அதானியின் எழுச்சி! இந்திய மக்களுக்கு வீழ்ச்சி!!


போர்ப்ஸ் இதழ் இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தில் அம்பானியும் (90.7 பில்லியன் டாலர்), இரண்டாம் இடத்தில் அதானியும் (90 பில்லியன் டாலர்) மூன்றாம் இடத்தில் ஷிவ்நாடரும் உள்ளனர்.

போர்ப்ஸ் இந்த ஆய்வை முடிக்கும் முன்னரே அதானி அம்பானியை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்து வந்துவிட்டார். மோடி தன் நண்பர் அதானிக்கு செய்யும் நன்றிக்கடன் இது.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை சராமாரியாக உயர்ந்துக் கொண்டே உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது..இதனால் அன்றாடம் உழைக்கும் மக்களின் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனோ இன்னும் சில வருடங்களுக்கு இப்படி தான் இருக்கும் என்கிறார்.

படிக்க:

 எச்சரிக்கை – விலை உயர்வது பெட்ரோல், டீசல் மட்டுமல்ல!

 பெட்ரோல், டீசல், எரிவாயு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு – பிஜேபியின் தேர்தல் பரிசு!

இந்தியாவில் 1007 தனிநபர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளனர். கொரோனாவால் மக்கள் வேலையிழந்து ஒருவேலை உணவுக்காக நடுரோட்டில் காத்திருந்த நாட்களில் மட்டும் அதாவது 2020,2021ல் மட்டும் 1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள் பட்டியலில் 179 பேர் இணைந்துள்ளனர். இந்த காலங்களில் பல்வேறு ஆலைகள் மூடப்பட்டன. வேலையிழந்து தொழிலாளர்கள் நடந்தே ஊர் சென்றார்கள். பெரும்பாலான தொழிலாளர்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி சம்பளம் வழங்கப்படவில்லை.

கொரோனாவை நெருக்கடி காலத்தில் தான் 2021ல் ஒவ்வொரு வாரமும் 6000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார் அதானி. 2021ல் மட்டும் 153% சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 1830% சொத்து மதிப்பு கூடியுள்ளது. நாம் ஒருநாள் வெயிலிலும், மழையிலும் ஓடி, ஓடி உழைத்தாலும் 1000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியாது. ஆனால் அதானியின் ஒருநாள் வருமானம் 1000 கோடி ரூபாய் (10000000000) மேல், அதானி போன்ற கொள்ளைக்கூட்டம் இருக்கும் போது உழைத்தால் முன்னேறி விடலாம் என்பது எவ்வளவு அறிவீனம்.

இப்படிப்பட்ட ஏழை அதானி தான் SBI வங்கியிடம் வாங்கிய கடனான 12,700 கோடியை தள்ளுப்படி செய்துள்ளார் ஏழைத்தாயின் மகன் மோடி. ஆனால் மக்களுக்கு இலவசம் கொடுப்பதால் தான் நாடு இலங்கை போல் ஆகிவிடும் என்று ரீல் ஓட்டுகிறார்.

இதையெல்லாம் உணராமல் காவிக்கும்பல் வைக்கும் அஜெண்டா பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாட்டுக்கறி, ஹிஜாப், ஹலால் இறைச்சி, தற்போது மசூதிகளில் ஒலிப்பெருக்கி பிரச்சனை. நம்மை சுரண்டும் கார்ப்பரேட் கும்பல்களை பற்றியெல்லாம் யோசிக்க விடாமல், நம்மிடையே பிரிவினையை தூண்டும் வேலையை செய்கிறது காவி கும்பல். நாம் அதற்கு பலியாகாமல் அதானி, அம்பானி, பன்னாட்டு நிறுவனங்களையும், அதற்கு சேவகம் செய்யும் காவிகும்பலையும் இனம், மதம், சாதி பாராமல் ஒன்றிணைந்து வீழ்த்துவோம். அதானிகள் வீழ்ந்தால்தான் இந்திய மக்கள் வாழ முடியும். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியல் நமக்கு உணர்த்துவது இது தான்.

  • சுவாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here