கழுத்தை நெரிக்கும் காவி பாசிசம்! வீழ்த்த ஒன்றுபடுவோம்!
மாநாட்டுத் தீர்மானங்கள்

  1. இந்தியாவில் 2014 முதல் பாஜக ஆட்சியைப் பிடித்து,தனது பாசிச சர்வாதிகாரத்தை படிப்படியாக நிலை நிறுத்திக் கொண்டு வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் மீது கொலை வெறி தாக்குதல்களும், இனவெறுப்பு அரசியல் பேச்சுகளும், புல்டோசரை வைத்து வீடுகளை இடித்து வாழ்வாதாரத்தையே அழிப்பதும் தொடர்கிறது. அதே போல், கிறித்தவர்கள் மீதான தாக்குதல்களை நடத்துவது, அவர்களது வழிபாட்டுத் தலமான சர்ச்சுக்கள் மீது தாக்குதல் நடத்துவது என சிறுபான்மை மக்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி, மதச்சிறுபான்மையினரை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது.

இத்தாக்குதலை நடத்தும் ஆர் எஸ் எஸ், சனாதன் சன்ஸ்த்தான் போன்ற இந்து மதவெறி, சங்பரிவார் அமைப்புகள் ஜனநாயகப் போர்வையில் உலவும் பாசிச பயங்கரவாத இயக்கங்கள் ஆகும். அவை அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும் என இம்மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

  1. பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், அவர்களின் மீது தாக்குதல் நடத்துவதும், நால்வருணப் பாகுபாட்டை நிலைநிறுத்தும் நான்கு வேதங்கள், ஆகமங்கள் மற்றும் மனுநீதியை அமுல்படுத்தும் வகையில், பார்ப்பனரல்லாத சாதிகளில் குறிப்பாக சூத்திர, பஞ்சம சாதிகளைச் சார்ந்த யாருக்கும் கோவிலில் அர்ச்சராகும் உரிமை கிடையாது என்று  உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்குகிறது. இந்த உச்சி குடுமி மன்றம் தனது தீர்ப்புக்கள் மூலம் சட்டபூர்வமாகவே சனாதன- வர்ணாசிரம தர்மத்தை நிலை நாட்டுவதை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
  2. இந்தியா பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என்பதை முன்வைக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தை நிராகரித்துவிட்டு சட்டம் ஒழுங்கு முதல், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வரி வசூல் போன்ற அனைத்து மாநில உரிமைகளையும் பறிப்பதுடன், அவற்றை மைய அரசின் கட்டுப்பாட்டில் ஒன்று குவித்து  ஒரே நாடு, ஒரே தேர்தல்,, ஒரே மதம், ஒரே கல்வி, ஒரே பண்பாடு என்ற நோக்கத்துடன் இந்து ராஷ்டிரத்தை நோக்கி செல்லும் ‘ஒற்றை அதிகார பாசிசப் போக்கை முறியடிக்க வேண்டும்!’ என இந்த மாநாடு அறைகூவல் விடுக்கிறது. அது மட்டுமில்லாமல் உண்மையான கூட்டாட்சிக்கும், மாநில அதிகாரங்களுக்கும், அனைத்து தேசிய இன மக்களும் போராட இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.

 

  1. இந்தியாவின் பொருளாதாரத்தில் கணிசமான பங்கு வகிக்கின்ற, மிகப்பெரும் அளவில் வேலை வாய்ப்புக்களை வழங்குகிற சிறு குறு நடுத்தரத் தொழில்களை அழிக்கின்ற வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பை அதிகரித்துக் கொண்டே போவதையும் கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகைகளை வாரிக் கொடுப்பதையும் இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை வளர்த்தெடுக்கவும், மேம்படுத்தவும் உரிய திட்டங்கள் வகுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
  2. இந்திய விவசாயத்தை வேளாண் வர்த்தக கார்ப்பரேட்டுகளிடம் முழுமையாக ஒப்படைப்பதை கண்டித்து டெல்லியில் ஓராண்டுக்கு மேல் போராடிய விவசாயிகளின் மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுமாறும், விவசாயிகளுக்கு கொடுத்த குறைந்த பட்ச சட்டபூர்வ ஆதாரவிலை உள்ளிட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது. மேலும், லக்கிம்பூர் கேரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொன்ற ஆஷிஷ் இன் மிஸ்ரா-வை கொலைக்குற்றத்தில் கைது செய்து தண்டிக்க வேண்டும். மத்திய அமைச்சரான அவரது தந்தை அஜய்மிஸ்ரா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
  3. நாடு முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் மடாலயங்கள், ஆதீனங்கள் போன்றவற்றுக்கும், இதர மத நிறுவனங்களுக்கும் சொந்தமாக உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை உழுபவர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். அதே போல், பல ஆண்டுகளாக ஆதீனங்கள் மற்றும் கோவில் நிலங்களில் குடியிருந்து வருபவர்களின் வீடுகள், மனைகள் அனைத்தும் குடியிருப் போருக்கே சொந்தமாக்கப்பட வேண்டும் என இம் மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
  4. இந்திய வரலாற்றை திரித்து ஆர்.எஸ்.எஸ், பாஜக முன்வைக்கும் காவி வரலாற்றை கல்வியில் திணிப்பதும் புதிய கல்விக் கொள்கை வழியாக கல்வி தனியார்மயமாக்கப்படுவதும் முறி யடிக்கப்பட வேண்டும். இக்கல்வி முறையின் மூலம் கார்ப்பரேட் டுகளுக்கு தேவையான ரோபோ அடிமைகளை உருவாக்குகின்ற வகையிலும் உழைக்கும் மக்க ளுக்குக் கல்வி உரிமையை மறுக்கின்ற வகையிலும் அமுல் படுத்துவது என்பது மாநிலங்களின் தனித்தன்மையான பண்பாடு, மொழி மற்றும் வரலாற்று உரிமைகளை மறுப்பதாகும். எனவே, இந்திய அளவிலான தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்பட வேண்டும். பாடத்திட்டங்களையும், கல்வி முறைகளையும் அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமைக்கு அனைவரும் போராட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
  5. கடந்த எட்டு ஆண்டுகளாக பாசிச மோடி அரசு; இந்தியாவின் ஆகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரின் பொருளாதார வாழ்க்கையை சீர்குலைத்து விட்டது. 75 ஆண்டு கால இந்தியாவில், இதுவரை இல்லாத அளவுக்கு பாசிச மோடி அரசால் கடும் வேலையில்லாத்திண்டாட்டம், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, என்று ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்க்கையே சூறையாடப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் இருக்கும் பொதுத் துறைகள் மட்டுமல்லாது இயற்கை வளங்கள் அனைத்தையும் அம்பானி, அதானி போன்ற ஒரு சில விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு திறந்து விட்டுள்ளது. இதன் விளைவாக உலகிலேயே மிகப் பெரும் ஏற்றத்தாழ்வு மிக்க நாடாக இந்தியா மாறி இருக்கிறது. இதற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அதிகாரம் உறுதியாக துணை நிற்கும் என இம்மாநாட்டின் மூலம் அறிவிக்கின்றது.
  6. ஜனநாயகம், கருத்து சுதந்திரம், மனித உரிமை, மாநில உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்கி, பா.ஜ.க அரசுக்கு எதிராக கருத்து சொல்லும் யாரையும் விசாரணையின்றி பல வருடங்கள் சிறையில் அடைத்து வைப்பதற்கும், இயக்கங்களை தடை செய்வதற்கும், மாநிலத்தின் அனுமதி இன்றி யாரையும் கைது செய்வதற்கும் ‘வரம்பற்ற அதிகாரம் வழங்கும் என்.ஐ.ஏ. மற்றும் ஊபா சட்டங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்!’ மேலும் பீமா கொரேகான் வழக்கில் ஊபா சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட அறிவுத்துறையினர் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும் ஊபா சட்டத்தின்படி சமீபத்தில் தடை செய்யப்பட்ட ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ என்ற அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
  7. இந்தியாவை மறுகாலனியாக்க, ஈவிரக்கமற்ற கார்ப்பரேட் சுரண்டலுக்கேற்ற அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை காவி பாசிச சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வருகின்ற அனைத்து முயற்சி களையும் முறியடிப்பதை உடனடிக் கடமையாகக் கொண்டு நாடு தழுவிய அளவில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒன்றை அமைப்பதற்கும், அனைத்து ஜனநாயக சக்திகளை அதில் இணைப்பதற்கும் உரிய முயற்சிகளை மக்கள் அதிகாரம் மேற்கொண்டு வருகிறது. மக்கள் அதிகாரம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளுக்கும் துணை நிற்க வேண்டும் என்றும், பாசிச பாஜகவிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அறைகூவலாக மாநாடு முன் வைக்கிறது

 

  1. அமெரிக்கா, ஒப்பந்தத்தை மீறி உக்ரைனை நேட்டோவில் இணைக்க மேற்கொண்ட அடாவடித்தனத்தின் விளைவாகவும், ரஷ்யா தனது மேலாதிக்கத்தை மீள் பதிவு செய்யவும் நடத்தப்படும் உக்ரைன் மீதான ரஷ்ய போர்.  பெரும் அழிவை உருவாக்கியுள்ளது எனவே அநீதியான ‘ரசிய உக்ரைன் போரை இரு நாடுகளும் உடனடியாக கைவிட வேண்டும்!’ என இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது. அதோடு உலகம் முழுவதும் நடக்கும் பிராந்தியப் போர்களுக்குக் காரணம் அமெரிக்க மேலாதிக்கக் கொள்கையே!  இதற்கு  அடியாள் படையாக செயல்படும் நேட்டோ அமைப்பு உடனடியாகக் கலைக்கப் படவேண்டும்! என உலக உழைக்கும் மக்கள் வலுவாகக் குரலெழுப்ப வேண்டுமென இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here