சோவியத் யூனியனும் விளையாடிய ஆப்கானிஸ்தான்-கார்டு, வல்லரசு போட்டியின் மேல் விளிம்பில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வெளிப்படையாக தொடர்புடையது.
சோவியத் யூனியன் சிதறுண்டதால் அப்போட்டியில் அமெரிக்கா வெற்றியடைந்தது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்கா மட்டுமே “சூப்பர் பவர்” என்று ராஜதந்திர அங்கீகாரம் பெற்று முப்பது வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் அத்துடன் எல்லாம் முடிவடையவில்லை.
படிக்க:
♦ ஆப்கானிஸ்தான் பெண் இயக்குனரின் கடிதம்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய நோக்கம், சோவியத் யூனியனின் முன்னாள் அந்தஸ்தை மீண்டும் பெறுவதுதான். போர்-விளையாட்டுகள் அதற்கு எந்த உதவியும் செய்யாது என்ற உண்மையை புடின் மறக்கவில்லை. சீனாவுடன் நெருங்கிய உறவு மற்றும் முன்னர் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக மட்டுமே கருதப்பட்ட நாடுகளுடன் நட்பை அதிகரிக்க முயற்சி செய்துவருவது அதை வெளிப்படையாகக் காட்டுகிறது.
விரும்பத்தகாத இந்த நிகழ்வுகளை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
அமெரிக்காவின் “இராஜதந்திர தகவல்தொடர்பு” பற்றிய நம்பகத்தன்மையை பொறுத்தவரை, அரபு வசந்தம் என்று சில அரபு நாடுகளில் ஜனநாயகத்தை அறிமுகப்படுத்துவது (திணிக்க முயற்சிப்பது) பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கூக்குரலை நினைவுகூறலாம். அமெரிக்க ஊடகங்களும், வெள்ளை மாளிகையும் இதை வலியுறுத்துவதில் எல்லை மீறிச் சென்றன.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT- Non-Proliferation Treaty) கையொப்பமிடாத இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் அணுஆயுதப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டபோது, இந்த இரண்டு நாடுகளும் பரஸ்பர உறுதியாக்கப்பட்ட அழிவை (MAD – Mutually Assured Destruction) உண்டாக்கும் அணுஆயுதப் போரை நோக்கிப் போவதாக அமெரிக்க ஊடகங்களின் தலைப்புச் செய்திகள் கூச்சலிட்டன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அவ்வப்போது சிற்சில மோதல்கள் நடந்தாலும், அவை அணுஆயுதப் பேச்சுவார்த்தைகளிலிருந்து பின்வாங்கவில்லை.
உண்மையில், அமெரிக்காவின் “இராஜதந்திர தொடர்புகளின்” தன்மை அதன் சொந்த நலனுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் கொண்டுள்ளது. வெளியிலிருந்து ஜனநாயகத்தை எங்கும் திணிக்க முடியும் எனில், “அரபு வசந்தம்” என்ற அந்த மாயை விலகி இப்போது “அரபு குளிர்காலம்” என்று சொல்லப்படுவதற்கு தான் வழிவகுத்துள்ளது.
இதேபோல், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் போர் அப்பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை தடுப்பதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நாடும் அதன் குடிமக்களும் “குளிர்காலத்தால்” அரபு நாடுகள் பாதிக்கப்பட்டது போல் மீண்டும் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று அமெரிக்கா வலியுறுத்துவதைப் பற்றி என்ன சொல்ல முடியும்? அமெரிக்காவின் இந்தக் கருத்தை உலகம் நம்ப வேண்டும் என்ற வாஷிங்டனின் விருப்பமாக இது பார்க்கப்படலாம். மறுபுறம், ரஷ்யா தனது துருப்புக்களை “வாபஸ்” செய்ததாகக் கூறினாலும், பெரும்பாலான நாடுகள் இதை நம்பாது என்பதை மாஸ்கோ நன்கு அறிந்திருக்கிறது.
அதே நேரத்தில், ரஷ்யா தனது முந்தைய அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளை பின்னுக்கு தள்ளக்கூடிய கார்டுகளைப் (playing cards) பற்றி நன்கு அறிந்திருக்கிறது. இந்த கோணத்திலிருந்து பார்க்கும்போது உக்ரைன் மீதான முழு அளவிலான ரஷ்ய படையெடுப்புக்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளது.
இது தவிர, பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இயற்கை எரிவாயுக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பது அமெரிக்காவுக்கு குடைச்சலாக உள்ளது. அமெரிக்கா கடுமையாக எதிர்க்கும் Nord Stream 2 குழாய்த்திட்டதை ஜெர்மனி ஆதரிப்பது ஒரு உதாரணம். Nord Stream 2 செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், அது Nord Stream 1 குழாய்த்திட்ட திறனை இரட்டிப்பாக்கும். ரஷ்யா உக்ரைனைத் தாக்கினால் Nord Stream 2- வைத் தடுப்போம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
பொருளாதார ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், Nord Stream 2-ஐ முன்னோக்கித் தள்ளுவதுதான் ரஷ்யாவுக்கு முக்கியமானது.

NATO-வில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா தெரிவிக்கும் எதிர்ப்பு வரும் நாட்களில் மாற வாய்ப்பில்லை. NATO ஏற்றுக்கொள்ளும் வரை அதில் சேருவதற்கான உக்ரைனின் விருப்பத்தில் எந்த முன்னேற்றமும் இருக்காது. NATO நாடுகளை இணைக்கும் கூட்டு பாதுகாப்பு கொள்கை காரணமாக அதற்கான வாய்ப்புகள் தற்போது மிகக் குறைவு அல்லது குறைந்த பட்சம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பதற்றம் நிறுத்தப்படும் வரையிலாவது வாய்ப்புகள் இல்லை எனலாம்.
ரஷ்யாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவுகளைக் குறித்து அமெரிக்கா மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாக தெரிகிறது. இவ்விரு நாடுகளும் தங்களது பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த கொடுக்கும் முக்கியத்துவத்தையும், அமெரிக்காவின் சில நடவடிக்கைகளைக் கூட்டாக எதிர்ப்பதையும் கவனிக்கவேண்டும். உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான ரஷ்யாவின் திட்டங்களைப் பற்றி அமெரிக்கா எழுப்பிய சந்தேகத்தையும் நிச்சயமாக புறக்கணிக்க முடியாது. எவ்வாறாயினும், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டை தற்போது வெளிப்படுத்தத் தூண்டும் இராஜதந்திர விடயங்களுக்கும் சில முன்னுரிமைகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. அமெரிக்காவின் “இராஜதந்திர தகவல்தொடர்புகளின்” இந்த உத்தி நிச்சயமாக உக்ரைன் பிரச்சினையை தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செய்ய வழிவகுத்தது. இதன்மூலம் ரஷ்யாவுடனான மற்ற நாடுகளின் பொருளாதார உறவுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவே. வாஷிங்டன் இத்தகைய ஊகங்களை பரப்பியதால் மட்டுமே ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது!
ஆங்கிலத்தில்: நிலோபார் சுராவார்டி
தமிழில்: செந்தழல்.
நன்றி