பிக் டெக் நிறுவனங்களின் பணி நீக்க ஊழித் தாண்டவம்!

அமேசான், ஃப்ளிப்கார்ட், ஆப்பிள், மைக்ரோசாப்ட், போன்ற நிறுவனங்கள் துவங்கி ஆல்பபெட் நிறுவனத்தின் கூகுள் வரை பல நிறுவனங்களில் இந்த ஆண்டு ஜனவரி முதல் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

“சென்ற ஆண்டு கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பெரிய அளவில் பணிநீக்கம் செய்ததையடுத்து இந்த ஆண்டு துவக்கம் முதலே பணிநீக்கங்களை தொடங்கியது. ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி, கூகுள் அசிஸ்டண்ட், குரல்-செயல்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி ஹார்டுவேர் குழுவின் டெவலப்மெண்ட் பிரிவைச் சார்ந்த ஊழியர்கள் பணிநீக்கங்களை சந்திக்க உள்ளனர்.”

என்று இந்த ஆண்டு துவக்கத்தில் முதலாளித்துவ ஊடகங்களில் செய்தி வெளியாகி தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகின்ற லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.

தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை என்று சொன்னாலே லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் என்பது மட்டுமின்றி, மேட்டுக்குடி வாழ்க்கை; வெளிநாடுகளில் படிப்படியாக குடியேறுவது போன்ற வாய்ப்புகள்- வசதிகள் உள்ளதால் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுவதற்கு இந்தியா உள்ளிட்ட இரண்டாம் உலக நாடுகளில் மிகப்பெரிய உழைப்பு சந்தை போட்டி போட்டுக் கொண்டு தயாராகி கொண்டிருக்கிறது.

அமேசான், ஃப்ளிப்கார்ட், ஆப்பிள், மைக்ரோசாப்ட், போன்ற நிறுவனங்கள் துவங்கி ஆல்பபெட் நிறுவனத்தின் கூகுள் வரை பல நிறுவனங்களில் இந்த ஆண்டு ஜனவரி முதல் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு பின்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற விலைவாசி உயர்வு மற்றும் கட்டுமான செலவினங்கள் காரணமாகவே அதிகப்படியான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக இந்த நிறுவனங்களின் தலைமையகங்கள் அறிவித்துக் கொள்கின்றன என்றாலும் உண்மை அதுவல்ல.

செயற்கை நுண்ணறிவு திறனுடன் கூடிய தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போட்டியில் குதித்துள்ள பிக் டெக் நிறுவனங்கள் மனித உழைப்பையும், மனித மூளையையும் பயன்படுத்தி வேலை செய்வதற்கு பதிலாக குறைந்த செலவில் அதிக லாபத்தை ஈட்டுகின்ற வகையில் தகவல் தொழில்நுட்ப துறையையே முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட துறையாக மாற்றி வருகிறது.

இதன் எதிர் விளைவாக குறிப்பிட்ட காலம் இரவு பகல் பாராமல் கண்விழித்து நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் திடீரென்று முதல் நாள் இரவு வேலை நீக்கம் என்ற அறிவிக்கப்பட்ட மறுநாள் முதல் அவர்களது வேலை காலியாக்கப்படுகிறது.

ஆண்டுக்கு சுமார் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் இதில் புழங்குவதாகவும் சுமார் 8.7% வளர்ச்சியை இந்த துறை சர்வதேச அளவில் எட்டியுள்ளதாகவும் இதுபோன்ற தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்கள் அறிவித்துக் கொள்கின்றன.


படிக்க: ஐடி துறையில் ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு! எதிர்த்துப் போராடாமல் தீர்வில்லை!.


இந்த அளவிற்கு வருவாய் கொழித்துக் கொண்டிருக்கும் போது அதற்கு நேர் மாறாக தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி வயிற்றிலடிப்பது முதல் மன உளைச்சலுக்கு ஆளாக்கி மரணமடையச் செய்வது வரை அனைத்து விதமான கொடூரமான நடவடிக்கைகளையும் ஏகாதிபத்திய முதலாளித்துவ தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கையாளுகின்றன.

நன்றாக படித்தால் நல்ல வேலைக்கு செல்லலாம் என்று இன்னமும் பாமரத்தனமாக இரண்டாம் உலக நாடுகளில் உள்ள இளம் தலைமுறையினர் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். ஆனால் நன்றாக படித்தால் வேலை கிடைக்கும் என்பது மட்டுமல்ல உத்தரவாதமற்ற சக்கையாக உறிஞ்சி கொண்டு  வீசி எறிகின்ற வேலை கிடைக்கும் என்பதுதான் தற்போதைய நிதர்சனமான உண்மையாக உள்ளது.

இதனை நிரூபிக்கின்ற வகையில் இந்த ஆண்டு மட்டும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது தான் தற்போதைய நிலவரம் ஆகும்.

நாட்டின் முன்னேற்றம் என்பது பொருளாதார வளர்ச்சியுடன் கூடிய தொழில்துறை முன்னேற்றம் என்பது மட்டுமே அல்ல. வேலை வாய்ப்புகளை பெருக்குவது மட்டுமின்றி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி அனைவரும் வாங்கும் சக்தியுடன் பொருட்களை வாங்கி தனது தேவையை பூர்த்தி செய்வது எதிர்கொள்வதற்கு பொருத்தமான சமூக அமைப்பை உருவாக்குவது தான்.


படிக்க: வேலையின்றி தவிக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள்: இந்தியாவில் உயிர் வாழ்வதே கடினம்!


ஆனால் ஏகாதிபத்திய நிதி மூலதனம் ஊக பேரத்திலும், ஊக வணிகத்திலும் ஈடுபடுவது, பங்கு சந்தைகள் மூலம் தொழில் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை கட்டுப்படுத்துவது; குமிழி பொருளாதாரத்தை உருவாக்கி பிரமையூட்டுவது, அந்தக் குமிழி வெடித்தவுடன் அதன் பாதிப்புகளை அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களான மக்களின் தலையில் கட்டுவது என்பதுதான் கொடூரமான ஏகாதிபத்திய முதலாளித்துவ சுரண்டல் தன்மையாகும். இது மனித குலத்திற்கு எதிரான சமூக அமைப்பை உருவாக்குகின்ற பொருள் உற்பத்தி முறையாகும்.

தனது வேலை நீக்கம் என்ற சிக்கலை இது போன்ற நிதி மூலதனத்தின் வெறியாட்டத்துடன் இணைத்து பார்த்து புரிந்து கொள்வதும், அதை எதிர்த்து முறியடிக்கின்ற அரசியல் ரீதியாக செயல்படக்கூடிய புரட்சிகர தொழிற்சங்கங்களின் கீழ் அணி திரள்வதும் தான் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள ஊழியர்களுக்கு தற்போது உள்ள ஒரே வாய்ப்பாக உள்ளது.

  • ஆல்பர்ட்

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here