தற்போது இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும், அதிலும் பிரதானமாக செயல்படுகின்ற அரசியல் கட்சிகள் தரகு முதலாளிகளின் பிரதிநிதிகளாக செயல்படுகின்ற கட்சிகளே ஆகும். இந்த தரகு முதலாளிகளின் நலனை முன்வைத்து செயல்படுகின்ற கட்சிகள் எப்போதும் மக்கள் நலனில் இருந்து சிந்திக்காது என்பது வெளிப்படையானது. அதேசமயம் பாரதிய ஜனதா கட்சியை தரகு முதலாளிகள் கட்சி என்று வரையறுப்பது அரசியல் ஓட்டாண்டிதனமாகும். பாஜக தரகு முதலாளிகள் கட்சி என்பதை தாண்டி பாசிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள பாசிஸ்ட் கட்சி ஆகும். இதனை பிற கட்சிகளுடன் ஒப்பிட்டு வரையறுப்பது தவறானது.
இந்த புரிதலின் அடிப்படையில் தேர்தலில் நிற்கின்ற அரசியல் கட்சிகள் தனது கொள்கைகளையும் சாதனைகளையும் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்கின்ற காலம் மலையேறிவிட்டது. மாறாக கவர்ச்சி திட்டங்களை பல்வேறு வழிமுறைகளில் பிரச்சாரம் செய்வதன் மூலமாக மக்களை ஒரு உணர்ச்சி குழப்பத்திற்கு ஆட்படுத்துகின்றனர். தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்ற கட்சிகள் ஏதோ சாதித்து விடும் என்பதை போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் இது எதுவும் உண்மை அல்ல. தேர்தலுக்கான விளம்பர செலவிற்கு பல ஆயிரம் கோடிகளை செலவு செய்கின்ற கட்சிகள், சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கவே தேர்தலைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் மக்களுக்கு செலவு செய்வதைவிட தனக்கு தாராளமாக வாரி வழங்கிய கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதையே முதன்மை பணியாக கொண்டுள்ளனர். இதனை விளக்குகின்ற வகையில் இந்தக் கட்டுரை உள்ளது.
♦♦♦
தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் தாக்கல் செய்யும் வருடாந்தர அறிக்கைகளை ஆராய்ந்த பாக்ட்செக்கர் என்ற இணையதளம் ஆய்வு செய்ததில் அக்கட்சிகள் தங்களின் விளம்பரத்திற்காக எவ்வளவு செலவு செய்கின்றன என்ற விபரம் தெரியவந்துள்ளது.
2015-2020 காலகட்டத்தில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட ஏழு தேசிய கட்சிகளும், தி.மு.க, ஆம் ஆத்மி, அகாலி தளம் உள்ளிட்ட 11 மாநில கட்சிகளும் சேர்ந்து சுமார் 6500கோடிகளை செலவு செய்துள்ளன. அவற்றில் சுமார் 52% சதவீதம் அதாவது 3400 கோடிகள் விளம்பரத்திற்காகவே செலவிட்டுள்ளன.
2019-20-ம்ஆண்டுகளில் பா.ஜ.க.-வின் விளம்பரத்திற்கான செலவு 180 கோடிகளிலிருந்து 790 கோடிகளாக அதாவது ஏறக்குறைய 324% சதவீதம் அதிகரித்துள்ளது.
கட்சிகளின் தேர்தல் செலவு என்று தாக்கல் செய்துள்ள அறிக்கையில், பா.ஜ.க. மட்டுமே 56சதவீதம் (சுமார் 3600 கோடிகள்) கடந்த ஐந்து ஆண்டுகளில் செலவு செய்துள்ளது. காங்கிரஸ் 21.41 சதவீதம் (சுமார் 1400கோடிகள்), இவ்விரு கட்சிகள் மட்டுமே ஏறக்குறைய 77சதவீத செலவை செய்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக சமாஜ்வாடி (3.95%), தி.மு.க. (3.06%), YSR காங்கிரஸ் (2.7%), பகுஜன் சமாஜ் (2.04%), மற்றும் திரிணமூல் காங்கிரஸ் (1.83%) ஆகியவை செலவு செய்துள்ளன.
கடந்த ஐந்து வருடங்களில் பா.ஜ.க. 54.87 சதவீதத்தை (2000கோடிகள்) அதன் மொத்த தேர்தல் சம்பந்தமான விளம்பரங்களுக்கும், 15.29% போக்குவரத்துக்கும், 11.25% வேட்பாளர்களுக்கான நிதியாகவும், 7.2% பேரணிகள், பொதுக்கூட்டங்கள், மற்றும் போராட்டங்களுக்காகவும் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேபோல காங்கிரஸும் கடந்த ஐந்து ஆண்டுகளில், மொத்த தேர்தல் செலவு என்ற வகையில் 40.08 சதவீதத்தை தேர்தல் சம்பந்தமான விளம்பரம் மற்றும் 17.47 சதவீதத்தை போக்குவரத்துக்கும் செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2019-20-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் கட்சிகள் சுமார் 49 சதவீதத்தை தங்களுடைய தேர்தல் மற்றும் கொள்கை விளக்கத்துக்காக செலவு செய்துள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளன. இக்கட்சிகள் மொத்தமாக 2800 கோடிகளை செலவிட்டுள்ளன. இவற்றில் 1300கோடிகளை தேர்தல் மற்றும் கொள்கை விளக்கத்துக்காக செலவிட்டுள்ளன. அதில் பா.ஜ.க. மட்டுமே 700 கோடிகளை இந்த வகையில் செலவு செய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸும் (29.5%), தேசியவாத காங்கிரஸும் (3.6%), ஆம் ஆத்மி (1.7%) கட்சியும் செலவு செய்துள்ளன.
விளம்பரம் என்ற வகையில், பாக்ட்செக்கர் (FactChecker) விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களுக்கான செலவுகள், சமூக வலைதளம், பேரணிகள், கொடிகள், மற்றும் கட்-அவுட்டுகளுக்கான செலவுகளையும் சேர்த்துள்ளது. தேசிய கட்சிகள் பொதுவாக “விளம்பரச் செலவுகள்” என்ற உபதலைப்பில் இச்செலவினைகளைக் குறிப்பிட்டுள்ளன. ஆனால் ஆம் ஆத்மி, தி.மு.க., சிவா சேனா உள்ளிட்ட மாநில கட்சிகள் இவற்றை விளம்பரச் செலவுகள் என்றில்லாமல் கட்சியின் “கொள்கை விளக்கத்திற்காக” என்று தனி வகையில் குறிப்பிட்டுள்ளன.
அரசியல் கட்சிகள் தங்களின் “நிர்வாக மற்றும் பொது செலவுகள்” என்ற தலைப்பிலும் விளம்பரத்திற்காக செலவு செய்துள்ளன. இன்னும் சில கட்சிகள் “பிற செலவினங்கள்” என்ற தலைப்பிலும் விளம்பரத்திற்காக செலவிட்டுள்ளன. காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனதா தளம், சிவா சேனா ஆகிய கட்சிகள் மட்டுமே இவ்விவரங்களை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகத் தாக்கல் செய்துள்ளன.
(சுருக்கப்பட்ட கட்டுரை. விரிவான விவரங்களுக்கு link-ஐ சொடுக்கவும்)
தமிழில்: செந்தழல்
நன்றி: Factchecker.in