நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20  முதல் ஆகஸ்ட் 11 வரை பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இத்தொடரில் மொத்தம் 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் 20 மசோதாக்கள் ஒவ்வொன்றும் ஒருமணி நேரத்துக்கும் குறைவான நேரத்திலும், மீதமுள்ள மூன்று மசோதாக்கள் 20 நிமிடங்களிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தொடரில் இந்திய தண்டனை சட்டத்தை (IPC) “பாரதிய நியாய சன்ஹிதா” என்றும், குற்ற நடைமுறைகள் சட்டத்தை (CrPC) “பாரதிய நக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா” என்றும், சாட்சிகள் சட்டத்தை (Evidence act) “பாரதிய சாக்ஷ்யா சன்ஹிதா” என்றும் இந்தியில் மொழிமாற்றியும் திருத்தியும் மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.

நாடாளுமன்ற அவை கூடுவதற்கு முன்பாகவே அவையில் தாக்கல் செய்யப்படவிருக்கும் மசோதாக்களை அனைத்து உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே வழங்கி, அதன்மீது விலாவாரியாக விவாதம் நடத்தப்பட்டு, அதன்பிறகே ஓட்டெடுப்பு மூலம் அவை சட்டங்களாக நிறைவேற்றப்படும். இதுதான் பொதுவான நாடாளுமன்ற நடைமுறை. 2014-ல் காவி பாசிஸ்டுகள் ஒன்றியத்தில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியபின் இந்த நடைமுறைகள் ஒவ்வொன்றாக கைவிடப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாகவும் மிகப்பெரும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய நிகழ்வுகள் வெளிப்படுவதும் அவற்றைப் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் வேண்டினாலும் அதைக்கண்டுகொள்ளாத காவி சபாநாயகர்களால் அவைகளில் அமளிதுமளி ஏற்படுவதும், எதிர்க்கட்சிகளின் நியாயமான கேள்விகளுக்கு பதில்சொல்லத் துப்பில்லாத காவி பாசிஸ்டுகள் அவைகளை முடக்குவதும் தொடர்ந்து நடந்துவருகிறது.

காவி பாசிஸ்டுகளின் நிகழ்ச்சிநிரலின்படியே எந்தவித விவாதங்களும் நடத்தப்படாமல் கடைசி நேரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த/மக்களை ஓட்டாண்டியாக்கும் கார்ப்பரேட் நல மசோதாக்கள் முறையாக ஓட்டெடுப்பு நடத்தப்படாமலேயே நிறைவேற்றப்படுகின்றன.

நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மையோடு இருக்கும் காவி பாசிஸ்டுகள் கடைந்தெடுத்த தற்குறிகளாகவும் இருப்பதால் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் பற்றிய அறிவும் பூஜ்ஜியமாக இருக்கிறது. பாசிச பாஜக-வோ இத்தற்குறிகளை எல்லாம் தான் கொண்டுவரும் மசோதாக்களை ஆதரித்து ஓட்டுப்போட மட்டுமே பயன்படுத்திக்கொள்கிறது. பற்றாக்குறைக்கு அதிமுக அடிமைகளும், தெலுங்குதேசம், பிஜு ஜனதாதளம், YSR காங்கிரஸ் போன்ற மதில்மேல் பூனைகளும் பக்கபலமாக இருப்பதால் பாஜக சட்டங்களாக மாற்றத்துடிக்கும் மசோதாக்களை விவாதங்களின்றி வெற்றிகரமாக  நிறைவேற்றிக்கொள்கிறது.

இதையும் படியுங்கள் : ஒன்பது வருட பா.ஜ.க. ஆட்சியின் அலங்கோலங்கள்: சு.வெங்கடேசன் (மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்)

குறிப்பாக இத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தலைமைத்  தேர்தல் ஆணையர், மருந்துகள், தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பு, டெல்லி அதிகாரிகள் நியமனம் போன்ற மக்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மசோதாக்கள் மீது ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இவையனைத்தும் எதிர்கட்சிகளின் வெளிநடப்பிற்குப் பிறகு அல்லது நாடாளுமன்றத்தின் கடைசிநாளில் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

பொதுவாகவே விவாதங்களையும், கேள்விகளையும் அறவே விரும்பாத பாசிஸ்டுகள் எதிர்கட்சிகளை உள்ளடக்கிய இந்த அரைகுறை ஜனநாயகத்தைத் தாங்கிப்பிடிக்கும்  தற்போதைய நாடாளுமன்ற முறையையே சொல்லொணா வெறுப்புடன்தான் நடத்துகின்றனர். கேள்வி இல்லாத இடங்களில் வாய்கிழிய பேசும் மோடியை நாடாளுமன்றத்துக்கு வரவைக்கவே எதிர்க்கட்சிகள் பெரும்பாடுபடவேண்டியுள்ளது. அவர் நாடாளுமன்றத்தில் பேசவேண்டும் என்பதற்காகவே நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவரப்படவேண்டிய கேலிக்கூத்தும் நடந்தது.  அந்த அளவுக்குத்தான் மோடி தலைமையிலான காவி பாசிச கும்பல்  நாடாளுமன்றத்தை மதிக்கின்றனர்.

பாபநாசம் படத்தைப்போல காவல் நிலையத்துக்கு அடியிலேயே பிணத்தை புதைத்து மறைப்பதைப்போல நாடாளுமன்றத்தின் வாயிலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிக்கொண்டே இழுத்துக்கொண்டிருக்கும் அரைகுறை ஜனநாயகத்தையும் அதற்குள்ளாகவே புதைக்கிறது காவி பாசிச கும்பல்.

“காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்று தற்போதைக்கு முழங்கிவந்தாலும் அவர்களின் இலட்சியம் “எதிர்க்கட்சிகள் இல்லாத பாரதம்” தான். எதிர்வரும் பொதுத்தேர்தலில் “எப்படியாவது” வெற்றிபெற்று தாங்கள் கட்டிவைத்திருக்கும் புதிய நாடாளுமன்றத்தை பஜனைமடமாக மாற்றி அதில் நடுநிலையாக வீற்றிருக்கும் பிரதமர்/அதிபரைப் போற்றி பஜனை பாடுவதுதான் பாஜக தற்குறிகள்/அடிமைகளின் எதிர்காலக்கனவு. அப்போதுதான் பிரதமர்/அதிபர் தவறாமல் நாடாளுமன்ற வருகை தருவார், வந்து அனைவருக்கும் அருள்பாழித்து நடக்கும் பஜனையில் பந்தாவாக மோளம் வாசிப்பார். இங்கோ நாடே சுடுகாடாகிக்கொண்டிருக்கும்.

நாட்டையும், நாட்டுமக்களையும் நேசிக்கும் நாம் அதுவரையில் பொறுத்திருக்கவேண்டுமா என்ன? இன்றே களம்காணுவோம் காவி பாசிஸ்டுகளைத் துரத்தியடிப்போம்.

 

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here