நாரதன் – (NARADAN) – திரைப்பார்வை.


பொய் சொல்வதையும், கலகம் செய்வதையும் இயல்பாக செய்யும் புராண நாரதனை கதைகள் மூலம் கேள்விப்பட்டிருப்போம். கார்ப்பரேட் ஊடகங்களின் போட்டி, பொறாமைகளுக்கு மத்தியில் தங்கள் சேனலின் TRP (Television rating Point) ரேட்டிங்காக சமுதாயத்தில் மக்களின் பொது புத்தியில் எந்த செய்தியை படிக்க வேண்டும், எந்த செய்தியை பார்க்க வேண்டும், எதை பற்றி சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஊடக அறம் ஆகியவைகளை தங்கள் தொலைக்காட்சி கட்டிடத்தின் அடியில் போட்டு புதைத்து HOT NEWS, PRIME SHOW, LIVE DEBATE, STING OPERATIONS என்ற பெயரில் சமுதாயத்தின் அமைதியை சிதைத்து முதன்மை செய்தியாக்கும் நெறியாளர்கள், ஊடகங்களை பற்றி தோலுரித்து காட்டும் அற்புதமான மலையாள திரைப்படம் நாரதன்.

இப்படம் 2022 மார்ச் 03-ம் தேதியில் டொவினோதாமஸ், அன்னாபென், ஸ்வேதாவினோத், இந்திரன்ஸ், ஷராஃபுதின் போன்ற கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர் ஊடகங்களில் நடக்கும் உண்மையை தங்கள் கதாபாத்திரங்கள் மூலமும், தொழில்நுட்பங்கள் மூலம் கதைக்களம், காட்சி அமைப்பை தரமாக எடுத்திருக்கிறார்கள். ஊடக பணியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மட்டுமல்லாமல் சிறுநீர் கழிக்க நேரமில்லாமல் கூட பணிப்புரியும் அவலத்தையும் எடுத்துக்காட்டியுள்ளனர். டொவினோதாமஸ் தனது நடிப்பில் கலக்கியிருப்பது மட்டுமல்லாமல், வடநாட்டு செய்தி சேனலான ரிப்பப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமியை தனது நடிப்பின் மூலம் திரையில் கொண்டு வந்துள்ளார். அதேபோல் கடைசியில் வரும் நீதிமன்ற காட்சிகள், வசனங்கள் அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது. அதில் நடித்துள்ள ஒவ்வொருவரையும் அவசியம் பாராட்டியே ஆகவேண்டும்.

000

நியூஸ் மலையாளம் சேனலின் செய்தி ஆசிரியர் மற்றும் நெறியாளராக பணிப்புரிந்து வரும் துடிப்பான இளைஞர் சந்திர பிரகாஷ், தனது திறமையின் மூலம் ஊடகத்தில் தனியிடம் பிடித்து வந்தாலும் தனது சேனல் உரிமையாளர் எதிர்பார்க்கும் அளவிற்கு செய்திகளை உருவாக்க முடியவில்லை. இதனால் உரிமையாளரின் கேவலமான வசைப்பாடலுக்கு உள்ளாகிறார். இதனால் மனம் நொந்து மூன்று நாள் விடுப்பில் சொந்த ஊரில் உள்ள வீட்டுக்கு செல்கிறார். அங்கே தனது தந்தையின் அறிவுரைகள் அவரை சிந்திக்க வைக்கிறது. அன்றைய தினம் அவர் இல்லாத செய்தி சேனலில் புதிய இளைஞரை நெறியாளராக அறிமுகம் செய்கிறது. கடுப்பாகி போன நியூஸ் மலையாளம் சேனலின் முன்னாள் நெறியாளர், அதே கோவத்தில் சேனல் உரிமையாளரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார். சிறிதும் அலட்டிக் கொள்ளாத உரிமையாளர் வேறு சேனலில் நெறியாளராக உள்ள அவனை நமது சேனலுக்கு அழைத்து வந்தது ஒரு OFFER ஆக பார்க்கவும், இன்றைய போட்டி நிறைந்த உலகில் பார்க்குமாறு அறிவுரை கூறுகிறார். COMPETITION STATUTORY ஆக பார்க்குமாறு அறிவுரை கூறுகிறார்.

இந்த தருணத்தில் கேரளாவில் புதிய சேனலை துவங்கவுள்ள ஒரு கார்ப்பரேட் கும்பலின் அறிமுகம் கிடைக்கிறது. கேரளாவில் 700 கோடி அளவிற்கு விளம்பரங்களால் மட்டும் முதலீடுகள் சேனல்களுக்கு வருவதாகவும், அதில் 300 கோடி அளவிற்கு செய்தி சேனல் விளம்பரங்கள் மூலம் கிடைக்கிறது என புள்ளி விவரங்களை அள்ளி விடுகிறார். ஆகையால் இவரை முன்னிலைப்படுத்தி தனது சேனலை கொண்டு வர விரும்புகிறார்கள். அவர்களிடம் பேரம் நடக்கிறது. இறுதியில் சந்திரபிரகாஷ் ஒத்துக் கொள்கிறார்.

புதிய அவதாரம் எடுக்கும் சேனலுக்கு ஏற்ப சந்திரபிரகாஷ் தனது மொத்த GETUP CHANGE செய்து நாரதனுக்காக CP ஆக புதிய அவதாரம் எடுக்கிறார். புதிய கேரளத்தை உருவாக்குவதற்கான பிரச்சாரகன் தான் நாரதன் என தனது சேனலுக்கு விளம்பரம் கொடுக்கிறார். இளம் ஊடகவியலாளர்களை தேர்வு செய்யும் போது அவர்கள் மத்தியில் MOTIVATIONAL SPEECH கொடுக்கிறார் அதில் நான் உங்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பது இரண்டு விசயங்கள் தான். ஒன்று இந்த நாரதன் சேனலை முதலாம் இடத்திற்கு கொண்டு வருவதற்கான (ENERGY) ஆற்றல், மற்றொன்று அடிமைகளுக்கான விஸ்வாசம், இவை மட்டும் போதும். (POORNA LOYALTY)

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் அர்னாப் கோஸ்வாமி

நாரதன் துவங்கிய சில மாதங்களில் மக்களிடையே TRP ரேட்டிங் எல்லா சேனல்களையும் பின்னுக்கு தள்ளி முன்னேறுகிறது. மூன்று ஆண்டுகளில் வளர்ச்சிக்கு இலக்கு தீர்மானித்த கார்ப்பரேட் போர்டு மீட்டிங்கில் ஓராண்டில் முதலாம் இடத்திற்கு கொண்டு வந்த CP சேனலின் 50% பங்கு கேட்கிறார். ஆளும்கட்சி அமைச்சரை பொய் செய்தியின் மூலம் அம்பலப்படுத்தி, அதன் மூலம் அப்பதவிக்கு யாரை அரசு நியமிக்க வேண்டும் என்பது வரை LOBBY செய்கிறார்.

இந்நிலையில் தான் முடியன் என்ற ராப் பாடகர் மிகவும் பிரபலமான நாரதன் செய்தி சேனலின் ஆசிரியர் CP-யை எதேச்சையாக லிப்டில் சந்திக்கும் போது, அவர் எதிர்பாராத நேரத்தில் செல்போன் மூலம் யூ-டியூப் சேனலில் லைவ் போடுகிறார். சுற்றி வளைத்து கேட்காமல் நறுக்கென்று இரண்டு கேள்விகளை கேட்கிறார். இதில் அப்செட் ஆன CP அங்கிருந்து பதில் சொல்லாமல் நகர்கிறார் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் பழித்தீர்க்க விழைகிறார் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ராப் பாடகர் முடியன் போதை (லகரி) மருந்து வைத்திருப்பதாக சொல்லி கைது செய்ய வைக்கிறார்.

முடியன் மீது கூறப்பட்டுள்ள செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்பதை உணர்ந்த நண்பர்கள், சேனலுக்கு எதிராக களமிறங்குகிறார்கள். ராப் பாடல்கள் மூலம் பொய் சேனலுக்கு எதிராக கலை மூலம் கலகத்தை துவங்குகிறார்கள். மற்றொரு புறம் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். எதற்கும் அஞ்சாத CP லைவ் ஷோவை முடியனின் வீட்டிற்கு அருகில் நடத்த திட்டமிடுகிறார். இப்பிரச்சனையில் நாரதன் சேனலுக்கு எதிராக சட்டரீதியில் தடை ஆணை பெறுகிறார்கள். இதனை முறியடிக்க மூத்த வழக்கறிஞர் பட்டாளத்துடன் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கே செல்கிறார்.

நாரதன் மலையாளம்

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களை எல்லாம் தன் கண் அசைவில் வைத்திருக்கும் கார்ப்பரேட் ஊடகம் மற்றும் அதன் நெறியாளரும் அந்த கிராமத்தின் நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு விழிப்பிதுங்கி நிற்கிறார்கள். உள்ளூர் வழக்குரைஞரின் அனல் பறக்கும் வாதத்திற்கு மத்தியில் மூத்த வழக்கறிஞரின் வாதம் எடுபடவில்லை. இந்நிலையில் புதிய PRIVATE COMPLAINT ஒன்றை அந்த நீதிமன்றத்தில் கொடுத்து எல்லா செய்திகளும் போலியானவை என்பதை சாட்சியோடு நிரூபிக்கிறார் உள்ளூர் பெண் வழக்கறிஞர், சாட்சிக்கு வந்த நபர் மேலும் ஒரு புகாரை தெரிவிக்கிறார். திமிருடன் எழுந்து நீதிமன்றத்தில் எல்லாவற்றையும் மறுத்து அலறுகிறார்.

உங்கள் சேனலின் வளர்ச்சிக்காக எதையும் செய்வீர்களா? இங்கு சத்தம் போட கூடாது இது என்னுடைய நீதிமன்றம், இது உன்னுடைய டிவி சேனல் அல்ல என பாய்கிறார் நீதிபதி. இந்த வழக்கு விசாரணைக்காக போலீசை அழைக்கிறேன். அவர்களிடம் குற்றவாளியை ஒப்படைக்கிறேன் என நீதிபதி கூற சற்றும் எதிர்பாராத ஆணவமும், அதிகார திமிரும் நிறைந்த CP கைது செய்யப்படுவதுடன் படம் முடிவடைகிறது.

படிக்க:

‘படா’ (அய்யங்காளி படை) – மலையாளம் திரைப்படம் ஒரு பார்வை.

 டாணாக்காரன் – திரைப்பார்வை

ஆனால் எதார்த்தத்தில் படம் சொல்வது போல் சில நீதிபதிகள் சாமானியர்களுக்காக இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் கௌரவம், அரசியல் பணம், செல்வாக்கு, அதிகாரம், ஆகியவைகளை கொண்டு மீண்டும் அநீதிகளும், அக்கிரமங்களும், அரசியல் லாபிகளும் அரியணை ஏறத்தான் செய்கிறது என்பதை கண்டும் காணாமல் தானே இருக்கிறோம். CP போன்ற நெறிகெட்ட நெறியாளர்களை மக்கள் மன்றத்தில் தான் தண்டனை வழங்க முடியும்.

மு.முகிலன்

1 COMMENT

  1. சிறப்பு வாழ்த்துக்கள் ஒவ்வொரு படத்தை பார்க்கும் போது அது எந்த அரசியல் கண்ணோட்டம் உள்ளது என்பதனை கணிக்க முடிகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here