காக்களூர் ஆவின் பால் நிறுவனத்தில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் பறிப்போன பெண் தொழிலாளியின் உயிர்! – கள ரிப்போர்ட்
22.08.2024
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஆவின் பால் நிறுவனத்தில் 20.08.2024 செவ்வாய் இரவு 8 மணியளவில் 30 வயதான உமா மகேஸ்வரி என்ற பெண் தொழிலாளி பணியில் ஈடுபட்டிருந்த போது தலை இயந்திரத்தில் சிக்கி துண்டானதில் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்ட மக்கள் அதிகாரம் சார்பில் மாவட்ட செயலாளர் தோழர் பெரியசாமி மற்றும் பொருளாளர் தோழர் வடிவேல் நேரில் சென்று கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரிடம் உண்மை விவரங்களை கேட்டறிந்தார்கள்.
இது குறித்து கள ரிப்போர்ட்டை தொகுத்து தருகிறோம்.
இன்றைய தினகரன் பத்திரிக்கையில் “ஆவின் பால்பண்ணை மிஷினில் துப்பட்டா, தலைமுடி சிக்கியதில் தலை துண்டாகி இளம்பெண் பலி” என்ற செய்தியை பார்த்து திருவள்ளூர் அருகில் உள்ள காக்களூர் சென்றிருந்தோம்.
காக்களூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வரும் அவரது குடும்பத்தினரை சென்று பார்த்தோம். கொல்லப்பட்ட பெண் தொழிலாளி உமா மகேஸ்வரியின் கணவர் கார்த்திக் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தான் சொந்த ஊரான சேலத்தில் இருந்து பிழைப்பிற்காக சென்னைக்கு வந்ததாக கூறுகிறார். இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக ஒப்பந்த முறையில் பணிபுரிந்து வரும் அவர், அவரது வருமானம் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லாத காரணத்தால் தனது மனைவியும் வேலைக்கு சென்றதாக கூறுகிறார்.
கொல்லப்பட்ட உமா மகேஸ்வரிக்கு 2 ஆண் குழந்தை மற்றும் 1 பெண் குழந்தை உள்ளது. அனைவரும் 10 வயதுக்குட்பட்டவர்களே. உடல்நிலை பிரச்சினை காரணமாக 15 நாட்களாக வேலைக்கு செல்லாமல் 2 நாட்களுக்கு முன்னர் தான் சென்றுள்ளார். சம்பவம் நடந்த 20/08/2024 செவ்வாய் கிழமை அன்று இரவு நேரப்பணிக்கு (மாலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை வேலை) சென்றுள்ளார் உமா மகேஸ்வரி. இரவு 8 மணியளவில் அனைவரும் இரவு உணவுக்கு சென்றுள்ளனர். இவரும் உணவு அருந்த செல்லும் முன்னரே இந்த சம்பவம் நடந்துள்ளது. பால் பாக்கெட்டுகளை டப்பாவில் அடுக்கி வைத்துக் கொண்டிருக்கும் போது அவரது துப்பட்டா இயந்திரத்தில் சிக்கிக் கொண்ட்தாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மிஷினில் உள்ள கன்வேயர் பெல்ட்டில் தலைமுடியும் சிக்கிக் கொள்ள உள்ளே இழுக்கப்பட்ட அவரது தலை மிஷினில் சிக்கி தலை துண்டாகியுள்ளது. இதனை பார்த்து அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த பெண்கள் அலறித் துடித்துள்ளனர்.
அதன் பிறகு நிர்வாகம் உமா மகேஸ்வரின் கணவருக்கு தொடர்புக் கொண்டு நிறுவனத்திற்கு அழைத்துள்ளனர். என்ன நடந்த்தென்று தெரியாமலேயே ஆவின் பால் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்றவரை உள்ளே அனுமதிக்காமல் ஜன்னல் வழியாகவே அவரின் சடலத்தை காண்பித்துள்ளனர். அப்போது உடல் வேறு தலை வேறாகவே கிடந்துள்ளது.
அதன் பின்னர் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டதாக கூறுகிறார் அவரது கணவர் கார்த்திக். நேற்று (21.08.2024) மதியம் உடல் வந்துள்ளது. பின்னர் அடக்கம் செய்துள்ளனர்.
அவரது கும்பத்தினர் எங்களிடம் பேசுகையில் “உமா மகேஸ்வரியின் சடலம் வந்த பிறகு ஆவின் தொழிற்சாலையில் இருந்து இதுவரை அதிகாரிகள் வந்து துக்கம் விசாரிக்கவில்லை” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறுகிறார்கள். அந்த வீட்டில் உமா மகேஸ்வரியின் கணவர் கார்த்திக் அவரது குழந்தைகள் உமா மகேஸ்வரியின் அம்மா மற்றும் அவரது உறவினர்கள் சிலரே உள்ளனர்.
உமா மகேஸ்வரியின் அம்மா நகர்புறத்தில் தங்கி வீட்டு வேலை செய்து வருகிறார். எப்போதாவது தான் வந்து செல்வாராம். குடும்பம் கடுமையான வறுமையில் உள்ளது வாழ்நிலையும் அவர்களது வேலையுமே உணர்த்தியது.
அவர் வேலை செய்த காண்டிராக்ட் ஓனர் வீட்டிற்கு வந்து இரண்டொரு நாட்களில் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள் என உமாமகேஸ்வரியின் கணவர் கார்த்திக் கூறுகிறார். ஆனால் ஆவின் நிறுவனத்தில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் இதுவரை யாரும் அணுகவில்லை என்கிறார். “என் மூன்று குழந்தைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை” என இயலாமையை வெளிப்படுத்துகிறார். இழப்பீடு இல்லையென்றால் தன் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.
விபத்து எப்படி நடந்தது என்ற உண்மை விவரம் யாருக்கும் தெரியவில்லை. அல்லது தங்களது வேலையை பாதுகாத்துக் கொள்ள மறைக்கிறார்கள் என தோன்றுகிறது. ஒருசிலர் கூறும் தகவல் அவர் வேலை செய்யும் இயந்திரம் 2 நாட்களுக்கு முன்னர் தான் சர்வீஸ் செய்ததாகவும் பாதுகாப்பு கருவியை(SAFTY GUARD) பொருத்தவில்லை என்றும் பொருத்தியிருந்தால் தலை உள்ளே செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்கள். இவர்கள் கூற்று உண்மையென்றால் இது முழுக்க ஆவின் ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த ஆலைப்படுகொலை என்றே கருதுகிறோம்.
காக்களூர் ஆவின் ஆலையில் ஒருவரின் தலை துண்டாகி கொல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு வேலைப் பார்க்கும் தொழிலாளர்கள் எந்த சலனமும் இல்லாமல் வேலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள். வேலையின்மையையும் வறுமையையும் பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களை போல ஆவின் நிர்வாகமும் தொழிலாளர்களை மிரட்டுகிறதா? அதனால் தான் சக தொழிலாளியின் இறப்பிற்கு வினையாற்றவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.
காண்டிராக்ட் தொழிலாளியாக வேலைப் பார்த்த உமாமகேஸ்வரிக்கு இதுவரை இஎஸ்ஐ, பிஎஃப் பிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அதற்கான ஆதாரமாக salary slip வழங்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். இதுதான் அங்கு வேலை பார்க்கும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களின் நிலைமையும். தொழிலாளர்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகள் எதுவும் வழங்கப்படாமல் அத்துக்கூலிகளை போல் பயன்படுத்துகிறார்கள் இதற்கு ஆவின் போன்ற அரசு நிறுவங்களும் விலக்கல்ல.
தனது மகளை, தனது மனைவியை இழந்து நிற்கும் குடும்பத்திடம் ஓரளவுக்கு மேல் உரையாட நமக்கும் மனமில்லை. ஆகையால் உதவி தேவைப்பட்டால் தொடர்புக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வந்து விட்டோம்.
சேலத்தில் இருந்து பிழைக்க வந்ததால் வெளியூர் தொழிலாளர்கள் அவர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற மிதப்பிலேயே அரசும், காண்டிராக்ட் முதலாளிகளும் அணுகுகிறார்கள். இது ஒருபுறம் என்றால் கொல்லப்பட்டவர் காண்டிராக்ட் தொழிலாளி என்ற காரணத்தால் காண்டிராக்ட் முதலாளி பார்த்துக் கொள்வார் அவர் நஷ்ட ஈடு கொடுப்பார் என அரசு இந்த பிரச்சினையில் இருந்து தந்திரமாக விலகி நிற்கிறது.
தினகரன் செய்தி தாளிலோ தவறு முழுவதும் கொல்லப்பட்ட உமா மகேஸ்வரியிடம் இருப்பது போல் சித்தரிக்கிறார் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். மறுபுறம் மாவட்ட ஆட்சியரை தொடர்புக் கொண்டு அவருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் கூறுகிறார். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு அறிவிப்பு கொடுத்துவிட்டு இதுவரை உரிய இழப்பீடு வழங்காத ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
துப்பட்டா சிக்கி தான் இறந்த்தாக கூறும் அமைச்சர் மனோ தங்கராஜ் இனிமேல் தான் ஊழியர்கள் கோட் அணிவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்கிறார். இதிலிருந்தே தொழிலாளர்கள் பாதுகாப்பில்லாமல் தான் வேலை செய்கிறார்கள் என புரிந்துக் கொள்ளமுடிகிறது. இதில் பாதுகாப்பு விதிமுறைகளை கண்காணிக்க வேண்டிய அந்நிறுவனத்தின் ஹெச் அதிகாரியின் அலட்சியமே தொழிலாளியின் மரணத்திற்கு முதன்மை காரணம். அவரே முதன்மை குற்றவாளி.
உமா மகேஸ்வரியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பு ஆவின் பால் நிர்வாகமும் பாதுகாப்பு குறைபாட்டை கண்டுக் கொள்ளதாக அரசு நிர்வாகமுமே. ஊழியர்கள் மீது பழியை போட்டு தப்பிவிடலாம் எனப் பார்க்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். தொழிலாளர்கள் ஆலைக்குள் நுழைந்துவிட்டால் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது ஆவின் நிர்வாகத்தின் பொறுப்பு. அதை விடுத்து துப்பட்டா மாட்டி கொண்டது, தலை மயிரு சிக்கிக் கொண்டது என தொழிலாளர்கள் மீது பழியை போட்டு தப்பமுடியாது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். அவரது குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும். உமா மகேஸ்வரியின் மரணத்திற்கு காரணமாக இருந்த அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு குறைபாட்டை ஆய்வு செய்யாத தொழிற்சாலைகள் துறை ஆய்வாளரையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும். மேலும் தொழிலாளர்களின் உரிமைகளை மறுத்து செயல்படும் காண்டிராக்ட் முதலாளிகளையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுக்க போர்கால அடிப்படையில் அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பாதுகாப்பு குறைபாட்டை ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கோரிக்கை விடுக்கிறது.
தொழிலாளர்களே!
அரசு நிறுவனமாக இருந்தாலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனமாக இருந்தாலும் தொழிலாளர்களை கிள்ளுக்கீரையாகவே பார்க்கிறது. இருக்கும் மட்டும் நமது உழைப்பை சுரண்டிக் கொழுப்பவர்கள் பின்னர் கைவிடும் போக்கு இரண்டு வகையான நிறுவனங்களிலும் ஒரே விதமாகவே நிகழ்கிறது. நாளுக்கு நாள் ஆலைப்படுகொலைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நிரந்தர தொழிலாளி, காண்ட்டிராக்ட், அப்பரண்டீஸ் என அனைத்தையும் கடந்து தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே தொழிலாளி வர்க்கத்திற்கு விடிவு!
மக்கள் அதிகாரம்
திருவள்ளூர் மாவட்டம்
சிறப்பான பதிவு. இதற்கென மக்கள் அதிகாரம் மற்றும் தோழமை அமைப்புக்கள் இணைந்து காக்களூர் ஆவின் பால் பண்ணை எதிரில் ஆர்ப்பாட்டம், அல்லது முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தலாமே?