பொதுக்குழு தீர்மானங்கள்
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் 24-11-2024 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு திருச்சியில் நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தற்போதைய அரசியல் சூழலில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
1. இந்தியாவில் சூரிய ஒளி மின் ஒப்பந்தம் பெறுவதற்காக அதானி சுமார் ரூ 2100 கோடி வரை லஞ்ச ஊழல் முறைகேடு செய்துள்ளார் என்ற குற்றசாட்டிற்காக அமெரிக்கா நீதிமன்றம் அதானிக்கும் அவரது மருமகன் சாகர் அதானிக்கும் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. எனவே ஒன்றிய பா.ஜ.க அரசு ஹின்டன்பர்க் அறிக்கை வெளியிட்ட அதானி நிறுவனத்தின் பங்கு சந்தை ஊழல் முறைகேடுகள், செபி தலைவர் மீதான குற்றசாட்டுக்கள் குறித்து நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். அதுவரை அதானியை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். அதானியின் ஊழல் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்ய வேண்டும். அதானியின் மீதான குற்றச்சாட்டுக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என இப்பொதுக்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
2. மணிப்பூரில் பல மாதங்களாக தொடர்ந்து நடந்து வரும் வன்முறை கலவரம் பாலியல் அத்துமீறல் படுகொலை தீ வைப்பு வன்முறைக்கு காரணமான பா.ஜ.க பைரோன்சிங் அரசு பதவி விலக வேண்டும் எனவும் உடனடியாக மணிப்பூர் மக்களிடம் அமைதி திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
3. தமிழ்நாடு உள்ளிட்டு எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களுக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிதி பகிர்வு, கல்விக்கான நிதிபங்கீடு, பேரிடர் நிதி ஆகியவற்றை ஒன்றிய அரசு நிறுத்திவைத்து தமிழகத்தை வஞ்சிப்பதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிப்பதுடன் ஒன்றிய அரசு உடனடியாக மேற்படி தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி பகிர்வை வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
4. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி என்பதை தமிழக மக்கள் என்றைக்கும் ஏற்க மாட்டார்கள்.இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கும் அரசியல் சட்டத்தின் அடிப்படை கோட்பாட்டிற்கும் எதிரானது. கார்ப்பரேட் கொள்ளைக்கு ஆதரவாக ஒன்றிய அரசு அமல்படுத்த முயலும் இந்து ராஷ்டிர திட்டத்தை தமிழகமக்கள் பிற மாநில மக்களுடன் இணைந்து முறியடிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
5. போதையில்லா ஆரோக்கியமான தமிழகத்தை நோக்கி செல்லும் வகையில் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக நிரந்தரமாக மூடக்கூடிய செயல் திட்டங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும், மக்கள் மீது, இயக்கங்கள் மீது போடப்பட்டுள்ள டாஸ்மாக் எதிர்ப்பு போராட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும், சமீபத்தில் வேலூரில் டாஸ்மாக்கை மூடக்கோரி போராடிய இடதுசாரி தோழர்களான CPI (ML) மற்றும் NDLF ஆகிய அமைப்பு தோழர்கள் கைது செய்து சிறையிலடைத்ததை வன்மையாக கண்டிப்பதுடன் அவர்களை சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
6. தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறைபிடிப்பதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருவதை ஒன்றிய அரசு தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதை இப்பொது குழு வன்மையாக கண்டிப்பதுடன் அவர்களுக்கு உரிய நிவாரணமும் நீதியும் கிடைக்கும் வகையில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
7. மதுரை அரிட்டாபட்டி பகுதியில் உயிர்பன்மையமிக்க பாரம்பரிய தலமான பகுதியில் 2015 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிப்பதுடன் தமிழக அரசு எக்காரணம் கொண்டு மேற்படி சுரங்கம் அமைவதை அனுமதிக்க கூடாது என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
8. கடந்த ஓராண்டுக்கு மேலாக பாலஸ்தீன காசா பகுதி மக்கள் மீது இஸ்ரேல் யூத இனவெறி அரசு குண்டு வீசி பல ஆயிரம் மக்களை கொன்று குவித்து பல லட்சம் மக்களை வீடற்ற அகதிகளாக்கி உள்ளது. இதற்கு காரணமான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சர்வதேச போர்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேல் அரசுடனான தூதரக உறவு உட்பட அனைத்து வகையான வர்த்தக உறவுகளையும் இந்திய அரசு நிறுத்த வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
9. 2025 மார்ச் மாதத்திற்குள் மக்கள் அதிகார அமைப்பின் மாவட்ட மாநாடுகளை நடத்தி முடித்து மாநில மாநாடு நடத்துவது என இப்பொது குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.
10. கார்ப்பரேட் காவி பாசிசத்தை தேர்தலில் மட்டுமல்லாது முழுமையாக அனைத்து வகையிலும் முறியடித்து பெரும்பான்மை மக்கள் பங்கேற்கும் ஜனநாயக கூட்டரசை நிறுவும் வகையில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி அமைப்பதில் பல்வேறு புரட்சிகர ஜனநாயக அமைப்புகள் கட்சிகள் தனிநபர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைக்க இப்பொதுக்குழு உறுதி ஏற்கிறது.