ராணி சோயாமோய் உண்மையை முகத்தில் அறையும் கற்பனை பாத்திரம்!

கடந்த ஒரு வாரமாக தென் இந்தியாவில் உள்ள சமூக இணையதளங்களில் மற்றும் ஒருசில ஊடகங்களில் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ராணி சோயா மோய் என்பவர் கல்லூரி மாணவிகளிடம் அழகு சாதனப் பொருட்களை தயாரிக்க பயன்படும் மைக்கா சுரங்கங்களை பற்றியும்,  தான் தனது சிறுவயதில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடர்மா பகுதியில் உள்ள சுரங்கத்தில் பணிபுரிந்தது பற்றியும், அந்த சுரங்க விபத்தில் தனது தாய் தந்தையர் மற்றும் தங்கையை இழந்ததை பற்றியும் உரையாடியது போன்ற ஒரு உரையாடலை வெளியிட்டுள்ளனர்.

இந்த உரையாடல் கேரளாவில் உள்ள எழுத்தாளர் ஹக்கீம் மொறையூர் என்பவர் எழுதிய மூன்று பெண்களைப் பற்றிய சிறுகதை மற்றும் ஆவணப்படத்தில் உள்ள உள்ளடக்கத்தை கொண்டு எழுதப்பட்டது என்று கண்டுபிடித்து விட்டதாக “ஊடக நரிகள்” ஊளையிடுகின்றன.

பிரச்சனை ராணி சோயா மோய் என்ற மாவட்ட ஆட்சியர் இருக்கிறாரா இல்லையா என்பது அல்ல. இந்தியாவின் ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தில் பள்ளிப் படிப்பிற்கு செல்லாமல் 35 முதல் 40 சதவீதம் மாணவர்கள் இளம் சிறார் தொழிலாளர்களாக சுரங்கங்களில் இன்றளவும் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருகின்றனர் என்ற அவமானத்துக்கு கூறிய செய்தி தான்.

ஏறக்குறைய 22,000 இளம் சிறார் தொழிலாளர்களின் ரத்த வியர்வையில் உருவான மைக்கா சேகரிப்பு தான், அழகு சாதன பொருள்களின் சந்தையில் பிரபலமான தயாரிப்புகளை தயாரிக்க உதவுகிறது.

2019 ஆம் ஆண்டு அழகு சாதனப் பொருள்களை தயாரிக்கின்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் சந்தை மதிப்பு ரூபாய் 380.20 பில்லியன் டாலர்களாகும். இந்த சந்தை மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே போகிறது.

பட்டினி குறியீட்டில் பின்தங்கியுள்ள இந்தியாவில் 2021 ஆண்டு மட்டும் 20 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அழகு சாதன பொருட்கள் விற்பனை ஆகியுள்ளது. இந்த சந்தை மதிப்பை 2025 ஆம் ஆண்டில் 30 பில்லியன் அமெரிக்க டாலருக்கு உயர்த்துவதற்கு அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் கார்ப்பரேட்டுகள் இலக்கு வைத்து வேலை செய்கிறது.

உலக அளவில் அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு அழகுசாதன கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த பொருட்களை உற்பத்தி செய்வதில் ஆதிக்கம் செய்கின்றன. முதலிடத்தில் உள்ளன. அடுத்து ஜப்பானிலிருந்து 2 நிறுவனங்களும், பிரான்சிலிருந்து 2 நிறுவனங்களும் அழகுசாதனப் பொருட்கள் சந்தையை கைப்பற்றியுள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த l’oreal 27.99 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்து யுனிலிவர்  21.1 பில்லியன் அமெரிக்க டாலருடன் இரண்டாம் இடத்திலும் பிராக்டர் அண்ட் கேம்பல் நிறுவனம் 19.4 பில்லியன் அமெரிக்க டாலருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் மைக்காவைதான் பயன்படுத்தவில்லை என்று சத்தியம் செய்து தலையில் அடிக்கின்றன. ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மைக்கா ஏற்றுமதி செய்யப்பட்டு அழகு சாதனப் பொருட்களாக மாற்றப்பட்டு அதாவது உதட்டுச்சாயம், ஃபேஷியல் பவுடர், க்ரீம், லிக்யூட் ஃபேஸ் வாஷ் என்ற பல பெயர்களில் நமது தலையில் கட்டப்படுகிறது.

கருப்பாக இருந்தால்  அழகில்லை என்ற பொய் பிரச்சாரம் விளம்பரங்களின் மூலமாக பரப்பப்பட்டு இயல்பான தோலை உரித்து சிவப்பு அழகு ஆக்குவதற்கு இந்த அழகுப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ராணி சோயா மோய் கலெக்டராக இருந்தாரா இல்லையா என்பதைவிட அவர் இந்தியாவில் மைக்கா சுரங்கங்களில் சிறார் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துவதற்கு கற்பனை பத்திரமாக நமக்கு பயன்படுகிறார் என்றால் பாத்திரத்தின் வலிமையைக் கண்டு நாம் பெருமை கொள்வோம். அது போன்ற படைப்புகளை படைப்பதற்கு கலை, இலக்கியவாதிகள் அனைவரும் உண்மையான மக்கள் கலையை படைப்பதற்கு தயாராவோம்!

  • பா.மதிவதனி.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here