‘ஊருக்கு ஊரு சாராயம், ஊத்தி கொடுத்த உத்தமிக்கு போயசிலே உல்லாசம்’ என்ற பாடல் வரிகளை முன்வைத்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் தோழர் கோவன் மீதும், அந்தப் பாடலை ஒளிபரப்பியதற்காக வினவு இணையதளத்தின் பொறுப்பாளர் தோழர் காளியப்பன் மீதும் தேச துரோக வழக்கு (124- A) பதிவு செய்து வழக்கை நடத்தி வந்தது பாஜகவின் அடிமைகள் கூடாரமான அண்ணா திமுக அரசு.

8 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்குகள் அனைத்திலிருந்தும் தோழர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்படும் போது தற்காலிகமாக நம்மை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. கம்யூனிஸ்டுகள் மீது இப்படிப்பட்ட பொய் வழக்குகளை சுமத்தி கைது செய்து சிறையில் அடைப்பது ஏன் என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும்.

வாழ்க்கையில் அன்றாடம் நாம் சந்திக்கின்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொது வாழ்க்கையில் ஈடுபடுவது என்பது மனதளவில் தயாராக இருந்தாலும், நேரடியாக அதில் செயல்படுவதற்கு பெரும்பான்மை மக்களால் முடிவதில்லை. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று போலீசின் அடக்குமுறை மற்றும் பொய் வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்வது போன்றவை.

சமூகத்தில் நிகழ்கின்ற அனைத்து விதமான கொடுமைகளுக்கும், தீமைகளுக்கும், அரசு பயங்கரவாத அடக்குமுறைகளுக்கும் எதிராக தன்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு நெருக்கடிகளை தூக்கி எறிந்து விட்டு வீதியில் நின்று போராடுகிறார்கள் கம்யூனிஸ்டுகள். ஆனால் அவர்களின் மீது வழக்குகள் புனையும் போது இவையெல்லாம் சட்டரீதியாக நிரூபிக்கப்பட முடியாது அல்லது குறிப்பிட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர்களை நீண்ட காலம் சிறையில் அடைக்க முடியாது என்பதெல்லாம் போலீசு மற்றும் அவர்களுக்கு உத்தரவிடும் ஆளும் வர்க்க எஜமானர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனாலும் குறிப்பிட்ட வழக்கு நடத்தும் போது போலீசு நிலையத்திற்கும், நீதிமன்றங்களுக்கும், வாய்தாக்களுக்காக அலைவது குறிப்பிட்ட வழக்கின் கீழ் குறிப்பிட்ட சில நாட்கள் அல்லது சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவது போன்றவற்றின் மூலமாக சமூகப் பணியில் ஈடுபடக்கூடிய கம்யூனிஸ்டுகளை அச்சுறுத்தி பணியச் செய்துவிடலாம் என்பதுதான் ஆளும் வர்க்கத்தின் ஒரே நோக்கமாக இருக்கிறது.

 

சமூகப் பிரச்சனைகளுக்காக போராடும் போது இது போன்று வழக்கு, வாய்தா என்று அலைவதை மனதில் நிறுத்தி மிக சிறிய சதவீதத்தினர் பின் வாங்கிக் கொள்வது இயல்புதான் என்றாலும், இத்தகைய வழக்குகள் போராடக் கூடியவர்களின் மன உறுதியை மேலும், மேலும் செழுமைப்படுத்துகிறது. அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் போராடுகின்ற மன உறுதியை உருவாக்குகின்றது என்பது மட்டுமல்லாமல் அவர்களைப் போல பலரை பிரசவிக்க வைக்கிறது.

மூடு டாஸ்மாக்கை என்று மக்கள் அதிகாரம் நடத்திய போராட்டம் தமிழகத்தில் பல்லாயிரம் பேரிடம் டாஸ்மாக் என்பது ஏற்படுத்தும் கொடுமைகளை, தாய்மார்களின் தாலி அறுப்புகளை, சட்டபூர்வமாக அல்லது அரசிடம் கோரிக்கை வைத்து அல்லது போலீஸிடம் கெஞ்சி தடுத்து நிறுத்தி விட முடியாது என்ற உண்மையை உணர்த்தியது.

மக்கள் அதிகாரத்தின் தலைமையில் திரண்டு போராடியவர்கள் மட்டுமின்றி தன்னெழுச்சியாக போராடிய கிராம, நகர இளைஞர்கள், பொதுமக்கள் போன்றவர்களும் இத்தகைய வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரசே சாராயம் விற்று நாட்டு மக்களை போதையில் ஆழ்த்துகிறது. பொதுப் பிரச்சினைகளில் ஈடுபட முடியாத அளவிற்கு மொன்னைகளாகவும், குடி வெறியர்களாகவும்,  மனநோயாளிகளாகவும் ஆக்கி விடுகிறது. கோழைத்தனத்தையும் எதிரிகளுக்கு எதிராக போராட முடியாத கையறு நிலையையும் உருவாக்கி விடுகிறது.

இவை அனைத்தும் திட்டமிட்ட வகையில் நாட்டை ஆளுகின்ற அரசியல் கட்சிகள் அனைவரும் விதிவிலக்கு இல்லாமல் நடத்தி வருகின்ற இழிவான செயலாகும். அதுவும் குறிப்பாக தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி அதன் பிறகு வந்த எடப்பாடி தற்போது உள்ள மு க ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் டாஸ்மாக்கை நடத்துவதற்கு பல்வேறு காரணங்களை முன்வைக்கின்றனர். ஆண்டுக்கு இத்தனை ஆயிரம் கோடி என்று வருமான இலக்கை தீர்மானித்து டாஸ்மாக்கை நடத்துகிறார்கள்.

இவை அனைத்தையும் சட்டபூர்வமாக எதிர்த்து போராடி அல்லது அரசிடம் கோரிக்கை வைத்து அவர்களின் மனதை இறங்க வைத்து டாஸ்மாக்கை மூடுவது என்பது நடக்காத காரியம் என்பதை முன்கூட்டியே உணர்ந்த காரணத்தினால் தான் மூடு டாஸ்மாக்கை என்ற இயக்கத்தை நடத்தியது மட்டுமின்றி, அப்போதைய முதல்வராக இருந்த பாசிச ஜெயலலிதாவை ஊத்திக் கொடுத்த உத்தமி என்று விமர்சித்து எழுதியது மக்கள் கலை இலக்கியக் கழகம்.

எமது போராட்டங்களினால் ஏற்பட்ட நிர்ப்பந்தம் பாசிச ஜெயலலிதாவே தேர்தலில் படிப்படியாக டாஸ்மாக்குகளை மூடுகிறேன் என்று வாக்குறுதி அளிக்கின்ற அளவிற்கு சென்றது என்பதை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள். ஆனாலும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்படவில்லை. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த திமுகவும் தேர்தலுக்கு முன்னால் டாஸ்மாக்கை மூடுவேன் என்று வாக்குறுதி கொடுத்தாலும் தேர்தலுக்குப் பிறகு ஆண்டுக்கு இத்தனை ஆயிரம் கோடி என்று இலக்கு வைத்து கல்லா கட்டுவதற்கும் தாய்மார்களின் தாலி அறுப்பதற்கும் தயக்கமில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

“ஆள அருகதை இழந்தது அரசு கட்டமைப்பு” என்ற எமது அரசியல் முழக்கத்தை பரந்துபட்ட வெகுஜன மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் டாஸ்மாக்கை அரசே ஏற்று நடத்துவது எவ்வளவு கொடூரமானது என்பதற்காக “மூடு டாஸ்மாக்கை” என்ற போராட்டம் நடத்தப்பட்டது. அடுத்து டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட விவசாயிகளின் தற்கொலையை கட்டமைப்பு நெருக்கடியின் தோல்வி என்ற கோணத்தில், “விவசாயிகளை வாழ விடு” என்ற முழக்கத்தை முன்வைத்தும், காவிரி நதி நீர் சிக்கல், நீதிமன்றங்களில் நீதித்துறை பாசிசமயமாவது போன்றவற்றை எதிர்த்த போராட்டங்களும், கார்ப்பரேட் காவி பாசிச அபாயம் மேலோங்கியபோது அதனை மையப்படுத்தி திருச்சியில் இரண்டு மாபெரும் மாநாடுகளையும் நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை உருவாக்கி முன்னேறி வருகிறது மக்கள் அதிகாரம்.

இப்போதும் சரி இதற்கு முன்னால் 90களில் துவக்கத்தில் இருந்து நாளது தேதி வரை நாங்கள் சந்தித்த வழக்குகள் ஏராளம். தேசத்துரோக வழக்கு, என்எஸ்ஏ, தடா மற்றும் பல்வேறு பொய்யான கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெறுவது துவங்கி தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் எம்முடன் சேர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் மீதும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக புனையப்பட்டுள்ள வழக்கு வரை அனைத்தும், அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் போராடுகின்ற கம்யூனிஸ்டுகளின் போராட்ட மரபுகளில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டதுதான்.

ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது, அரசியல் போலீசை எதிர் கொள்ள தன்னை தயார்படுத்திக் கொள்வது, குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு நெருக்கடிகளை கடந்து இழப்பு, தியாகங்களுக்கு அஞ்சாமல் போலீசின் அடக்குமுறைகளையும் பொய் வழக்குகளையும் எதிர்கொண்டு போராடுவது, அதனை முறியடிப்பது என்று தொடர்கிறது எமது பயணம்.

எனவே டாஸ்மாக் வழக்குகளில் இருந்தும், ஊத்திக் கொடுத்த உத்தமி என்று பாடியதற்காக தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதில் இருந்தும், நாங்கள் விடுதலையாவது அடுத்தடுத்த போராட்டங்களுக்கு எம்மை தயார் படுத்திக் கொள்ள தான் என்பதே எமது இத்தனை ஆண்டுகால போராட்டத்தில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டது. இத்தகைய மகிழ்ச்சி கலந்த வாழ்க்கையை அனுபவிக்க வாருங்கள் என்று நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களாகிய உங்களையும் அறைகூவி அழைக்கின்றோம்.

போலீசு, சிறைச்சாலை, நீதிமன்றங்கள் ஆகியவை அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவிகளாக நம் மீது ஏவப்பட்டாலும், அதை எதிர்த்து முறியடிக்கின்ற மக்கள் திரள் தன்மை கொண்ட புரட்சிகர அரசியலை ஏந்தி போராடும் எமது அமைப்புகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஏனென்றால் இதனை விட மிக கொடூரமான வாழ்க்கையை அன்றாடம் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அவை அனைத்திற்கும் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கின்ற புதிய திசையில் பயணத்தை மேற்கொள்வோம்.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here