விவசாயிகளை தாக்கும் ஆர். எஸ்.எஸ் குண்டர்களுக்கு எச்சரிக்கை!

ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
செய்தி வெளியீடு
278வது நாள், 31 ஆகஸ்ட் 2021.
••• அரியானா காவல்துறையின் கொலை நடவடிக்கைகளை பாதுகாப்பது, தற்போது துணை முதல்வர் சவுதாலாவின் முறையாகவுள்ளது – இது முற்றிலும் வெட்கக்கேடானது : எஸ்.கே.எம் !
••• துணை பிரிவு மாஜிஸ்டிரேட் ஆயுஷ் சின்ஹா ​​மற்றும் விவசாயிகள் மீது கொடூரமான தாக்குதலை நடத்திய மற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க செப்டம்பர் 6ஆம் தேதி இறுதி நாள் – கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், விவசாயிகள் கர்னல் மாவட்ட மினி செயலகத்தை முற்றுகையிடுவார்கள் !
••• உத்தரபிரதேச பாஜக தலைவர்கள் தொடர்ந்து போராட்டங்களை எதிர்கொள்கின்றனர் – இதற்கிடையில், பதட்டமடைந்த பிஜேபி-ஆர்எஸ்எஸ் குண்டர்கள், செப்டம்பர் 5ஆம் தேதி முசாபர்நகர் மகாபஞ்சாயத்தை முன்னிட்டு, மாநிலத்தில் உள்ள விவசாயத் தலைவர்களை மிரட்டவும், துன்புறுத்தவும் தொடங்கியுள்ளனர்!
••• உத்தரபிரதேச முசாபர்நகரில், செப்டம்பர் 5ஆம் தேதி எதிர்பார்க்கப்படும் மாபெரும் கூட்டம் குறித்த மதிப்பீட்டிற்கு, ஆயத்த அணிதிரட்டல் கூட்டங்களே சான்று !
அரியானாவில், துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா, 28 ஆகஸ்ட், 2021 அன்று கர்னலில் நடந்த கொடூரமான காவல்துறையினரின் நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக, நடக்கின்ற நிகழ்வுகளிலிருந்து தெரியவருகிறது. போராடிய விவசாயிகளில் ஒருவர், சுஷில் காஜல் அதிக காயங்கள் ஏற்பட்டதால், பின்னர் உயிரிழந்தார். இது முற்றிலும் வெட்கக்கேடானது மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி இதைக் கண்டிக்கிறது.
துணை பிரிவு மாஜிஸ்டிரேட் ஆயுஷ் சின்ஹா ​​மீது ஐபிசி பிரிவு 302 இன் கீழ் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் இதில் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குகள் பதியப்பட வேண்டும்; தியாகியான சுஷில் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 இலட்சம் இழப்பீடும், காயமடைந்த ஒவ்வொருவருக்கும் தலா 2 இலட்சமும் வழங்கப்பட வேண்டும் என்று எஸ்.கே.எம் கோருகிறது. மேலும், விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் அரியானா காவல்துறை திரும்பப் பெற வேண்டும் என்று, கர்னலில் உள்ள கரோண்டாவில் நேற்று நடந்த விவசாயிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேற்சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகத்திற்கு 2021 செப்டம்பர் 6ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. தவறினால், விவசாய சங்கங்கள் கர்னல் மாவட்டத்தில் உள்ள மினி செயலகத்தை முற்றுகையிட்டு, காலவரையற்ற போராட்டத்தை நடத்தப் போவதாக எச்சரித்துள்ளன.
கர்னல் காவல்துறையின் கொடூரமான தாக்குதலுக்கு எதிராக நெடுஞ்சாலைகளை மறித்து போராடிய, குர்ணம் சிங் சாருணி மற்றும் பிற விவசாயிகள் மீது சனிக்கிழமை, அம்பாலாவில் உள்ள ஷாஜத்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் போட்டிருப்பதை ஐக்கிய விவசாயிகள் முன்னணி கண்டிக்கிறது. தேசிய நெடுஞ்சாலை சட்டம் மற்றும் ஐபிசி 109, 265 மற்றும் 283இன் கீழ், அரியானா காவல்துறையினரால் போடப்பட்டிருக்கும் இந்த வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற எஸ்.கே.எம் கோருகிறது.
பல்வேறு மாநிலங்களில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உத்தரபிரதேசத்தில், கட்டாவுலி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ. விக்ரம் சிங் சைனி, நேற்று மீராபூர் தல்பத்தை அடைந்தபோது கருப்பு கொடி போராட்டத்தை எதிர்கொண்டார். பஞ்சாபின் பஞ்சில்காவில், பாஜகவின் சுர்ஜித் குமார் ஜியானி இன்று விவசாயிகளிடமிருந்து கருப்பு கொடி போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அரியானாவின் பிஜேபி-ஜேஜேபி அரசாங்கத்தின் காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட கொடூரத்தைக் கண்டித்து அரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள், தாமாகவே எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துகின்றனர். இந்த மாநிலங்களில், பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திய விவசாயிகளால் நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டன. பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற தொலைதூர மாநிலங்களிலும் இந்த கோபம் எதிரொலித்தது. அரியானா அரசின், விவசாயிகள் மீதான மிருகத்தனமான அடக்குமுறைக்கு எதிராக பல மாநில முதல்வர்களும் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர்.
பஞ்சாப் அரசுதான் விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்புலமாக உள்ளது என்ற, அரியானா மாநில அமைச்சர்களோடு முதல்வர் மனோகர்லால் கட்டாரியின் அறிக்கை, விவசாயிகளை அவமதிப்பதாக உள்ளது. பஞ்சாப் மற்றும் உபி விவசாயத் தலைவர்கள், அரியானா விவசாயிகளைத் தூண்டிவிட்டதாக மாநில அமைச்சர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முதல்வரும் மற்றும் அவரது அமைச்சர்களும், அரியானா விவசாயிகளின் கோபத்தையும், தீர்வையும் புறக்கணிக்க முடிவு செய்திருப்பது, அவர்களுக்கான ஆபத்தை அவர்களே தேடிக்கொள்வதை போன்றது என்று எஸ்.கே.எம். கூறுகிறது. இந்த அரசியல் தலைவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளைப் பிரிக்க முயற்சிப்பதாக எச்சரித்ததுடன், விவசாயிகள் ஒற்றுமையாக இருப்பதாகவும், இதுபோன்ற தந்திரங்களுக்கு அடிபணிய மாட்டார்கள் என்றும் எஸ்.கே.எம். கூறியுள்ளது.
செப்டம்பர் 5ஆம் தேதி முசாபர்நகர் விவசாயிகள் மகாபஞ்சாயத்தில் பங்கேற்க, உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிராம மக்கள்ஏராளமான கூட்டங்களை நடத்தி, ஆர்வத்துடன் திட்டமிடுகின்றனர். திட்டம் (MISSION) உ.பி. மற்றும் உத்தரகண்டின் ஒரு பகுதியாக இந்த மகாபஞ்சாயத்து நடத்தப்படுவதாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூறியுள்ளது. கிராம மட்டக் கூட்டங்களில் கூடுகின்ற கூட்டங்கள் தவிர, ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சதாபாத்தில் இன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரளாகக் கலந்துகொண்டது, விவசாயிகளிடம் உள்ள ஆர்வத்தைக் குறிக்கிறது. இதற்கிடையில், பதட்டமடைந்த பிஜேபி, தனது குண்டர்கள் மூலம் செப்டம்பர் 5ஆம் தேதிக்கு முன்னதாகவே, மாநிலத்தில் உள்ள விவசாயத் தலைவர்களை மிரட்டவும், துன்புறுத்தவும் தொடங்கியுள்ளது. இன்று காலை, அத்தகைய பாஜக குண்டர்களின் குழு ஒன்று அலிகரில் ஒரு விவசாயத் தலைவரைத் தாக்க முயன்றது. இத்தகைய மிரட்டும் தந்திரத்தைக் கைவிடுமாறு, பாஜக-ஆர்எஸ்எஸ் பணியாளர்களை எஸ்.கே.எம் எச்சரிக்கிறது.
அறிக்கையை வழங்கியவர்கள –
பல்பீர் சிங் ராஜேவால்,
டாக்டர் தர்ஷன் பால்,
குர்ணம் சிங் சாருனி,
ஹன்னன் மொல்லா,
ஜக்ஜித் சிங் டல்லேவால்,
ஜோகிந்தர் சிங் உக்ரஹான்,
சிவகுமார் சர்மா ‘காக்காஜி’,
யுத்வீர் சிங்,
யோகேந்திர யாதவ்
ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com
வெளியீடு : AIKSCC, தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here