மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி! எதிர்த்து போராடுவோம்!
பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட இந்தியாவின் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் இடையில் முரண்பாடுகளை தீவிரப்படுத்துவதற்கும், எப்போதுமே ஒன்று சேர விடாமல் தடுக்கின்ற வகையில் செயல்படுவதில் ஆர்எஸ்எஸ் – பாஜக ஒன்றிய அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து வேகமாக செயல்பட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் ஏழை, பணக்காரன் என்பது மட்டுமின்றி சாதி, இனம், மதம் மற்றும் வேறு சில அம்சங்களில் உள்ள முரண்பாடுகளை படிப்படியாக தீர்த்து ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலமே ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் கனவான அகண்ட பாரதம் என்கிற இந்து ராஷ்டிரத்தை முறியடிக்க முடியும்.
இதற்கு மாறாக ஏற்கனவே நாட்டை ஆண்ட காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதன் தலைமையில் செயல்பட்ட கூட்டணி கட்சிகள் ஆகியவை பல்வேறு தேசிய இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்ப்பதில் பகைமை தன்மையை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்தின.
இந்த வகையில் தான் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வருகின்ற தண்ணீரை தடுப்பதற்கு தொடர்ச்சியாக முயற்சிப்பது; இந்திய ஒன்றிய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின்படி 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு கொடுப்பதை தடுப்பது என்ற வகையிலேயே செயல்படுகின்றனர்.
காவிரியில் வருகின்ற உபரி நீரை அதாவது கிருஷ்ணராஜ சாகர் மற்றும் ஹேமாவதி அணைகளில் இருந்து வெளிவருகின்ற உபரி நீரை தடுக்கின்ற வகையில் மேகதாது என்ற பகுதியில் கட்டப்பட இருக்கின்ற அணையானது ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு வருகின்ற தண்ணீர், அதாவது காவிரி நீரை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
இது போலவே மற்றொரு அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகின்ற பெரியார் அணையின் தண்ணீரை கொடுப்பதில் கேரளாவில் ஆளுகின்ற சிபிஎம் ஆண்ட காங்கிரஸ் போன்ற கட்சிகளும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மறுத்து செயல்படுகின்றன.
இத்தகைய சூழலில் தற்போது உச்சநீதிமன்றமானது தமிழகத்திற்கு எதிராக மேகதாது அணையை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு கர்நாடகத்திற்கு அனுமதியளித்துள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது “மேகதாது அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர் ஆணையம் எந்த அனுமதியும் வழங்க இயலாது”, என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இத்தகைய வாதங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாத உச்சநீதிமன்றமானது தமிழக அரசின் நீராதாரமான மற்றும் உயிர் ஆதாரமாக உள்ள, 10 மாவட்டங்களின் வாழ்க்கை அடிப்படையாக உள்ள காவிரியில் வருகின்ற தண்ணீரை தடுப்பதற்கான சதித்தனத்தில் இறங்கியுள்ளது.
இந்த இடத்தில் தான் பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட நாட்டில் தேசிய இனங்களுக்கிடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை தீர்க்கின்ற ஜனநாயக உணர்வு கொண்ட ஒன்றிய அரசாங்கமோ அல்லது தேசிய இனங்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கின்ற மையப்படுத்தப்பட்ட அரசு கட்டமைப்புகள் இவற்றுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றன.
பல்வேறு தேசிய இனங்களின் தண்ணீர் உரிமை முதற்கொண்டு அனைத்து விதமான உரிமைகளையும் தற்போது நிலவுகின்ற கட்டமைப்பானது ஒருபோதும் பாதுகாக்காது அதாவது உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அரசு கட்டமைப்பானது பாதுகாக்காது என்பதையே மேற்கண்ட தீர்ப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
படிக்க:
♦️ மேகதாதுஅணை பிரச்சினை: (பகுதி -1)
♦️ மேகதாதுஅணை பிரச்சினை: (பகுதி -2)
இதனால்தான் இந்தியாவில் உள்ள அரசு கட்டமைப்பு பாராளுமன்ற அமைப்பு உள்ளிட்ட அனைத்து விதமான கட்டமைப்புகளும் பாசிச மயமான உள்ளடக்கம் கொண்டதாக மாறிவிட்டது இவை பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளை மறுத்து பார்ப்பன இந்திய தேசியத்தை கட்டமைப்பதில் சட்டபூர்வமான முறையில் செயல்படுவதில் முன்னிலை வகிக்கின்றன.
பல்வேறு முரண்பாடுகளை தீர்ப்பதற்கு இறுதியாக உள்ள ஒரே அமைப்பு என்று அனைவரும் உச்சநீதிமன்றத்தை நம்புகின்றனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலால் நியமிக்கப்படுகின்ற தற்போதைய சூழலில் அவர்களும் ஆர்எஸ்எஸ் இன் சித்தாந்தத்தை அதாவது, “இந்து – இந்தி – இந்தியா” என்ற பல்வேறு தேசிய இனங்களை மறுத்து செயல்படுகின்ற கோட்பாடுகளை முன்வைத்து செயல்படுவதால் ஏற்கனவே முரண்பாடு உள்ள சிக்கல்களை பகைத்தன்மை கொண்டதாகவே மாற்றுகின்றனர்.
இதனால்தான் இனியும் இந்த அரசு கட்டமைப்பு மற்றும் அதனை வழிநடத்துகின்ற அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றை நம்பி பயனில்லை மாறாக இவற்றுக்கு மாற்றாக அனைத்து தேசிய இனங்களின் உரிமையையும், அங்கீகரிக்கின்ற மதிக்கின்ற ஜனநாயக கூட்டரசு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்பதை முன் வைக்கின்றோம்.
கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவது என்பது வெறும் முழக்கங்கள் மற்றும் போராட்டங்கள் ஆகியவற்றினால் மட்டும் முழுமை பெறாது. அதற்கு மற்றொரு முக்கியமான தீர்வாக பாசிசத்தை வீழ்த்துவதற்கும் மீண்டும் தலையெடுக்க விடாமல் தடுப்பதற்கும் அதிகாரம் கொண்ட அரசு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
அதுவே ஜனநாயக கூட்டரசு என்பதை மீண்டும் உறுதிப்படுத்த தற்போது வெளிவந்துள்ள தீர்ப்புகளே எடுத்துக்காட்டுகளாக உள்ளன.
◾கணேசன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






