தேர்தல் ஆணையம்- உச்ச நீதிமன்ற உதவியுடன் மோசடிகள் செய்யும் பாசிச பாஜக!
வாக்குகளை தில்லுமுல்லு மூலம் அதிகரிக்கும் சதி! மக்களின் வாக்குகள் திருட அனுமதியோம்!
பாசிச பா.ஜ.கவை அதிகாரத்திலிருந்து அகற்றும் வரை போராடுவோம்!
திருச்சி தலைமை தபால் நிலையம் முற்றுகை
2024 நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. ஜுன் மாதம் 1 ம் தேதி இறுதி கட்ட வாக்கு பதிவு 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை. இந்திய மக்களின் வாக்குகள் நேர்மையாக சுதந்திரமாக உண்மையாக எண்ணப்பட்டு அறிவிக்கப்படுமா? என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி வருகிறது. உச்சநீதிமன்ற அரசியல் சாசன தீர்ப்பிற்கு எதிராக பிரதமரே தேர்தல் ஆணையரை நியமனம் செய்தது முதல் தேர்தல் தேதி அறிவித்தது, இவிஎம் மெசின் வாக்குபதிவில் முறைகேடு நடக்காது என்பதற்கு உத்திரவாதம் இல்லை. வாக்குபதிவை முழுமையாக உடனே பதிவேற்றம் செய்ய முடியாது என அறிவித்தது வெறுப்பு பிரச்சாரம் செய்யும் பா.ஜ.க மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என தொடர்கிறது.
தேர்தலின் முடிவு எதுவாக இருந்தாலும் தேர்தலில் பங்கெடுத்த மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து அதனை அங்கீகரிப்பது தான் தேர்தல் ஆணையத்தின் பணியாகும். ஆனால் அதற்கு எதிராக செயல்படுகிறது தேர்தல் ஆணையம்.
தேர்தல் நடத்தை விதிகளை கால் தூசுக்கு சமமாக கருதுகின்ற பாஜக, பாசிச மோடி தலைமையில் நாடு முழுவதும் இஸ்லாமியருக்கு எதிரான இன வெறுப்பை கக்கி பிரச்சாரம் செய்து வருகிறது.
பிரதமர் மோடி தான் ஓட்டு போட சென்ற போது தனது சின்னத்தை காட்டி பிரச்சாரம் செய்கின்றார். உத்தரப்பிரதேசத்தில் 17 வயது சிறுவன் எட்டு முறை வாக்களித்து அதனை வீடியோவில் எடுத்துப் போடுகின்றான்.
திரிபுராவில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிக வாக்கு பதிவாகிறது. தேர்தல் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட பேனாவில் தாமரை சின்னம் பளிச்சிடுகிறது. எதிர்க்கட்சிகளை பிரச்சாரம் செய்யவும், ஓட்டுப் போடவும் விடாமல் தடுக்கிறது பாஜக. தனக்கு ஓட்டுப் போடாத பட்டியலின மக்கள், இஸ்லாமியர்களை வீதியிலேயே தாக்குகிறது ஆர்எஸ்எஸ் குண்டர் படை.
தான் போட்ட ஓட்டு தான் விரும்பியவர்களுக்கு தான் செல்கிறதா என்பதை சோதிப்பதற்கு தீர்க்கமான வழி இல்லை.விவி பேட் மூலம் தரப்படும் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்பதை மறுத்தும் EVM மீதான நம்பகதன்மையை கண்டு கொள்ளாமலும் பாசிச பாஜகவின் வழக்கறிஞர் போல் செயல்பட்டு பாஜகவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.
இதன் தொடர்ச்சியாக வாக்குப்பதிவு முடிந்த பின்னர் ஐந்து கட்டங்களிலும் அறிவிக்கப்பட்ட வாக்கு சதவீதமும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வாக்கு சதவீதமும் கணிசமாக வேறுபட்டுள்ளது. இதனை முன்வைத்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தொடுத்த வழக்கில் ஒவ்வொரு பூத்திலும் பதிவான வாக்கு எண்ணிக்கையை கொடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று அறிவித்துவிட்டது பாஜகவின் உச்சநீதிமன்றம்.
தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகிய இரண்டும் ஆர்.எஸ்.எஸ் பாஜகவுடன் ஒரே புள்ளியில் சந்திக்கின்றது என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் நிரூபிக்கின்றது.
நாடு முழுவதும் கடந்த பத்தாண்டுகளாக ஆண்டு வருகின்ற பாசிச பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் செய்வதில் தேர்தலில் பங்கெடுக்கின்ற அமைப்புகள் மற்றும் புரட்சிகர, ஜனநாயக சக்திகள், சமூக செயல்பாட்டாளர்கள், நாட்டின் மீது அக்கறை கொண்ட சமூக வலைதளங்கள் ஆகியவை ஒன்றிணைந்து வெற்றி பெற்றுள்ளது என்பது நிரூபணமாகி கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் நேர்மையான தேர்தல் மூலம் வெற்றி பெற முடியாது என்பதை ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் அதன் கையாட்களான மோடி அமித்ஷா புரிந்து கொண்டுள்ளதால் ஏற்கனவே தீர்மானித்தபடி எங்களது பிளான் B-யை அமுல்படுத்துவோம் என்று பகிரங்கமாக அறிவிக்கின்றனர். தனது கைக்கூலி ஊடகங்கள் மூலமாக 300 சீட்டுகளுக்கு அதிகமாக பெறுவோம் என்பதை தொடர்ந்து கூறி வருவதும், தேர்தல் அரசியல் புரோக்கர்களான பிரசாந்த் கிஷோர் போன்றவர்களின் மூலம் கருத்துருவாக்கம் செய்ய துவங்கி விட்டனர்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமை செயலாளர்கள் 102 பேர் ஜுன் -4 பற்றி ஐயம் எழுப்பி உள்ளார்கள் சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்பட வேண்டும் என இந்திய ஜனாதிபதிக்கு முறையீடு செய்துள்ளனர். அறிவுத்துறையினர், சிவில் உரிமை அமைப்பினர் நாடு முழுவதும் மக்கள் வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே அமைதியான ஆட்சி மாற்றம் நிகழம், நேர்மையான தேர்தல் முடிவுகள் வரும். இல்லை என்றால் மக்களின் வாக்குகள் பாசிச பா.ஜ.கவால் களவாடப்படும் என பகிரங்கமாக எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதையும் தாண்டி தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்னரோ அல்லது முடிவுகள் அறிவித்த பின்னரோ கலவரத்தை கட்டவிழ்த்து விடுவதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் குண்டர் படைகள் தயாராகி வருகிறது. இன்னொரு புறம் ராணுவம் மற்றும் துணை ராணுவம் ஆகியவை ஆர்எஸ்எஸ் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது.தேசிய ஊடகம் அவர்கள் கையில் அரசு நிர்வாகத்தில் நீதித்துறையில் பாஜ.க ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் நிரம்பி உள்ளார்கள். இவை அனைத்தையும் தொகுத்து பார்க்கும் போது தேர்தலின் மூலம் பாசிச பாஜகவை வீழ்த்துவது என்பது மிகப்பெரிய சவாலான பணி என்பதை தான் நிலைமைகள் நிரூபிக்கின்றது.
எனவே தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டாக வேண்டும் என்பதை மக்கள் அழுத்தம் கொடுக்காவிட்டால் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையே தற்போது உள்ளது. அதிகாரத்திலிருந்து பார்ப்பன பாசிச கும்பல் லேசாக இறங்காது. தில்லுமுல்லு செய்தால் மக்கள் அடித்து விரட்டி விடுவார்கள் என்ற அச்சுறுத்தல் ஏற்படுத்தினால்தான் ஆட்சி மாற்றம் அமைதியாக நடக்கும்.பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும் என பெருவாரியான மக்கள் அளித்த வாக்குகள் காப்பற்றப்படும். இல்லையென்றால் கார்ப்பரேட் காவி பாசிச கூட்டம் மக்களின் வாக்குகளை திருடிவிடும். இதைஒருபோதும் அனுமதிக்க கூடாது.
வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற்று உரிய வேட்பாளர் வெற்றி என அறிவிப்பு வரும் வரை வாக்களித்த மக்களின் கடமை தொடர்கிறது. காரணம் இது வழக்கமான தேர்தல் அல்ல என்பதை கார்ப்பரேட் காவி பாசிச அரசியல் நிருபித்து விட்டது.
தேர்தலில் வாக்களித்த மக்களின் உணர்வை, உரிமையை பாதுகாக்க போராடுகின்ற அதே வேளையில் தேர்தலுக்கு வெளியில் பாசிச பாஜகவையும் அதன் ஏவலாளிகளையும் முறியடிப்பதற்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் ஒன்றுபட்டு வீதியில் இறங்க வேண்டும். தேர்தல் முடிவுகளை எதிர்கொள்வதற்கு நாட்டு மக்கள் தயாராவோம்!
ஜனநாயக வழிமுறைகளை புறக்கணித்து ஒரு கட்சிக்கு சார்பாக தேர்தலை நடத்தி வருகின்ற தேர்தல் ஆணையத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தி ஒன்றிய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம்! இதன் முதற்கட்டமாக திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடுவோம்!
பாசிச பாஜகவிற்கு எதிராக அளித்த வாக்குகளை உறுதிப்படுத்த நிர்பந்திப்போம்!
பாசிச பாஜகவை விரட்டுவதற்கு தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் அமைப்புகள், தேர்தலுக்கு அப்பாற்பட்டு செயல்படுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுபடுவோம்!