ஆடிப்பெருக்கு


ஆடியில் வெள்ளம் வந்து
அணைகளில் நிறைந்திருந்தேன்

வாய்க்காலில் வழிந்தோடி
உன் கையில் தவழ்ந்திருந்தேன்

எனை வாரி உன் கரத்தால்
காணி எங்கும் நிறைத்து வைத்தாய்

உன் வியர்வை மணி பட்டு
என் கால்கள் வேர் பிடிக்க

வானெழுந்த செங்கதிரும்
என்னோடு தவம் புரிய

பால் பிடித்த நெல்லாய்
பருவத்தில் பூத்து நின்றேன்

நீர் சுரந்த வேரோடு
நெல் மணியாய் தலைகுனிந்தேன்

உன்னோடு வருவேனோ?
உன் வாசல் புகுவேனோ?

ஆடி என்ன ? பெருகி என்ன?
அத்தனையும் மோசமடி

வந்தானே கங்காணி
கார்ப்பரேட் வெறியேறி

நீராய் நிறைந்த என்னை
எரிவாயு கிடங்கென்றான்

கதிர் பிடித்த கைகளுமே
கை ஏந்தி நிற்கலாமா?

நீருக்கும் உறவுமின்றி
நிலத்துக்கும் சொந்தமின்றி

உலை வைக்கும் பானையிலும்
உலக வங்கி முத்திரைகள்

பெற்றவரை தவிக்கவிட்டு மரிப்பேனோ கடலோடு;
உனக்கொரு சேதி சொல்வேன்

கட்டரிவாள் சுத்தியலால் உன் நெஞ்சில் கீறி விடு
பயந்த ரத்தம் வெளியேறும்; சிவந்த ரத்தம் உருவாகும்.

 • இளங்கவி

1 COMMENT

 1. உழவரே!

  நீ ஊட்டி வளர்த்த மக்களுக்கெல்லாம்!
  நீ ஊர்ந்து செல்லும் புழுவாகிவிட்டாய்!

  உன் பாச நாட்டு மண் வளம்
  பரங்கியனுக்கு கொடுப்பதா!.
  பாழாய்ப்போன பரதேசிகளுக்கு!.
  பயிர்களையும் நீ படைப்பதா!

  படைத்தலின் தலைவனே!
  கடமையை கண்டு கலங்காத உன் கண்கள்.
  கடனை கண்டு கலங்குவதேன் ? ஏன்?

  விதை விதைத்த கையில் -இனி
  விஷத்தை ஏந்த தேவையில்லை?

  மாறுவோம்! மாற்றுவோம்!

  -கனல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here