• டேரே&கம்பெனி;

அமெரிக்க நிறுவனமான இதன் ஆண்டு நிகர வருமானம் 38.4 பில்லியன் டாலர்களாகும். இதில் 74,080 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நாம் பல நகரங்களில் பார்த்திருப்போம். டிராக்டர் உற்பத்தியில் உலகளவில் முன்னிலை வகிக்கின்ற இந்த நிறுவனம் பல இடங்களில் JOHN DEERE டிராக்டர் ஷோரூம் திறந்து வைத்துள்ளது. நீங்கள் விவசாய கருவிகளை வாங்கிக் கொள்ளுங்கள்! ஜீரோ பட்ஜெட்டில் நாங்கள் வட்டியில்லாமல் கொடுக்கின்றோம் என்றெல்லாம் விளம்பரங்கள் கொடுக்கும் நிறுவனம். முக்கியமான விவசாய கருவிகளான டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள், பருத்தியை பறிக்கின்ற இயந்திரங்கள், கரும்பு வெட்டும் எந்திரங்கள் என்று விவசாயத்திற்கு தேவையான இலகு ரக எந்திரங்களையும், வீட்டு உபயோக சிறு எந்திரங்களையும் உற்பத்தி செய்வதில் முதலிடம் வகிக்கின்றது. அந்த வகையில் உலகின் விவசாயத்திற்கு தேவையான 70 சதவீத விவசாய கருவிகளை கட்டுப்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றது

  • சிஎன்ஹெச் இன்டஸ்ட்ரியல் என்.வி நிறுவனம்;

இதன் ஆண்டு நிகர வருமானம் 29.7 பில்லியன் டாலர்களாகும். மொத்தம் 64,625 ஊழியர்களைக் கொண்டு இயங்கும் இந்த சிஎன்ஹெச் இண்டஸ்ட்ரியல் என்வி என்பது ட்ராக்டர் உற்பத்தியிலும், விவசாயத்திற்கு தேவையான கருவிகளை உற்பத்தி செய்வதிலும், உழுவை எந்திரங்கள் முதல் நவீன விவசாய எந்திரங்கள், கட்டுமான கனரக எந்திரங்களான கிரேன், பொக்லைன் போன்றவற்றை உற்பத்தி செய்து கொடுப்பது வரை அனைத்திலும் ஈடுபடும் ஹாலந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனமாகும். உலகின் 180 நாடுகளில் 54 ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையங்கள் மற்றும் 66 உற்பத்தி மையங்களை கொண்டுள்ள பகாசுர நிறுவனம் ஆகும்.

  • நியூட்ரியன் (முன்னாள் பெயர் அகிரியம்) என்ற வேளாண் நிறுவனம்;

இதன் ஆண்டு நிகர வருமானம் 19.6 பில்லியன் டாலர்களாகும். கனடா நாட்டை சேர்ந்தது. இதில் 20,300 ஊழியர்கள் பணி புரிகின்றனர். இந்த நிறுவனம் வட, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நேரடியாகவே விவசாயத்திற்கு தேவையான சேவையை வழங்குகிறது. அதாவது சில மையங்களை அமைத்து கொண்டு, அந்த மையங்களின் மூலமாக பல நாடுகளில் உள்ள விவசாய உற்பத்தியை கட்டுப்படுத்த கூடிய ஒரு நிறுவனமாக இந்த அகிரி என்ற நிறுவனம் உள்ளது இவை அதுமட்டுமல்லாமல் நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ், சல்பர் போன்ற உரங்களை தயாரிப்பதில் முன்னிலை வகிக்கின்றது. இதன் வேளாண்மை மையம் குறிப்பாக கனடா, அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • சின்ஜென்டா;

இது சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் ஆகும். இதன் ஆண்டு நிகர வருமானம் 13.5 பில்லியன் டாலர்களாகும். இதில் 28,704 ஊழியர்கள் பணி புரிகின்றனர். கெமிக்கல் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த இந்த நிறுவனம், தற்போது விதைகள் உற்பத்தியிலும் இறங்கியுள்ளது. குறிப்பாக சோளம், எண்ணெய் விதைகள், பீட்ரூட், காய்கறிகள் போன்ற பொருள்களை உற்பத்தி செய்வதில் சின்ஜென்டா முன்னிலையில் உள்ளது. இது மட்டுமின்றி விவசாயத்தின் உள்ளீடு பொருட்களான உரம், பூச்சி மருந்து, தெளிப்பான்கள், பாக்டீரியாக்கள், நுண்ணுயிரிகள் இவற்றை உற்பத்தி செய்து கொடுப்பதில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள நிறுவனமாக உள்ளது.

  • யாரா இண்டர்நேசனல் நிறுவனம்;

நார்வே நாட்டை சேர்ந்தது. இதன் ஆண்டு வருமானம் 12.9 பில்லியன் டாலர்களாகும். இதில் 16,757 ஊழியர்கள் பணி புரிகின்றனர். விவசாய உள்ளிடு பொருட்களான உரம், பூச்சி மருந்து, நுண்ணுயிரிகள் தயாரிக்க பயன்படும் நைட்ரஜன் வாயு தயாரிப்பதில் முன்னிலையில் உள்ளது.

  • பி.ஏ.எஸ்.எஃப் என்ற நிறுவனம்;

இதனுடைய ஆண்டு நிகர வருமானம் 6.8பில்லியன் டாலர்கள் ஆகும். இதில் 1,15,490 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு கெமிக்கல் கம்பெனி. உலகின் மிகப்பெரிய விவசாய உற்பத்தி பிரிவை தன்னிடம் வைத்துள்ளது. உரம், பூச்சி மருந்து மற்றும் உயிர்ச்சத்துகளை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு நிறுவனமாகும் இது பாக்டீரியாக்கள், நுண்ணுயிரிகள், விதை, பூச்சி மருந்து தெளிப்பான்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து கொடுக்கும் ஒரு நிறுவனமாகும்.

11.மான்சாண்டோ விதை நிறுவனம்; (ஏறக்குறைய இன்று இல்லை)

இந்த நிறுவனம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இது இந்தியாவில் பிரபலமான ஒரு நிறுவனம். குறிப்பாக விதை உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றது. இந்த மான்சாண்டோ குறிப்பாக மரபு பயிர்களை ஒழித்துக் கட்டிவிட்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் உலகளாவிய சந்தையில் முன்னணி வகிக்கின்ற ஒரு நிறுவனமாகும். ஒரு ஆண்டு நிகர வருமானம் 13.5 பில்லியன் டாலர்களாகும். இந்த நிறுவனம் விதை உற்பத்தி செய்வதிலும், பயோடெக்னாலஜி முறையில் விதைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதிலும் முன்னிலை வகிக்கின்றது. குறிப்பாக மகாராஷ்டிரா அரசின் விதை நிறுவனத்தை விழுங்கி, தன்னுடன் இணைத்துக்கொண்டு மகிகோ மான்சாண்டோ என்ற பெயரில் இந்தியாவில் வலம் வந்து கொண்டிருந்தது. 2018ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் ஜெர்மனியின் பாயர் உடன் இணைந்தது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் காய்கறிகள், பழங்கள் விற்பனை காரணமாக அதிக வழக்குகளை சந்தித்த நிறுவனம் இதுவே ஆகும். உலகளவில் பெயர் கெட்டுப் போனதால் மிகவும் பிரபலமான தனது ’பிராண்ட்’பெயரை முடக்கும் அளவு சென்றது தனிக்கதை.

மேற்கண்ட 10 நிறுவனங்கள் உலகளவில் வேளாண் உற்பத்தியை கட்டுப்படுத்தக்கூடிய தேசங்கடந்த வேளாண் தொழிற் கழகங்கள் ஆகும். இவை அனைத்தின் ஆண்டு வருமானத்தை நீங்கள் கணக்கீடு செய்து பார்த்தால் உலகில் பல நாடுகளின் தேசிய வருவாயை விட பல மடங்கு உயர்ந்ததாக இருக்கும். நிதி மூலதனமும், நிதியாதிக்க கும்பல்களும் தேசங்கடந்த தொழிற் கழகங்களின் மூலமும், பன்னாட்டு நிறுவனங்கள் மூலமும் இன்று உலகை சூறையாடிக் கொண்டிருக்கின்றன. இதனால் நாடுகளின் எல்லைகள், தேசிய எல்லைகள் எல்லாம் கேள்விக்கு உள்ளாக்கி, அவற்றைத் தாண்டி உலக அளவில் ஆதிக்கத்தில் உள்ளன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

விதை முதல் விளைச்சல் வரை!
வயலில் இருந்து வாய்வரை!

இந்தியா இயற்கையில் ஒரு விவசாய நாடு! விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாய நாட்டை அதன் இயல்பான வளர்ச்சிப் போக்கில் இருந்து தடை செய்துவிட்டு மொத்த நாட்டையும், ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கொள்ளை நோக்கத்திற்காக, கார்ப்பரேட்டுகளின் பிடியில் விவசாயத்தை கொண்டு செல்வது என்பதே அரசின் கொள்கையாக மாறிவிட்டது. தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள்தான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அமுல்படுத்தப்படுகிறது. அதன் விளைவாக நாடு முழுவதும் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தனது பாரம்பரியமான விவசாய உற்பத்தியில் இருந்து விலகிக் கொண்டுள்ளது. விளைச்சல் பரப்பு ஒவ்வொரு ஆண்டும் சுருங்கிக் கொண்டே போகிறது.இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாயத்தின் மூலம் கிடைத்த வருவாய் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்தியாவில் பிரதானமாக குறந்தபட்ச ஆதார விலை (MSP) என்பதை நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, பார்லி ஆகிய ஐந்து விவசாய விளை பொருள்களுக்கு மட்டுமே அரசு கூட்டுறவு அமைப்புகள் மூலம் ஆதார விலையை தீர்மானித்து கொடுத்தது. அதுவன்றி 23 பொருட்களுக்கு மட்டுமே ஆதார விலையை அரசு வேளாண் நிறுவனங்களின் மூலம் தீர்மானிக்கும். மாறாக விவசாயத்தில் உள்ள பிற அனைத்து உணவுப் பண்டங்களையும், அது விளைகின்ற பொருள்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்யவும், அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள், தானியங்களை தானியக் கிடங்குகளில் சேமித்து வைத்துக் கொள்ளவும் அதிலிருந்து உள்ளூர் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடவும் தாராளமாக அனுமதி வழங்கப்பட்டது.உள்நாட்டில் விளையும் ஆயிரக்கணக்கான விவசாய விளை பொருட்களின் ஆதார விலை நிர்ணயிக்கும் உரிமை எப்போதும் தனியாரிடம் தான் உள்ளது.

தான் விளைவித்த பொருளுக்கு உரிய விலை இன்றி விவசயிகள் தவிக்கும் நிலையில் புதிய தாராளவாதக் கொள்கை (நியூ லிபரல் என்ற) அடிப்படையில் அந்நியப் பொருள்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி 100 சதவீதம் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தொடர்ந்து நெருக்கடிக்கு ஆளாகி விடுகின்றனர். பல நூற்றாண்டுகளாக நமது மண்ணில் விளைந்த தென்னை, பருத்தி, கரும்பு, நிலக்கடலை, ஏலக்காய், மிளகு, ரப்பர் ஆகிய பணப்பயிர்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் அனைத்தும் இன்றைய புதிய தாராளவாத கொள்கையின் அடிப்படையில் தாராள இறக்குமதியால் இவற்றின் விலை வீழ்ச்சி அடைந்து மிகப்பெரிய விவசாய சூதாட்டத்தில் விவசாயிகள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட காலம் முதல் இந்த அணுகுமுறைதான் அரசின் கொள்கையாக இருந்து வருகிறது. அதாவது விவசாயத்திற்கு தனியார் மூலதனத்தை ஈர்ப்பது என்பதே நோக்கம். இதன்காரணமாக முக்கியமாக நமது நாட்டில் நீண்ட காலமாக செயல்பட்டுவந்த தரகு கமிஷன் மண்டிகளை புறந்தள்ளிவிட்டு விவசாயிகளிடம் இருந்து விளைபொருள்களை நேரடியாகவே வேளாண்நிறுவனங்கள் வாங்கிக் கொள்வதற்கு ஏற்ப வேளாண் வர்த்தக கழகங்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. அதாவது 1000 பேர் செய்த வேலையை 5 நிறுவனங்கள் கையிலெடுத்துக் கொண்டது. இது விவசாயிகளுக்கு லாபம் என்று வாதாடுகின்றனர். ஆனால் இது உண்மையல்ல.

இதன் ஒரு பகுதியாக அரசு விதைப் பண்ணைகள் கைவிடப்பட்டு, உலக அளவில் வேளாண் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய வேளாண் தொழில் கழகங்கள் விதை உற்பத்தியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. ஒவ்வொரு நாட்டிலும் பாரம்பரியமான விவசாயத்திற்கு தேவையான மரபு வழியிலான விதைகள் சிறிது சிறிதாக, கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்கப்பட்டு விவசாயத்திற்கு தேவையான விதைகள் அனைத்தையும் தேசங்கடந்த வேளாண் வர்த்தக கழகங்கள் கையை எதிர்பார்க்கும் நிலைக்கு கொண்டு சென்றது.

இதன் விளைவாக மான்சாண்டோ, கார்கில் போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்கள் ஆண்டிற்கு ஏறக்குறைய 10,000 கோடிக்கு மேலான இந்திய விதை சந்தையை கைப்பற்றிக் கொண்டனர். அதுவரை அரசு விதைப் பண்ணைகளில் ஒரு கிலோ தக்காளி விதை ரூபாய் 300க்குவிற்கப்பட்டது. ஆனால் மான்சாண்டோ, கார்கில் போன்ற விதை நிறுவனங்கள் விதை உற்பத்தியில் விதை விற்பனையில் நுழைந்தவுடன் ஒரு கிலோ தக்காளி விதை 20 ஆயிரத்தில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது இவ்வாறு விற்கப்படும் விதைகள் அனைத்தும் பாரம்பரிய, மரபு சார்ந்த விதைகளை ஒழித்துவிட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதைகள் ஆகும்.

அரசின் தாராள இறக்குமதிக் கொள்கையினால்1996-97களில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விட 2020-இல் ஏறக்குறைய 350 மடங்கு அதிகமான உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதன் தேவைக்கு அதிகமாக இருந்தாலும் தனது மொத்த தேவையின் குறிப்பிட்ட அளவை கட்டாய இறக்குமதி செய்தாக வேண்டும் என்ற உலக வர்த்தகக் கழகத்தின் விதியே இதற்கு காரணமாகும் 2015-16 காலகட்டத்தில் மட்டும் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருள்களின் அளவு 76 லட்சத்து 41 ஆயிரம் டன் இதன் மதிப்பு 38 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.இந்த ஐந்து ஆண்டுகளில் உணவு பொருட்களின் இறக்குமதி பல மடங்கு கூடி விட்டது. சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருந்த நமது நாடு இன்று உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு விட்டதால் 63% சமையல் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் என்ற கொள்கைகள் விவசாயத்தில் புகுத்தப்பட்டதன் விளைவாக விவசாயத்தின் அடிப்படை ஆதாரங்களான நிலவளம், நீர்வளம், விளைபொருட்களுக்கான சந்தை ஆகிய அனைத்தும் மலிவான விலையில் காங்கிரசு, மோடி ஆகிய இரண்டு அரசுகளினால் கார்ப்பரேட்டுகள் கையில் தாரை வார்க்கப்பட்டது. தனியார் ஆலைகளால் ஆற்று நீரும், ஊற்று நீரும் ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீரும் வரைமுறையின்றி உறிஞ்சி கொள்ளையடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் தண்ணீர் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த மோடியின் அரசு விவசாயத் துறைக்கு வெறும் 37 ஆயிரத்து 986 கோடியையும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு 38 ஆயிரத்து 500 கோடிகளை மட்டுமே ஒதுக்கீடு செய்தார்.

ஆனால் 2014 ஆம் ஆண்டு முதல் வருடத்திலேயே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் 5 லட்சத்தில் 123 கோடி வரி தள்ளுபடி செய்ததுடன், அடுத்த 2015ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 5 லட்சத்து 51 ஆயிரம் கோடியை வரித் தள்ளுபடி செய்து கார்ப்பரேட்டுகளுக்கு விசுவாசி என்பதை நிரூபித்துக் கொண்டார் மோடி. ஒருபுறம் விவசாயத்தை, விவசாய பொருளாதாரத்தை, விவசாயத்தின் ஆதாரமான விளைநிலங்களை, பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஒப்படைக்கும் போதே, மறுபுறம் நாட்டின் இயற்கை கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது என்பதில் முன்னணியில் நிற்கிறது மோடி அரசு. குறிப்பாக தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா இன்று பாலைவனம் ஆகிறது. முன்பொரு காலத்தில் ஏறக்குறைய 30 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர் செய்யப்பட்ட விவசாய நிலம் இன்று சுருங்கி வெறும் 15 லட்சம் ஏக்கராக மாறிவிட்டது.

தொடரும்…

ஆசிரியர் குழு

மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here