2019 தேர்தலை பாஜக அவ்வளவு எளிதாக கருதவில்லை. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கடும் விலையேற்றம், தலித்துகள். இசுலாமியர்களுக்கு எதிரான படுகொலைகள், நாடு முழுவதும் கொண்டு வந்த மறுகாலனியாக்க (புதிய தாராளவாத) கொள்கைகள், தேசிய இனங்களின் மீதான தாக்குதல்கள் அனைத்தும் இணைந்து 2014 தேர்தலில் மோடிக்கு எதிரான அலையை தோற்றுவித்து விடும் என்று அரசியல் பார்வையாளர்கள் அனைவரும் கருதினர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அதனை முறியடிக்க வியூகம் வகுத்துக் கொடுத்தது.

மோடிக்கு எதிராக போராடுபவர்களில் திராவிடக் கட்சிகள், சில தமிழ் அமைப்புகள், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகளை பற்றி அவர்களின் நடவடிக்கைகளை நாங்கள் பின்வருமாறு கணித்தோம். “இவர்கள் எல்லோரும் பிஜேபி, ஆர் எஸ் எஸ் ஐ குறிவைத்து ஓரளவுக்கு தனிமைப்படுத்தி தமிழ்நாட்டில் வெற்றி கண்டுள்ளனர். ஏற்கனவே தமிழ்நாடு பார்ப்பன எதிர்ப்பு தமிழ் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் மாநிலமாக இருக்கிறது. அகில இந்திய அளவில் ஆர்எஸ்எஸ் – பிஜேபி க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது இதில் செல்வாக்குப் பெற வேண்டும் என்பதில் குறிவைத்து செயல்படுகிறது.

ஆர்எஸ்எஸ்-பிஜேபி கும்பல் 2019 தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சிகளை இணைத்து தந்திரங்களை செய்தும், மேற்கண்ட இயக்கங்களை ஒடுக்கியும் தமிழ்நாட்டில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என முழு முனைப்புடன் செயல்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் 2018 ஜூலையில் சென்னைக்கு வந்திருந்த பிஜேபியின் தேசிய தலைவர் அமித்ஷா பாஜக ஊழியர்கள் கூட்டத்தில் பேசினார். அதில் அவர் தமிழ்நாட்டில் பூத் கமிட்டி ஊழியர்களாக நாம் 15,000 பேரை இதுவரை சேர்த்துள்ளோம் அக்டோபர் தொடக்கத்தில் இருந்து இவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பார்க்கவேண்டும் அக்டோபரில் மோடியை அழைத்து வருகிறேன் ஒரு சதவீத வாக்கு வங்கி தான் நமக்கு அசாமில் இருந்தது அங்கு வென்று ஆட்சியை பிடித்துள்ளோம். தமிழ்நாட்டில் 5 சதவீத வாக்கு வங்கி உள்ளது. எனவே நாம் வெற்றி பெறுவோம் அதற்கான திட்டங்கள் உள்ளன என்று சொல்லிச் சென்றுள்ளார். மேலும் தமிழகத்தில் பாஜகவுக்கு சவாலாக மக்கள் அதிகாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.” என்று அவதானித்து அரசியல் முடிவுகளை எடுத்தோம்.

நாடு தழுவிய அளவில் ஆர்.எஸ்.எஸ் பல்வேறு நரித்தந்திரங்களைக் கையாண்டு வந்தது. அதனை முன்னறிந்து எச்சரிக்கை செய்தோம். “ஆர்.எஸ்.எஸ், இந்து ராஷ்டிர பார்ப்பனக் கும்பல் தனது இந்து ராஷ்டிரா கனவை நாடு தழுவிய அளவில் அதிரடியாக நிறைவேற்ற முயற்சிப்பதில்லை. அதேபோல் சீரான முறையில் அமல்படுத்துவதும் இல்லை. மாநிலங்கள்/பிராந்தியங்களில் உள்ள ஏற்றத்தாழ்வான வளர்ச்சி நிலை, குறிப்பிட்ட மாநிலம்/பிராந்தியத்தில் தனக்கு உள்ள சாதக, பாதக நிலைமைகள், எதிரிகளின் பலம், மக்களின் கலாச்சாரம், மத உணர்வுநிலை போன்ற பல்வேறு காரணங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்ப்பன விவேகத்தோடு நரி தந்திரங்களை கையாண்டு ஏறித் தாக்கி வருகிறது.

உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா போன்ற மாநிலங்களில் கும்பலாக சேர்த்து அடித்துக் கொள்ளுதல், பகிரங்கமாக கட்டிவைத்து அடித்தல் போன்ற முறைகளை கையாண்டு வருகிறது. கர்நாடகாவில் மேல்சாதி கும்பலை முன்தள்ளியும், காவிரி போன்ற பிரச்சனைகளில் தேசிய வெறியை கிண்டி விட்டும், வட கர்நாடகாவை தனி மாநிலமாக ஆக்க வேண்டும் என்று போராடுவது என செயல்பட்டு வருகிறது. அசாமில் உள்ளது வங்க தேசத்தின் இசுலாமியர்களை வெளியேற்றுவது என்ற அம்சத்தை முன்னிலைப்படுத்தி வேலை செய்கிறது. திரிபுராவில் பழங்குடி மக்களின் அரசர்களுக்கு பாரதரத்னா வழங்குவது, பழங்குடி இனத்தின் அருமை பெருமைகளை பேசியும் வேலை செய்கிறது.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை ஒழிப்பதன் மூலம் செல்வாக்குப் பெற முயற்சி செய்வது, குறிப்பாக தனது இயற்கை நண்பனான அதிமுகவை ஆட்சியில் அமர வைப்பது, தனக்கு இயற்கை எதிரியான திமுக ஆட்சியை பிடிக்க விடாமல் அதனோடு பிற கட்சிகளை கூட்டு சேரவிடாமல் தோல்வி அடைய செய்தும், ஊழல் கட்சி என்று பிரச்சாரம் செய்தும், ரஜினிகாந்த் போன்றவர்களை முன்னிறுத்தியும் இதை நிறைவேற்றுவது இப்படி பல வழிமுறைகளைக் கையாள்கிறது.” என்று அரசியல் ரீதியாக பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பற்றி முடிவு செய்து, அதற்கு எதிராக மக்களை திரட்டும் வகையில் செயல்பட்டோம்.

ஆர்.எஸ்.எஸ் மேற்கண்ட வேலைகள் அனைத்தையும் பாசிச பயங்கரவாத அணுகுமுறையில் நடத்தியதால் நாடு முழுவதும் பிற்போக்கு அலை ஓங்கி மயான அமைதி நிலவியது. கார்ப்பரேட்- காவி பாசிசத்தை எதிர்த்து யாரும் முணுமுணுப்பு செய்யக் கூட தயாரில்லாத நிலையில் 2020-ம் ஆண்டு அதே திருச்சியில் ’அஞ்சாதே போராடு’ என்ற முழக்கத்தின் கீழ் மாநாட்டை நடத்தினோம். பார்ப்பன எதிர்ப்பு, திராவிட மரபை கொண்ட தமிழகம், பல்லாயிரக் கணக்கில் திரண்டு மாநாட்டின் அரசியலை உயர்த்தி பிடிக்கிறோம் என்று நிரூபித்தது. ஆனால் அப்போதும் திமுகவை கடுமையாக விமர்சிக்கவில்லை என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். திமுக வின் சொம்பு என்று உளறினர்கள். பாஜகவின் இயற்கை எதிரியான திமுக, எங்களுக்கும் எதிரி என்று அறிவிக்க வேண்டும் என்பதுதான் பார்ப்பன-மேல்சாதிக் கும்பலின் ஆசை. அதற்கு நாங்கள் பலியாகவில்லை என்பதால் கீழ்தரமான அவதூறுகளில் இறங்கினார்கள். திமுகவிடம் சோரம் போய்விட்டார்கள். திமுகவிடம் சீட்டு ரெடியாகி விட்டது, பல கோடி பேரம் நடந்துள்ளது என்றெல்லாம் உளறிக் கொண்டிருந்தனர்.

அஞ்சாதே போராடு மாநாடு முழக்கம்

’தியாகத் தலைவி’ சின்னம்மா சசிகலாவை ஆதரிப்பதற்கு மானமிகு. வீரமணி போன்றவர்கள் முன்வைத்த காரணங்களில் ஒன்று, அதிமுக என்ற திராவிட கட்சி அழிந்துவிட்டால் அந்த இடத்தை ’இந்துத்துவா’ பாஜக பிடித்துக் கொள்ளும் என்பதால் தான் சசிகலாவை ஆதரிக்க வேண்டியுள்ளது. வேறு ஒன்றும் இல்லை என்று வாதிடுகின்றனராம். இந்த முயற்சிகளால் பாஜகவை வீழ்த்த முடியும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அது போல அரசியல் அறிவிலித்தனமான வாதம் ஒன்றை திடீர் அரசியல் ஞானிகள் முன்வைக்கின்றனர்.

அதாவது “திமுக என்ற கட்சி கவர்ச்சிவாத, பிழைப்புவாத கட்சி, அது கார்ப்பரேட்டுகளை ஆதரித்து பல தவறுகளை செய்யும்போது, அதனை கடுமையாக இடித்துரைக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நிதானமாக இருப்பார்கள்; இல்லாவிட்டால் திமுகவின் மீது மக்கள் வெறுப்படைந்து, அடுத்த தேர்தலில் பாஜகவை ஆதரித்து விடுவார்கள் என்பதால்தான் திமுகவின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் எதிர்வினையாற்றும் வகையில் கடுமையாக விமர்சனம் செய்கிறோம் என்று தனது அரசியல் ஞானோதயத்தை காட்டினாராம் ஒரு திடீர் தலைவர் ஒருவர். சுருக்கமாக பாஜகவும், திமுகவும் ஒன்றுதான்; ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் தான் என்பதன் மூலம் பார்ப்பனக் கும்பலுக்கு நிபந்தனையின்றி சேவை செய்யும் இந்த அரசியல் தற்குறித்தனமான பார்வையை அடுத்து பார்ப்போம்.

தொடரும்…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here