ருத்து சுதந்திரத்தை குழிதோண்டி புதைக்கும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் விதிகள். உடனே திரும்பப் பெற வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் திருத்தப்பட்ட விதிகளுக்கான அறிவிப்பை ஒன்றிய அரசு கடந்த வியாழக்கிழமை (06.04.23) அன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதி, ஒன்றிய அரசு தவறானது என்று கருதும் செய்திகளை, சமூக வலைதளங்களிலிருந்து முற்றிலுமாக நீக்கும் அதிகாரத்தை தகவல் தொழில்நுட்பத்துறைக்கு வழங்கியுள்ளது.
இந்த புதிய விதியின்படி, ஒன்றிய அரசால் அறிவிக்கப்படும் உண்மை கண்டறியும் நிறுவனம், ஒன்றிய அரசு மற்றும் அரசு துறைகள் குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து ஆராயும். அவ்வாறு ஆராயும்பட்சத்தில் எந்த ஒரு செய்தி ‘போலியானது, உண்மைக்கு புறம்பானது அல்லது தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது’ என்று அந்த நிறுவனம் கருதுகிறதோ, அந்த செய்தியை நீக்கும்படி சமூக வலைதள நிறுவனங்களை அந்நிறுவனம் வலியுறுத்தும். அவ்வாறு வலியுறுத்தும்பட்சத்தில் புதிய விதிகளின்படி, அந்த செய்தியை சமூக வலைதள நிறுவனங்கள் முற்றிலுமாக நீக்க வேண்டும்.
வெளிப்படையாக பார்க்கும்போது போலி செய்திகளை களைவதற்காக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் ஒரு முயற்சியாக இது தோன்றினாலும், இந்த புதிய விதி ஊடகங்களின் குரல்வளையை நசுக்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசால் கைகாட்டப்படும் ஒரு நிறுவனம், ஒன்றிய அரசு தொடர்பாக வெளியாகும் செய்தியை ஆராய்ந்து, அந்த செய்தி பொய்யானது என்று கூறும் என்றால், அது நாமே தேர்வு எழுதிவிட்டு, அதை நாமே மதிப்பீடு செய்து, அதற்கு நாமே மதிப்பெண் கொடுத்துக்கொள்வதற்கு சமமாகும்.
ஏனென்றால், திருத்தப்பட்ட விதிகளில் ‘போலியான, உண்மைக்கு புறம்பான அல்லது தவறாக வழிநடத்தும் செய்தி’ என்று ஒரு செய்தியை கண்டறிவதற்கு எத்தகைய நடைமுறை பின்பற்றப்படும் என்பதற்கு எந்த ஒரு வழிகாட்டுதலோ அல்லது விளக்கமோ கொடுக்கப்படவில்லை. அதேபோல், ஒரு செய்தியை ஒன்றிய அரசு நீக்குவதாக முடிவெடுத்தால், அதனால் பாதிக்கப்படும் செய்தி நிறுவனம் அதை எதிர்த்து முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
ஆகவே, எந்த ஒரு உண்மையான செய்தியையும் கூட, அதை ஒன்றிய அரசு தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக கருதினால், அது உண்மைக்கு புறம்பானது என்பதற்கான விளக்கத்தை கூட கொடுக்காமல், அச் செய்தியை மக்களின் பார்வையிலிருந்து ஒன்றிய அரசால் முற்றிலும் நீக்க முடியும். அது உண்மை செய்தியாக இருந்தாலும், அதற்கான ஆதாரங்கள் இருந்தாலும் கூட செய்தி நிறுவனங்களால் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை தடுக்க முடியாது.
ஜனநாயகத்தில் விமர்சனம் என்பது தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகும். விமர்சனம் என்ற ஒன்றை நீக்கிவிட்டால் அதற்கு சர்வாதிகாரம் என்றே அர்த்தம். அந்தவகையில் பார்க்கப்போனால், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதிகள் ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.
அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய விதிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
இந்த ஆபத்தான விதிகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அழைப்பு விடுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here