நல்ல கலைஞனுடைய பணி என்னவாக இருக்க வேண்டும்?
புண்பட்ட இதயங்களை ஆற்றுப்படுத்துவதாக, பிளவுண்ட சமூகத்தை இறுக்கிக் கட்டுவதாக இருக்க வேண்டும்.
உண்மையை ஒளிரச் செய்ய வேண்டும்.
நாட்டைப் பிளவுபடுத்தும் சக்திகளோடு கைகோத்து, இருப்பதையும் கெடுப்பவன் கலைஞனாக மாட்டான்.
கங்கணா ரணாவத், விவேக் அக்னிஹோத்ரி மாதிரி செயல்படுவதில் ஏதேனும் பெருமிதம் இருக்குமா? ஆள்வோரைத் தெண்டனிட்டுப் பிழைக்கும் பிழைப்பெல்லாம் தேசபக்திக்குள் அடங்காது. அதற்கு பாரதி வேறுவார்த்தைகளைப் பயன்படுத்துகிறான்.

ஏற்கெனவே பிளவுபட்டுக் கிடக்கும் நாட்டைக் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்ற படங்கள் இன்னும் வன்மத்திற்குள் தள்ளுகின்றன.
தமிழ் ஊடகவுலகமும் சங்கீய அறிவோடு படத்தைப் போற்றுவது வியப்பைத் தரவில்லை; என்றாலும் சங்கிகளைப் பணிந்துநிற்பதற்காகத் தமது அரசியல், வரலாறு குறித்த உணர்வில்லாமல் செயல்படும்போது நமக்கு எக்காளமிடத்தான் தோன்றுகிறது.
இந்திய வரலாறு சமய, சாதி மனப்பாங்கில் ஆயிரக்கணக்கான பெருந்துயரங்களோடு தான் உருவாகிவந்திருக்கிறது. பண்டிட்டுகளின் துயரம் பெரிது. ஆனால் அது மட்டுமே இந்தியப் பெருந்துயரமன்று.
குஜராத் படுகொலைகள் முதற்கொண்டு இங்கு நடைபெற்ற பயங்கரவாதங்களுக்கு, நாம் தொடர்ந்து மதவாதத் தலைவர்களையும் அவர்களின் இயக்கங்களையும்தான் குற்றம் சாட்டிவந்திருக்கிறோமே தவிர, அவர்கள் சார்ந்த சமூகத்தைக் குற்றம் சாட்டியதில்லை. ஆனால் அக்னிஹோத்ரி போன்ற நாஜிகள் இந்தத் துயரங்களுக்கு மொத்தச் சமூகத்தையும் கைகாட்டுகிறார்கள். இப்படியான பொறுப்பின்மை நாட்டைப் பலவீனப்படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் அண்மைக்காலப் பெருந்துயரங்கள் மோடியால் உருவானவை. அவை பணமதிப்பிழப்பும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பும்தான். இன்னொரு இலங்கையாக இனவாதப் பேரிருளுக்குள் மூழ்குகின்ற இந்தியாவை இந்த அக்னிஹோத்ரி இன்னும் வேகமாகத் தள்ளிவிடுகிறார்.
இலங்கை தானே உருவாக்கிய போர்க்கள நாசத்திற்குள் வீழ்ந்துகிடக்கையில், இங்குள்ள ஆட்சியாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் பொறுப்புணர்ச்சி வந்திருக்க வேண்டாமா?
பண்டிட்டுகளின் வெளியேற்றத்தை, பண்டிட்டுகளின் இனப்படுகொலையாக சித்திரித்த வகையில், காஷ்மீர் ஃபைல்ஸ் இப்போது எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. 1990களில் இந்த நாஜிகள் எங்கே இருந்தார்கள், என்ன பேசினார்கள், என்னென்ன செய்தார்கள் என்கிற விவரங்களை சர்தேசாய் போன்ற பத்திரிகையாளர்களும் நேர்மைத் திறம் படைத்த பண்டிட்டுகளுமே அம்பலப்படுத்தி வருகிறார்கள்.

காஷ்மீரைத் துண்டாடியபின் மோடியோ அமித்ஷாவோ பண்டிட்டுகளைப் போய்ப் பார்க்கவேயில்லை. அவர்களின் குடியிருப்புக்குள் நுழைந்தால், “மோடியின் ஆட்சியின் கீழும் நிம்மதி கிட்டவில்லை. நாங்கள் மோடியைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம், அவரோ தொலைக்காட்சிகளில் மட்டுமே தென்படுகிறார், ” என்று கொந்தளிக்கும் பண்டிட்டுகளின் குரல்களைக் கேட்டு மகிழலாம்.
படம் ஓடும் திரையரங்குகள் தேசபக்தியால் சூடேறுகிறதாம்; தேசபக்தர்கள் கொதிக்கிறார்களாம்! அது அப்படித்தானே இருக்க முடியும்! நிஜமாய் நம்மை ஆண்டு அடிமைப்படுத்திய காலனிய ஆட்சியாளளர்களை நேர்நின்று சந்தித்துக் களமிறங்கிப் போராட வக்கற்றவர்கள் இந்தத் தேசபக்தன்கள்; அவர்களுக்குத் திரையின் நிழல்களே எதிரிகளாகிவிட்டதில் ஆச்சரியமில்லைதானே!
தங்களின் வாழ்நாளிலே பத்திரமான இடங்களில் நின்றபடி இப்போதேனும் “பாரத்மாத்தாகீ ஜே” முழங்குகின்ற கைப்பிள்ளைகளே, உங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
எழுத்தாளர் களந்தை பீர் முகமது.
முகநூல் பகிர்வு